Published:Updated:

குழுவாக உயர்ந்தது குமளம்!

குழுவாக உயர்ந்தது குமளம்!

##~##

'பெரிதினும் பெரிது செய்’ என்று பெரு மிதத்தால் பூரிக்கிறது குமளம் கிராமம். காரணம், பெண்கள்.

புதுவை, கண்டமங்களம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம்தான் குமளம். விவசாயம்   முக்கியத் தொழில். குண்டுமல்லி, கனகாம்பரம் எனப் பல வகைப் பூக்கள் விளைகின்றன. மலர்களால் மகிழ்ச்சி பூத்துக் குலுங்க வேண்டிய இந்தக் கிராமம் சோகத்தில் வாடியதற்குக் காரணம், புற்றுநோய்!

2008-ம் ஆண்டு வரை புற்றுநோயால் இந்தக் கிராமத்து  மக்கள் வாரத்துக்கு ஒருவர் என இறந்துள்ளனர். அப்போது சமுதாய வானொலி ஒன்றில் இயக்குநராகப் பணி புரிந்த ரவி என்பவர், இந்தக் கிராமத்துக்கு வந்து மரணங்கள் குறித்த விவரங்களைக் கேட்டு அறிந்தார். பிறகு, மருத்துவர்களை இந்தக் கிராமத்துக்கு அழைத்து வந்து, கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார். அந்தக் கலந்துரையாடலில்தான் இந்தக் கிராம மக்கள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளைப் பற்றிக் கூறினர். பல பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் இருப்பதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குழுவாக உயர்ந்தது குமளம்!

பிறகு, உதயம் மகளிர் சுய உதவிக் குழுவினர்  உதவியால் மெள்ள மெள்ளப் பெண்களிடையே விழிப்பு உணர்வு ஏற்பட்டது. புற்றுநோய்க்கு  இலவசச் சிகிச்சை முகாம்களும் நடத்தப் பட்டன.

ஒருவழியாக நோய்க்கு எதிராகப் போராடி அதைக் கணிசமாகக் குறைத்த பிறகு, பெண்களுக் குள் ஒரு புது நம்பிக்கை பிறந்தது. தாங்கள் பொருளாதாரத்திலும் மேம்பட வேண்டும் என்று உறுதிபூண்டனர். 'வாழ்ந்து காட்டு வோம்’ திட்டத்தின் மூலம், உலக வங்கியிடம் மானியம் பெற்றனர்.  இங்கு மல்லிகை நன்றாக விளையும் என்பதால், இந்த மானியம் மூலம் 'பூக் கூட்டமைப்பு’ என்கிற சங்கத்தை  உருவாக்கினர். தங்களுக்குத் தேவை யான களை வெட்டும் இயந்திரம், மருந்து அடிக்கும் இயந்திரம் போன்ற வற்றை வாங்கிப் பயன்படுத்தி, அதன் மூலம் விளையும் பூக்களை நகரங் களுக்கு அனுப்பி நல்ல லாபம் பார்க்கின்றனர்.

குழுவாக உயர்ந்தது குமளம்!

''ஆரம்பத்தில் இந்தச் சங்கத்தில் சேர யாரும் முன் வரலை. 11 வருஷம் போராடினதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சங்கத்தில் சேர்ந்தாங்க. வாரக்கணக்குல, மாதக்கணக்குல சேமிச்சதுல இப்ப ஒவ்வொருத்தர் கணக்கிலும் 20 ஆயிரம் ரூபா இருக்கு. எங்க கிராமத்தில் ஊனமுற்றோர் சங்கம், இளைஞர் சங்கம், மகளிர் சங்கம்னு மொத்தம் 48 சங்கங்கள் இருக்கின்றன. அதுக்கு எல்லாம் நாங்கதான் மேற்பார்வையாளர்''-என்கிறார் உதயம் மகளிர் குழுவின் தலைவி, செல்வராணி.  

குழுவாக உயர்ந்தது குமளம்!

இந்தச் சங்கத்தில் இருப்பவர்கள் செய்யாத தொழிலே இல்லை என்று சொல்லலாம். பால் கொள்முதல், தையல், உணவகம் எனப் பல தொழில்களில் ஈடுபடுகின்றனர். பொருளாதார முன்னேற்றத்தில் மட்டுமின்றி, சேவையிலும் ஆர்வம் காட்டும் பெண்கள் மரம் நடுவது, குடிநீர் வசதி அமைப்பது, சமுதாய வானொலி முலம் மக்களுக்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது என அசத்துகின்றனர்.

''வங்கியில் கடன் வாங்கிட்டு 'எப்படா அரசு கடனைத் தள்ளுபடி செய்யும்’னு மக்கள் காத்துக்கிட்டு இருக்கிற காலத்தில், நாங்கள் சரியா வங்கிக் கடனைத் திருப்பிக் கட்டிடறோம்.

அதனால் பல வங்கிகள் தானாகவே எங்கள் சங்கத்துக்குக் கடன் தர முன் வர்றாங்க. எங்கள் குழு உறுப்பினர்கள் இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குக் கலைப் பயணமாகச் சென்று விழிப்பு உணர்வுச் செய்திகளைச் சொல்லி வருகிறார்கள்'' என்று சாதனை களை அடுக்குகிறார் செல்வராணி.

உங்கள் சாதனைகளால்... குமளம் என்றால், அகிலத்துக்கும் தெரிய வேண்டும் சாதனைப் பெண்களே!

ஆ.நந்தகுமார்

குழுவாக உயர்ந்தது குமளம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு