Published:Updated:

கேளுங்கள் பிரதமரே ..!

கேளுங்கள் பிரதமரே ..!

பிரீமியம் ஸ்டோரி
கேளுங்கள் பிரதமரே ..!

ந்திய நாடாளுமன்ற வரலாற்றில் அறுதிப் பெரும்பான்மை பெறுவது அபூர்வம். 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் அப்படி காங்கிரஸ் வெற்றிபெற்றது; ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுதான் அறுதிப் பெரும்பான்மை பெற்றது. 282 இடங்கள். இந்த மக்கள் பேராதரவுக்கு நேர்மையாக இப்போது பா.ஜ.க அரசு நடந்துகொள்கிறதா?

காங்கிரஸ் ஆட்சியில் எங்கெங்கும் ஊழல்கள். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துக்கட்டுவோம்; தேசத்தை மாற்றிக்காட்டுவோம்’ என்ற நம்பிக்கையை விதைத்துத்தான் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெற்றது. ஆனால், பதவி ஏற்ற ஒரே வருடத்தில் காங்கிரஸையும் விஞ்சும் வகையில், பா.ஜ.க அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள். சத்தீஸ்கர் மாநில பொது விநியோகத் திட்டத்தில் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், மகாராஷ்டிரா மாநில பள்ளிக் கல்வித் துறையில் ஊழல், மத்தியப்பிரதேச அரசு ஊழியர்கள் தேர்வு வாரியமான வியாபம் ஊழல் என, பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் அனைத்திலும் வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுகள். இதற்கு பொறுப்பு ஏற்றுப் பதில் சொல்லவேண்டிய பா.ஜ.க-வும் பிரதமர் மோடியும் இன்னமும் இறுக்கமான மௌனம் காக்கிறார்கள்.

டாம்பீகமாக அறிவிக்கப்பட்ட 'மேக் இன் இந்தியா’ என்னவாயிற்று? பிரதமரின் ஆடை அலங்காரங்களில்கூட அது இல்லை. 'க்ளீன் இந்தியா’வின் நிலைமை என்ன? ஒரு மாதகால ஊடக வெளிச்சத்தோடு முடிந்துபோயிற்று. 'யோகா தினம்’? அது இந்தித் திரைப்படப் பாடல் காட்சிபோல பிரமாண்டமாக இருந்தது... அவ்வளவுதான். பா.ஜ.க அறிவிக்கும் அத்தனை திட்டங்களிலும் மோடியை முன்னிறுத்தும் விருப்பம் மட்டுமே முதன்மை நோக்கமாக வெளிப்படுகிறது. 'செல்ஃபி வித் செல்வமகள்’ ஓர் உதாரணம்.

'இந்தியா முழுவதிலும் இருந்து 3,000 ரயில் பிச்சைக்காரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அரசின் பிரசாரத் தூதுவர்களாக நியமிப்போம்’ என்ற கடந்த வார அறிவிப்பு, விளம்பர மோகத்தின் உச்சம். எனில், அவர்களைப் பிச்சைக்காரர்களாகவே வைத்திருப்பதுதான் இந்த அரசின் நோக்கமா?

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எத்தனையோ வாக்குறுதிகளைக் கொடுத்தது பா.ஜ.க. 'வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் 85 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மீட்போம்’ என்பது அதில் ஒன்று. ஒரு வருடத்தைக் கடந்துவிட்ட பின்னரும் அதற்கான அறிகுறிகூடத் தென்படவில்லை. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான நிதி மேலாண்மை அமைப்பாக இருந்த திட்டக் கமிஷனைக் கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக 'நிதி ஆயோக்’ என்ற புதிய அமைப்பை உருவாக்குவோம் என்றார் மோடி. இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

நாடாளுமன்றம் முடங்கிக்கிடக்கிறது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா தொடங்கி லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் என எதிர்க்கட்சிகள் கிடுகிடுக்கவைத்தாலும், பிரதமரிடம் பதிலே இல்லை. மோடியின் பெயரால் மக்களுக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ் வருகிறது. ஆனால் அவர், இந்தியாவுக்கு அவ்வப்போது வந்துபோகிறார்; 'மன் கி பாத்’ என்ற பெயரில் வானொலியில் பேசுகிறார். ஆனால், ஊடகங்களைச் சந்திக்கவே மறுக்கிறார். மாற்றுக் கருத்துக்களைக் கேட்பதும் விவாதிப்பதும்தான் ஜனநாயகம். ஆனால் மோடி, தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு வாயை மூடிக்கொள்கிறார்.

தங்கள் விருப்பங்களை நிராகரிப்போரை மக்களும் நிராகரித்துவிடுவார்கள் என்ற மக்களாட்சியின் எளிய உண்மையை பா.ஜ.க-வும் மோடியும் நினைவில்கொள்ளட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு