Published:Updated:

வேகமாகச் சூரியனைக் கடந்த விண்கல்... நம் பால்வெளிக்கு வெளியிலிருந்து வந்ததா? #Oumuamua

வேகமாகச் சூரியனைக் கடந்த விண்கல்... நம் பால்வெளிக்கு வெளியிலிருந்து வந்ததா? #Oumuamua
வேகமாகச் சூரியனைக் கடந்த விண்கல்... நம் பால்வெளிக்கு வெளியிலிருந்து வந்ததா? #Oumuamua

இன்டர்ஸ்டெல்லர் (Interstellar) படம் பார்த்திருக்கிறீர்களா. அதில் நம் சூரியக் குடும்பத்தைவிட்டு வேறு ஒரு சூரியக் குடும்பத்திற்கு வார்ம் ஹோல் (Worm Hole) எனப்படும் துவாரம் வழியாகச் சென்று வருவார்கள். அந்த வேறு ஒரு சூரிய குடும்பத்திலும், நம் பால்வெளியைப் போன்றே நிறைய கோள்கள் இருக்கும். இது அறிவியல் புனைவு என்று கருதப்பட்டாலும், இது நிஜமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்பட்டது. சரி, அந்த அந்நியப் பால்வெளியில் கிரகங்கள் மட்டுமா இருக்கும். நம் பால்வெளியைப் போன்றே விண்கல் தொடங்கி நட்சத்திரங்கள் வரை அனைத்துமே இருக்க வேண்டுமல்லவா “இதெல்லாம் படக்கதைங்க, நிஜத்துல வாய்ப்பிருக்கா” என்று கேள்வி கேட்பவர்களை ஆச்சர்யத்தில் கண்கள் விரியப் பார்க்க வைக்கும் வகையில் வந்திருக்கிறது ஒரு செய்தி!

கடந்த அக்டோபர் மாதத்தின் போது, இயல்பான நாளென்று அறியப்பட்ட ஒரு நாளில், நம் சூரியனின் அருகில் ஒரு விந்தையான நிகழ்வு அரங்கேறியது. பார்ப்பதற்குக் கல்லால் செதுக்கப்பட்ட பெரிய ஏவுகணை போல, சீறும் வேகத்துடன் ஒரு பொருள் நம் சூரியனுக்கு அருகில் வந்தது. முகத்திற்கு அருகில் வந்து பயமுறுத்தி விட்டு ஓடிப் போகும் கொசுவைப் போலச் சூரியனை ஒரு முறை சுற்றிவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு வானியல் ஆராய்ச்சியாளர்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மாதமாக இதைக் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டது கார்னெல் பல்கலைக்கழகம் (Cornell University). இந்த ஆராய்ச்சியின் முடிவில் இது வேறு ஒரு பால்வெளி மண்டலத்திலிருந்து வந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்படிக் கண்டறிந்தார்கள்?

ஹவாயியன் மொழியில் ‘தூதுவன்/ஒற்றன்’ என்ற பொருள் தரும் ‘Oumuamua’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்தான் வேறு ஒரு பால்வெளி மண்டலத்திலிருந்து வந்ததாக நாம் கண்டறிந்த முதல் பொருள். எப்படி இதை உறுதிசெய்தார்கள் என்பதை எளிய முறையில் இப்படி விளக்கலாம்.

Oumuamua விண்கல்லின் நீள்வட்டப் பாதை சற்றே விநோதமாகவும், அளவில் பெரியதாகவும் நீள்கிறது. அதாவது, அதன் மொத்த நீள்வட்டப் பாதை நம் பால்வெளியைத் தாண்டியும் நீள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல் சுமார் 400 மீட்டர் நீளத்தில் இருப்பதாகவும், ஒவ்வொரு 7.3 மணி நேரங்களுக்கும் சுழன்றதாகவும் ஐரோப்பிய தெற்கு ஆய்வு மையத்தின் மிகப்பெரிய தொலைநோக்கி (VLT) மூலம் கண்டறிந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிட் ஜேவிட் தலைமையில் இயங்கிய மற்றோரு வானியல் ஆராய்ச்சியாளர்கள் குழு, இதேபோல் பத்தாயிரம் விண்கற்கள் வேறு பால்வெளியிலிருந்து வந்திருக்கலாம் என்றும், நம் கண்களுக்குத் தெரியாமல் இன்னமும் மறைந்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறது.

இவை அனைத்தும் நம் சூரிய குடும்பத்தின் உள்ளே வந்து வெளியேறும் பழக்கங்களைக் கொண்டிருக்கலாம் என்றும், நம் கிரகங்களை விட அதிக வேகத்தில் பயணிப்பதால் இவை சூரியனின் ஈர்ப்பு விசைக்கு அகப்படாமல் தப்பிப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். Oumuamua விண்கல் கருஞ்சிவப்பு நிறத்தில் மிளிர்கிறது. இதன் காரணம் இது ஹைட்ரோகார்பன் போன்ற கரிம பொருள்களால் ஆனது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப் படி, இது போல வருடா வருடம் 1000 கற்கள்  உள்ளே வருகின்றன, 1000 கற்கள் வெளியேறுகின்றன. அதாவது தோராயமாக ஒவ்வொரு நாளும் மூன்று கற்கள் உள்ளே வருகின்றன, மூன்று கற்கள் வெளியேறுகின்றன. இனி இவ்வகை கற்களைக் கண்டறிய ஆராய்ச்சிகள் தீவிரமாகத் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.