Published:Updated:

ஆல் இஸ் வெல்

ஆல் இஸ் வெல்

ஆல் இஸ் வெல்

ஆல் இஸ் வெல்

Published:Updated:

எதுவும் கடந்து போகும்!

‘‘நானும் என் கணவரும் நாலு வருஷமா காதலிச்சு, வீட்டுல போராடி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கஷ்டப்பட்டு உழைச்சு இப்போதான் நல்ல நிலமைக்கு வந்தோம். ஆனா, அதை அனுபவிக்கிறதுக்குள்ள என் வாழ்க்கையே அஸ்தமிச்சுப் போச்சு. ஒரு விபத்துல சிக்கி, என்னை அநாதையா விட்டுட்டு போயிட்டாரு என் கணவர். அவர் இல்லாத இந்த உலகத்துல எனக்கு வாழப் பிடிக்கல. எங்க பார்த்தாலும் அவர் நிக்கிற மாதிரி, அவர் என்னைக் கூப்பிடுற மாதிரியே இருக்கு. அவர் பிரிவை என்னால தாங்கவே முடியல. எதுக்காக நான் வாழணும் என்ற கேள்விதான் என்னை அரிச்சிட்டே இருக்கு...’’

- கணவனை இழந்த இளம் வாசகி ஒருவர் கண்ணீரோடு கடிதம் எழுதியிருந்தார். அவருடன் நிறையப் பேசி, ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினேன். இருந்தாலும், அவர் கண்ணீர்க் கதறல் கேட்டபடிதான் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆல் இஸ் வெல்

`பிரிவுநிலை ஏன்?’, `இது இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?’ என்ற கேள்விகள், பிரிவுத்துயரால் பாதிக்கப்பட்ட பலருக்குள்ளும் அலையடித்தபடியே இருக்கும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரிவு என்பது நிச்சயம் வந்தே தீரும் என்பது இயற்கை. சிலர் அதை ஏற்றுக் கடக்கிறார்கள், சிலர் அந்தப் புள்ளியிலேயே நின்றுகொண்டு, வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். ஒரு பிரிவு, அதன் வீரியத்தைப் பொறுத்து ஒவ்வொருக்கும் ஏற்படுத்தும் தாக்கம் மாறுபடுகிறது. இருந்தாலும், எவ்வளவு துயரென்றாலும், `இதுவும் கடந்து போகும்’ என்ற வாழ்க்கையின் விதியை அங்கே பொருத்தித்தான் ஆகவேண்டும்.

உலகிலேயே, பிரிவுநிலையின் உளவியல் வெளிப்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இந்தியர்கள்தான். புராணங் களில் இலக்கியங்களில் நண்பரின் பிரிவுக்காக வடக்கிருந்து உயிர்விட்டது தொடங்கி, இன்று வரை அதற்கு பல உதாரணங்கள் உண்டு.

ஆல் இஸ் வெல்

பிரிவை ஏற்றுக்கொள்வதை `எமோஷனல் அடாப்டபிளிட்டி’ என்பார்கள். பிரிவுநிலையின் வெளிப்பாடாக உளவியலாளர்கள் ஐந்து விஷயங்களைச் சொல்கிறார்கள். ‘இல்ல, அவர் என்னைவிட்டுப் போயிருக்கமாட்டாரு... நீங்க பொய் சொல்றீங்க’ என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாமல் இருப்பது; ‘எப்படி என்னைத் தனியா விட்டுப் போகலாம்? இருக்கவே முடியாது!’ என்று கோபப்படுவது; ‘அப்படி இருக்காது. என் சொத்தெல்லாம் போனாலும் பரவாயில்ல, அவரைப் போக விடமாட்டேன்’ என்று அடம்பிடிப்பது; ‘அய்யோ,
என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டாங்களே... என் வாழ்க்கையே போச்சே... இனி நான் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்...’ என்று புலம்புவது; பிரிவை ஏற்றுக்கொண்டு கடந்துபோவது. இதில், கடைசி நிலையில் இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களே. ஆனால், அதுதான் நிதர்சனம்.

அந்தக் காலத்தில் பிரிவுத்துயர் ஆற்ற, அவர் கொடுத்த பொருட்கள், ஒன்றாக இருந்த இடங்கள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றைக் கொண்டு ஆறுதல் அடைந்தார்கள். இன்றோ, புகைப்படம், வாய்ஸ் ரெக்கார்டர், வீடியோ, குறுஞ்செய்திகள் என்று ஒருவர் தன் நினைவாக விட்டுச் செல்லும் விஷயங்கள் ஏராளம்.

பிரிவுநிலையால் ஒருவர் துன்பம் மட்டுமல்லாமல்... பயம், தாழ்வு மனப்பான்மை, அவமானம், குற்ற உணர்ச்சி போன்றவற்றையும் உண்டாக்கிக்கொள்கிறார். நண்பர் ஒருவர் செல்லமாக ஒரு நாய் வளர்த்து வந்தார். திடீரென ஒருநாள் அந்த நாய் இறந்துவிட்டது. அவர் மிகவும் சோகமாகி, ஒருவித தனிமையில் தன்னை திணித்துக்கொண்டார். அவரிடம், ‘இன்னொரு நாயை வளர்க்கலாமே..?’ என்றேன். ‘இல்ல... நான் சரியா கவனிக்காததாலதான் அது இறந்துடுச்சு. அது சாக நான்தான் காரணம். என் காலைக்கட்டிட்டு வாலை ஆட்டிட்டு இருந்த என் செல்லத்தை நானே கொன்னுட்டேன்’ என்று புலம்பினார். நாய் விஷயத்திலேயே இப்படி என்றால், உறவுகள் விஷயத்தில் நம்மவர்கள் உளவியல் ரீதியாக எவ்வளவு எமோஷனல் ஆவார்கள்!

`கணவரை/மனைவியை/பெற்ற பிள்ளையை/உயிர்த்தோழியை இழக்கும்போது, இயல்பா இருன்னா எப்படி முடியும்?’ என்று கோபப்படலாம். இங்கு பிரிவுத்துயருக்கும், தாக்கத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். பிரிவுத்துயர் இயற்கையாக மூன்று நாட்கள் இருக்கும். சிலருக்கு மூன்று மாதங்கள் வரை இருக்கும் என்கிறது உளவியல். அதற்கு மேலும் இருக்கலாம். ஆனால், அது துயரம் என்ற புள்ளியிலேயே அதீதமாக இருக்காமல், தாக்கம் என்ற புள்ளி நோக்கி நகர வேண்டும். பிரிவுத் துயரை நாசூக்காக நீக்கத்தான் நம் முன்னோர்கள் இறந்தவர் வீடுகளில், 8-ம் நாள், 16-ம் நாள், 30-ம் நாள் காரியம் போன்ற சடங்குகளை உண்டாக்கி, அன்று உறவுகளை எல்லாம் ஒன்று சேர்ந்து, ‘எதுக்கும் கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் சொல்லும்படிச் செய்தார்கள். அதன் பிறகு எச்சமிருக்கும் பிரிவுத் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவது, சம்பந்தப்பட்டவரின் பொறுப்பு. பிரிவுநிலையால் வாடுபவர்கள், இது ஏதோ உலகத்திலேயே தனக்கு மட்டும் நிகழ்ந்துவிட்ட துயரம் என சுயபச்சாதாபத்தில் இருந்து வெளியே வாருங்கள். இயற்கையை எதிர்த்து நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணருங்கள். எந்த உயிரும், உறவும் இங்கு நிரந்தரமில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இன்னொரு பக்கம், பிரிந்தவருக்காக அழுதுகொண்டே இருப்பதைவிட, பாஸிட்டிவ் விஷயங்களைச் செய்யலாமே? ‘உயிரா வளர்த்த எங்கப்பா போனதுக்கு அப்புறமும் இந்த உலகத்துல நான் இருக்கேன்னு நினைக்கும்போதே, குற்ற உணர்ச்சியா இருக்கு’ என்ற விரக்திக்குப் பதில், அப்பா உங்கள் மேல் கொண்டிருந்த கனவை வென்று அவருக்கு சமர்ப்பிக்கலாம்.

‘அவரே போனதுக்கு அப்புறம் நான் எதுக்கு இருக்கணும்’ என்ற மனைவியின் கேள்விக்கு, கண்ணெதிரே பதிலாக இருக்கிறார்கள் பிள்ளைகள்.

‘எங்களுக்குக் குழந்தை இல்ல. அவருக்கு நான், எனக்கு அவர்னு இருந்தோம். அவர் போனதுக்கு அப்புறம் நானும் அவர்கூட போய் சேருறேன்’ என்று அரற்றும் மனைவி, வாழ்வதிலேயே சந்தோஷம் கொள்பவர் தன் கணவர் என்பதை அறியாதவரா?

இவ்வுலகம் விட்டுச் செல்லும் எந்த உறவின் ஆத்மாவும், தான் நேசித்த உறவும் உயிர்துறக்க விரும்பாது; தான் வாழாத வாழ்வையும் அவர் சேர்த்து வாழவே ஆசீர்வதிக்கும்!

- ரிலாக்ஸ்...

தொகுப்பு: சா.வடிவரசு

உங்களது பர்சனல் பிரச்னைகளுக்கு தீர்வு காண... ‘ஆல் இஸ் வெல், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2’ என்ற முகவரிக்கு கடிதம் எழுதலாம்.e-mail: alliswell-aval@vikatan.com

டாக்டர் அபிலாஷா  படம்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism