டி.அருள் எழிலன்படங்கள் : ரா.ராம்குமார்
15வயதில் தான் தொடங்கிய மது ஒழிப்புப் போராட்டம், தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லையே என்ற கவலை சசிபெருமாளுக்கு இருந்தது. மதுவுக்கு எதிராகப் போராடி, உண்ணாமலைக்கடை செல்போன் கோபுரத்தில் 59 வயதில் மரணித்தபோது, நிறைவேறியிருக்கிறது சசிபெருமாளின் அந்தக் கனவு. தமிழ்நாடு முழுவதும் மதுவுக்கு எதிரான மக்கள் புரட்சி ஆரம்பமாகியுள்ளது.
''என் சிறு வயதில் காந்திஜியின் சுயசரிதையான 'சத்தியசோதனை’ புத்தகத்தைப் படித்த பிறகு, மாமிசம் சாப்பிடுவதைக் கைவிட்டேன். என்னைப் போன்ற கிராம மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் கள்ளுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அப்போது என் கோரிக்கை. கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை காமராஜர் அறிவித்தபோது, அவரோடு இணைந்து நானும் போராடினேன். அன்று இருந்ததைவிட மதுவின் தீமை இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. இதைத் தடுத்தாக வேண்டும். எனக்குப் போராடத் தெரியும். ஆனால், என் போராட்டத்தின் விளைவுகள் குறித்து தெரியாது. என் போராட்டம் என்றாவது
ஒருநாள் வெல்லும் என்பது மட்டும் உறுதி!'' - தன் போராட்டப் பயணம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு இப்படிச் சொன்னார் சசிபெருமாள்.

தமிழ்ச் சமூகம் இன்று மதுவுக்கு எதிராக பெரும் போர்க்குணத்துடன் போராடத் தொடங்கியிருக்கிறது. இந்த நெருப்பு பரவ, சசிபெருமாள் கொடுத்த விலை அதிகம். 2009-ம் ஆண்டில் சேலத்தில் இருந்து சென்னைக்கு
15 நாட்கள் நடைப்பயணம் தொடங்கினார் சசிபெருமாள். உடன் வந்த வெகுசிலரும் வழியில் சோர்ந்து திரும்பிவிட, தன்னந்தனியாக கையில் ஏந்திய தேசியக் கொடியோடு நடந்து சென்னைக்குள் பிரவேசித்தார். தனியாக நின்றபோதிலும் மது ஒழிப்புக் களத்தில் உறுதியாக நின்றார் சசிபெருமாள். ஆரம்பத்தில் அவரது போராட்டங்கள் பெரிதாக யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.

காந்தியடிகள் நினைவு நாளில் அடையாள உண்ணாவிரதம் என ஆரம்பிப்பார்; காமராஜர் பிறந்த நாளில் உண்ணாவிரதம் இருப்பார். அப்படி மெள்ள மெள்ளத் தொடங்கி தன் போராட்டத்துக்கு ஆதரவாக 300 பேர் வரை திரட்டினார். 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னை மயிலாப்பூரில் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 20 நாட்களுக்குப் பிறகு அவர் உடல்நலம் கெட்டு, ரத்தவாந்தி எடுக்கும் நிலைக்குச் சென்ற பிறகுதான், அரசியல் இயக்கங்கள் மெதுவாக எட்டிப்பார்த்தன. தலைவர்கள் பலரும் நேரில் சென்று உண்ணாவிரதத்தைக் கட்டாயப்படுத்திக் கைவிடவைத்தனர்.
அந்த உண்ணாவிரதத்தில் கிடைத்த சின்ன வெளிச்சமும் அடுத்த சில நாட்களில் இல்லாமல்போக... சோர்ந்துபோகாத சசிபெருமாள், சின்ன ஓய்வுக்குப் பிறகு மீண்டும் போராட்டங்களைத் துரிதப்படுத்தினார். சென்னை முதல் டெல்லி ஜந்தர்மந்தர் வரை அவர் நடத்திய போராட்டங்கள், ஒரு தனி மனிதனின் ரத்தச் சரித்திரம்.
சேலம் மாவட்டம் இடங்குணசாலை அருகே உள்ள மேட்டுக்காட்டைச் சேர்ந்த சசிபெருமாளின் இயற்பெயர், பெருமாள். கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் காமராஜருடன் இணைந்து செயல்பட்ட பழம்பெரும் நடிகர் சசிகுமார் நினைவாக, தன் பெயருடன் 'சசி’யைச் சேர்த்துக்கொண்டார். சசிபெருமாளுக்கு மூன்று பிள்ளைகள்... மூத்த மகன் விவேக், இரண்டாவது மகன் நவநீதன், மகள் கவியரசி. தகப்பனை இழந்து, தவித்து நிற்கும் இந்தக் குடும்பம், சோகத்தில் சுருங்கிவிடவில்லை. சேலத்தில் நடைபெறும் மது ஒழிப்புப் போராட்டத்தின் மையமாக மாறியிருக்கிறது சசிபெருமாள் குடும்பம்.
குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள சிறுநகரம் உண்ணாமலைக்கடை. அங்கு பாருடன்கூடிய மதுக்கடையை மூடக் கோரி 2012-ம் ஆண்டில் இருந்து அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர். பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன் இந்தப் போராட்டத்தை வழிநடத்திவந்தவர். அவரிடம் பேசியபோது, ''நானும் சசிபெருமாள் அய்யாவும் செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்துவது என்றும், பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டால் இறங்கிவிடலாம்; இல்லை என்றால் டவரின் உச்சிக்குச் செல்லலாம் என்றும் திட்டமிட்டோம். காலை 8:15 மணிக்கு, நான் ஒரு மண்ணெண்ணெய் கேனோடும், அவர் ஒரு கயிறுடனும் மேலே ஏறினோம். சுமார் 300 அடிக்கு மேல் உயரம் உள்ள அந்த டவரில் 150 அடிக்கு மேல் என்னால் ஏற முடியவில்லை. ஆனால், சசிபெருமாள் விறுவிறுவென உச்சிக்குச் சென்றுவிட்டார். நான் அவரை நோக்கிக் கத்தினேன். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் மேலே ஏறினார். நாங்கள் ஏறிய கொஞ்ச நேரத்தில் காவல் துறை உயர் அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் வந்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் சசிபெருமாளிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த முன்வரவில்லை. ஐந்து மணி நேரம் கழிந்ததும் 'கடையை ஏழு நாட்களில் மூடுகிறோம்’ என்றார்கள். மேலே சசிபெருமாள் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்க முடியவில்லை. அவரை இறக்குவதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டன. இப்போது எங்கள் ஊரில் இருந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடிவிட்டார்கள். எங்கோ சேலத்தில் இருந்து வந்து, தன் உயிரைக் கொடுத்து எங்களுக்கு நன்மை செய்துவிட்டுப் போயிருக்கும் அந்த மனிதரை, நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். மாநிலம் முழுக்க உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி' என்கிறார் ஜெயசீலன்.
சசிபெருமாள் குமரியில் கொளுத்திய மது ஒழிப்பு என்னும் நெருப்பு, மதுக்கடைகளை எரிக்கத் தொடங்கியிருக்கிறது. தர்மபுரி உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே மதுக்கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன. சில கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டம் ஒன்று தொட்டு இன்னொன்றாக தமிழ்நாடு முழுக்கப் பரவும் சாத்தியம் தென்படுகிறது. அதே நேரம் இத்தகைய வன்முறை வழித் தீர்வுகள், டாஸ்மாக் ஊழியர்களின் உயிர்களைப் பறித்துவிடக் கூடாது என்பது முக்கியம். ஏனெனில், அவர்கள் டாஸ்மாக்கை நம்பி குடும்பம் நடத்தும் அப்பாவி அரசு ஊழியர்கள்.
மாணவர் போராட்டங்களை, பொது மக்களின் எதிர்ப்பு உணர்வை தங்களின் வாக்கு வங்கியாக மாற்றுவது எப்படி என்ற ஆதாயப் பார்வையைக் கைவிட்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் 'டாஸ்மாக்கை மூடு’ என்ற ஒற்றைக் கோரிக்கை முன்வைத்து எழுந்து நிற்கவேண்டிய நேரம் இது!
பரவுகிறது போராட்டம்!

சசிபெருமாள் உயிரைக் கொடுத்துத் தொடங்கிவைத்துள்ள மது ஒழிப்புப் போராட்டம், அரசியல் இயக்கங்களைக் கடந்து மாணவர்களிடம் பரவ ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் முதன்முதலாக நெருப்பைக் கொளுத்தியவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள். ஹாரிங்டன் சாலையில் உள்ள மதுக்கடை மீது கல்வீசித் தாக்க, மாணவர்களைச் சுற்றிவளைத்தது போலீஸ். அருகில் கிடந்த கம்பிகள், கருங்கற்களை எடுத்து மாணவர்களைத் தாக்கினார்கள். ரத்தம் வழிய சிதறி ஓடியவர்களைத் துரத்தித் துரத்தி அடித்த காவலர்கள், மாணவிகளை எட்டி உதைத்து தங்கள் வீரத்தைக் காட்டினார்கள். காவல் துறையின் அராஜகத்தில் மயங்கி மூர்ச்சையான மாணவியை, தரதரவென இழுத்து வேனில் ஏற்றிய கொடுமையும் நடந்தது. இறுதியில் ஐந்து மாணவிகள் உள்பட 15 மாணவர்களை, பொதுச் சொத்துக்களைச் சூறையாடிய வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது அ.தி.மு.க அரசு. பொதுச் சொத்து என அரசு சொல்வது சாராயத்தை. கல்லூரி மாணவர்கள் என்ற மட்டத்துக்குப் போராட்டம் வந்திருப்பதால், அடுத்து வரும் நாட்களில் இதன் வீச்சு இன்னும் பெரிதாகும்!