Published:Updated:

வேண்டாம் டாஸ்மாக் !

வேண்டாம் டாஸ்மாக் !

வேண்டாம் டாஸ்மாக் !

ன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய போராட்டத்தில், தன் இன்னுயிரை இழந்திருக்கிறார் காந்தியவாதி சசிபெருமாள். அவர் செல்போன் கோபுரம் மீது ஏறியதும் அவரது மரணமும் சில சர்ச்சைகள் நிரம்பியது என்றாலும், அவரது நோக்கம் நேர்மையானது; தியாகம் மகத்தானது. மது என்னும் கொடிய நஞ்சை, இந்த மண்ணில் இருந்து அடியோடு அகற்ற வேண்டும் என்ற வெகுமக்கள் நலன் சார்ந்த கோரிக்கைக்காக, தன் உயிரையே தந்திருக்கிறார் சசிபெருமாள். 

ஆனால், டாஸ்மாக் மூலம் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவுவாங்கிக்கொண்டிருக்கும் அரசுக்கு, இந்த ஒற்றை உயிரின் இழப்பு எந்த வலியையும் ஏற்படுத்தவில்லை. அதனால்தான், மதுவிலக்கு அறிவிக்கக் கோரி சசிபெருமாளின் உடலை வாங்க மறுத்த அவரின் குடும்பத்தினரை, இரக்கம் இல்லாமல் கைதுசெய்திருக்கிறார்கள். அதனால்தான், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சென்னையில் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். அதனால்தான், காக்கிச் சட்டை அணிந்த காவல் படை, கலிங்கப்பட்டி சாராயக்கடையைக் காவல் காக்கிறது. அதனால்தான், மாநிலம் முழுக்க போர்க் குரல்கள் எழுந்த பிறகும், போராட்டங்கள் தொடரும்போதிலும் ஆணவ மௌனம் காக்கிறது தமிழ்நாடு அரசு.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கன்னியாகுமரியில் மக்கள் அகற்றக் கோரியது ஒரே ஒரு டாஸ்மாக் கடையைத்தான். அதற்கே அவர்கள் 2012-ம் ஆண்டில் இருந்து இடைவிடாமல் போராடிவருகின்றனர். அதில் கடைசியாக அந்த மக்களுக்கு ஆதரவளிக்கச் சென்றவர்தான் சசிபெருமாள். அவரது மரணத்துக்குப் பிறகு உண்ணாமலைக்கடை டாஸ்மாக் கடையை மூடியிருக்கிறார்கள். எனில், தமிழ்நாட்டில் இருக்கும் 6,826 டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு, கடைக்கு ஒன்றாக 6,826 உயிர்களைப் பலிகொடுக்க வேண்டுமா என்ன?

வேண்டாம் டாஸ்மாக் !

'மது விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய்தான் அரசின் முக்கியமான நிதி வருவாய்’ எனச் சொல்வதை இனி ஏற்பதற்கு இல்லை. அரசு நினைத்தால் டாஸ்மாக் வருவாயை வேறு வழிகளில் ஈட்டலாம். அதற்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உறுதியான எண்ணமும், மாற்று வழிகளைச் சிந்திக்கும் முயற்சியும் வேண்டும். அது இல்லாமல் 'மதுவிலக்கு ஒரு மாயை’ என்ற கருத்தை மட்டும் பரப்புவது, போதையைவிட கேடான சூழ்ச்சி. மதுவில் இருந்து அரசின் கஜானாவுக்கு மட்டும் பணம் செல்லவில்லை. மதுபான ஆலைகளை நடத்துவதே அதிகாரத்தில் இருப்பவர்கள்தான். இரண்டு கழகங்களின் பெரும்புள்ளிகளும் இந்த வருமானத்தில் திளைக்கின்றனர்.  

'மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரிக்கும்’ என்ற வாதமும் நிராகரிக்கத்தக்கதே. ஏனெனில், மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தைவிடவும் கள்ளச்சாராயச் சாவுகள் அதிகமாக நடப்பது தமிழ்நாட்டில்தான். பள்ளிச் சிறுவர் - சிறுமிகள் வரை குடிப்பழக்கத்தைப் பரப்பிவைத்திருக்கும் டாஸ்மாக் கடைகளை இப்போதே ஒழித்துக் கட்டினால்தான், அடுத்த தலைமுறையையேனும் காப்பாற்ற முடியும். மாறாக மக்களுக்கு ஊற்றிக்கொடுத்து, மது மயக்கத்தில் கிடப்பவர்களின் சட்டைப் பையில் இருந்து ரூபாய் நோட்டுக்களைத் திருடி, அதில் ஒரு நோட்டை எடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸியும் கிரைண்டரும் கொடுப்பது அப்பட்டமான அருவருப்பான பித்தலாட்டம்.  

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, விற்பனை நேரத்தைக் குறைப்பது, பார்களை மூடுவது எனப் படிப்படியாகவேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் போராட்டம் ஒவ்வொரு நாளும் பல்கிப்பெருகுவதைக் கண்டு, டாஸ்மாக் கடைகளை இனி அரசு நடத்தாது என அறிவித்து, மது விற்பனையை தனியாருக்குத் தாரைவார்க்கும் குயுக்தியான முடிவை தமிழ்நாடு அரசு எடுத்தால்... அது மிகமிகக் கேவலம். நமது இலக்கு, பூரண மதுவிலக்கு. அரசு இன்று மூடாவிட்டால், மக்களே ஒன்றுதிரண்டு மூடவைப்பார்கள். அதுதான் சசிபெருமாள் என்னும் தியாகிக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கும்!