Published:Updated:

இந்திய வானம் - 2

இந்திய வானம் - 2
News
இந்திய வானம் - 2

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

பட்டணத்துத் தனிமை 

புதுமைப்பித்தன் 'செல்லம்மாள்’ என ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அது ஓர் அற்புதமான காதல் கதை. தன் மனைவியின் இறந்த உடலை வைத்துக் கொண்டு, பிரம்மநாயகம் பிள்ளை தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் கதை.

அந்தக் கதையில் 'செல்லம்மாளுக்கு அப்போதுதான் மூச்சு ஒடுங்கியது. பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்’ என ஒரு வரி இடம்பெற்றுள்ளது.

அது என்ன 'பட்டணத்துத் தனிமை’? மாநகரில் வாழும் மனிதர்கள் உணரும் தவிப்பு அது. பெருநகரில் வாழுகிற மனிதர்களுக்கு வாழ்க்கைத் தேவைக்கான எல்லாமும் கிடைத்தாலும், இந்த நகரம் தன்னுடையது இல்லை எனத் தனிமை உணர்வுகொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்கிறான். அவ்வளவுதான் அவனது உலகம்.

கிராமத்தில் அப்படி வாழ்ந்துவிட முடியாது. நல்லது, கெட்டது எது நடந்தாலும் ஊரே ஒன்று திரண்டுவிடும். நகரில், தெரிந்த மனிதர்கள் இருக்கிறார்கள்; பழகிய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், தனித்திருக்கிறோம் என்ற உணர்வு இருக்கவே செய்கிறது.

'செல்லம்மாள்’ சிறுகதையில் வரும் பிரம்மநாயகம் பிள்ளையும் மனைவியும் அடிக்கடி சொந்த ஊருக்குப் போய் வர வேண்டும் என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்திய வானம் - 2
இந்திய வானம் - 2

'ஊர்ப்பேச்சு, தற்சமயம் பிரச்னைகளை மறப்பதற்குச் சௌகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிக்கு உபயோகப்பட்டு வந்தது’ எனப் புதுமைப்பித்தன் சொல்கிறார். உண்மைதான் அது. ஊர்ப்பேச்சு என்பது ஒரு போதை. கடுக்காயை வாயில் ஒதுக்கிக்கொண்டால், அதில் ஒருவிதமான போதை வரும் என்பார்கள். அதுபோல சொந்த ஊரைப் பற்றி நினைத்துக்கொண்டு, பேசிக்கொண்டே இருப்பது ஒரு போதைதானோ. பெருநகரில் வாழ்பவர்களுக்கு அதுதான் மிச்சம்போலும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி புரத்தில் இருந்து திரும்பி வரும் வழியில், பூந்தமல்லி சாலையோரம் ஒருவர் கம்பங்கூழ் விற்றுக்கொண்டிருந்தார். வெயிலோடு காரை நிறுத்தி இறங்கி, அவரிடம் கூழ் வாங்கிக் குடித்தேன். கம்பங்கூழுடன், தொட்டுக்கொள்ளக் கொத்தவரங்காய் வற்றலும் தந்தார். கூழின் குளிர்ச்சி, குடலைக் குளிரச்செய்தது.

''மிதுக்க வத்தல் இல்லையா?'' எனக் கேட்டேன்.

''இங்கே நல்ல மிதுக்க வத்தல் கிடைக்கிறது இல்லை. பாக்கெட்ல விக்கிற மிதுக்க வத்தல் சரியில்லை... கசக்குது'' என்றார்.

அவ்வளவு ருசியான கூழைக் குடித்ததே இல்லை. கரிசல்காட்டில் கிடைக்கும் கூழின் ருசிக்கு நிகராக, மாநகரில் ஒருபோதும் கிடைக்காது என நம்பியிருந்தேன். ஆனால், இந்தக் கூழில் அதே ருசி. ஒரு குவளை 10 ரூபாய்.

மனம் நிறையப் பாராட்டிய பிறகு 50 ரூபாய் கொடுத்து, ''வைத்துக்கொள்ளுங்கள்'' என்றேன்.

''நீங்க குடிச்சதுக்குப் பத்து ரூபாதான். அது போதும்'' என மீதம் சில்லறை கொடுத்தார்.

''உங்களுக்கு எந்தூருய்யா?'' எனக் கேட்டேன்.

''வதுவார்பட்டி'' என்றார்.

அருப்புக்கோட்டைக்கு அருகில் என்பதால், ''நானும் உங்க ஊருப் பக்கம்தான், மல்லாங்கிணர்'' என்றேன்.

விரிந்த கண்களுடன் கேட்டார்...

''நம்ம ஊரா... அதான் மிதுக்க வத்தல் கேக்கீங்க. மெட்ராஸுல யாரு மிதுக்க வத்தலைக் கண்டா? நம்ம ஊர்ப் பக்கம்தான் மிதுக்கம்பழம் ஜாஸ்தி'' என்றார்.

''மெட்ராஸுக்கு எப்போ வந்தீங்க?'' எனக் கேட்டேன்.

''எட்டு வருஷம் இருக்கும். ஊர்ல விவசாயம் பாக்க முடியலை. மகளை இங்கே திருத்தணியில் கட்டிக்குடுத்துருக்கேன். மகனுங்க ரெண்டு பேரு. மூத்தவன், கடலூர்ல இருக்கான். இளையவன், திருவான்மியூர்ல இருக்கான். நானும் சம்சாரமும் தனியா வீடு பாத்துக் குடியிருக்கோம். பிள்ளைகளோட ஒண்ணா இருக்க முடியல. மனஸ்தாபம் வந்துடுச்சு. ஒரு கம்பெனியில வாட்ச்மேனா வேலை பார்த்தேன். ஒழுங்கா சம்பளம் கொடுக்கலை... விட்டுட்டேன். அப்புறமா கம்பங்கூழ் விக்க ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு நூறு, இருநூறு ரூபாய்க்கு ஓடுது'' என்றார்.

''ஊருக்கே போயிரவேண்டியதுதானே?'' என்றேன்.

''போயி என்ன செய்யுறது... நாண்டுக்கிட்டு சாகுறதா? அதான் விவசாயம் எல்லாம் சோலி முடிஞ்சுபோச்சில்ல'' என்றார்.

அவரது பேச்சின் கொதிப்பைப் புரிந்துகொள்ள முடிந்தது. விவசாயிகள் பெரும் நம்பிக்கைகொண்டவர்கள். அவர்கள் எளிதில் நிலத்தைப் பிரிந்து போய்விட மாட்டார்கள். அந்த நம்பிக்கை கொஞ்சம்கொஞ்சமாகத் தகர்க்கப்பட்டுவிட்டது. 'இனி சொந்த ஊருக்கு எதற்குப் போவது?’ என விவசாயிகள் யோசிக்கும் நிலை உருவாகிவிட்டது. மனதில் இத்தனை கோபத்தை வைத்துக்கொண்டுதான், அடுத்தவர் பசி தீர்த்து வயிற்றைக் குளிரச்செய்கிறார் என்பது வேதனை அளித்தது.

இந்திய வானம் - 2

அவராகத் தொடர்ந்து தனது ஆற்றாமையைப் பகிர்ந்துகொண்டார்.

''நம்ம பக்கத்து ஆட்கள் யாராவது இப்படிப் பேச்சுக் கொடுக்கும்போது ஊர் ஞாபகம் வருது. எல்லாம் நேத்து நடந்த மாதிரி இருக்கு. எம்புட்டு வெள்ளாமை; எம்புட்டு ஆளு பேரு ஓடியாடி வேலை பார்த்தோம். நல்ல நாள் பண்டிகைன்னா, ஊரே கூடிரும். எல்லாம் கண் முன்னாடியே மறைஞ்சுபோச்சு. என் வயசு ஆட்கள் எல்லாம் போய்ச்சேர்ந்துட்டாங்க. நானும் போயிருந்தா, இந்தக் காலக்கொடுமையை எல்லாம் பாக்க வேண்டி வந்திருக்காது. இனிமே ஊருக்குப் போயி என்ன செய்றது? வெளியேறி வந்தாச்சு. இங்கயே செத்து மண்ணுக்குப் போக வேண்டியதுதான்.''

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு நகரப் பேருந்தைவிட்டு இறங்கி, பார்வையற்ற ஒருவரும் துணைக்கு ஒரு சிறுமியும் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களும் கூழ் குடிக்கத்தான் பசியோடு வருகிறார்கள் எனத் தெரிந்தது.

''என்ன இவ்வளவு நேரமாச்சு?'' எனக் கேட்டார் கூழ் விற்பவர்.

''ராயப்பேட்டையில இருந்து பஸ் பிடிச்சு வந்து சேர்றதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகிருது'' என்றார் பார்வையற்றவர்.

ஆளுக்கு ஒரு சொம்பு கூழ் வாங்கிக் குடித்தார்கள். சிறுமி வேகமாகக் கூழைக் குடித்து முடித்து சொம்பை நீட்டினாள். இன்னொரு சொம்பு கூழ் அவளுக்குத் தரப்பட்டது. அவர்கள் கூழ் குடித்து முடித்த பிறகு, பார்வையற்றவர் தனது பையில் இருந்து ஒரு ஜோடி செருப்பை எடுத்து அவர் முன்பு நீட்டினார்.

''இது எதுக்கு?'' எனக் கூச்சத்துடன் கேட்டார் பெரியவர்.

''போட்டுங்கோங்க, எத்தனை நாளு செருப்பு இல்லாம நீங்களும் திரிவீங்க... ரோடு அனலா இருக்கு. பாண்டிபஜார் பக்கம் போயிருந்தப்ப வாங்கினேன். அளவு சரியா இருக்கானு போட்டுப்பாருங்க.''

பெரியவர் தயக்கத்துடன் செருப்பைப் போட்டுப்பார்த்தார். சரியாகப் பொருந்தியது.

''எத்தனை ரூவா?'' எனக் கேட்டார்.

''அது கிடக்கட்டும் விடுங்க. தினம் நாங்க குடிக்கிற கூழுக்கு நீங்க காசு வாங்குறது இல்லை, என்னாலே முடிஞ்சது செருப்பு வாங்கித் தந்துருக்கேன். இன்னைக்கு வியாபாரம் எப்படி?'' என இயல்பாகப் பேசத் தொடங்கினார்.

''சாரு... நம்ம ஊருப் பக்கம். ஊர்க் கதை பேசிக்கிட்டிருக்கோம்'' என்றார் பெரியவர்.

பார்வையற்றவர் தன்னோடு உள்ள சிறுமியை ''ரோஸி'' என அழைத்து, ''சாருக்கு குட்மார்னிங் சொல்லு'' என்றார்.

3 மணி வெயிலில், அந்தச் சிறுமி கையை உயர்த்தி வணங்கி குட்மார்னிங் சொன்னாள்.

''சார், நானும் இவரும் ஃப்ரெண்ட்ஸ். நான் வீட்லயே கேண்டில் செஞ்சி விக்கிறேன். தினம் சிட்டிக்குள்ளே போய் கேண்டில் சப்ளை பண்ணிட்டு வருவேன். மதியம் இவர்கிட்டதான் கூழு. அவருக்கு ஏதாச்சும் பொருள் சிட்டியில வேணும்னா, நம்ம கையில சொல்லிடுவாரு. வாங்கியாந்து தருவேன். அப்படி ஃப்ரெண்ட் ஆகிட்டாரு.''

எனக்கு அவர்களின் நட்பைக் காண சந்தோஷமாக இருந்தது. ரோஸி என்ற அந்தச் சிறுமி கூழ் விற்பவரிடம் கேட்டாள்...

''தாத்தா, புதுச் செருப்பு போட்டுக்கிட்டு நடந்துகாட்டு.''

வெட்கத்துடன் தாத்தா நடந்துகாட்டினார்.

''ரோஸிதாம்பா நீங்க செருப்பே போடுறது இல்லைனு சொல்லுச்சு. அதான் வாங்கியாந்தேன்'' என்றார் பார்வையற்றவர்.

இந்திய வானம் - 2

இல்லாத மனிதர்கள், ஒருவரையொருவர் சந்தோஷப்படுத்திக்கொள்கிறார்கள்; பகிர்ந்து வாழ்கிறார்கள். ஆனால், வசதியும் வாய்ப்பும் இருப்பவர்களில் எத்தனை பேருக்கு இந்த மனது இருக்கிறது?

நான் காரில் ஏறும்போது பெரியவர் சொன்னார்...

''அடுத்த தடவை வரும்போது மிதுக்க வத்தல் வறுத்து வெச்சிருப்பேன். மறக்காம கூழு குடிச்சுட்டுப் போங்க தம்பி...'' அவரது சொல்லிலும் குளிர்ச்சி இருந்தது.

சமீபத்தில் அவரைத் தேடி கூழ் குடிக்கப் போனபோது அந்த இடத்தில் அவரைக் காணவில்லை. தர்பூசணி விற்கும் கடை போட்டிருந்தார்கள்.

கூழ் விற்கும் பெரியவரைப் பற்றி விசாரித்தபோது, ''அவர் ஆறேழு மாசத்துக்கு முன்னாடியே செத்துட்டாரே சார்...'' என்றார்கள். அந்தக் கூழின் ருசியும் குளிர்ச்சியும் மனதில் அப்படியே இருந்தன.

'பட்டணத்துத் தனிமை’, புதுமைப்பித்தனின் செல்லம்மாளை மட்டும் அல்ல... கூழ் விற்கும் முதியவரையும்தான் காவு வாங்கியிருக்கிறது.

ஆதித் தனிமை என ஒரு சொல் இருக்கிறது. அது மனிதன் பூமியில் தோன்றிய காலத்தில் ஏற்பட்ட உணர்வு என்கிறார்கள். அந்தத் தனிமையின் மிச்சம் இன்றும் இருக்கவே செய்கிறது.

கலை விமர்சகர் ஒகுமுரா, 'எட்டு வகையான தனிமை இருக்கிறது’ என்கிறார். ஒன்று, துறவியின் தனிமை... அதாவது, உலகில் இருந்து விரும்பி தன்னைத் துண்டித்துக்கொண்டு இச்சைகளைத் துறந்து வாழும் தனிமை. இரண்டாவது, நோயாளியின் தனிமை. உடல் நலிவுற்று நடமாட முடியாத நிலையில் உருவாகும் தனிமை. ஏக்கமும் நிராகரிப்பும்கொண்ட தனிமை அது.

மூன்றாவது தனிமை, காதலின் தனிமை. தனித்திருக்கும் காதலனோ காதலியோ அடையும் தனிமை அது. கற்பனையில் சஞ்சரிப்பதும் கனவு காண்பதும் தனிமையை வெறுப்பதும் இதன் இயல்பு.

அடுத்தது போர் வீரனின் தனிமை. யுத்தக் களத்தில் அல்லது எல்லையில் ஒற்றை மனிதனாகச் சமரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தனிமை. என்ன நடக்கப்போகிறது எனத் தெரியாத பதைபதைப்பு. தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட மனதின் தனிமை அது.

இன்னொரு தனிமை, முதியவரின் தனிமை. இது வாழ்வின் ஒரு நிலை. வாழ்வியல் கடமைகளைச் செய்து முடித்த பிறகு உருவாகும் தனிமை அது. வேறு ஒரு தனிமை இருக்கிறது. அது கவிஞனின் தனிமை. இயற்கையை நாடுவதும், கலைகளைத் தேடிச் செல்வதும், அதில் தன்னைக் கரைத்துக்கொள்வதுமான தனிமை.

ஏழாவது அரசனின் தனிமை. எப்போதும் தன்னைச் சுற்றி ஆள்கூட்டம். தனக்கு என

ஓர் உலகம் கிடையாதா என ஏங்கி உருவாக்கிக்கொள்ளும் பிரபலங்களின் தனிமை.

அடுத்தது, கைதியின் தனிமை. அது ஒரு தண்டனை. ஞாபகங்கள் மட்டுமே துணை. அதுவும் தூக்குக் கைதியாக இருந்துவிட்டால், சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் வலியுடன் கூடிய தனிமை அது. இப்படி எட்டு வகையான தனிமை இருக்கிறது எனச் சொல்கிறார் ஒகுமுரா.

இந்திய வானம் - 2

இதற்கு மேல் ஒரு தனிமையைப் புதுமைப்பித்தன் சொல்கிறார். அதுதான்... 'பட்டணத்துத் தனிமை’. இந்தத் தனிமை தனிநபரின் தனிமை அல்ல. ஊரின் சுபாவம் என எடுத்துக்கொள்ளலாம்.

'தனிமையைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? தனிமையின் சுகத்தை நீங்கள் அனுபவிப்பதும், அதை வளர்த்துக்கொள்வதும் அவசியம்’ என சீனாவைச் சேர்ந்த ஜியாங் யுங் தனிமை உணர்வு குறித்தே ஆறு உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். அது தனி நூலாகவும் வந்துள்ளது. நாம் ஒருவருக்கொருவர் நிறையப் பேசிக்கொள்கிறோம். தொலைக்காட்சி, ரேடியோ என ஊடகங்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தக் காலத்தில்தான் நாம் அதிகம் தனிமை உணர்வை அடைகிறோம். தொழில்நுட்பம் உருவாக்கிய தனிமை அது.

நம் மூதாதையர் காலத்தில் அவர்கள் ஆள் அரவமற்ற காட்டில், தனி இடத்தில் வாழ்ந்தார்கள். அவர்களிடம் வெறுக்கத்தக்கத் தனிமை உணர்வு உருவாகவில்லை. 'காதல், மொழி, புரட்சி, வன்முறை, சிந்தனை, அறவழி என ஆறு தளங்களில் தனிமை உணர்வு குறித்து நான் உரையாற்றியுள்ளேன்’ என்கிறார் ஜியாங் யுங்.

நான்கு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற

'தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்’, தனிமையின் இழைகளால் பின்னப்பட்ட திரைப்படம். ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்வேக்கின் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் அது.

நாஜி ராணுவத்தால் தான் கைதுசெய்யப்பட்டு, வதை முகாமுக்கு அனுப்பட்டுவிடுவோம் எனப் பயந்து மனைவியோடு தற்கொலை செய்துகொண்டவர் ஸ்டீபன் ஸ்வேக். 1968-ம் ஆண்டு தனிமையை நாடி பனிமலைக்குச் சென்ற ஸ்வேக், 'தி கிராண்ட் புடாபெஸ்ட்’ என்ற ஹோட்டலில் தங்குகிறார். ஒருகாலத்தில் மிகவும் புகழ்பெற்று இருந்த அந்த விடுதி, தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

கடந்த காலங்களில் அங்கு வந்து தங்கி மகிழ்ந்த சில முதியவர்கள், அதே நினைவுகளுடன் திரும்பத் தங்க வந்திருப்பதைத் தவிர, புதியவர்கள் எவரும் அங்கே காணப்படவில்லை.

மர்ம மாளிகைபோல இருந்த அந்த விடுதியில் தங்கியிருக்கும் ஸ்வேக், தற்செயலாக ஹோட்டலின் உரிமையாளர் ஜீரோ முஸ்தபாவைச் சந்திக்கிறார். அப்போது ஜீரோ இந்த ஹோட்டலுக்கு, தான் எப்படி உரிமையாளர் ஆனார் என்ற கதையை விவரிக்கத் தொடங்குகிறார்.

கிராண்ட் புடாபெஸ்டின் முதலாளி யார் என எவருக்கும் தெரியாது. குஸ்தாவ் அதன் பொறுப்பாளர். அவரது வாழ்க்கையும், அங்கே லாபி பாயாக வேலைக்கு வரும் 'ஜீரோ’ என்கிற பதின்வயதுப் பையனின் அனுபவமும் விவரிக்கப்படுகின்றன. பல்வேறு நிகழ்வுகளின் முடிவில் ஒரு எடுபிடிப் பையனாக வேலைக்கு வந்த ஜீரோ, ஹோட்டலின் உரிமையாளர் ஆகிறார். இன்றும் ஆள் வராத நிலையிலும் அதைக் காப்பாற்றி வரக் காரணம், அது தனது காதலின் அடையாளம். அந்த ஹோட்டலை தனது காதலின் நினைவுச்சின்னமாகக் கருதுவதாக ஜீரோ கூறுகிறார்.

மனிதர்கள் மட்டும் அல்ல... புகழ்பெற்ற இடங்களும் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில், நினைவுகளுடன் எஞ்சி நிற்கின்றன. அதுதான் வாழ்க்கை. யாராலும் எதையும் எல்லா காலத்திலும் காப்பாற்றிவிட முடியாது. வளர்ச்சியைப்போலவே வீழ்ச்சியும் வாழ்வின் அங்கமே. 'கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்’ என்பது யூதர்களின் பெருமைக்குரிய கடந்த காலம் என்பதன் குறியீடுபோலவும் படத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது.

'தனிமை கண்டதுண்டு. அதிலே சாரம் இருக்குதம்மா...’ என்றான் பாரதி.

அதை நீங்களும் அனுபவித்துப்பாருங்களேன்!

- சிறகடிக்கலாம்...