Published:Updated:

கோலம் வரைந்த பெரும்புள்ளி!

கோலம் வரைந்த பெரும்புள்ளி!

##~##

புள்ளிவைத்த கோலம் தெரியும். ஆனால், மாலதியோ கோலம் வரைவதாலேயே பெரும்புள்ளி ஆனவர்.

 ஒருவருடைய புகைப்படத்தைக் கொடுத்தால் அதை அச்சு அசல் கோலப் பொடியால் வரைந்து  அழகிய சித்திரமாக மாற்றி ஆச்சர்யப்படவைக்கிறார் மாலதி. கோல ஓவியம் மட்டுமல்லாமல்; ஆயில் பெயின்ட்டிங், தஞ்சாவூர் ஓவியம், ராஜஸ்தானி ஓவியம் எனப் பல கலைகளிலும் அசத்தும் இவர், இவற்றை எல்லாம் எவரிடமும் கற்றது இல்லை என்பதுதான் சிறப்பு. கலைமாமணி விருது உட்பட 11 விருதுகள் பெற்று புனே, டெல்லி எனச் சுழன்று சுழன்று பறந்துகொண்டு இருந்தவரை ஒரு வழியாகப் புதுவையில் பிடித்தேன்.

புதுச்சேரி ஆனந்தா திருமண நிலையத்தில் அபிராமி -  செந்தில் ராஜ் என்ற மணமக்களைக் கோல மாக வரைவதில் மும்மரமாக இருந் தார் மாலதி.  

கோலம் வரைந்த பெரும்புள்ளி!

''சின்ன வயசுல இருந்தே எனக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகம். சேலம் சாரதா வித்யாலயா பள்ளியில் படித்தேன். அங்கு  ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர், வசுதேவர் உருவங்களை வள்ளி டீச்சர்தான் சாக் பீஸால் வரைந்து கோலப் பொடியால் வண்ணம் தீட்டுவார்கள். அதைப் பார்த்துப் பார்த்து எனக்கும் கோலத்தின் மீது ஆர்வம் வந்தது. நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது வள்ளி டீச்சருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன தால் அவரால் அந்தக் கிருஷ்ண ஜெயந்திக்குக் கோலம் போட முடிய வில்லை. வள்ளி டீச்சரின் சாக்பீஸை நான் கையில் எடுத்துக்கொண்டேன்.

கோலம் வரைந்த பெரும்புள்ளி!

ஆனால், சாக்பீஸால் வரைந்து அதன் மேல் அமர்ந்து கோலம் போடுவது மனசுக்குச் சங்கடமாகவும் சிரமமாகவும் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்போதான் முதல்முறையாக சாக்பீஸால் வரையாமல் நேரடியாக கோலப் பொடி யாலேயே வரையத் தொடங்கினேன். இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்திக்கு எங்கள் பள்ளிக்குச் சென்றுகோலம் வரைகிறேன். எனக்கு என்று ஒரு வராந்தாவை ஒதுக்கிவிடுவார்கள். அங்கு 200 அடி நீளத்தில் நான் வரையும் கோலம் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது இருக்கும்.

வெறும் கோலப் பொடிகளை மட்டுமே பயன்படுத்தாமல் மணல் சிற்பங்களையும் சேர்த்து உரிய இடத்தில் லைட்டிங் கொடுத்து வரைவதால் அனைவரும் அதைக் கண்காட்சி யைப்போல வந்து பார்த்துவிட்டுப்போவார்கள்'' - என்ற மாலதி மனிதர்களை வரைய ஆரம்பித்த கதையைச் சொன்னார்.  

''சேலத்தில் நடந்த ஒரு அறுபதாம் கல்யா ணத்தில் 'மணமக்களான தாத்தா - பாட்டியைக் கோலமாகப் போட முடியுமா?’ என்று கேட்டார்கள். நானும் அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு வரைந்தேன். அன்று முதல் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் மணமக்களின் புகைப் படங்களைக் கோலமாக வரைய அழைக்க ஆரம்பித்தனர்'' என்கிற மாலதி, கறுப்பு - வெள்ளை புகைப்படத்தைக் கொடுத்தால்கூட அதையும் வண்ணக் கோலமாக்கி வரைந்து அசத்துகிறார்.

''ஒருமுறை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் நடந்த கருத்தரங்கில் எட்டு மருத்துவ அறிஞர்களின் புகைப்படங்களை இணையத்தில் இருந்து, டவுன்லோடு செய்துகொடுத்து கோலம் போடச் சொன்னார்கள். நான் வரைந்த அந்தக் கோல ஓவியம் அவர்களுக்குப் பிடித்துப்போனதால், புனேவில் நடந்த கருத்தரங் குக்கும் அழைப்பு வந்தது.

கோலம் வரைந்த பெரும்புள்ளி!

விருதுநகரில் நடக்கும் கலைப் பொங்கல் நிகழ்ச்சியில் கோலப் போட்டி நடுவராகக் கலந்துகொள்ளச் சொல்லி அந்த மாவட்ட கலெக்டர் அழைத்தார். அவர் கேட்டுக்கொண்ட தன் பேரில் நுழைவு வாயிலில் இருந்து மேடை வரை சுமார் 2,000 சதுர மீட்டர்கள் தமிழ்க் கலாசாரத்தை விளக்கும் ஓவியங்களைக் கோலங்களாக வரைந்தேன்.  டெல்லியில் உள்ள இந்தியா ஹாபிடேட் சென்டரில், சுவீடன் நாட்டின்  பாரம்பரியக் கலையான எம்ப்ராய்டரியுடனும் ஓவியத்துடனும் நம் நாட்டின் பாரம்பரியக் கலையான கோலம் எப்படி ஒன்றுபடுகிறது என்பதை விளக்கி, நான் கோலங்கள் வரைய... அது 10 நாட்கள் கண்காட்சியாக நடைபெற்றது'' - எனத் தன் சாதனைகளைப் புள்ளிவிவரங்களாக அடுக்க, அதுவே புள்ளிக் கோலங்களாகத் தெரிந்தது எனக்கு!

- ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு