Published:Updated:

படா பானி... போலீஸ் பஜார்... வார்ட்ஸ் ஏரி... ஷில்லாங்கில் என்ன விசேஷம்?

படா பானி... போலீஸ் பஜார்... வார்ட்ஸ் ஏரி... ஷில்லாங்கில் என்ன விசேஷம்?
படா பானி... போலீஸ் பஜார்... வார்ட்ஸ் ஏரி... ஷில்லாங்கில் என்ன விசேஷம்?

வடகிழக்கு மாநிலங்கள் என்றால் பள்ளிக்காலங்களில் இருந்தே கொஞ்சம் அலர்ஜிதான். அந்த முகங்கள் மட்டுமல்ல; மாநிலங்களின் பெயர்களும் தலைநகரங்களுமே மனதில் பதியாது. பின்னர், லாட்டிரி சீட்டு புண்ணியத்தில் பெயர்கள் வசப்பட்டன. ஆனால், அதிலும் பூட்டான் என்ற ஒரு நாடு சேர்ந்து அடி வாங்கித் தந்தது தனிக்கதை. அந்த வடகிழக்கு மாநிலத்தில் ஒன்றான மேகாலயாவுக்கு செல்கிறேன் என்பதே கொஞ்சம் கிக் ஆக இருந்தது. உண்மையில், இந்தப் பயணம் நினைத்தை விட கூடுதல் மகிழ்ச்சி என்றே சொல்வேன்.

மேகாலயா என்பது அஸ்ஸாமிலிருந்து 1970களில் தனியே பிரிந்த ஒரு மாநிலம். முழுக்க முழுக்க மலை நகரங்கள். மொழியிலிருந்து கலாசாரம் வரை அனைத்து விதத்திலும் அஸ்ஸாமிடமிருந்து வேறுபட்டிருக்கிறது மேகாலயா. இவர்கள் தனியே பிரிந்துச் சென்றது சரிதான் என் நினைக்கிறேன். கிருஸ்துவ மதம் அதிகம் பரவியிருக்கும் இந்த மாநிலத்தில் பல மொழிகள் பேசப்படுகின்றன. அதில் முக்கியமானது காசி(Khasi). இதற்கு வரிவடிவம் கிடையாது. ஆங்கில எழுத்துக்களையே எழுத பயன்படுத்துகிறார்கள். மொழியிலிருந்து மதம் வரை ஆங்கிலேயர்களின் பாதிப்புகள் அதிகம் தெரிகின்றன. இந்த மாநிலத்தின் ஆட்சிமொழியே ஆங்கிலம்தான். அதனால் மொழிப்பிரச்னை இல்லை. இந்தியும் பேசுகிறார்கள். மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கை “Scotland of the east” எனச் சொல்லியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். இன்னமும் இந்த நிக் நேம் பரவலாக பல இடங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. 

எப்படிச் செல்வது:

ஷில்லாங்கில் விமான நிலையம் இருக்கிறது. ஆனால் பயணிகள் விமானம் அஸ்ஸாமிலிருக்கும் கெளஹாத்திக்குத்தான் அதிகம் செல்கின்றன. அங்கிருந்து கார் மூலம் சென்றால் மூன்று மணி நேரத்தில் ஷில்லாங். கிட்டத்தட்ட 100 கிமீ. பாதிக்கும் மேற்பட்ட தூரம் நான்கு வழிப்பாதைதான். ஆனாலும், மலைவழிப்பாதை என்பதால் தலைச் சுற்றி போகிறது. கைவசம் ஒரு எலுமிச்சைப் பழத்தை வைத்துக்கொள்வது நல்லது. “Why bro”என்பவர்கள் 7அப்பையோ ஸ்ப்ரைட்டையோ வாங்கிக்கொள்ளுங்கள்.

விமானம் தரையிறங்கிய சமயம் இரண்டுங்கெட்டான் நேரம்; அப்போது சாப்பிட முடியவில்லை. ஷில்லாங் செல்லும்வரை பொறுமையில்லை என்பவர்கள் Nongpoh என்னும் ஊரை நினைவில் கொள்ளுங்கள். அங்கே Jiva என்றொரு சைவ விடுதி இருக்கிறது. தொல்லைதராத, அதிக பணம் கோராத நல்ல உணவு விடுதி. 

செல்லும் வழியில் ‘படா பானி’ என்றொரு ஏரி வரும். அங்கே வண்டியை நிறுத்தி படங்கள் எடுத்துக்கொள்ளலாம். பின், குளிருக்காக கொண்டு சென்றிருக்கும் Pull over வகையிலான எதாவது ஒன்றை அணிந்துக் கொள்ளுங்கள். அந்த இடத்திலிருந்து ஷில்லாங் குளிர் தொடங்கிவிடும். காரில் சென்றால், விண்டோவைத் திறந்துவிடுங்கள். ஷில்லாங்கில் இதுதான் விண்டோ ஏ.சி.

நீங்கள் சென்னைவாசி என்றால் ஷில்லாங் போகும் முன் ஒரு ஹோம் ஒர்க் செய்துகொள்ளுங்கள். ஃப்ரிட்ஜைத் திறந்து உள்ளே முகத்தை வைத்துப் பாருங்கள். அதுதான் ஷில்லாங் பகல். அடுத்து, ஃப்ரீஸரைத் திறந்து முகத்தை உள்ளே வைக்கவும். அதுதான் ஷில்லாங் இரவு. இந்த குளிருக்கு ஏற்ற உடைகளை மறக்காமல் கொண்டு செல்லவும். (இது திசம்பர் மாதம் வரையிலான பருவநிலை. அதன்பின், வெயில் அதிகமானால் கம்பெனி பொறுப்பாகாது)

எங்கே தங்குவது:


நான் தங்கியிருந்த இடம் Pinewood hotel. 120 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட இந்த ஹோட்டல் வெள்ளைக்காரர்கள் கட்டி, மகிழ்ந்த இடம். சல்மான்கான் முதல் அமிதாப் வரை ஷில்லாங் வந்தால் இங்கேதான் தங்குவார்களும். “அப்ப விலை” என ஷாக் ஆக வேண்டாம். மேகாலயா அரசு நடத்தும் ஹோட்டல் என்பதால் 3000 ரூபாய் முதல் அறைகள் உண்டு. திட்டமிட்டு பயணிப்பவர்களுக்கு சரியான இடம். திடீர் டூரிஸ்ட்களுக்காக நிறைய பட்ஜெட் விடுதிகளும் உண்டு.

அந்த ஹோட்டலுக்கு அருகிலே இருக்கிறது வார்ட்ஸ் ஏரி. அதிகாலையில் (இங்க 5.30க்கே சூரியன் வந்துவிடும்) இந்த ஏரியைச் சுற்றி ஒரு நடை நடந்தால்... வாவ். குடும்பத்துடன் செல்பவர்களுக்கு ஏற்ற போட்டிங்கும் உண்டு. அதிக அட்வென்ச்சர் இந்த ஏரியில் சாத்தியமில்லை. ஆனால், நிம்மதியான, அமைதியான போட்டிங் அழகு.

ஷாப்பிங்:

ஷில்லாங்கில் போலிஸ் பஜார் என்றொரு இடம் உண்டு. நகரின் ‘நடுப்பகுதி’ என நினைக்கிறேன். அங்கே, ஏகப்பட்ட கடைகளும், உணவு விடுதிகளும் உண்டு. ஷில்லாங் மக்களின் விருப்ப உணவு போர்க் தான். முட்டை, சிக்கன், போர்க் என விதவிதமான உணவுகள் குறைந்தவிலையில் கிடைக்கின்றன. நூடுல்ஸ் ஒரு தட்டும், முட்டை ஒன்றும் சேர்த்து 40 ரூபாய்தான்.

ஷில்லாங்கில் வாங்க வேண்டிய பொருள்கள் என்றால் கம்பளி ஆடைகளும், கைவினைப்பொருள்களும் தான். இந்தக் கடையில் அவை நிறையவே கிடைக்கின்றன. மற்றபடி, ஷில்லாங் மார்க்கெட்டையும் ஃபிட்ஜெட் ஸ்பின்னரும், பவர் ரேஞ்சர் பொம்மையும்தான் ஆக்ரமித்திருக்கின்றன. 

மற்ற இடங்களில் காலாவதியாகிவிட்ட மாருதி 800தான் இன்னமும் அங்கே அங்கே காலா பட ஹீரோ. டாக்சியில் இருந்து தனிநபர் பயன்பாட்டுக்கு வரை மாருதி கார்களே அதிகம். அரசாங்கமே ஷேர் ஆட்டோ முதல் பேருந்து வரை அனைத்துவிதமான பயண வாகனங்களையும் நடத்துவது சிறப்பு. வீட்டுக்கு இரண்டு கார்கள் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் டிராஃபிக் தான். ஷில்லாங் நகரம் குளிரில் மட்டுமல்ல; டிராஃபிக்கிலும் பெங்களூருக்கு அக்கா. 

ஷில்லாங்கை அக்கா எனச் சொல்ல ஒரு காரணமிருக்கிறது. மேகாலயாவைப் பொறுத்தவரை வீட்டின் கடைக்குட்டி பெண் தான் பவர்ஃபுல். பெற்றோர்களை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவருக்கே. அதனால், வீட்டின் மொத்த சொத்தும் அந்தப் பெண்ணுக்குத்தான். பெண் வாரிசு இல்லையென்றால் மட்டுமே, ஆண்களுக்கு சொத்தாம். 

எந்நேரமும் “நசநச”வென இருக்கும் சிரபுஞ்சியிலிருந்து தெளிந்த நீராக தரைவரை தெளிவாக தெரியும் ஏரி வரை மேகாலயாவில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். அவை அடுத்தக் கட்டுரையில்.