Published:Updated:

இந்திய வானம் - 1

இந்திய வானம்
News
இந்திய வானம்

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

 மூன்றாவது சிறகு 

சில ஆண்டுகளுக்கு முன்னர் அசாமில் உள்ள மாஷ§லி தீவுக்குப் போவதற்காக, ஷோர்ஹாத்தின் நிமாடி காட் படகுத்துறையில் காத்திருந்தேன். பிரம்மபுத்திரா நதியை, படகில் கடந்து போக வேண்டும். கண் முன்னே பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது பிரம்மபுத்திரா.

படகில் ஏறுகிறேன். வறண்டுபோய் புழுதி பறக்கும் எனது ஊரை நினைத்துக்கொள்கிறது மனம். தண்ணீருக்காக கோடையில் குடம் ஏந்தி வெயிலில் அலைந்த பெண்கள் நினைவுக்கு வருகிறார்கள். படித்த அரசுப் பள்ளி, நடந்து போன கரிசல் நிலம், கொதிக்கும் சூரியன், கருவேலமரங்கள், வேம்பம்பூக்கள் என நினைவு கிளைகள் விரிக்கிறது.

எனது ஊர், அசாமில் இருந்து எங்கோ வெகுதொலைவில் இருக்கிறது. ஆனால், எனது ஊருக்கும் இதே சூரியனும் ஆகாயமும்தான். இதே காற்றின் அடுத்த மடிப்பு, எனது ஊரில் வீசிக்கொண்டிருக்கும்.

படகு செல்லச் செல்ல புறக்காட்சிகளில் மனம் ஒன்றாமல், கடந்த காலத்துக்குள்ளே அமிழ்ந்து கிடக்கிறது. ஏதோ ஒரு சிறிய கிராமத்தில் விளையாட்டுச் சிறுவனாக அலைந்து திரிந்த நான்தான், இன்று இந்தியாவின் இன்னொரு கோடியில் படகில் போய்க்கொண்டிருக்கிறேன். நானும் ஒரு பறவையே!

இந்திய வானம் - 1

பயணத்தின் வழியேதான் என் வாழ்வை மேம்படுத்திக்கொள்கிறேன். பயணம், கற்றுத்தருகிறது; பரஸ்பர அன்பையும் நட்பையும் உருவாக்குகிறது. பயணத்தில்தான் நம்மை நாமே அடையாளம் காணத்தொடங்குகிறோம்.

ஒரே வானம்தான் என்றாலும், ஒவ்வொரு பறவையும் ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. சில பறவைகள் தனியே பறக்க விரும்புகின்றன. எனக்கு கழுகைப் பிடிக்கும். அது மிக உயரத்தில் பறக்க விரும்புகிறது. மொத்த வானமும் தன் ஒருவருக்கே என்பதுபோல தனியே அலைகிறது. கழுகு பயம் அற்றது. அதன் கூர்மையான கண்கள், இரையை எங்கு இருந்தாலும் கண்டுகொள்கின்றன. காத்திருந்து அடைகின்றன. கழுகின் ஆவேசம் என்னை எப்போதும் எழுச்சிகொள்ளச் செய்கிறது. அதே கழுகுதான் தனது குஞ்சுகளை மிகுந்த அக்கறையோடும் பாசத்தோடும் கவனித்துக்கொள்கிறது.

இந்திய வானம் - 1

பறவைகள், சிறகுகளால் மட்டும் பறப்பது இல்லை; பறக்க வேண்டும் என்ற இடையறாத வேட்கையால், மனதால்தான் பறக்கின்றன. அதுதான் கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது சிறகு. நமக்குள்ளும் அந்த மூன்றாவது சிறகு இருக்கிறது. அதை விரித்துப் பறக்க, நாம் எத்தனிப்பது இல்லை.

வாழ்க்கை, பரமபதக் கட்டத்தைவிடவும் புதிரானது. எந்த ஏணி ஏற்றிவிடும், எந்தப் பாம்பு இறக்கிவிடும் எனத் தெரியாது. அதைவிடவும் எது பாம்பு, எது ஏணி எனக் கண்டுகொள்வதும் எளிதானது இல்லை. ஆனாலும் விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும்.

என்னோடு இருந்த பயணிகள், புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்; சந்தோஷத்தில் கூச்சலிடுகிறார்கள். 'நான் ஏன் இதில் என்னைக் கரைத்துக்கொள்ளாமல் இப்படிக் கடந்த காலத்தின் நினைவுகளில் மிதக்கிறேன்?’ என என்னை நானே கேட்டுக்கொண்டேன். இயல்பே அப்படித்தான். சொந்த ஊரில், விருப்பமான மனிதர்களுடன் வாழ்ந்துவிட முடியாது. அதுதான் இன்றைய உண்மை. ஒன்றை இழப்பதைக்கூட மனம் தாங்கிக்கொள்கிறது. ஆனால், அதுகுறித்த நினைவுகளைத் திரும்ப எழுப்பி அதைப் பற்றி ஏங்கவைக்கிறது.

ஒரு கல், கல்லாகவே இருக்க விரும்புகிறது; ஒரு மரம், மரமாகவே இருக்க ஆசைப்படுகிறது. ஆனால், உலகம் அப்படி எதையும் அதன் ஸ்திதியில் வாழ அனுமதிப்பது இல்லை. எல்லா பொருட்களும் தாமாகவே இருக்கவேண்டியே முயற்சி செய்வதாகத் தத்துவவாதி ஸ்பினோஸா கூறுகிறார். உண்மைதான்.

'திரும்பிப் பார்’ என உலகம் மனிதர் களுக்கு எப்போதுமே சொல்லிக்கொண்டிருக்கிறது. திரும்பிப் பார்ப்பது என்பது வெறும் தலை திருப்புதல் இல்லையே. நேற்றை, அதன் முந்தைய நாளை, கடந்த வருடங்களை, கடந்த நூற்றாண்டை, ஏன் இந்தப் புவியில் மனிதன் வாழத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை தொடரும் வாழ்வின் பக்கங்களை நினைவுகொள்ளுதல்தானே திரும்பிப் பார்த்தல். இதன் தீவிரமான, ஆதாரங்களுடன்கூடிய தொகுப்பே வரலாறு ஆகிறது.

குகை மனிதன் காலத்தில் இருந்து இன்று நாம் வந்து சேர்ந்திருப்பது மிக நீண்ட தூரம். மிகப் பெரிய வளர்ச்சி. ஒரு நூற்றாண்டு இன்னொரு நூற்றாண்டை வென்று கடக்கிறது. அதிலும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் கடந்த 100 வருடங்களில் மனிதன் அடைந்துள்ள சாதனைகள் ஒட்டுமொத்த நாகரிக வளர்ச்சியில் அடைந்த வெற்றிகளைவிட அதிகம்.

நாம், அதிநவீன யுகத்தில் வாழ்கிறோம்; அதிநவீனக் கருவிகளை உபயோகிக்கிறோம். ஓர் இரவுக்குள் உலகில் ஒரு கோடியில் இருந்து மறுகோடிக்குப் போய்விடுகிறோம். பணமும் வசதியும் மனித வாழ்க்கையைப் பெரும் அளவு மாற்றியிருக்கின்றன. ஆனால், மனித சந்தோஷங்கள், துக்கங்கள், வெற்றி - தோல்விகள், இழப்புகள் அனைத்தும் காலம்காலமாக அப்படியே இருக்கின்றன. குற்றங்களையும் கலவரங்களையும் அதிகார வெறியாட்டங்களையும் காணும்போது, உலகம் பின்னால் போய்க்கொண்டிருப்பதுபோலவே இருக்கிறது.

'பாக் மில்கா பாக்’ - ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் வாழ்க்கையை மையமாகக்கொண்ட இந்திப் படம். அதில் முக்கியமான ஒரு பந்தயத்தில் ஓடும் மில்கா சிங், எல்லையை நெருங்கியபோது தன்னை அறியாமல் பின்னால் ஓடி வருகிறவரைத் திரும்பிப் பார்க்கிறார். ஓட்டப்பந்தய வீரர்கள் ஒருபோதும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். இலக்கு முன்னால் மட்டுமே என்பதே அவர்களுக்கான பாலபாடம். ஆனால், மில்கா சிங் பின்னால் திரும்பிப் பார்க்கிறார். அவரது கடந்தகால நினைவுகள் வந்துபோகின்றன. இந்தியப் பிரிவினையின்போது அவரைக் கொல்வதற்காக வாளோடு துரத்திய கும்பல் கண்ணில் தெரிகிறது.

கண் முன்னே இறந்துபோன தாயும் உறவினர்களும் நினைவுக்கு வருகிறார்கள். முரட்டுக் குதிரையில், உயர்த்திய வாளுடன் கொல்லத் துரத்தியவர்களிடம் இருந்து தப்பி ஓடியதுதான் அவரது முதல் ஓட்டம். அந்த வலி மனதில் மீண்டும் தோன்றுகிறது. அவரால் தொடர்ந்து ஓட முடியவில்லை. தோற்றுப்போகிறார். உலகமே அவரைக் குற்றம் சொல்கிறது. அதற்கு மில்கா சிங் பதில் சொல்கிறார். கடந்தகாலம் என் கால்களைக் கட்டிப்போடுகிறது. ஆனால், அதைத் தாண்டிச் செல்லவே போராடுகிறேன்.

படத்தின் முடிவில் அவர் அடையும் இமாலய வெற்றி என்பது, கடந்த காலத்தின் வலிகளை அவர் வென்றதன் அடையாளம்.

நம் ஒவ்வொருவரையும் கடந்த காலத்தின் ஒரு காட்சி இப்படித் துரத்திக்கொண்டுதான் இருக்கிறது. அதை நினைவுகொள்ளவே கூடாது என மூடி புதைத்து வைத்தாலும் நினைவுக்குடுவை தானே திறந்துவிடுகிறது. அதை வென்று கடக்கவே பலரும் விரும்புகிறார்கள். கடந்தகாலம் சிலருக்கு சந்தோஷமானது; பலருக்கோ அது ஒரு துர்கனவு. எதிர்காலம் குறித்து, எப்போதாவதுதான் யோசிக்கிறோம்; கனவு காண்கிறோம். ஆனால், கடந்தகாலம் குறித்தோ அடிக்கடி நினைத்துக்கொள்கிறோம். கடந்த காலத்துக்குள் செல்ல, நமக்கு கால இயந்திரம் தேவை இல்லை; ஒரு கறுப்பு - வெள்ளைப் புகைப்படம் போதும். அதுதான் உண்மையான கால இயந்திரம்.  அதிலும் குடும்பப் புகைப்படமாகவோ, காதலியின் புகைப்படமாகவோ இருந்துவிட்டால் போதும், நீங்கள் தானாகவே காலத்தின் பின்னே போய்விடுவீர்கள். புகைமூட்டமான அந்த இனிய தருணத்தில் மீண்டும் பிரவேசித்து, சந்தோஷம்கொள்வீர்கள்.

'டைட்டானிக்’ படத்தின் தொடக்கத்தில் ரோஸ், வயதான பாட்டியாக அறிமுகமாகிறாள். அப்போது அவள் களிமண்ணைக்கொண்டு பானை செய்துகொண்டிருக்கிறாள். அது ஒரு குறியீடு எனக் கொள்ளலாம். தற்செயலாக டி.வி-யில் வெளியாகும் செய்தியில், கடலில் கண்டெடுக்கப்பட்ட தனது ஓவியத்தைக் கண்டு ஆய்வுக் கப்பலைத் தொடர்புகொள்கிறாள். அங்கே செல்லும் ரோஸ், மூழ்கிப்போன 'டைட்டானிக்’ கப்பலில் கிடைத்த கண்ணாடி ஒன்றை எடுத்து முகம் பார்க்கிறாள்.

இந்திய வானம் - 1

அது அவளது கண்ணாடி, எத்தனையோ ஆண்டுகளாகக் கடலில் மூழ்கிக்கிடந்திருக்கிறது. தற்போது அதில் அவள் முகத்தைக் காணும்போது கண்கள் கலங்குகின்றன. அந்தக் கண்ணாடி அவளது இளமையின் அடையாளம். ரோஸ் தனது கடந்தகாலத்தை நினைவுகொள்ளத் தொடங்குகிறாள். அவள் பேசுவது டைட்டானிக் கப்பலைப் பற்றி மட்டும் அல்ல... மூழ்கிப்போன தனது காதல் நினைவுகளையும்தானே! இந்தக் காட்சி இல்லாமல் நேரடியாக 'டைட்டானிக்’ படம் தொடங்கியிருந்தால் இத்தனை மனபாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகமே. கடந்தகாலத்தின் சில வாசகங்கள் நிகழ்காலத்தின் வெளிச்சமாக மாறியிருக்கின்றன.

லகெங்கும் சூழலியல் அறிஞர்கள், இயற்கை ஆர்வலர்கள் சிவப்பிந்திய தலைவர் சியாட்டில் ஆற்றிய உரையைக் கொண்டாடுகிறார்கள்.

சியாட்டில் - வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள நகரம். சிவப்பிந்தியத் தலைவர் பெயர்தான் சியாட்டில்.

1854-ம் ஆண்டில் செவ்விந்தியர் வசம் இருந்த சுமார் இரண்டு மில்லியன் ஏக்கர் நிலத்தை, அமெரிக்க அரசாங்கம் விலைக்குக் கேட்டது. குடியரசுத் தலைவர் பிராங்க்ளின் பியர்ஸ் அதற்கான ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக கவர்னர் ஐசக் ஸ்டீவன்ஸனை அந்தப் பகுதிக்கு அனுப்பினார். நிலத்துக்கான விலையாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் தர அரசாங்கம் முன்வந்தது. வாழ்நிலத்தைக் கையகப்படுத்த அரசு நினைக்கும்போது, அதை யார் தடுக்க முடியும்? சியாட்டில் தனது பூர்வகுடி மக்களின் நிலைப்பாட்டை ஓர் உரையின் வாயிலாக வெளிப்படுத்தினார். ஈடுஇணையற்ற உரை அது.

அந்த உரையை சியாட்டில் தனது சுகுவாமிஷ் மொழியில் நிகழ்த்தினார். டாக்டர் ஹென்றி ஸ்மித் என்பவர் அதை ஆங்கிலத்தில் படியெடுத்து வெளியிட்டார். 'சன்டே ஸ்டார்’ பத்திரிகையில் சியாட்டிலின் உரை வெளியானது. பின்பு ஓர் ஆவணப்படத்துக்காக டெட்பெரி என்கிற பேராசிரியர், சியாட்டிலின் உரையைத் திருத்தங்கள் செய்து மாற்றினார். இப்போது நாம் படிப்பது டெட்பெரி எழுதிய வடிவமே.

சியாட்டிலின் உரையில் இருந்து இந்த வடிவம் மாறியிருக்கிறது என்கிறார்கள். எது மூலம் எனும் ஆராய்ச்சியை விடுத்து என்ன சொல்கிறது சியாட்டிலின் உரை என்பதையே நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். அந்த உரையின் சில பகுதிகளை வாசித்துப்பாருங்கள். சியாட்டில் சுட்டிக்காட்டும் உண்மை உங்களுக்கே புரியும்.

'வெள்ளையர்களால் எங்கள் வாழ்வுமுறையைப் புரிந்துகொள்ள முடியாது. பூமி மனிதனுக்கு உரிமையானது அல்ல; மனிதன்தான் பூமிக்கு உரிமையானவன். பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். வானத்தையோ பூமியையோ விற்கவோ, வாங்கவோ எவ்வாறு இயலும்? அந்த எண்ணமே எங்களுக்குப் புதிரானது.  

விலங்குகள் இல்லாமல் மனிதன் எப்படி வாழ்வான்? எல்லா விலங்குகளும் இந்தப் பூமியில் இருந்து மறைந்துபோய்விடுமானால், பிசாசுத் தனிமையில் மனிதன் இறந்துபோய் விடுவான். விலங்குகளுக்கு நேர்வது நாளை மனிதனுக்கும் நேரிடும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவையே.

இந்திய வானம் - 1

நீரின் முணுமுணுப்பு என் தந்தையின் தந்தையினுடைய குரல். எங்கள் காலடியில் உள்ள நிலம் எம் மூதாதையரின் சாம்பல். இதை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். இந்தப் பூமி எங்களின் தாய் என நாங்கள் நம்புவதை, உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.

நதிகள் எங்கள் சகோதரர்கள். அவர்கள் எங்கள் தாகத்தைத் தீர்க்கிறார்கள். எங்கள் படகுகளைச் சுமக்கிறார்கள். எங்கள் குழந்தைகளின் பசியாற்றுகிறார்கள். நாங்கள் உங்களுக்கு எமது நிலத்தை விற்றால், நதிகள் எங்களுக்கும் உங்களுக்குமான சகோதரர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். அதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவும் வேண்டும். அது மட்டும் அல்லாமல், நீங்கள் எந்த ஒரு சகோதரனிடமும் காட்டும் கருணையை நதிகளிடமும் காட்ட வேண்டும்.

வெள்ளை மனிதன் உருவாக்கிய நகரங்களில் அமைதியே இல்லை. வசந்தகாலத்து இலைகள் உதிர்வதைக் கேட்கவோ, பூச்சிகள் தங்கள் சிறகுகளை உரசிக்கொள்ளும் ஓசையை அறியவோ சாத்தியம் இல்லை. நகரங்களின் குழப்பமான ஓசைகள் செவியை அவமதிப்பதாகத் தோன்றுகிறது.

சிவப்பு மனிதனுக்கு, காற்று மிகவும் மதிப்புடையது. ஏனென்றால், எல்லா உயிர்களும் பகிர்ந்துகொள்வது ஒரே சுவாசத்தைத்தான்; விலங்கும் மரமும் மனிதனும் ஒரே சுவாசத்தைத்தான் சுவாசிக்கிறார்கள். வெள்ளை மனிதன், தான் சுவாசிக்கும் காற்றை அறிந்துகொண்டதாகத் தெரியவில்லை...’

இப்படி 160 ஆண்டுகளுக்கு முன்பாகச் சியாட்டில் என்ற சிவப்பிந்திய மனிதர் கேட்ட கேள்விகள், இன்றைக்கும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. சிவப்பிந்தியர்களின் வாழ்நிலமாக இருந்த நிலம், இன்று அமெரிக்காவின் பெருநகரமாக உருக்கொண்டு நிற்கிறது. சிவப்பிந்தியர்களின் நினைவாக மிஞ்சியிருப்பது சில ஆவணங்களும் இதுபோன்ற உரைகளும் மட்டுமே.

அமெரிக்காவிலாவது சியாட்டிலின் உரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில்

இந்திய வானம் - 1

வாழ்வுரிமை பறிக்கப்பட்டு வனத்தில் இருந்து துரத்தப்பட்ட எந்த ஆதிவாசியின் குரல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது? என்ன ஆவணம் இருக்கிறது? இன்றும் பேராசை கொண்டவர்களின் இரும்புக்கரம் காட்டில் இருந்து வனவாசிகளைத் துரத்திக்கொண்டேதான் இருக்கிறது. காட்டு விலங்குகளைப் புரிந்துகொண்டு நட்பாகப் பழகத் தெரிந்த வனவாசிகளுக்கு, தரையில் வாழும் மனிதர்களைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

நிகழ்காலம் எனும் ஆற்றில் நகரும் வாழ்க்கைப் படகுக்கு இரண்டு துடுப்புகள் இருக்கின்றன. ஒன்று கடந்தகாலத்தை நோக்கி இயங்குகிறது. மற்றது எதிர்காலத்தை நோக்கி. இரண்டும் மாறிமாறி நகர்கின்றன. படகு முன் சென்றபடியே இருக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தத் துடுப்புகள் இயங்கிக் கொண்டேதான் இருக்கும் போலும்.

பிரம்மபுத்திராவில் எனது படகு போய்க்கொண்டே இருந்தது.

''கடவுள் சந்தோஷமாகப் பகடை உருட்டி விளையாடும் இடம் மாஜுலி தீவு'' எனச் சொன்னார் படகோட்டி.

''எங்கே கடவுள்... புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?'' எனக் கேட்டாள் படகில் வந்த சிறுமி. பலரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். ஓடும் ஆற்று நீரைச் சுட்டிக்காட்டி ஒரு முதியவர் சொன்னார்...  

''இதுதான் கடவுள், படம் எடுத்துக்கொள்.''

கடந்தகாலம் கற்றுத்தந்த பாடம்தான் அந்தக் குரல் என, எனக்கு நன்றாகப் புரிந்தது. இதே குரல்தானே சியாட்டிலிடமும் இருந்தது!

- சிறகடிக்கலாம்...