Published:Updated:

பாரம்பர்ய அழகு!

பாரம்பர்ய அழகு!
பாரம்பர்ய அழகு!

திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து, கீழே சொல்லியிருக்கும் இந்த ஆலோசனைகளைப் பின்பற்ற ஆரம்பியுங்கள்.

‘‘என்னதான் பார்லருக்கு சென்று அழகுபடுத்திக்கொண்டாலும், பாரம்பர்ய பொருட்களால் வரும்

பாரம்பர்ய அழகு!

அழகே தனி!’’

- சிலாகித்துச் சிரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா.

‘‘திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து, கீழே சொல்லியிருக்கும் இந்த ஆலோசனைகளைப் பின்பற்ற ஆரம்பியுங்கள். மணமேடையில் ஜொலிப்பீர்கள்!’’ என்ற ரெபேக்கா... சருமம், எடை என்று ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிமுறைகளைப் பிரித்துச் சொன் னது சிறப்பு!

வறண்ட சருமமா?

உடலுக்குத் தேய்க்கத் தேவையான அளவு நெய் எடுத்து சூடுபடுத்தி, உடலில் தடவவும். 30 நிமிடங்கள் ஊறவைத்து, ஜலதோஷத்துக்கு ஆவி பிடிப்பது போல் வெறும் வெந்நீரில் ஆவி பிடிக்கவும். உடல் வியர்க்க ஆரம்பிக்கும். பின்னர் வெந்நீரில் குளிக்கவும். இதை வாரம் இரண்டு முறை செய்யலாம்.

அதிக வறண்ட சருமம் உள்ளவர்கள், முதல் நாள் இரவு அரை கப் நவர அரிசியை (கேரள அரிசி என்றும் சொல்வார்கள். இது நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்), அரை லிட்டர் பாலில் ஊறவைக்கவும். மறுநாள் காலை அதை அரை லிட்டர் பால் ஊற்றி வேகவைக்கவும். குழைய வெந்ததும் உடல் முழுக்கத் தடவி 30 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் குளிக்கவும். இதை வாரம் இரண்டு முறை செய்துவர... வறட்சி நீங்கி, கருமை மறைந்து, நல்ல நிறம் கிடைக்கும். முகத்தில் வறட்சியை விரட்ட வாரம் இரண்டு, மூன்று முறை பப்பாளி ஜுஸ் தடவினால் பலன் கிடைக்கும்.

பாரம்பர்ய அழகு!

எண்ணெய் சருமத்தினருக்கு...

உடல் முழுக்க எண்ணெய்ப் பசை இருப்பவர்கள், தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து சூடு செய்து, உடல் முழுக்கத் தடவி, வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். ஆரஞ்சு ஜூஸ் மற்றும் லெமன் ஜுஸ் இரண்டையும் ஒரு ஸ்பூன் எடுத்துக் கலந்து, அதில் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து, முகம், கை, கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.

நார்மல் ஸ்கின்னா?

குளிரில் வறண்டும், வெயிலில் எண்ணய்ப் பசையாகவும் ஆவது நார்மல் ஸ்கின்னுடைய தன்மை. லேசாக சூடு செய்த ஆலிவ் எண்ணெயை உடலில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும்.

அரை செவ்வாழைப் பழத்தில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்ந்துக் கலந்து, முகம் மற்றும் கை, கால்களில் தடவினால், கருமை மறைவதோடு சருமம் பளபளக்கும்.

எல்லா வகையான சருமத்துக்கும்...

சிவப்பு சாண்டல்வுட் பவுடர் - 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் பவுடர் - 50 கிராம், ஜவ்வாது - 10 கிராம், பச்சைப்பயறு பவுடர் - அரை கிலோ, வெந்தய பவுடர் - 250 கிராம் எடுத்து, அனைத்தையும் நன்றாகக் கலந்து, தினமும் சோப்புக்குப் பதில் இதைப் பயன்படுத்திக் குளிக்க, உடலில் உள்ள கிருமிகளை அகற்றி, சருமத்தை மிருதுவாக்கி, நல்ல வாசனையும் தரும். வெயிலால் ஏற்பட்ட கருமை நிறம் மறைய, இரவு நேரத்தில் இந்தப் பொடியைத் தடவி, மறுநாள் காலையில் கழுவலாம்.

பருவினால் ஏற்பட்ட வடு, கரும்புள்ளிகள் மறைய, திப்பிலியை வெயிலில் காயவைத்து பவுடராக அரைத்துக்கொள்ளவும். அதில் அரை டீஸ்பூன் எடுத்து, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். இதைத் தடவும்போது லேசான எரிச்சல் இருக்கும். தொடர்ந்து தடவும்போது எரிச்சல் நீங்கும்.

கேசப் பராமரிப்பு! 

வெள்ளை வெந்தயப் பவுடர் 2 டீஸ்பூன் எடுத்து கால் லிட்டர் பாலில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். அந்தப் பாலை வடிகட்டி, தலைமுடியின் வேர்களில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். இதுவும் லேசான எரிச்சல் தரும். ஆனால் பொடுகைப் போக்கிவிடும். அதிக பொடுகு இருப்பவர்கள், இதை வாரம் மூன்று முறை செய்யலாம்.

வறண்ட கேசம் உள்ளவர்கள் சூடு செய்த நெய்யைக் கேசத்தில் தடவி, அதன் மேல் முட்டையின் வெள்ளை கருவைத் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். அதேபோல, பச்சைப்பயறு பவுடர் மற்றும் வெந்தய பவுடர் - 300 கிராம், சிகைக்காய் பொடி - 100 கிராம் எடுத்துக் கலந்து வைத்துக்கொண்டு, அதை ஹேர்வாஷ் பவுடராகப் பயன்படுத்தலாம்.

எண்ணெய்ப் பசை கேசம் உள்ளவர்கள் பச்சைப்பயறு - 300 கிராம், சிகைக்காய் பொடி - 100 கிராம், ஆரஞ்சு தோல் பொடி - 200 கிராம் எடுத்து நன்றாகக் கலந்து ஹேர்வாஷ் பவுடராகப் பயன்படுத்தலாம்.

லேசாக சூடுபடுத்திய நல்லெண்ணெயை தினமும் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவுவதன் மூலம் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். இது எல்லா வகையான கேசத்தினருக்கும் பொருந்தும்.

பாத வெடிப்பு மறைய!

ஒரு வாளி வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் கல் உப்பு, 100 மில்லி விளக்கெண்ணெய், இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து, அதில் பாதங்களை 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு, தேய்த்துக் கழுவி, துடைத்து விளக்கெண்ணய் தடவவும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்தால் வெடிப்புகள் மறையும்.

புத்துணர்வுக் கண்களுக்கு!

திருமண நாளில் கண்கள் பளிச்சென இருந்தால்தான், பார்க்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும். இதற்கு தூங்கும் முன் கண்களைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவி, கண்ணுள் ஒரு துளி விடவும். வாரம் இருதடவை இப்படிச் செய்யும்போது, உடல் சூடு இறங்கி, கருவளையம் மறையும்.

ஈர இதழ்கள்!

உதடுகள் வறண்டிருந்தால் ஒரு டீஸ்பூன் நெய்யில் அரை டீஸ்பூன் கல் உப்பு கலந்து தடவவும். நெய், உதட்டை மிருதுவாக்கும். கல் உப்பு, வெடிப்புகளை சரிசெய்யும். தினமும் காலை உதட்டில் ஒரு மணி நேரம் தேன் தடவி வந்தால், புத்துணர்வாகத் தெரியும். மாலை பீட்ரூட் ஜூஸ் தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்கலாம்.

போட்டோவுக்கு பளிச் பற்கள்!

திருமணத்தில் போட்டோவுக்காக ‘சீஸ்’ சொல்லும்போது பற்கள் மஞ்சளாக இருந்தால் நன்றாக இருக்குமா? மஞ்சள் கறை நீங்க, ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸுடன் அரை ஸ்பூன் கல் உப்பு கலந்து பல் தேய்க்க, முத்து போல் ஜொலிக்கும். அதேபோல, கன்னங்கள் ஒட்டிப் போயிருந்தால் ஆயில் புல்லிங் செய்யலாம். 15 - 30 மில்லி நல்லெண்ணையுடன் அரை டீஸ்பூன் கல் உப்பு கலந்து கொஞ்சம் சூடுபடுத்திக்கொண்டு, 10 - 15 நிமிடங்கள் நன்றாகக் கொப்பளிக்கவும்.

உணவுப் பரிந்துரை... ஒல்லியானவர்களுக்கு!

தினமும் பப்பாளி, வாழை, குறிப்பாக செவ்வாழை எடுத்துக்கொள்ளவும். பழங்களை ஜூஸாகச் சாப்பிடவும். வாரம் மூன்று முறை நெய் சேர்த்த உணவு எடுத்துக்கொள்ளவும். மாலை டிபனுக்கு தேங்காய்த் துருவல் சேர்த்த வேகவைத்த பயறுகள் சாப்பிடவும். ஒல்லி உடம்புக்காரர்கள் மூன்று வேளையும் அதிகமாகச் சாப்பிட முடியவில்லை என்றாலும், காலை உணவை ஹெவியாகச் சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். நன்றாக பசியெடுக்க விட்டு, முழு சாப்பாடு சாப்பிடலாம். வெந்நீரில் நெய் கலந்து குடித்தால் வெயிட்டும் கூடும்.

உணவுப் பரிந்துரை... பருமனானவர்களுக்கு!

தினமும் மாதுளை மற்றும் ஆரஞ்சு பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஜூஸாக இல்லாமல், பழத்துண்டுகளாகச் சாப்பிடவும். உணவில் சாதத்தின் அளவைக் குறைத்து, அதிக காய்கறிகள் எடுத்துக்கொள்ளவும். நல்லெண்ணெயில் சமைத்த உணவும், தினமும் முருங்கைக் கீரையும் இவர்களுக்கான பரிந்துரை. மாலை நேர டிபனுக்கு வேகவைத்த பச்சைப்பயறு சாப்பிடலாம் தேங்காய்த் துருவல் சேர்க்காமல். மாலை 6 மணிக்கு மேல் இரவு நேர உணவுகளை சூப், கஞ்சி போன்று ஹாட் லிக்விட் ஆக எடுத்துக்கொள்ளவும். எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம். மேலும், நாள் முழுக்க அவ்வப்போது வெந்நீர் குடிப்பதன் மூலம், உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பு மற்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றலாம்; உடலும் முகமும் பளிச்சென ஆகும்.

பெரும்பாலான பெண்களுக்கு தொப்பைதான் தலைவலி. வெந்நீரில் கொஞ்சம் இஞ்சியை இடித்துப் போட்டு குடிப்பதன் மூலம் உடலில் நச்சுகள் வெளியேறி, ஜீரணம் சீராகும், வாயு சேராது. வாயுவினால்தான் பெரும்பாலும் மேல் வயிறு பெரிதாக இருக்கிறது. இதைச் செய்வதன் மூலமாக தொப்பையைக் குறைக்கலாம்.

பொதுவானவை!

தினமும் சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பின் கிரீன் டீ எடுத்துக்கொள்ளலாம். பாதாம், காய்ந்த கறுப்பு திராட்சை, அத்திப்பழம் இவற்றில் ஒன்றை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அதை தண்ணீருடன் சேர்த்துச் சாப்பிட, ரத்த ஓட்டமும் சருமமும் ஊட்டம் பெறும். தினமும் பேரீச்சம்பழமும் எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலை 20 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சியும், முடிந்தவரை உடற்பயிற்சியும் செய்வது, உடலுக்கும் மனதுக்கும் மிக நல்லது.

"இவை அனைத்தையும் செய்து பாருங்கள்... அழகான, ஆரோக்கியமான மணப்பெண்ணாக மிளிர்வீர்கள் மேடையில்!" என்று முடித்தார், டாக்டர் ரேச்சல் ரெபேக்கா.

- கே.அபிநயா

அடுத்த கட்டுரைக்கு