Published:Updated:

லோன் கேட்டு லோல்பட்டோர்!

லோன் கேட்டு லோல்பட்டோர்!

லோன் கேட்டு லோல்பட்டோர்!

ந்த லோன் கேட்டு லோல்பட்ட அனுபவம் உங்களுக்கு இருக்கா பாஸ்? வாங்க சொல்றேன்...

‘அது வேற வாய்; இது வேற வாய்’ மொமன்ட்:  ‘பெர்சனல் லோன் வேணுமா சார்?’னு போன் பண்ணும்போது என்ன ஒரு சாத்வீகக் குரல். என் நண்பர்களில் பலர் அந்த காந்தக்குரல் பெண்களைக் காதலிக்க முயற்சித்ததுகூட உண்டு. அதன்பிறகு ‘நான் மீடியாக்காரன்’னு சொன்னா, ‘ஸாரி சார். உங்க கம்பெனி எங்க லிஸ்ட்ல இல்லை’ என வெடுக்கென சொல்லி படக்கென வைத்து விடுவார்கள். ஒருவேளை சில அப்பாடக்கர் வங்கிகள், ‘யாரா இருந்தாலும் தர்றோம் சார். ஆபீஸ் அட்ரஸ் சொல்லுங்க’ என நேரில் ஆள் அனுப்பி நம்மை வசீகரிப்பார்கள். ‘கவலையை விடுங்க சார். நான் உங்களுக்கு வாங்கித் தர்றேன். எத்தனை லட்சம் வேணும்? நாலு லட்சம் போதுமா? டென் டேஸ்ல பணம் வந்திரும்’ என கனவில் மிதக்க வைப்பார்கள்.  எக்கச்சக்க அப்ளிகேஷன் ஃபார்மாலிட்டீஸ் முடிந்து ஆதார் அட்டை, ரேஷன் கார்டில் ஆரம்பித்து பேங்க் செக் லீஃப் வரை கொடுத்து தேவுடு காத்துக்கிடந்தால், பதிலே சொல்ல மாட்டார்கள். போனில் மடக்கி, ‘சார் என் லோன்’ எனக் கேட்டால், ‘சார்’ கட் ஆகி இருக்கும். ‘இருங்க... உங்க அப்ளிகேஷன் பிராசஸ் ஆகிட்டு இருக்கு. லெட் அஸ் ஹோப் ஃபார் பெஸ்ட்’ என ஆபரேஷன் தியேட்டருக்கு முன் டாக்டர் சொல்வதைப் போல சொல்வார்கள். கடைசியில் ஒருநாள் நாமே பத்து கால் பண்ணி பதினோராவது காலுக்கு அந்த ஆள் அட்டெண்ட் பண்ணி,  ‘பாஸ் உங்க  சிபில் ரேட் மைனஸ்ல இருக்கு. அதனால பேங்க் உங்க அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ணிடுச்சு’ எனச் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டிப்பார்கள். இவய்ங்க எப்பவுமே இப்பிடித்தானா...? இல்லை இப்பிடித்தான் எப்பவுமேவா?

பில்டப் பில்பான்ஸி: அப்ளிகேஷன் ஃபில் பண்ணும்போது  56 இடத்தில் கையெழுத்து வாங்குவார்கள். ஒரு கட்டத்தில் கை மரத்துப்போய்விடும். ‘போடுற கையெழுத்துக்கே பணம் கொடுப்பாங்க’ என புது நம்பிக்கை பிறக்கும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை ஒட்டும்போது அது சாய்வான ஆங்கிளில் ஸ்டைலாக எடுக்கப்பட்டு இருந்தால், ரிஜெக்ட் ஆகிவிடும் என்பதைப்போல ‘சார் வேற போட்டோ இல்லையா..? அப்படினா புதுசா எடுங்களேன். நாளைக்கு வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன்’ என ஏகப்பட்ட பில்டப் பண்ணுவார்கள். ஒட்டி, சரிபார்த்து ‘வெரிஃபிகேஷனுக்கு ஆள் வருவாங்க’ என கூடுதல் குளுகோஸ் ஏற்றிவிட்டுப்போவார்கள். ஆனால், எல்லாமே ஜுஜுலிபா என்பது கடைசியில்தான் தெரியும். ‘நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணியும் காப்பாத்த முடியல’ கதைதான்!

‘எதுக்குடா நான் சரிப்பட்டு வர மாட்டேன்?’ மொமென்ட் : ‘செஃபில் ரேட் கம்மி’ என்று கூறும் அந்த பேங்க் ஆசாமியிடம் கேட்டால், அவ்வளவு எளிதில் புரியவே கூடாது என்கிற ரேஞ்சுக்கு எதை எதையோ சொல்வார். அதில் ஒன்று, ‘உங்க செக் இதுக்கு முன்னாடி பௌன்ஸ் ஆகி இருக்கும் சார்’ என்பதாக இருக்கும். ஹலோ, செக்புக்கையே நான் போன மாசம்தான் எடுத்துப் பார்த்தேன். நான் யாருக்குய்யா செக் கொடுத்து அது பௌன்ஸ் ஆகி...? போங்க பாஸ்.... இது போங்கு பாஸ்!

லோல்பட்டா லோன்: ‘வேற ஏதாச்சும் பேங்க்ல இதுக்கு முன்னாடி லோன் வாங்கி, கட்டி இருக்கீங்களா? கிரெடிட் கார்டு வெச்சிருக்கீங்களா?’ என்று கேட்பார்கள். ஆம் என்றால் உடனே லோன் சாங்ஷன் ஆகிவிடுமாம். ஒரு பேங்கில் லோன் சாங்ஷன் பண்ணப்பட்டிருப்பதும்கூட ஒரு ஸ்பெஷல் தகுதியாம். கட்டி இருக்காரா? கட்டாமல் விட்டாரா? என்பதெல்லாம் கணக்கில் கிடையாதாம். கடன்பட்டவனுக்கே கடன் என்பதே அவர்கள் லாஜிக். ‘நிறைய கடன் வாங்கி கட்டாவிட்டாலும் லோன் கொடுக்க நாங்க ரெடி’ என வெளிப்படையாகவே சொல்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், ‘பேசாம எங்க பேங்க்ல கிரெடிட் கார்டு வாங்கிடுங்க. கார்டு கையில வந்தபிறகு பிராசஸ் பண்ணிக்கலாம் சார்’ என்பார்கள். ‘நீ ஆசிட்டைக்குடி... நான் ட்ரீட்மென்ட் ்கொடுக்கிறேன்’ மாதிரி இருக்குல்ல?

பெர்சனல் லோன் வேணுமா சார்?

- ஆர்.சரண்

அடுத்த கட்டுரைக்கு