Published:Updated:

சலாம் கலாம் !

சலாம் கலாம் !

ப்துல் கலாம்..! ராமேஸ்வரத்தில் தொடங்கி ராஷ்டிரபதி பவன் தொட்டு ராமேஸ்வரத்திலேயே முடிந்த சரித்திரப் பயணத்தின் 'கழுகுப் பார்வைக் காட்சிகள்’ இங்கே...

சலாம் கலாம் !

15-10-1931 அன்று ராமேஸ்வரத்தில், ஜைனுல்லாபுதீன் - ஆஷியம்மா தம்பதிக்குப் பிறந்தார் அப்துல் கலாம். மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. கலாம்தான் கடைக்குட்டி.

சலாம் கலாம் !

குட்டிப்பையன் கலாம், புளியங்கொட்டைகளைச் சேகரித்து மார்க்கெட்டில் விற்றால், தினம் ஓர் அணா கிடைக்கும். அதிகாலைகளில் பேப்பர் பாய். தன் உழைப்பினாலேயே தன் படிப்புச் செலவுகளைச் சமாளித்தார்.

சலாம் கலாம் !

நான்காம் வகுப்பு... கணக்கு ஆசிரியர் ராமகிருஷ்ண ஐயர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, பாதி வகுப்பில் கலாம் தெரியாமல் நுழைய, மற்ற மாணவர்கள் முன்னிலையில் பிரம்பால் அவரை விளாசிவிட்டார் ஆசிரியர். சில மாதங்களுக்குப் பின்னர் கலாம் கணக்கு பாடத்தில் 100-க்கு 100 எடுக்க, ஒட்டுமொத்த பள்ளி மாணவர்கள் முன்னர் கலாமைப் பாராட்டினார் அதே ஆசிரியர். 'முந்தைய அவமானத்தை இந்தப் பாராட்டு அகற்றியது’ என்பார் கலாம்.

சலாம் கலாம் !

ராமநாதபுரம் ஸ்வார்ட்ஜ் உயர்நிலைப் பள்ளியில் அய்யாதுரை சாலமன், கலாமுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். 'ஒருவர், வாழ்க்கையை தாம் விரும்பியபடி அமைத்துக்கொள்ள முடியும் என்பதை அவருடன் பழகியபோது கற்றுக்கொண்டேன்’ என்பார் கலாம்.

சலாம் கலாம் !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டமும், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி-யில் விமான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பொறியியல் பட்டமும் பெற்ற பின், டெல்லியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக 250 ரூபாய் மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்கிறார். அங்கு இருந்து பெங்களூர் விமான வடிவமைப்பு வளர்ச்சி அமைப்புக்கு அனுப்பப்படுகிறார். அங்கு கலாம் அங்கம் வகித்த குழுவினர் அசாத்திய முயற்சியாக 'நந்தி’ என்ற விமானத்தை உருவாக்கினார்கள். பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்பட்ட அந்த விமானத்தை கலாம் இயக்கினார்.

சலாம் கலாம் !

நண்பரின் தூண்டுதலால், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (DRDO)   வேலைக்கு விண்ணப்பிக்கிறார். விக்ரம் சாராபாய் நடத்திய நேர்முகத் தேர்வில் விஞ்ஞானியாகத் தேர்வாகிறார். பணியில் சேர்ந்த பின் திருவனந்தபுரத்தில் ராக்கெட் ஏவுதளத்தை நிறுவும் பணியில், விக்ரம் சாராபாய் தலைமையில் பணிபுரிகிறார். அதுவே இப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையமாகச் செயல்படுகிறது.

சலாம் கலாம் !

ராக்கெட் தொழில்நுட்பம் பற்றிய ஆறு மாதப் பயிற்சிக்காக அமெரிக்காவின் நாசாவுக்குச் சென்று வந்தவர், ராக்கெட் தயாரிக்கும் குழுவில் விக்ரம் சாராபாயுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார். இஸ்ரோவுக்குப் பணிமாறுதல் செய்யப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வருபவர், 'எஸ்.எல்.வி’ திட்டப் பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

சலாம் கலாம் !

1976-ம் ஆண்டு அப்துல் கலாமின் அப்பா ஜைனுல்லாபுதீன் 102-வது வயதில் காலமானார். அவரது இழப்பு அப்துல் கலாமை உலுக்குகிறது. அந்த இழப்பில் இருந்து மீள, தன்னை ஆராய்ச்சிப் பணிகளில் மூழ்கடித்துக்கொள்கிறார்.

சலாம் கலாம் !

1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.எல்.வி முதல்முறையாக ஏவப்படுகிறது. ஏவப்பட்டு 317 விநாடிகள் பறந்த ராக்கெட், எதிர்பாராதவிதமாக வெடிக்கிறது. தோல்வியைக் கண்டு கலங்காமல், அந்த அனுபவம் தந்த பாடத்துடன் மிகத் தீவிரமாகப் பணிபுரிந்து 1980-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரண்டாவது முறையாக எஸ்.எல்.வி ஏவுகிறார்கள். வெற்றி! சகாக்கள், கலாமைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, கலாமைப் பாராட்டி 'பார்லிமென்ட் ஹவுஸ் அனெக்ஸ்’ கூட்டத்தில் உரை நிகழ்த்தவைக்கிறார்.

சலாம் கலாம் !

எஸ்.எல்.வி வெற்றிக்காக, 1981-ம் ஆண்டு குடியரசு தினத்தில் பத்ம பூஷண் விருது பெறுகிறார்.

சலாம் கலாம் !

1982-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுக்கூடத்துக்கு ( Defence Research and Development Laboratory ) இயக்குநராகப் பொறுப்பேற்கிறார். 1988-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலாம் தலைமையிலான குழு 'பிருத்வி’ ஏவுகணையை வெற்றிகரமாக ஏவுகிறது. 'தேசத்தின் ராக்கெட் அறிவியலில் இது ஒரு சகாப்தம். எதிர்கால ஏவுகணைத் திட்டங்களுக்கு இதுவே முன்னோடி’ என நெகிழ்கிறார் கலாம்.

சலாம் கலாம் !

1989-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'அக்னி’ ஏவுகணை செலுத்துவதற்கான நாள் குறிக்கப்பட்டு, சில தொழில்நுட்பக் கோளாறுகளால் அது தள்ளிவைக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக மே மாதம் 'அக்னி’யை ஏவும் கவுன்ட்டௌன் முடிய 10 விநாடிகள் இருக்கும்போது புதிய கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு, திட்டத்தை ஒத்திவைக்கிறார்கள். கலாம் அணியினரை, ஊடகங்கள் வரிந்துகட்டிக் கிண்டலடிக்கின்றன. சக விஞ்ஞானிகள் சோர்ந்தபோது, 'நான் முதலில் எஸ்.எல்.வி ஏவும்போது அது கடலில் விழுந்தது. நீங்கள் செய்த 'அக்னி’ உங்கள் முன்புதான் உள்ளது. நாம் சாதிப்போம்’ என உற்சாகப்படுத்துகிறார்.

சலாம் கலாம் !

மூன்றாவது முறையாக மே 22-ம் தேதி 'அக்னி’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. கிண்டலடித்தவர்களே கலாமைப் பாராட்ட, அமைதிப் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தார் கலாம்.

சலாம் கலாம் !

'அக்னி’ ஏவுகணை வெற்றிக்காக, 1990-ம் ஆண்டு குடியரசு தினம் அன்று கலாமுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

சலாம் கலாம் !

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாள் கலாமுக்கு வயது 60. பணி ஓய்வுபெற்றதும், வறுமையில் வாடும் திறமையான குழந்தைகளுக்காக, பள்ளி ஒன்றை தனது நண்பர் பேராசிரியர் பி.ராமராவுடன் இணைந்து தொடங்கத் திட்டமிடுகிறார். பள்ளிக்கு 'ராவ்-கலாம்’ எனப் பெயர் சூட்டலாம் எனத் தீர்மானித்திருந்தார். ஆனால், இந்திய அரசு அவரைப் பணியில் இருந்து விடுவிக்காததால், பள்ளி தொடங்கும் திட்டத்தைத் தள்ளிப்போடுகிறார்.

சலாம் கலாம் !

1998-ம் ஆண்டு மே மாதம், பொக்ரான் பாலைவனத்தில் இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்துகிறது. அந்தத் திட்டத்தில் தொழில்நுட்ப, நிறுவன மற்றும் அரசியல்ரீதியாக மிக முக்கியப் பங்காற்றினார் கலாம். 'இந்தியா அணுசக்தி நாடாக உருமாறிய அதிர்வை உணர்ந்த அந்தத் தருணம்தான், நான் இந்தியனாகப் பிறந்ததற்குப் பெருமைப்பட்ட தருணம்’ என எப்போதும் அந்த நாளைக் குறிப்பிடுவார் கலாம்.

சலாம் கலாம் !

மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததால், இதய அறுவைசிகிச்சைக்கு இந்தியாவில் ஏக செலவு பிடிப்பதாக இருந்தது. இந்த நிலையில் மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து கலாம் 'கரோனரி ஸ்டென்ட்’  உபகரணத்தை உருவாக்கினார். அது சிகிச்சைக்கான செலவை 55 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகக் குறைத்தது. அந்த உபகரணத்துக்கு 'கலாம் - ராஜு ஸ்டென்ட்’ என்றே பெயரிட்டார்கள்.

சலாம் கலாம் !

கால் இழந்த மாற்றுத்திறனாளிகள், செயற்கை மூட்டின் உதவியுடன் நடப்பார்கள். ஆனால், அது அதிக எடையுடன் இருப்பதால், நடக்க மிகவும் சிரமப்படுவார்கள். கலாம் தலைமையிலான குழுவினர், எடை குறைந்த செயற்கை மூட்டுகளைத் தயாரித்தனர். அதனால் 4 கிலோ செயற்கை மூட்டு 400 கிராமாக எடை குறைந்தது. 'மாற்றுத்திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்த அந்தக் கண்டுபிடிப்புதான் வாழ்க்கையில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த கண்டுபிடிப்பு’ எனப் பூரிப்பார் கலாம். 

சலாம் கலாம் !

1999-ம் ஆண்டு வெளியான ‘WINGS OF FIRE’  என்ற கலாமின் சுயசரிதை, இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதுவே 'அக்னிச் சிறகுகள்’ என, தமிழில் வெளியானது.

சலாம் கலாம் !

இந்தியா முழுக்க இளைஞர்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் பெரும் நன்மதிப்பைப் பெற்றிருந்த கலாமை, நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக்க முடிவெடுத்தது பா.ஜ.க அரசு. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் அமைச்சர்கள் புடைசூழ இந்திய நாடாளுமன்றத்தில் வேட்புமனு தாக்கல் செய்த கலாம், 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனார். குடியரசுத் தலைவர் பணிகளுக்கு இடையே நாடு முழுக்க இளம் மாணவர்களைப் பெரும் அளவில் சந்தித்து உரையாடி, 'கனவு காணுங்கள்’ என உற்சாகமூட்டினார். 'இந்தியா 2020’ குறித்த கனவுகளையும் விதைத்தார்.

சலாம் கலாம் !

2004-ம் ஆண்டு தன் 73-வது வயதில், மிக உயரமான போர்முனைப் பகுதியான சியாச்சின் பனிப்பிரதேசத்தில் உள்ள, கூமர் ராணுவ முகாமுக்குச் சென்றார் கலாம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் அமைந்த மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும் போர்முனை அது. நாட்டின் முதல் குடிமகனே தங்களைத் தேடி வந்தது, ராணுவத்தின் கடைசி வீரர் வரை உற்சாகமூட்டியது.

சலாம் கலாம் !

தன் 75-வது வயதில் 'ஐ.என்.எஸ் சிந்துரக்ஷக்’ என்ற கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று மணி நேரம் பயணித்தார் கலாம். அப்போது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி, மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கச் செய்த கடற்படை அதிகாரிகளை வெகுவாகப் பாராட்டினார்.

சலாம் கலாம் !

ஒலியின் வேகத்தைவிட இரு மடங்கு வேகத்தில் பறக்கக்கூடிய 'சுகோய்-30’ என்ற போர் விமானத்தில் பயணித்தார். தரையில் இருந்து சுமார் 25 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் பறந்து தரை இறங்கிய பின்னர், 'புவியீர்ப்பு விசையின் மூன்று மடங்கு தாக்கத்தை இந்தப் பயணத்தில் உணர்ந்தேன்’ எனக் குழந்தையாகக் குதூகலித்தார்.

வெளிறிய நிற ஆடைகள்தான் கலாமுக்குப் பிடிக்கும். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் 'பந்த் கலா’ ரக சூட் (கழுத்தை மூடியபடி இருக்கும் சூட்) அணிந்தார். கழுத்தை இறுக்கிய காலர், அவருக்கு அசௌகரியமாக இருந்திருக்கிறது. அதனால் கழுத்து அருகே சற்று இடைவெளிவிட்டு தனக்கு சூட் தைக்கும்படி கூறினார். அதுவே கழுத்தில் பொத்தான் இன்றி இடைவெளி விடப்படும் ஃபேஷனுக்கு 'கலாம் கட்’ எனப் பெயர் கொடுத்தது.

2007-ம் ஆண்டில் ராயல் சொசைட்டியின் 'கிங் சார்லஸ் II ’ விருது, 2011-ம் ஆண்டில் அமெரிக்காவின் ‘IEEE Honorary Member ship’  அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன. 2012-ம் வருடம் இந்தியாவில் ஊழலை ஒழிக்க இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு,
‘What can i give movement?’   என்ற இயக்கத்தைத் தொடங்கினார் கலாம்.

சலாம் கலாம் !

கலாமின் காலை உணவு, ஓர் இட்லி கொஞ்சம் சாம்பார். மதியம் சாம்பார் சாதம், கொஞ்சம் காய்கறிகள். மதிய உணவில் இரண்டுக்கும் மேற்பட்ட காய்கறிகள் இடம்பெற்றால், 'இன்னைக்கு ஏதாவது விசேஷமா?’ எனச் சிரித்துக்கொண்டே கேட்பார். ஒரு வேளை உணவையும் தவிர்க்க மாட்டார்; ஒரு பருக்கை உணவையும் வீணாக்க மாட்டார்.

கலாமை, எப்போதும் திருமணம் குறித்த கேள்விகள் துரத்தின. 'என் கனவும் நம்பிக்கையும் வேறு. எனக்கு என ஒரு குடும்பம் உண்டானால், மனதில் சுயநலம் உண்டாகும். லட்சியமா... குடும்பமா என்றால் குடும்பத்தையே ஆதரிக்க வேண்டியிருக்கும். ஆக, நான் இறுதி வரை இப்படியே இருக்கத் தீர்மானித்தேன்’ என்பார்.

ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் செயல்பட ஆர்வமாக இருந்தார். ட்விட்டரில் தலாய்லாமா, நரேந்திர மோடி, அமிதாப் பச்சன், வி.வி.எஸ்.லட்சுமண், இஸ்ரோ, நேஷனல் ஜியாகிரபிக் சேனல் என மிகச் சில நபர்களையும் நிறுவனங்களையும் மட்டுமே ஃபாலோ செய்தார்!  

2015-ம் ஆண்டு ஜூலை 27, மாலை 6:35. மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் ஐ.ஐ.எம் கல்வி நிறுவன மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கிச் சரிந்தவரை, உடனடியாக மருத்துவமனைக்குச் எடுத்துச் சென்றார்கள். சிகிச்சை பலன் அளிக்கவில்லை. 'நீங்கள் என்னவாக நினைவுகொள்ளப்பட வேண்டும்’ எனக் கேட்டால்,

'ஓர் ஆசிரியராக’ என்றே சொல்லும் கலாம், மாணவர்கள் மத்தியில் ஓர் ஆசிரியராகவே மறைந்தார்.

இந்தியப் பிரதமர் முதல் கடைக்கோடி குடிமகன் வரை ராமேஸ்வரத்தில் திரண்டு நிற்க, 2015-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பேக்கரும்பு என்ற இடத்தில், கலாமின் உடல் விதைக்கப்பட்டது!

தொகுப்பு: நா.சிபிச்சக்கரவர்த்தி

ஓவியங்கள்: ஸ்யாம், பாரதிராஜா