Published:Updated:

“வலி எல்லோருக்கும் பொதுவானது அப்பா!" - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு

“வலி எல்லோருக்கும் பொதுவானது அப்பா!" - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு
“வலி எல்லோருக்கும் பொதுவானது அப்பா!" - திப்பு சுல்தான் பிறந்த தினப் பகிர்வு

‘‘நமக்கான யுத்தத்தை நாம்தான் நடத்த வேண்டும்’’ என்றவர் மாவீரர் திப்பு சுல்தான். அவருடைய பிறந்த தினம் இன்று. மனதளவில் யாருக்கும் துன்பம் தரக் கூடாது என்று கல்வி பயின்ற அவர், பின்னாளில் ஆங்கிலேயர் போற்றும் அளவுக்கு ஒரு சிறந்த போர் வீரராக விளங்கினார். அதனால்தான் மகாத்மா காந்தியடிகள் அவரைப்பற்றி, ‘‘திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப்போர் தொடர்ந்திருந்தால் இந்தியா, எப்போதோ விடுதலை பெற்றிருக்கும்’’ என்று பின்னாளில் ஒரு நாளிதழில் எழுதியிருந்தார்.

திப்புவிடம் மண்டியிட்ட மன்னன்!

தன்னுடைய 15-வது வயதில் கல்வியுடன், போர்ப் பயிற்சியையும் முழுமையாக முடித்திருந்த திப்புவை, போர்க்களத்துக்கு அழைத்துச்செல்ல முடிவெடுத்தார் தந்தை ஹைதர் அலி. அந்த நேரத்தில் பெத்தனூரின் மன்னன், ஹைதர் அலியை வம்புக்கு இழுக்க... அவரிடம் போரிட்டார் ஹைதர் அலி. போரிடுவதற்கு முன் ஓரிடத்தில் திப்புவைப் பாதுகாப்புடன் நிறுத்திவிட்டுச் சென்றார்  ஹைதர் அலி. ஒருகட்டத்தில், தன் தந்தையின் படைகள் காணாமல் போகவே... பொறுமையிழந்த திப்பு, சக வீரர்களுடன் அவர்களைத் தேடி காட்டுப் பாதை வழியாகச் சென்றார். அப்போது, திப்புவின் முன் கைக்குழந்தையுடன் தோன்றிய பெத்தனூர் மன்னனின் மனைவி, ‘‘உங்களிடம் சரணடைந்துவிட்டோம். தயவுசெய்து எங்களை எதுவும் செய்துவிடாதீர்கள்’’ என்று மன்றாடினார். வீரர்களை நோக்கித் திரும்பிய திப்பு, ‘‘இவர்கள்மீது சிறு கீறலுமின்றிப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்’’ என்று உத்தரவிட்டார். 

இந்தச் செய்தி பெத்தனூர் மன்னனின் காதில் விழுந்த அடுத்த நொடி, அவர் ஹைதர் அலியிடம் சரணடைந்தார். சிறிது நேரத்தில் ஹைதர் அலி, பெத்தனூர் மன்னன் ஆகியோர் அங்கு வந்தனர். ‘‘அருமை திப்பு. சொல், உன் கைதிகளை விடுவிக்க உனக்கு என்ன சன்மானம் வேண்டும்’’ எனக் கேட்டார் ஹைதர் அலி. ‘‘அப்பா... இவர்கள் பெண்கள். கூடவே குழந்தைகள். ஆகவே, இவர்களை விடுவித்துவிடுவதுடன் தக்க மரியாதையுடன் அனுப்பிவைக்கவும்’’ என்று கனிவோடு சொன்னார் திப்பு. இதைக் கண்ட பெத்தனூர் மன்னன் திப்புவின் முன்னால் மண்டியிட்டு, ‘‘பயத்தின் காரணமாக உங்கள் தந்தையிடம் மண்டியிட்டேன். இப்போது மரியாதைக்காக உங்களிடம் மண்டியிடுகிறேன்’’ என்றார் கண்ணீர் மல்க.  

‘‘வலி எல்லோருக்கும் பொதுவானது அப்பா!’’

1780-ல் காஞ்சிபுரத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற போர் திப்புவின் மனதில் நீங்காத இடம்பெற்றது. இதற்குக் காரணம், முதன்முதலாகப் பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் உயிரிழக்கும் நிலைமை. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது. ‘‘நம் படை வீரர்களுக்கு மட்டுமல்ல... ஆங்கிலேயர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார் திப்பு. வலியால் வேதனைப்பட்டவர்களிடம் அக்கறையுடன் நலம் விசாரித்தார். ‘‘திப்பு... வா நாம் போகலாம். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார் ஹைதர் அலி. ‘‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது அப்பா. அந்த வலியை நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது’’ என்று வருந்தினார். 

தந்தையுடன் பல போர்களில் வெற்றி கண்ட திப்பு, 1782-ம் ஆண்டு தன் தந்தையை இழந்தார். சாதாரண குதிரை வீரனாக இருந்து மன்னரான தன் தந்தைக்குப் பிறகு, தன்னுடைய 32-வது வயதில் அரியணை ஏறினார் திப்பு. ‘மக்கள், அரசை நேசிக்க வேண்டும்... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்’ என்ற நல்லெண்ண அடிப்படையில் அவரது ஆட்சி மாற்றம் இருந்தது. குறிப்பாக 1787-ம் ஆண்டு மதுவை உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வதும் கூடாது என்று ஆணை பிறப்பித்தார். இதுகுறித்து மிர் சாதிக் என்பவர், ‘‘மது விற்பனையைத் தடை செய்தால், அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்’’ என்றார். அதற்கு அவர், ‘‘இது, மக்களின் நன்மைக்காகத்தான். அரசாங்கத்துக்கு அல்ல... அரசுக்கு நிதி அவசியம்தான். அதற்காக மக்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளக் கூடாது’’ என்று பதிலுரைத்தார். 

துரோகிகளை மன்னித்த திப்பு!

‘எதிரிகளுடன் போர் புரிந்தாலும், அவர்களுடைய உடைமைகளை எடுக்கக் கூடாது; சரணடைந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது’ என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்தவர் திப்பு. துரோகிகளைக்கூட மன்னித்துவிடக் கூடியவர். இவருடைய நெருங்கிய கமாண்டர் முகம்மது அலி. அவர் செய்த சதியால் திப்புவின் முன் நிறுத்தப்பட்டார். ஆனாலும், அவரைக் கொல்லாமல் மன்னித்துவிட்டார். ‘‘ஏன்’’ என்று அமைச்சர் பூர்ணையா காரணம் கேட்டார். ‘‘அவன் செய்த தவறுக்கு தண்டனை அளிப்பதைவிட, அவன் முன்பு செய்த பேருதவிகளுக்குக் கைம்மாறு செய்வதுதான் நல்லது’’ என்றார்.

ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில், தமது படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரராகத் தீரமுடன் போரிட்டு இறந்துபோனார் திப்பு. அவருடைய வீரமரணத்தைக் கேள்விப்பட்ட ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ், ‘‘இன்று முதல் இந்தியா நம்முடையது’’ என்றாராம். 

ஆங்கிலேயர்களை அச்சுறுத்திய... அவர்களுடைய வரலாற்றுப் பதிவுகளில் விவாதிக்கப்பட்ட ஓர் அசகாய சூரன் திப்பு சுல்தான்.