Published:Updated:

உயிர் பிழை - 1

உயிர் பிழை - 1

புற்றுநோய் எங்கோ யாருக்கோ வந்த நோய் என்பது ஒரு காலம். 

உயிர் பிழை - 1

20 ஆண்டுகளுக்கு முன்பு 'அவருக்கு கேன்சராம்!’ என்பது ஊர்கூடிப் பேசும் ஆச்சர்யச் செய்தி. ஆனால் இன்று, தெருவுக்கு இரண்டு புற்றுநோயாளிகள். கண்களை மூடி, கொஞ்சம் யோசித்தால் நம் உறவினர், நண்பர்களில் இருந்து குறைந்தபட்சம் நான்கு புற்றுநோயாளிகளையாவது பட்டியலிட முடியும். இவருக்குத்தான் வரும், இன்ன  பழக்கம் இருந்தால்தான் வரும் என்ற வரையறைகளை உடைத்தெறிந்து, அங்கிங்கெனாதபடி எங்கெங்கும், அவர் இவர் எனக் கூற முடியாதபடி அனைவரையும் தாக்குகிறது புற்று. உலகப் புற்று«நாயாளிகளில் 40 சதவிகிதம் பேர் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு.

26 வருடங்களுக்கு முன்பு, பாளையங் கோட்டையில் படித்துக்கொண்டிருந்தபோது... ''பார்வதி தியேட்டருக்குப் போய், 'சத்யா’ படத்தை முதல் ஷோ பார்க்கிற அளவுக்கு என்கிட்ட காசு இல்லையே மக்கா. பஸ் காசு, டிக்கெட் காசு, இன்டர்வல்ல சமோசானு செலவு எப்படியும் 12 ரூவாயைத் தாண்டிரும்'' என நான் சொன்னபோது, ''எதுக்கு பஸ்ஸு... சைக்கிள்ல போவோம். நான் டபுள்ஸ் மிதிக்கிறேன்'' எனச் சொல்லி, என்னை சைக்கிள் முன் பாரில் வைத்துக்கொண்டு படுவேகமாக மூச்சிரைக்க டவுனுக்கு அழுத்திய நண்பன் முரளியின் மூச்சிரைப்பு இன்னும் என் செவிகளில் ஒலிக்கிறது. அந்த மூச்சுக் காற்றுக்குள் இருந்த கனவுகள் ஏராளம். அந்த மூச்சைத்தான் அவனது 44 வயதில் வந்த ரத்தப் புற்றுநோய் வலிக்க, வலிக்க பறித்துச் சென்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரயில் பயணம். தன் மூக்கையும் வாயையும் சேர்த்து மூடி, ரயில் பெட்டி இருக்கையின் எதிர் வரிசையில் அமர்ந்து இருந்த சிறுவன், தன் முகமூடியை லேசாக விலக்கி, தனக்குப் பிடிக்காத ஆப்பிள் துண்டை, அம்மாவின் கட்டாயத்தில் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அப்படியே என் பக்கம் திரும்பி மழலை மாறாத குரலில், ''நீங்க டாக்டரா அங்கிள்? லிஸ்ட் ஒட்டி இருந்தாங்கல்ல... அதுல பார்த்தேன். நானும் டாக்டராத்தான் ஆகப்போறேன்'' என்றான். அதற்குப் பின் தொடர்ந்த ரயில் சிநேகத்தில், ''இப்போ போறது மூணாவது கீமோ. இன்னும் நாலு பாக்கி' என்றார் சிறுவனின் அம்மா. பின்னொரு நாள் அவரிடம் இருந்து அழைப்பு. ''சரவணன் போயிட்டான் டாக்டர்' என்பதைத் தாண்டி குரல் எழாமல் அலைபேசியைத் துண்டித்த அந்தத் தாயின் அழுகை, எனக்கு இப்போதும் கேட்கிறது.

உயிர் பிழை - 1

சமீபத்திய மாலைப்பொழுது ஒன்று. திருமணம் முடிந்து மூன்றே மாதங்களில் தனக்கு மார்பகப் புற்றுநோய் எனத் தெரிந்து, அத்தனை களிப்புகளையும் ஆறப்போட்டுவிட்டு, அறுவை சிகிச்சைக்குத் தயாராக ஒரு  பெண்ணும் அவர்தம் குடும்பத்தாரும் சில ஆலோசனைகளுக்காக வந்திருந்தனர்.

''ஆபரேஷனுக்கு அப்புறமா, குழந்தை பெத்துக்கிறதுல பிரச்னை இருக்குமா சார்? அப்புறமா, இவ பால் குடுக்கும்போது பிள்ளைக்கு ஏதும் வராதுல்ல? ஏன் கேட்கிறேன்னா நிறைய மருந்து சாப்பிட வேண்டியிருக்குமே... அதான். அப்புறம் இந்த வியாதி, பையனுக்குக் கண்டிப்பா வராதுல்ல டாக்டர்?'' - புற்றைவிட வேகமாக வளரும் 'அக்கறையான’ மாமியார் விசாரிப்புகள்; புற்றில் இருந்து விடுபட்ட பின்னரும் இந்தக் கேள்விகளுடனேயே அந்த இளம்பெண் வாழப்போகும் நாட்கள்... மறந்துவிட முடிகிற நினைவுகளா அவை?

'எவ்வளவு நாளைக்கு சார் இப்படி ரத்தம் ஏத்தணும்... வேற வழியே இல்லையா?'' என தன் பையனின் வேதனையைப் பார்க்கச் சகிக்காமல் கேட்ட அந்தத் தந்தை, சில காலம் முன்பு எனக்குப் பழக்கம். தன் ஒரே வீட்டை விற்று, ரத்தப்புற்றுடன் போராடும் தன் பையனுக்கு, தொடர்ந்து ரத்தத் தட்டுக்களை ஏற்றி ஏற்றி உயிர் வாழவைத்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் கவலையோடு, ''எத்தனையோ ஆராய்ச்சிகள் நம்ம ஊர் மூலிகையில் நடக்குதுன்னு சொல்றீங்க. இன்னும் எதுலயும் முழுத் தீர்வு கிடைக்கலையா? பரவாயில்லை. 'இதுல புற்றுநோயைக் குணமாக்க வாய்ப்பு இருக்கு’னு நம்புற மருந்தையாவது இவனுக்கு கொடுங்க சார். ஒருவேளை அதுவும் பயனளிக்காதுன்னா, 'இந்த மருந்து புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படாது’ங்கிற முடிவாவது உங்களுக்குக் கிடைக்குமே. நீங்க வேற ஒரு மருந்தை முயற்சி பண்ணலாமே' - ஒப்பிட முடியாத அதீத மனவேதனையிலும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சேர்த்து அவர் பேசிய பேச்சும், அதில் பொதிந்து இருந்த துயர் மிகுந்த வலியும் எத்தனை காலமானாலும் மனதைவிட்டு அகலாது.

இந்திய ஆண்கள் வாய், தொண்டை, நுரையீரல் மற்றும் இரைப்பைப் புற்றிலும், இந்தியப் பெண்கள் மார்பு, கருப்பை வாய் (Cervix)  புற்றிலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியப் புற்றுநோய்ப் பெருக்கத்துக்கு புகைபிடிப்பது 70 சதவிகிதக் காரணியாக இருந்தாலும், புகை மற்றும் மதுவின் பக்கம் தலைவைத்துக்கூட படுக்காதவர்களும் இதில் சிக்குவதைப் பார்க்கையில், காரணி இன்னும் சிக்கலாக இருப்பதுபோல் தெரிகிறது.

மரபுக் காரணிகளைத் தாண்டி, சுவாசிக்கும் காற்றில் கலந்துவரும் பென்சீனிலும் டயாக்சினிலும் உண்ணும் உணவில் ஒட்டியிருக்கும் ஆர்கனோ பாஸ்பரஸ் துணுக்குகளிலும், உறிஞ்சும் பானத்தில் கலந்திருக்கும் நிறமூட்டி வேதிப்பொருட்களிலும், உபயோகிக்கும் அழகூட்டிகளின் தாலேட்டுகளிலும், கடல் நீரில் கலந்துவிடும் அணுக்கதிர்வீச்சுத் தண்ணீரிலும், கழுத்தறுத்துக் காதலின் வேர் அறுத்து, சாதியைத் தோளில் தூக்கிவைத்திருக்கும் வெறியை எண்ணி வெம்பும் மனதிலும் என எல்லாவற்றிலும் புற்றுக்காரணிகள் பொதிந்திருப்பது வெலவெலக்கவைக்கிறது. எய்தவன் எங்கோ இருக்க, வீழ்ந்து மாளும் கூட்டம் விரிந்துகொண்டேபோவது மட்டுமே இதில் கூடுதல் வேதனை.

தெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்

உயிர் பிழை - 1

மொத்தத்தில், இந்தப் புற்று யாரைப் பிடிக்கும் என இன்னும் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. அப்பா-அம்மா வழி மரபில், தன் மூத்த தலைமுறைகளில் ஒளிந்து இருக்கும் புற்றுநோய் மரபணு, வயோதிகத்திலோ வாழ்வியல் அழுத்தத்திலோ வெளிப்படுவது ஒரு காரணம். 'இவை நிச்சயமாகப் புற்றைக் கொண்டுவரும், இவற்றால் புற்று உருவாகும் வாய்ப்பு இருக்கிறது, இவற்றைச் சந்தேகிக்கலாம்’ என மூன்று பிரிவுகளாக உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துச் சொல்லியிருக்கும் கேன்சர் காரணிகளின் அருகாமை இன்னொரு காரணம்... இன்றைய நகர்ப்புறத்து துரித வாழ்வியல் காரணமாகச் சிதையும் சூழலியலில், பெருகும் குப்பை உணவுகளின் மூலமாக நம் உடலில் நிகழும் வன்முறையில், புறக்காரணிகளால் மரபணு பாதிக்கப்படுவதில் (Epigenetic)  அல்லது  டி.ன்.ஏ மியூட்டேஷனின் விளைவாக என புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் நீள்கின்றன.

இவை எதுவுமே இல்லாமல், வறுமையில் கரித்துண்டுகளைக் களவாண்டு வந்து சந்தோஷமாக விற்பனை செய்யும் 'காக்காமுட்டை’களுக்கும், வெகுசனத்து வாழ்வியல் அழுத்தத்தில் பரபரப்புடன் பயந்து பயந்து வாழும் 'பாபநாசம்’ சுயம்புலிங்கங்களுக்கும்கூட புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்தான். என்ன... காக்காமுட்டைக்கும் சுயம்புலிங்கத்துக்கும், யுவராஜ் சிங்கால் கேன்சரில் இருந்து மீண்டு வந்து சிக்ஸர் அடிக்க முடிந்ததுபோல், ஏஞ்சலீனா ஜோலி தன் மார்பை அறுவைசிகிச்சை செய்துகொண்டு அடுத்த படத்தில் நடிக்கக் கிளம்பியதுபோல் புற்றை உதறிவிட்டு அடுத்தடுத்து நகர முடியாது. இப்போதைக்கு புற்றைத் தின்றுசெரிக்கும் வலிமை, பணத்துக்கு மட்டுமே உண்டு என்பதுதான் கசப்பான நிதர்சனம்.

இந்தியாவின் மொத்த மரணங்களில் 6 சதவிகிதம் புற்றுநோயால் நிகழ்வது. அதுவும் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் 30-59 வயது உள்ளோர்தான் இதில் சிக்குகிறார்கள். கேன்சர் நோயாளிகளில் 90 சதவிகிதம் மக்கள் வறுமையில் உள்ளவர்கள்.

'லான்சட்’ எனும் மிக முக்கிய மருத்துவ ஆய்வு இதழில், சமீபத்தில் இந்திய புற்றுநோய் குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. அதில் குறிப்பிடப்பட்டு இருப்பவைதான் மேலே உள்ள புள்ளிவிவரங்கள். 124 கோடி இந்தியக் கூட்டத்தில் வெறும் 18 கோடி மக்கள் மட்டுமே மருத்துவச் செலவை ஏற்க முடிந்தவர்கள். 66 கோடிக்கு மேலானோருக்கு அன்றாட வயிற்றுப் பிழைப்பே வேதனை தரும் விஷயம். இதில், பல புற்று வகையறாக்கள் தன் வாழ்வுக்கான முற்றுப்புள்ளி என்ற விவரம் ஏதும் அறியாமல், அந்த ஏழைக் குடியானவன், தனக்குக் கிடைக்கும் குறைந்த வருமானத்தையும் அரசாங்கத்தின் அமோக ஆதரவுடன் நடக்கும் குடியில் கொண்டு கொட்டி, புற்றைப் பரிசாகப் பெறுகிறான்.

மதுவின் விளைவாக முதலில் வருவது ஈரல் சிரோசிஸ். அதன் மூலமாக ஈரல் புற்று. மதுவுடன் சேர்த்துப் புகைக்கும் புகையால் நுரையீரல்/தொண்டைப்புற்று. அத்துடன் சேர்த்துப் பொரித்துத் தின்னும் சிவப்பு ரசாயனம் தடவிய பிராய்லர் கோழிப் பொரியலால் இரைப்பைப் புற்று... என இந்தப் பட்டியல் நீளமானது. வருடத்துக்கு 25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக டாஸ்மாக் மூலம் வருமானம் ஈட்டும் அரசு, ஏழைகளுக்கு 'விலையில்லா நோய்’களைப் பரிசாக அளிக்கிறது. ஆனால், அந்த நோய்களுக்கு மக்கள் தரும் விலை மிக, மிக அதிகம்.

உயிர் பிழை - 1

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியைக்கொண்ட குடும்பத்தாரிடம் கேட்டுப்பாருங்கள்... அவர்களின் வாழ்நாள் சேமிப்பு ஆறே மாதங்களில் இல்லாமல் போயிருக்கும். சாத்தியமான அனைத்து வழிகளிலும் கடன் வாங்கியிருப்பார்கள். புற்றுநோய் வந்த வீடு என்பது, யானை  புகுந்த வெள்ளாமை வயல் போன்றது. அது பொருளாதாரரீதியாக அந்தக் குடும்பத்தைச் சூறையாடிவிடுகிறது. எல்லாவற்றையும் செலவழித்து கடைசியில் தங்கள் அன்புக்குரியவரின் உயிரையும் காப்பாற்ற முடியாமல்போகும்போது, அந்தக் குடும்பத்தார் மிகவும் சோர்வடைந்துவிடுகின்றனர்.

எல்லா புற்றுநோய்களும் மரணத்தைத் தருகிறவை அல்ல. ஆரம்பகட்ட கணிப்பு, சில நேரங்களில் சரியான அறுவைசிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சை, இன்னும் சில நேரங்களில் கீமோ எனும் மருத்துவ சிகிச்சைகள், சித்த, ஆயுர்வேத இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அல்லது கூட்டு சிகிச்சை போன்றவற்றால், புற்றின் வளர்ச்சியை நிறுத்துவதற்கான அல்லது தீர்ப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றன. ஆனால், இந்த ஆரம்பகட்ட கணிப்பு, யாருக்கு சாத்தியம்?

'அறுவைசிகிச்சை, பிறகு கதிர்வீச்சு எல்லாம் மிக அதிகச் செலவு பிடிக்கக்கூடியவை. இந்த வயதில், பையனிடம் இவ்வளவு அதிகப் பணம் கேட்டு என் சிகிச்சைக்காக அவனைச் சங்கடப்படுத்தணுமா?’ என்ற கேள்விக்குள் ஒளிந்திருக்கும் இந்திய வறுமை, பன்னாட்டு அலங்காரத்தினுள் ஒளித்துவைக்கப்படுகிறது.

'கீமோ அவசியம்தானா? நவீனமும் பாரம்பர்யமும் ஒருங்கிணைந்த சிகிச்சையை ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?’ என்ற கேள்விகளுக்கு, பல நேரம் மருத்துவ உலகிலேயே மௌனம்தான் பதிலாகக் கிடைக்கிறது அல்லது மங்கலாகவோ, மழுப்பலாகவோ பதில் வருகிறது. மரணத்தின் விளிம்பில் நிற்கும் ஒருவர், தான் கேள்வியுற்ற சில மரபு சாத்தியங்களைத் தயங்கித் தயங்கி மருத்துவரிடம் கேட்டால், 'அதெல்லாம் எனக்குத் தெரியாது. உயிர் பிழைக்க வேண்டும் என்றால், அடுத்த சிகிச்சைக்கு வரவேற்பாளரிடம் தேதி வாங்கிக்கொள்ளுங்கள்'' எனப் பதில் சொல்கிறார்.

'அலோபதி, ஹோமியோபதி ஆரம்பித்து, வெங்கடாசலபதி வரை பார்த்துவிட்டோம். இங்கேயாவது எனக்குத் தீர்வு கிடைக்காதா?’ என்ற நப்பாசையில் சில விளம்பரங்களைப் பார்த்துச் சென்றால், 'அந்த ஃபைலை அப்படியே ஓரமா வைங்க. பச்சை கலர் பொட்டலம் 1, சிவப்பு கலர் பொட்டலம் 1, மொத்தம் 30,000 ரூபாய். மூணு மாசத்துல எப்படியாப்பட்ட கேன்சரும் ஓடிப்போயிடும்’ என, போலி மருத்துவ வியாபாரிகள் வலை விரிக்கிறார்கள். மூலிகை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இவர்கள் ஆங்காங்கே செய்யும் தவறுகள், ஈராயிரம் ஆண்டுகளாக ஆவணப்படுத்திவைத்திருக்கும் தமிழ் மருத்துவத்தின் மகத்தான பக்கங்களை உதாசீனப்படுத்தவைக்கிறது.

இன்னொரு பக்கம் 'காப்புரிமை’ எனும் கொடுங்கோல் அரக்கனின் இரும்புக்கரங்களில் சிக்கியிருக்கும் புற்றுநோய் மருத்துவ சிகிச்சையும் பாரம்பர்ய மருத்துவத்தைப் புறக்கணிக்கிறது.

'எனக்கு 'பேடென்ட்’ மூலம் கப்பம் கட்ட மறுக்கும் உனக்காக, எதற்கு நான் ஆய்வுசெய்ய வேண்டும்? என் பல மில்லியன் டாலர் ஆய்வு மருத்துவ நிறுவனங்கள், காப்புரிமைக்குக் கட்டுப்படாத உன் ஏழை நாட்டுக்கு எதற்கு?’ என ஓரங்கட்டுகின்றன. இப்போதே, ஒட்டிப்போன கன்னத்தோடு, குறைந்தபட்சமாக ஒட்டியுள்ள நம்பிக்கையில், வீட்டையும் நிலத்தையும் விற்று தாலியை அடகுவைத்து, கடைசியில் சிதைந்துபோகும் குடும்பங்கள் ஏராளம். இனி காப்புரிமையுடன்தான் புற்றுநோய்க்கான மருந்துகள் என்ற நிலை வந்தால்?

இப்படி எல்லாம் சொல்வதன் நோக்கம், அச்சுறுத்துவது அல்ல; பீதியூட்டுவது அல்ல; நோயின் பிடியில் இருப்பவர்களை நம்பிக்கை இழக்கச்செய்வது அல்ல. நாம் நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் இந்தப் பிரச்னையைக் குறித்து ஆழமாக, வெளிப்படையாக விவாதிப்போம்.  புற்று என்னும் பெருந்தீங்கு ஒரு கொடிய       நஞ்சாக நம்மைச் சூழ்ந்துநிற்கும் நிலையில், இப்போதேனும் நாம் விழித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

விழிப்பின் முதல் படி, அறிதலில் இருந்தே தொடங்கும். உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவிலும், உறிஞ்சும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரிலும், சுவாசிக்கும் ஒவ்வொரு துளி மூச்சிலும் புற்றுக்காரணி புறப்பட்டிருப்பதை அறிவோம். அறிவியலுக்கு அப்பாற்பட்ட சாத்தியங்களுடன் புற்றுநோய் பல்கிப் பெருகுவதன் அபாயத்தை அறிவோம். 'எல்லா பேரழிவுகளிலும் ஒரு வாய்ப்பு மறைந்து இருக்கிறது’ என்ற லாப வெறியாளர்களின் தத்துவப்படி, புற்றுநோய் சிகிச்சையும் ஆதாயம் பார்க்கும் வாய்ப்பாக மாற்றப்படும் அநீதியை அறிவோம். நம் உணவில், நம் வாழ்வியலில், நம் சிந்தனையில் துளிர்விடச் செய்யும் மாற்றங்களால் புற்றைப் புறமுதுகுக் காட்டி ஓடச்செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குவோம்!

- உயிர்ப்போம்...