Published:Updated:

வரைந்தவனின் மரணத்துக்கு நீதி கேட்ட ஓவியங்கள்... ‘ஓவியர்’ பிரகாஷின் கண்காட்சி!

வரைந்தவனின் மரணத்துக்கு நீதி கேட்ட ஓவியங்கள்... ‘ஓவியர்’ பிரகாஷின் கண்காட்சி!
வரைந்தவனின் மரணத்துக்கு நீதி கேட்ட ஓவியங்கள்... ‘ஓவியர்’ பிரகாஷின் கண்காட்சி!

சென்னை நிருபர்கள் சங்க வளாக அறை, கனத்த மௌனத்தால் நிரம்பிக்கிடந்தது. அறை முழுவதும் பிரகாஷ் வரைந்த பென்சில் வண்ண ஓவியங்களைப் பார்த்த பிரபலங்களும் மாணவர்களும் ஆச்சர்யத்துடன் நின்றிருந்தனர். அப்போது பிரகாஷின் தாயார் தன் மகனின் ஓவியத்தைக் கட்டி அணைத்து பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். “இந்த மாதிரி ஒரு கண்காட்சி வைக்கணும்னுதான் என் குழந்தை ஆசைப்பட்டான். அவன் ஆசையை நான் நிறைவேத்திட்டேன். காலேஜ், படிப்பு எதுவும் வேணாம். நீ வந்திருப்பா. அம்மாகூட

வந்திருப்பா”  என இனி ஒருபோதும் திரும்பி வர இயலாத தன் மகனை நினைத்து கதறிக்கொண்டிருந்தார்.

தான் வரைந்த ஓவியங்களைவைத்து ஓவியக் கண்காட்சி நடத்த வேண்டும் என்ற பிரகாஷின் கனவை, அவரது தாயார் நிறைவேற்றியுள்ளார். அழுது அழுது கண்ணீர் வற்றிப்போயிருந்த அந்தத் தாயின் கேவல், அங்கு இருந்த அனைவரையும் துயரில் ஆழ்த்தியது.

வழக்கமான செய்தியாக மட்டுமே நாம் கடந்துசென்ற மாணவர் பிரகாஷின் மரணத்துக்குப் பின்னால், பெரிய ஓவியனாக வேண்டும் என்ற மகனின் கனவைத் தூக்கிச் சுமந்த தாயின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பும் உள்ளது.

கடந்த மாதம் 25-ம் தேதி, கல்லூரி நிர்வாகம் தந்த மன அழுத்தத்தால் ‘துறைத் தலைவர், தன்னை மதரீதியாகத் துன்புறுத்தினார்’ எனக் கடிதம் மற்றும் வீடியோ மூலம் பதிவுசெய்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் பிரகாஷ். “இந்த வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க வேண்டும். தன் மகனின் மரணத்துக்கு நீதி கிடைக்காவிட்டால், தன் உயிரையும் மாய்த்துக்கொள்வேன்” என அழுது துடித்துக்கொண்டிருந்தார் பிரகாஷின் தாயார் செந்தாமரை. 

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் - செந்தாமரை தம்பதியின் இரண்டாவது மகன் பிரகாஷ். நான்காம் வகுப்பு படிக்கும்போதே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்த பிரகாஷ், அந்தப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். பெரிய ஓவியனாக விரும்பும் பிரகாஷின் கனவுக்கு இந்தக் கல்லூரிதான் சரியான வாய்ப்பு அளிக்கும் என பிரகாஷோடு சேர்த்து அவரது தாயாரும் நம்பினார். ஆனால், இதுபோன்ற ஒரு துயரச் சம்பவத்துக்கு அதுவே காரணமாகும் என அவர்கள் யோசித்திருக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் பெருபான்மையான குடும்பங்களைப்போல்தான் பிரகாஷின் குடும்பமும். பிரகாஷைவிட இரண்டு வயது மூத்த சகோதரர் பிரதாப் தான் குடும்பத்தின் முதல் பட்டதாரி. அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராகப் பணிபுரிகிறார் பிரகாஷின் தந்தை பார்த்திபன். தம்பியின் மரணம் தொடர்பான விசாரணைக்காக வேலையை விட்டுவிட்டு வந்திருந்த பிரதாப், கண்காட்சிக்கு வந்திருந்தார். தன் மகன் தன்னைத்தானே வரைந்திருந்த சுயஉருவப் படத்தை (Self-Portrait) வெறித்துப் பார்த்தபடி இருந்த பிரகாஷின் தாயார் செந்தாமரையுடன் பேசினேன்.

“என்னோட குழந்தை எப்படி வரைஞ்சிருக்கான் பார்த்தியாப்பா! சின்னபுள்ளையில இருந்தே நல்லா வரைவான். கலந்துக்கிற எல்லா போட்டிகள்லயும் ஜெயிச்சுருவான். காலேஜுக்குத் தினமும் போயிட்டு வர, ராத்திரி 10 மணி ஆகிடும். காலையில திரும்பவும் 4 மணிக்கே கிளம்பிப் போகணும். இவ்வளோ தூரம் நேரம் செலவானாலும் ரெண்டு வருஷம் காலேஜ்ல பெஸ்ட் ஸ்டூடன்ட் அவார்டு வாங்கினான். 

நான் மூணு மணிக்கே எந்திரிச்சு குழந்தையைக் கிளப்பிவிடுவேன். எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாததால மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன். இதை நினைச்சு வருத்தப்பட்டு `கவலைப்படாதம்மா, உன் புள்ள பெரிய ஓவியனா வருவான். எல்லாம் சரியாகிடும்'னு சொல்வான்' என்றவர் விசும்பி அழ ஆரம்பித்தார். தனது கிராமத்திலிருந்து இரண்டு பேருந்துகள் மாறி காட்பாடி ரயில்நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை எக்மோரில் உள்ள தன் கல்லூரிக்கு டிரெயினில் செல்வார். காலை 4 மணிக்குக் கிளம்பி இரவு 10 மணிக்கு வீடு திரும்பும் பிரகாஷ், சென்னையில் தங்கிப் படித்தால் நிறைய செலவாகும். தன் குடும்பத்தை அது சிரமப்படுத்தும் என வீட்டில் இருந்தபடியே தினமும் பல மணி நேரம் பயணம் செய்து படித்தார்.

கல்லூரியில் அவருக்கு என்ன நெருக்கடி என, அவரது தாயாரிடம் கேட்டேன். “இப்படியெல்லாம்  நடக்கிறதுக்கு முன்னாடியே, செம்படம்பர் மாசம் 26-ம் தேதி காலேஜுக்குப் போய் பிரின்சிபால்கிட்ட பேசினோம். `சார், என் பையனுக்கு புராஜெக்ட் பண்ணவிடாம HOD தொந்தரவு செய்றார். மத, சாதி ரீதியா திட்டியிருக்கார்'னு சொன்னோம். `நான் பார்த்துக்கிறேன்'னு சொல்லி அனுப்பினார். அதுக்கப்புறம் அந்தப் பிரச்னையை சரிபண்ணிட்டாங்கனு நினைச்சோம். ஆனா, அப்புறமாத்தான் தெரிஞ்சது ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகி காலேஜுக்குப் போற மாதிரி கிளம்பி காலேஜ் போகாம, பார்வையில்லாதவங்க ஸ்கூலுக்குப் போயி அங்கே இருக்கிறவங்களுக்கு சேவை பண்ணிட்டு வந்திருக்கான்னு'' என்றார் வேதனையோடு. 

“காலேஜ்ல அவனைத் திட்டினதையெல்லாம் வேற ஒரு பையன் `சார், அவனை அப்படித் திட்டினாங்க'ங்கிற மாதிரி என்கிட்ட சொல்வான். உண்மையைச் சொன்ன நாங்க கஷ்டப்படுவோம்னு சொல்லாமலேயே மறைச்சுட்டான். என் தம்பி இறந்துபோனது என்னங்க நியாயம்? இவ்வளவு நாள் ஆனதுக்கு அப்புறமும் எந்த நடவடிக்கையும் யார் மேலயும் எடுக்காம இருக்காங்க. இல்லாதவங்க இந்த மாதிரி செத்துப்போனா, அவங்களுக்கு நீதி கிடைக்காதா?'' என அழுதபடியே தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பிரகாஷின் அண்ணன் பிரதாப்.

“என் குழந்தைக்கு நடந்த மாதிரி வேற எந்தக் குழந்தைக்கும் நடக்கக் கூடாதுனுதான் நான் இந்த அளவுக்கு போராடுறேன். சாகுறப்ப என் குழந்தை நினைச்சிருப்பான்ல `நாம இறந்த அப்புறமாச்சும் நமக்கு ஒரு நீதி கிடைக்கும்'னு, `நம்ம அம்மா, நமக்காகப் போராடுவாங்க'னு!'' என வெடித்து அழுதார்.  என்னிடம் பேசிய நேரம் முழுவதும் பிரகாஷை `குழந்தை' என்று மட்டும்தான் அழைத்தார் செந்தாமரை. இவ்வளவு நாள்கள் தன் மகனையும் அவனது கனவையும் சுமந்துகொண்டிருந்த தாய், இப்போது தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் சுமந்துகொண்டிருக்கிறார். 

பிரகாஷின் குடும்பம் சாய்ந்து நின்றிருந்த சுவரின் மேல் பகுதியில், `நீதி என்பது, மற்றுமொரு வார்த்தை அல்ல' என எழுதப்பட்டிருந்த பதாகை இருந்தது. தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கல்விச் செல்வத்தால் மட்டும்தான் முடியும் என நம்புகிறது ஏழைக் குடும்பங்கள். அந்தக் கல்வியை, தாங்கள் சம்பாதிக்கும் பணம், தங்களின் தூக்கம் எனப் பலவற்றை இழந்துதான் பெறவேண்டியுள்ளது. ஆனால், ஏழைகள், தங்கள் `உயிரை'யும் கொடுக்க வேண்டும் என்கிற புதிய நிலைக்கு அவர்களைத் தள்ளுவது எது? ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கல்விக்காக தற்கொலைகள் நடக்கும்போதெல்லாம், `இதுவே கடைசியாக இருக்க வேண்டும்' என நினைத்துதான் அதைக் கடக்கிறோம். ஆனால், நாம் கடப்பதல்ல தீர்வு; இதைத் தடுப்பதுதான் தீர்வு. அதற்கான வேலைகள் இன்னோர் இறப்பு நிகழாததற்கு முன்பே தொடங்கப்பட வேண்டும்.