Election bannerElection banner
Published:Updated:

பலாசோ முதல் கிராப் டாப் வரை... டீன்ஸ் விரும்பும் இண்டோ - வெஸ்ட்ர்ன் காம்போ!

பலாசோ முதல்  கிராப் டாப் வரை...  டீன்ஸ் விரும்பும் இண்டோ - வெஸ்ட்ர்ன் காம்போ!
பலாசோ முதல் கிராப் டாப் வரை... டீன்ஸ் விரும்பும் இண்டோ - வெஸ்ட்ர்ன் காம்போ!

பலாசோ முதல் கிராப் டாப் வரை... டீன்ஸ் விரும்பும் இண்டோ - வெஸ்ட்ர்ன் காம்போ!

பெண்களுக்கு, புதுமையான ஆடைகள் எவ்வளவு வந்தாலும் போதாது. கல்லூரிக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் காலையில் தினமும் மனதில் எழும் கேள்வி, `இன்னிக்கு என்ன டிரெஸ்?'. இதற்கு விடை தேடி அலமாரியில் இருக்கும் 100 உடைகளையும் கலைத்துவிட்டுச் சொல்வது, `சே..! ஒரு டிரெஸ்கூட நல்லாயில்லை!'. ஆண்களைவிட பெண்களுக்குப் பல்வேறு நிறம், பேட்டர்ன், துணி எனப் பல வெரைட்டிகள் இருந்தும் புதுமையைத்தான் விரும்புகிறார்கள் இந்தக் காலத்து `டீன்ஸ்'. அவர்களுக்காகவே நிறைய ஆடைகள் மார்க்கெட்டில் குவித்துள்ளனர் நம் நாட்டு ஆடை வடிவமைப்பாளர்கள். தற்போது பல கல்லூரிப் பெண்கள் விரும்பி வாங்குவது `ஃப்யூஷன்' (Fusion) எனப்படும் இண்டோ-வெஸ்டர்ன் உடைகளைத்தான். இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் பாரம்பர்ய ஆடைகளை ஒன்றாக்கி, புது வடிவத்தைக்கொடுப்பதுதான் இண்டோ-வெஸ்டர்ன் உடைகள். சந்தையில் களம் இறங்கியிருக்கும் (Fashion) கல்லூரிப் பெண்களுக்கான ஃபியூஷன் ஆடைகளைப் பற்றி பார்ப்போமா...

குர்த்தா டிரெஸ்:

குர்த்தா, இந்தியப் பெண்கள் அனைவரும் அணியும் உடை. குர்த்தாவுடன் சல்வார், ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்றவற்றை மேட்ச் செய்து அணிவது வழக்கம். முற்றிலும் இந்திய உடையாக இருக்கும் இந்தக் குர்த்தாவில் சிறு மாற்றங்களைச் செய்தால், இண்டோ - வெஸ்டர்ன் உடை. உதாரணமாக, சைடு கட் (side cut) ஏதுமின்றி அனார்கலி வகையான குர்த்தாவை மட்டும் அணிந்து, அதனுடன் டேங்க்லர்ஸ், லெதர் காலணிகளை மேட்ச் செய்தால், ஃப்யூஷன் குர்த்தா தோற்றத்தைக் கொடுக்கும். இதைக் கல்லூரிப் பெண்கள் முதல் பணிக்குச் செல்லும் பெண்கள் வரை அனைவரும் அணியலாம். விலையும் மிகக் குறைவு.

அனார்கலி வகைபோல நீளமான குர்த்தாவும் ட்ரெண்ட். கணுக்கால் அளவு நீண்டிருக்கும் குர்த்தாவின் மையத்தில் பிளவை அமைத்தால், அது `சென்டர் ஸ்லிட் லாங் குர்த்தா'. இதனுடன் லெக்கிங்ஸ் அல்லது ஜீன்ஸ் மேட்ச் செய்து, கலர்ஃபுல் வளையல்கள் மற்றும் மேட்சிங் சாண்டல் காலணிகளை அணிந்தால் எளிமையான இண்டோ-வெஸ்டர்ன் தோற்றத்துக்குச் சொந்தமாகலாம்.

இதே நீள குர்த்தாவின் இரு பக்கங்களிலும் `ஸ்லிட்' அமைத்து அதற்கு மேட்சாக `லாங் ஸ்கர்ட்' எனப்படும் மாக்ஸி அணிந்தால், குர்த்தா ஸ்கர்ட் என்றாகிவிடும். சாண்ட்பாலி (Chandbali), வளையல், தட்டையான காலணிகள் எனச் சாதாரண அணிகலன்களே இதற்கான பக்கா ஜோடி.

பலாசோ :

சட்டைகளுக்கு எப்போதும் ஜீன்ஸ், பேன்ட் என மேற்கத்திய ஆடையின் சேர்க்கையையே பின்பற்றிய நாம், தற்போது நம்முடைய தேடல் நம் பாரம்பர்ய முத்திரைகளைக்கொண்டிருக்கும் பலாசோ பக்கம் திரும்பியுள்ளது. எண்ணற்ற டிசைன்களிலும் நிறங்களிலும் கிடைக்கும் இந்த பலாசோவின் சரியான ஜோடி `கிராப் டாப்'. குர்த்தா, ஷர்ட் மற்றும் டீஷர்ட்களையும் அணியலாம். கல்லூரிப் பெண்களிடம் அதீத வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த உடையுடன் ஜிமிக்கி, பிரேஸ்லெட், ஹீல்ஸ் போன்றவற்றை அணிந்து ட்ரெண்ட் செட் செய்யலாம்.

தோத்தி பேன்ட் :

பலாசோவின் பிளீட்களை (Pleat) அதிகப்படுத்தி நம் நாட்டு ஆண்களின் வேட்டி வடிவத்தைப்போல் டிசைன் செய்ததுதான் தோத்தி பேன்ட். கிராப் டாப், ஷர்ட், குர்த்தா போன்றவற்றை இதனுடன் அணியலாம். மேலும் காதில் வளையம், மெல்லிய பிரேஸ்லெட், தட்டையான காலணிகளை அணிந்து கலக்கல் கல்லூரிப் பெண் தோற்றதைப் பெறலாம்.

புடைவையுடன் கிராப் டாப் :

புடைவை என்றாலே பிளவுஸ்தான் என்பதை மாற்றி, தற்போது ட்ரெண்டில் இருப்பது கிராப் டாப் (துப்பாக்கியில் காஜல் அணிந்திருந்தது). பழகிப்போன பிளவுஸ் ட்ரெண்டை உடைத்து சந்தையில் அதிகம் விற்பனை ஆவது கிராப் டாப்கள். பிளெய்ன் புடைவைக்கு ஏற்றதுபோல் அச்சிட்ட கிராப் டாப் ஏராளம். ஒரே ஒரு டாப் இருந்தால் போதும், மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து தனித்தன்மையை உலகறியச் செய்யலாம்.

ஐந்நூறு ரூபாய் முதல் கிடைக்கும் இந்த வகையான இண்டோ-வெஸ்டர்ன் உடைகள், கல்லூரிப் பெண்கள் மட்டுமல்ல, அனைத்துப் பெண்களும் எளிதில் வாங்கக்கூடியவையே. இப்போதே ஷாப்பிங் லிஸ்ட் தயார்செய்து இண்டோ-வெஸ்டர்ன் காஸ்ட்யூமை உங்கள் வசமாக்கிக்கொள்ளுங்கள்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு