Published:Updated:

வாகமன்... கடவுளின் தேசத்தில் கால் படாத சொர்க்கம்! ஊர் சுத்தலாம் வாங்க...!

வாகமன்... கடவுளின் தேசத்தில் கால் படாத சொர்க்கம்! ஊர் சுத்தலாம் வாங்க...!
வாகமன்... கடவுளின் தேசத்தில் கால் படாத சொர்க்கம்! ஊர் சுத்தலாம் வாங்க...!

‘இந்த லீவுல டூர் அடிக்கலாம்னு இருக்கேன்’ என்பவர்களது பெரும்பாலான சாய்ஸ் என்னவாக இருக்கும்? மலைவாச ஸ்தலங்கள் என்றால் ஊட்டி, கொடைக்கானல்... அருவி என்றால் குற்றாலம்... கோயில் குளம் என்றால் திருச்செந்தூர், திருவண்ணாமலை. இதெல்லாம் மனசை மயக்குபவைதான். ஆனால் அதையும் தாண்டி, ‘‘வாடா தம்பி... ரோஸ்மில்க் வாங்கித் தர்றேன்’’ என்று கிக்காக அழைக்கும் சமந்தாபோல் சொக்கவைக்கும் இடங்கள் எக்கச்சக்கம் உண்டு. மிடில் க்ளாஸ் மக்கள் யோசிக்காமல் பெட்டியைக் கிளப்பிக் கொண்டு பார்க்க வேண்டிய அற்புதமான சில இடங்களுக்கு வண்டியைக் கிளப்பினேன். இந்த வாரம், கேரள மாநிலத்தில் இருக்கும் வாகமன்.

சென்னைக்காரர்களோ, மதுரைக்காரர்களோ - அனைவருக்கும் வாகமன் செல்ல ஒரே வழி - தேனி. தேனி தாண்டி கூடலூர், குமுளி, வண்டிப் பெரியார், ஏலப்பாறை வழியாகத்தான் வாகமன் செல்ல வேண்டும். பஸ்ஸில் கிளம்பினாலும் தேனி போய்விட்டுக் கிளம்புவதுதான் பெஸ்ட். ‘வழியில எங்கேயும் நிக்கக் கூடாது’ என்று சபதம் வேறு எடுத்தபடி காரின் ஸ்டீயரிங் பிடித்தேன். கவர்ன்மென்ட் பஸ் மாதிரி அடிக்கடி நிற்கவில்லை. ஒரே மிதி - தேனி வந்திருந்தது. தேனியில் லஞ்ச்.

சின்னமனூர் தாண்டி இடதுபுறம் சென்றால், மேகமலை. நேராகச் சென்று லேசாக ரைட் டர்ன் அடித்தால், குமுளி. மலைப்பாதை தெரிய ஆரம்பித்தது. செக்கிங் பண்ணுவார்களோ என்று இறங்கினால், ‘செக்கிங்லாம் கிடையாது சார்; கிளம்புங்க’ என்று உரிமையாக ‘bye’ சொன்னார் காவல்துறை அதிகாரி ஒருவர். ‘சிசிடிவி’ கேமரா மட்டும்தான் ஆதாரமாம். சில செக்போஸ்ட்களில் டைமிங் உண்டு. குமுளிக்கு அது தேவையில்லை. காட்டில் விலங்குகள் இல்லை என்பதால், இரவில்கூட மலையேறலாம். ஆனால், டிரைவிங் அட் ஓனர்ஸ் ரிஸ்க். தமிழ்நாட்டில் இருந்து சில குட்டி யானைகளில் இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிப் பறந்து கொண்டிருந்தார்கள். ‘‘கேரளாவுக்கு பீஃப் நம்ம சப்ளைதான்!’’ என்றார் ஒரு குட்டி யானை உரிமையாளர்.

குமுளி நெருக்கத்திலேயே மலையாள வாடை. தமிழ்நாடு எல்லை முடிந்துவிட்டது. நிறைய சபரிமலை பக்தர்களைப் பார்க்க முடிந்தது. மலை ஏறி விட்டு வந்தவர்கள்; மலை ஏறப் புறப்பட்டவர்கள். சுற்றிலும் நேந்திரம் சிப்ஸ், மஸ்கோட் அல்வா என்று படு பரபரப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சீஸன் என்றால், இன்னும் குமுளி அமளிதுமளிப்படும் என்றார்கள்.

அடுத்து தேக்கடி வந்தது. ‘நம்ம டார்கெட் வாகமன்தான்’ என்பதால், தேக்கடியை அப்புறம் பார்த்துக்கலாம் என்று நினைத்தேன். பெரிய மாலுக்குள் போய்விட்டு எந்த ஷாப்பிங்கும் பண்ணாமல், வெளியே வருவதற்கு மிகப் பெரிய மனதைரியம் வேண்டுமே! அந்த மனதைரியம் நம்மில் பலரிடம் இல்லை. எனக்கும்தான். அதேபோல்தான் தேக்கடியும். ரோஸ்மில்க் சமந்தா ஞாபகம் வந்தது. ‘ரூம் போடுடா கைப்புள்ள’ என ஒரு ஓட்டலில் தஞ்சமடைந்தேன். பால்கனிக்கு வந்தால், மான்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஹவுஸ் கீப்பிங் பையனுக்கு எக்ஸ்ட்ரா குடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

தேக்கடியில் தங்குபவர்கள் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லா ஊர்களிலும் தங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு பில் போடுவார்கள். தேக்கடியில் மட்டும் 12 மணி நேரக் கணக்கு. அதாவது, மதியம் 12 மணிக்கு ரூம் எடுத்தால், நைட் 12 மணிக்குள் ‘சாமான் நிக்காலோ’ செய்துவிட வேண்டும். ‘அடப்பாவிகளா’ என்று சாபம் விடத் தோன்றவில்லை. ஏனென்றால், தேக்கடியின் அழகு அப்படி. காசுக்கேற்றதைவிட சூப்பர் தோசை. தேக்கடியில் சில யானைகள், மான்கள் எல்லாம் ஹாய் சொல்லின. இதுக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தேக்கடி ஜங்ஷனில் இருந்து வாகமனுக்கு மூன்று வழிகள் என்றது ஜிபிஎஸ். வண்டிப் பெரியார் வழி, ஆனவிலாசம் வழி, குமுளி சாலையிலேயே நேராகப் போவது ஒரு வழி. எப்படிப் போனாலும், ஏலப்பாறை எனும் இடத்தில் சந்தித்துத்தான் ஆக வேண்டும். நேர் ரூட்டில் போவதுதான் பெஸ்ட் என்று பள்ளியில் படித்த ஞாபகம். நேராகவே போனேன். பஸ்ஸில் வருபவர்களுக்கும் ஆப்ஷன் இருக்கிறது. தேக்கடியில் இருந்து வாகமனுக்கு அடிக்கடி பேருந்துகள் உண்டு. ஆனால், ஒரு டாக்ஸி புக் பண்ணுவது சாலச்சிறந்தது. டாக்ஸிக்கு 2,500 செலவழித்தால் சுற்றிக் காட்டி கூட்டி வந்து விடுகிறார்கள்.

கடல் மட்டத்திலிருந்து மேலேறிக் கொண்டே இருந்தேன். செம சில். வெயில் - மழை, குளிர் என்று பார்க்க வேண்டாம். வீட்டில் லக்கேஜ் பேக் பண்ணும்போது, ஸ்வெட்டர் அல்லது ஜெர்க்கினை ஆல்டைமாக வைக்க மறக்காதீர்கள். சில குளிர் நேரங்களில் உடம்பு மொத்தமும் கூஸ்பம்ப்ஸ் ஏற்படலாம். 'தொண்டை சரியில்ல; பச்சத் தண்ணி குடிச்சா செட் ஆகாது' என்பவர்கள், ஹாட் ஃப்ளாஸ்க்கில் சுடுதண்ணீரையும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். அரைக்கால் ஷார்ட்ஸ் தவிர, ஃபுல் ட்ராக் பயன்படுத்துவது கால்களில் ஏற்படும் விறைப்பைத் தடுக்க உதவும். ஷூவும் அவசியம்.

இங்கே கார் ஓட்டுபவர்களுக்கு, கொஞ்சம் ராஜதந்திரம் தெரிந்திருக்க வேண்டும். கடாமுடா சாலைகள், காரைப் படுத்தி எடுத்தது. என்னைத் தாண்டி ஒரு பயணிகள் ஜீப், சர்ரென மவுன்ட் ரோடு பாலத்தில் செல்வது போல் பறந்தது. ‘‘அவ்விடம் பழக்கமானு... அதான்’’ என்றார் ஒருவர். பழக்கமான டிரைவர்களுக்கு மட்டும் இந்தச் சாலை நன்கு ஒத்துழைக்கிறது. எனக்கு ஒரு கி.மீ-க்கு 4 நிமிடம் வரை ஆனது.

மலை ஏறி முடித்ததும், சுற்றிலும் பசுமைப் புல்வெளிகள், சில் கிளைமேட்.. 'வா.. கமான்..' என்றது சூழ்நிலை. அட, வாகமன் வந்துவிட்டது. ஆம்! 1,100 மீட்டர் உயரத்தில் இருந்தது வாகமன். மருந்துக் கடை, ஹோட்டல்கள், மளிகைக் கடை என்று ஜாலியாக ஷாப்பிங் நடந்தது. விசாரித்தால், எல்லாரும் நம் ஊர்க்காரர்கள். பல பேர் இங்கே இடம் வாங்கி பில்டிங் கட்டி லாட்ஜ் நடத்துகிறார்கள். சீஸன் நேரங்கள் தவிர இங்கே புக்கிங் தேவையில்லை என்றார்கள். இரவு ஆகியிருந்ததால், நல்ல ரூமாகப் பார்த்து புக் செய்தேன். எப்போதும் 10 முதல் 22 டிகிரி வரை குளிர் இருந்துகொண்டே இருந்ததால், ஃப்ரிட்ஜுக்குள் வைத்ததுபோலவே இருக்கிறது ஊர். மதியம்கூட செம குளிர் அடிக்கும் என்றார்கள். வாய் வழியே நீராவி போல மூச்சு வந்தது. இங்கு தேக்கடி போல் இல்லை. 24 மணி நேரக் கணக்குதான்.

டாஸ் போட்டுப் பார்த்தேன். முதலில் போட்டிங். நீங்கள் நினைப்பதுபோல் இங்கு போட்டிங் அணை நீரிலோ, ஏரியிலோ நடக்கவில்லை. ‘‘இடுக்கி டேம் தண்ணியா? பெரியார் டேமா?’’ என்று விசாரித்தேன். ‘‘எந்த டேமும் இல்லா. இவ்விட மழைத் தண்ணியானு’’ என்றார் டிக்கெட் கவுன்டரில் இருந்த சேச்சி. ‛மழை நீர் சேகரிப்பில் போட்டிங்கூட விடலாமா... வெல்டன் கேரளா!’ என்று பாராட்டிவிட்டு ஒரு போட்டில் ஏறினேன். தனியார் நடத்தும் படகுக் குழாம் என்பதால், தலைக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலித்தார்கள். இங்கே குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் வைத்திருந்தார்கள். ஒரு பெரிய பந்துக்குள் குழந்தைகளை அடைத்து, தண்ணீருக்கு மேல் மிதக்கவிடும் விளையாட்டைப் பார்த்ததும் எனக்கே ஆசை வந்தது.

வாகமனில் சுற்றிப் பார்க்க என்று ஒரு பெரிய லிஸ்ட்டையே எழுதித் தந்தார் என் காட்டேஜ் உரிமையாளர். ஆனால், உள்ளே நுழைந்ததும் டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரி இல்லையே என்றுதான் நினைத்தேன். ஸாரி வாகமன். இரண்டு நாட்கள் தங்கியிருந்து வாகமனை ஆசை தீரச் சுற்றிப் பார்த்தவர்களைப் பார்த்தேன். மொத்தம் 13 ஸ்பாட்கள். இதில் முக்கால்வாசி இடங்கள் வியூபாயின்ட் மட்டுமே! ஒரு மலை மேல் ஏறி நின்று மொத்த கேரளாவையும் குட்டியாக ரசிக்கும் எக்கச்சக்க வியூபாயின்ட்கள்தான் வாகமனின் பியூட்டி.

அதாவது, வானம் தொடும் மலைகளும், ஆழம் அறியா பள்ளத்தாக்குகளும்தான் வாகமனின் ஸ்பெஷல். ஒரு மாலை நேரத்தில் இங்குள்ள வியூ பாயின்ட்களில் வலம் வந்தால், மனசில் உள்ள அழுக்கெல்லாம் துடைத்தெறியப்படலாம். அத்தனை அமைதி, அழகு, வாஞ்சை! சொல்லப் போனால், பல நல்ல சினிமாக்களின் செல்லமான ஸ்பாட்டாக வாகமன் இருந்திருக்கிறது. ‘தங்க மீன்கள்’ படத்தில் வரும் ‘ஆனந்த யாழை’ பாடல் இங்குதான் படமாக்கப்பட்டது என்று ஓர் இடத்தைக் காட்டினார்கள். மொட்டைப் பாறை எனும் அந்த இடம், அவ்வளவு ரம்மியமாக இருந்தது. இதன் உச்சிக்குப் போக வேண்டும் என்றால், 1 கி.மீ ஜாலியாக ட்ரெக்கிங் போக வேண்டும். உச்சியில் ஏறி செல்ஃபிகளை அள்ளிக் குவிக்கலாம். கொஞ்சம் தள்ளி ஓர் இடத்தைக் காட்டி, இது ‘பையா’ படத்தில் ‘அடடா மழைடா’ பாட்டு எடுக்கப்பட்ட இடம் என்றார்கள்.

ஆன்மிக அன்பர்களுக்கும் ஒரு அருமையான ஸ்பாட் வாகமன். இங்கே புகழ்பெற்ற ஸ்பாட்கள் மூன்று. குரிசு மலை, முருகன் மலை, தங்கல் மலை. குரிசு மலையில் மிகப் பழைமையான புனித செபாஸ்டியன் தேவாலயம்தான் ஸ்பெஷல். புனித வெள்ளியில் தள்ளுமுள்ளே நடக்கும் என்றார்கள். குரிசு மலையின் கிழக்கில் இருக்கும் முருகன் கோயில் உள்ள முருகன் மலையில் தைப்பூசம் அன்று அல்லோல கல்லோலம்தான். தங்கல் மலை, கிட்டத்தட்ட முஸ்லிம்களுக்கானது. 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்த ஹஷ்ரத் ஷேக் ஃபரூதீன் பாபா எனும் முனிவர், இந்த இடத்தில்தான் ஜீவசமாதி அடைந்ததாகச் சொல்கிறார்கள். முஸ்லிம் திருவிழாக்களின்போது இங்கு தரப்படும் ‘கஞ்சுசக்கார்’ என்னும் இனிப்பு வகை பிரசாதம் செம ஃபேமஸ். பருந்துப் பாறை எனும் மேடு, வாகமனுக்கே அழகு.

பாஞ்சாலி மெட்டு என்ற இடத்துக்கு ட்ரெக்கிங் போவது செம ஜாலியான விஷயம். ஒற்றையடிப் பாதையில் புல் சரிந்து, காலடிகளில் வழுக்கும். மலையில் கைகளை ஊன்றி, மேலேறிச் செல்வது சுகமாக இருக்கும். ஆனால், அட்டைகள் கவனம். வரிசையாக கற்கள். சில கோயில்கள். 'உடைகளைக் கழற்றிவிட்டு காற்றில் நிற்பதுபோல், எண்ணங்களைக் கழற்றிவிட்டு நின்று பாருங்கள்’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் சொன்னது சரிதான்.

இப்படி எல்லா ஸ்பாட்டுகளுமே உள்ளடங்கி, மேலேறி இருக்கிறது. அதனால், நிறைய பேர் வாகமனை ஜஸ்ட் லைக் தட் டீல் பண்ணிவிட்டுக் கிளம்பிவிட வாய்ப்புண்டு. இங்குள்ள பைன் ஃபாரெஸ்ட்டும் அப்படித்தான். கொடைக்கானலை நினைவுபடுத்தியது. இரண்டுக்கும் ஒரே வயசு என்றார்கள். கொடைக்கானல் போலவே இங்கும் ஆன் தி ஸ்பாட் போட்டோ எடுத்து ஃப்ரேம் பண்ணித் தருகிறார்கள். அதே மாதிரிதான் அருவிகளும் உள்ளடங்கி இருந்தன.

எப்போதாவது தொகுதிப் பக்கம் எட்டிப் பார்க்கும் எம்.எல்.ஏக்கள் மாதிரி, அவ்வப்போது எட்டிப் பார்த்துக் காணாமல் போகும் அருவிகள் வாகமனில் நிறைய உண்டு. சில அருவிகளுக்கு கடுமையான ட்ரெக்கிங் மூலம்தான் செல்ல வேண்டும். பாம்புப் படுக்கையில் பெருமாள் பள்ளி கொண்டிருப்பதுபோல், சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலை படுத்துக் கிடக்க, 2 கி.மீ மலை மீதேறி ஓர் அருவியைப் பார்த்தேன். பார்த்ததும் குளிக்கத் தூண்டியது. இதற்கு வாகமன் அருவி என்றே பெயர் வைத்திருந்தார்கள். ‘அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்’ என்று பாடிய த்ரிஷாவுக்கு வாகமன் அருவியை ரெகமண்ட் செய்கிறேன். சுற்றிலும் யாருமே இல்லை. அதனால், வாகன இரைச்சல், காற்று மாசு, பிளாஸ்டிக் குப்பைகள் எதுவும் இல்லை. வாகமன் அருவியை நாசம் பண்ண கொடுங்கோலர்களுக்குக்கூட மனசே வராது. ஆசம்!

குளித்துவிட்டு நல்ல டீ அடித்தால் செமையாக இருக்கும். எங்கேயாவது தென்பட்ட டீக்கடைகளில், மணமான ஒரு டீ. வாகமனில் டீக்கடைகளுக்குத்தான் பஞ்சம். எஸ்டேட்டுகளுக்கு இல்லை. எக்கச்சக்க எஸ்டேட்டுகள். எல்லாமே பிரைவேட். கேரளா டூரிஸத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு சில டீ எஸ்டேட்டுகள், மணம் பரப்பியிருந்தன.

உச்சிப் பாறைகள், பச்சைத் தாவரங்கள், நீரோடைகள் என எல்லா இடத்தையும் டிக் அடித்தாயிற்று. டூர் முடியப் போகிறதே என்று ஆண்ட்ராய்டு போனில் சர்ரென சார்ஜ் இறங்குவதுபோல், வருத்தம் பரவியது. அதேநேரம் சார்ஜ் இறங்கிய போன்போல், மனசும் சுத்தமாக இருந்தது. கேரளாவை, கடவுளின் தேசம் என்று ஏன் சொல்கிறார்கள் என்று இப்போது புரிந்தது.