Published:Updated:

‘ஆவி உலகத்தில் மாட்டிக்கொள்ளும் அப்பாவிச் சிறுமி’! - #SpiritedAway

‘ஆவி உலகத்தில் மாட்டிக்கொள்ளும் அப்பாவிச் சிறுமி’! - #SpiritedAway
‘ஆவி உலகத்தில் மாட்டிக்கொள்ளும் அப்பாவிச் சிறுமி’! - #SpiritedAway

வி உலகத்துக்குள் சிக்கிக்கொள்ளும் ஒரு சிறுமி, தன்னையும் தன் பெற்றோரையும் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதே Spirited Away திரைப்படத்தின் கதை. ஜப்பானிய திரை வரலாற்றில் அதிக வசூலை ஈட்டி, சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளது. அனிமேஷன் திரைப்பட உலகில் தனித்துவமாக கருதப்படும் இந்தத் திரைப்படம், இருபத்தோறாம் நூற்றாண்டின் சிறந்த படங்களின் வரிசையிலும் இடம்பிடித்துள்ளது. 

பத்து வயது சிஹிரோ, தன் பெற்றோருடன் வேறு ஊருக்குச் செல்கிறாள். தன் நண்பர்களைப் பிரியவேண்டியிருக்கிறதே என்கிற துயரம் அவளுக்கு. அவர்களின் பயணத்தில் வழி தவறி, ஆள் அரவமற்ற பகுதியில் காரைச் செலுத்துகிறார் தந்தை. குறுகலான ஒரு சுரங்க வழி தென்படுகிறது. வாகனம் அதற்குமேல் செல்லமுடியாது. அந்த வழி எங்கேதான் செல்கிறது எனப் பார்க்க இறங்கிச் செல்கிறார் தந்தை. அச்சத்துடன் அவரைத் தடுக்கிறாள் சிறுமி. 

‘'பயப்படாதே, நான் இருக்கிறேன் அல்லவா?” என்கிறார் தந்தை. தாயும் தைரியம் சொல்கிறாள். அந்த வழி அவர்களை ஒரு தீம் பார்க்குக்கு இட்டுச்செல்கிறது. கைவிடப்பட்ட பழைய இடம் அது. விநோதமான பிரதேசமாக இருக்கிறது. 

எவருமே தென்படவில்லை என்றாலும், வழியெங்கும் கடைகள் உள்ளன. எங்கிருந்தோ சுவையான உணவின் வாசனை வருகிறது. பசியைத் தூண்டும், நாவூறவைக்கும் வாசனை. சிஹிரோவின் தந்தை அதைத் தேடிச்செல்கிறார். ஒரு கடையில் விதவிதமான, சூடான உணவுகள். ‘யாராவது இருக்கிறீர்களா?” என்று கேட்கிறார். பதில் இல்லை. 

‘சரி வந்தால் காசு தந்துவிடலாம்’ எனத் தந்தையும் தாயும் உணவுகளை அள்ளி அள்ளித் தின்கிறார்கள். சிஹிரோவையும் சாப்பிட வற்புறுத்துகிறார்கள். அவள் பயத்துடன் மறுக்கிறாள். விநோதமான அந்த இடத்தின் வசீகரத்தினால் சுற்றிப் பார்க்கச் செல்கிறாள். 

அங்கே ஓர் அழகான குளியல் இல்லம் இருக்கிறது. ஹக்கு என்கிற சிறுவன் அங்கே வருகிறான். '‘இது ஆவிகள் உலகம். சூரியன் மறைவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு. இல்லையென்றால் ஆவிகள் உன்னை அடிமையாக்கிக்கொள்ளும்” என எச்சரிக்கிறான். அவனும் அப்படி அடிமையாக இருப்பவன்தான். 

பயந்துபோகும் சிஹிரோ, தன் பெற்றோரை எச்சரிக்க ஓடுகிறாள். அங்கேயோ பெரும் அதிர்ச்சி. அவள் பெற்றோர், கொழுத்த பன்றிகளாக மாறியிருக்கிறார்கள். தாங்கள் மனிதர்கள் என்பதே அவர்களுக்கு மறந்துள்ளது. அச்சமும் அழுகையுமாக ஹக்குவின் உதவியை நாடுகிறாள் சிஹிரோ. 

‘'கமாஜி என்கிற வயதான மனிதனிடம் சென்று வேலை கேள். அவர் தர மறுப்பார். எப்படியாவது வற்புறுத்தி வேலையை வாங்கிவிடு. இங்கே வேலை செய்வதன் மூலமே உன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும். உன் பெற்றோரையும் காப்பாற்ற முடியும். உன் அடையாளத்தை அவர்கள் மறக்கடித்துவிடுவார்கள். எனவே, உன் பெயரை ‘சென்’ என மாற்றிக்கொள்’ என்று வழிகாட்டுகிறான். 

அது, ஆவிகள் விருந்தினர்களாகத் தங்கிச்செல்லும் குளியல் இல்லம். யூபாபா எனும் சூனியக்கார கிழவி அந்த இடத்தை நிர்வகிக்கிறாள். தன் பெற்றோரைக் குறித்த கவலையுடன், ‘இங்கு வந்து மாட்டிக்கொண்டோமே’ என கமாஜியைச் சந்திக்கச் செல்கிறாள் சிஹிரோ. 

சிஹிரோவுக்கு வேலை கிடைத்ததா? ஆவி உலகத்தில் என்னவெல்லாம் நடந்தன? பன்றிகளாக மாற்றப்பட்ட சிறுமியின் பெற்றோர் என்ன ஆனார்கள் என்பதே விறுவிறுப்பான அடுத்த காட்சிகள். 

ஜப்பானிய இயக்குநரான ஹயோ மியஸாகி, அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்குவதில் உலகப் புகழ்பெற்றவர். அவர் இயக்கிய பல திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலைக் குவித்துள்ளன. தன் நண்ர் ஒருவரின் மகளின் மூலம் இந்தத் திரைப்படத்துக்கான தூண்டுதலைப் பெற்ற மியஸாகி, பத்து வயது சிறார்களுக்கான அனிமேஷன் சினிமாவாக இதை உருவாக்கியிருக்கிறார். 

கணினி நுட்பம் வளர்ந்திருந்தாலும் அவற்றை மறுத்து, பாரம்பர்ய முறையில் கையால் வரையப்பட்ட படங்களால் அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்குவது மியாஸகியின் பாணி. எனவே, இவரது திரைப்படங்களில் தோன்றும் காட்சிகளும், பாத்திரங்களும் கற்பனை வளத்துடனும் மிகுந்த வசீகரத்துடனும் வண்ணமயமாகவும் இருக்கும். இந்தத் திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல. 

வண்டுகள்போல தரையில் உருண்டு சுறுசுறுப்பாக பணியாற்றும் உருவங்கள், குளியலுக்கான மூலிகைப் பொருள்களைத் தயார்செய்யும் சிலந்தி மனிதன் கமாஜி, டிராகனாக மாறும் ஹக்கு, அவனைத் துரத்தும் காகித உருவங்கள், சூனியக்கார சகோதரிகள், குண்டுக் குழந்தை, முகமற்ற ஆவி எனப் பலவிதமான விநோத உருவங்கள், அந்த ஆவி உலகத்தில் இருக்கின்றன. தண்ணீரின் மேல் ஓடும் ரயில், ஜப்பானின் பாரம்பரிய வடிவிலான கட்டடங்கள் திரைப்படத்துக்குக் கூடுதல் அழகு. 

அழுக்கான ஆவி ஒன்று குளியலுக்காக வருகிறது. அதன் நாற்றத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் அனைவரும் ஓடுகிறார்கள். அதன் குளியலுக்கான ஏற்பாட்டைச் சிறுமியிடம் தள்ளிவிடுகிறாள் சூனியக்காரி. நாற்றத்தைச் சகித்துக்கொண்டு அந்த ஆவியைச் சுத்தம் செய்கிறாள் சிஹிரோ. அது ஆவியல்ல, அந்தப் பிரதேசத்திலுள்ள ஆறு என்பது பிறகு தெரிகிறது. தன்னைச் சுத்தப்படுத்தியதற்காக மாயக் குளிகை ஒன்றை அது பரிசாக அளிக்கிறது. 

இயக்குநர் மியஸாகி, இளம் வயதில் ஏரி ஒன்றைச் சுத்தப்படுத்திய அனுபவத்தை இந்தக் காட்சியில் இணைத்துள்ளார். உயிர்களின் வாழ்வியலுக்கு அடிப்படையாக உள்ள நீர் ஆதாரங்கள், மனிதக் குலத்தால் நாசப்படுத்தப்படுவதை இந்தக் காட்சி உணர்த்துகிறது. இதுபோலவே சிஹிரோவின் பெற்றோர், பன்றியாக மாறுவது பேராசையின் பொருளாகச் சுட்டப்படுகிறது. 

ஜப்பான் மற்றும் ஆங்கில உரையாடலில் இந்த அனிமேஷன் Spirited Away உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஜப்பான் மொழியில் (ஆங்கில துணையெழுத்துக்களுடன்) பார்ப்பதே சுவாரசியமான அனுபவத்தைத் தரும். அந்த மொழியின் ஒலிநயம் கேட்பதற்கு அவ்வளவு இனிமை!