Published:Updated:

உயிர் பிழை - 2

மருத்துவர் கு.சிவராமன் ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி

சோன் ஓட்டைக்குப் பிறகோ... புழு, பூச்சி, பறவைகளைக் கொன்று புது விவசாயம் வந்த பின்னரோ... 'மலை மேல ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டு வா’ என நிலவைப் பாடியதை நிறுத்திவிட்டு, ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி 'அங்கேயும் ஓர் அடுப்பு வைக்கலாமா?’ என யோசித்த பிறகோ... பிறந்தது இல்லை புற்று. புற்றுநோய் குறித்த வரலாற்றுச் செய்திகள் மிகமிகப் பழமையானவை.   

1862-ம் ஆண்டில், கிட்டத்தட்ட மனித இனத்தின் பழம்தொன்மையை உணர்த்தும் கிரேக்க மம்மிக்களில் 55 அடி உயரமுள்ள ஒரு கல்வெட்டில் இருந்த பாப்பிரஸை ஆராய்ந்தார் ஸ்மித் எனும் ஐரோப்பிய ஆய்வாளர். (பாப்பிரஸ் - கிறிஸ்து பிறப்பதற்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே, அந்தக் காலத்தில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட காகிதம்.) கி.மு 2625-லேயே, கிரேக்க மருத்துவர் இம்ஹோடெப், மார்புப் புற்று ‘Bulging mass in the breast’ என எழுதியிருப்பதை, ஸ்மித் தன் ஆய்வில் முதன்முதலில் ஆவணப்படுத்தினார். புற்றுநோயின் சுயசரிதமான, புலிட்சர் பரிசு வென்ற ‘The emperor of all maladies’   நூலில் அதன் ஆசிரியர் சித்தார்த் முகர்ஜி, கூடுதலாக இன்னும் சில அரிய தகவல்களையும் தருகிறார்.

உயிர் பிழை - 2

மருத்துவர் இம்ஹோடெப், கி.மு 2000-ம் ஆண்டுகளில் பெர்சிய ராணி அடோசாவுக்கு அந்த நோய் வந்ததையும், பாபிலோனியாவில் இருந்து வந்த மருத்துவர்கள் அதற்கு அறுவைசிகிச்சை செய்ததையும், கிரேக்க இலக்கியங்கள் பதிவுசெய்திருப்பதை ஆராய்ந்து சொல்கிறார். அதேசமயம் 'அறுவைசிகிச்சைக்குப் பின் ராணி அடோசா மாயமாக மறைந்தார்’ என எழுதியுள்ளார். எனவே, அந்தச் சிகிச்சையில் இருந்து ராணி மீண்டுவந்தாரா அல்லது அந்த நோய் அவரது வாழ்வை முடித்ததா எனும் தெளிவு இல்லை. கூடவே, சிலி நாட்டிலும் பெரு நாட்டிலும் புதையுண்டு கிடந்த மம்மிகளில் பிரேதப் பரிசோதனை செய்து, 35 வயதையொத்த பெண்ணுக்கு எலும்புப் புற்று இருந்ததை உறுதி செய்திருக்கிறார்கள். இதேபோல நம் ஊரிலும் பழம்நகரமான மதுரை பழங்காநத்தம் பகுதியில் 'கோவலன்மெட்டு’ எனும் இடம் ஒன்று உண்டு. அதில் தோண்டி எடுக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய போர்வீரனை கார்பன்டேட்டிங் ஆய்வுசெய்தபோது, அந்த வீரனின் கை அறுவைசிகிச்சை செய்து நீக்கப்பட்டு, அதன் பின் 20 ஆண்டுகள் வாழ்ந்திருக் கிறான் என்ற தரவை, நாவலா சிரியரும் ஆய்வாளருமான சு.வெங்கடேசன் கூறுகிறார்.

உயிர் பிழை - 2

இந்தத் தரவைக் கொஞ்சம் யோசித்துப்பார்க்கும்போது, அந்த வீரனின் கை போரில் சென்றதா, நோயில் அறுவைசிகிச்சை செய்து நீக்கப்பட்டதா என்ற கேள்விகள் முளைக்கின்றன. 'அந்தக் காலத்துப் பெரும் கல்லறையாக இருக்குமோ?’ என யோசிக்கவைக்கும் ஆதிச்சநல்லூர் தாழிகள் அதிகம் ஆய்வுசெய்யப் படாதவை. கிட்டத்தட்ட பிரமிடுகள் காலத்தை ஒட்டிய அந்தத் தாழிகளை, கொஞ்சம் மெனக்கெட்டு ஆராய்ந்தால் நம் ஊரிலும் தாடிவைத்த இம்ஹோடெப் சித்தர்கள் இருந்திருக்க வாய்ப்பு இருப்பது தெரியவரும்.

இப்படி புற்றின் வரலாறு மிக நீண்டது. 'கத்திச் சத்திரம் கவின் குறும்பு வாங்கியும்’ என அறுவைசிகிச்சைக் கருவிகளைப் பட்டியலிட்டுப் பாடிய அகத்தியர் முதலான சித்தர்களும், 'அறுவைசிகிச்சையின் தந்தை’ எனப் போற்றப்படும் சுஸ்ருதரும், அறுவை மருத்துவத்தின் பேராசான் அரபு மருத்துவர் அல்மஜாஸியும்... இவர்கள் அறுத்து எறிந்து குணப்படுத்திய கட்டிகள் ஏராளம் என்கின்றன ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவ இலக்கியங்கள். ஆனால், அந்தக் கட்டிகள் அனைத்தும் புற்றுக்கட்டிகளா என்பதிலும் தெளிவு இல்லை. பிளேக், போலியோ, காசநோய்... போன்றவை கணிசமாகக் கட்டுப்படத் தொடங்கிய 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் மடமடவென, தன் கொடும் கைகளை விரித்தது புற்றுநோய். இணையாக அதன் மீதான ஆய்வுகளின் அக்கறைகளும் அதிகரித்தன. இதனால் ஓர் அமெரிக்கரின் சராசரி வாழ்நாள் காலம் 40 ஆண்டுகள் என்பது 65-ஐ தொட்டது. வாழ்நாள் நீடிப்பது பொதுவில் மகிழ்ச்சி தரக்கூடியதுதான் என்றாலும், நீடித்த வாழ்நாளின் முதல் பிரச்னை புற்றுநோய். ஏராளமான அமெரிக்கர்கள் புற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளானார்கள். கிட்டத்தட்ட 70-80 ஆண்டுகள் கழித்து அந்த நிலைக்கு இப்போது இந்தியா வந்துசேர்ந்திருப்பதுபோல் தெரிகிறது. சுதந்திரம் அடைந்தபோது வெறும் 37 ஆண்டுகளாக இருந்த நம் சராசரி ஆயுள்காலம் இப்போது 60 ஆண்டுகளை எட்ட ஆரம்பித்திருக்கும்போது, புற்றின் வீரியமும் அதிகரித்திருக்கிறது.

உலகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்தியதில் புகைக்குப் பெரும் பங்கு உண்டு. முன்னர் எல்லாம், 'இது டாக்டர்களின் தேர்வு’ என பிரபல மருத்துவர்களை வைத்து, சிகரெட்களை விளம்பரப்படுத்திய காலம் உண்டு. 1850-1940 காலவாக்கில் புகைத்தவர்களின் மரணத்துக்குக் காரணம் காசநோய், நிமோனியா என்றுதான் கணக்கு எழுதிவந்தனர். ஜெர்மானிய மருத்துவ மாணவர் ஹெர்மான் ரோட்மான் என்பவர்தான் முதன்முதலில் புகையிலைத் தூள், நுரையீரல் புற்றுக்குக் காரணமாக இருக்கும் எனச் சொன்னார். அவர்கூட, புகையிலையின் தூளைக் காரணம் சொன்னாரே ஒழிய, புகைத்தலைச் சொல்லவில்லை. ஆனால், புகைபிடிக்கும் கூட்டத்துக்குத்தான் நுரையீரல் நோய் பெருகுகிறது என்பது அடுத்தடுத்த Epidemiological ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. ஜெர்மனியின் கலோன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் முல்லர் சொன்னதன் பிறகுதான், ஆங்காங்கே பல ஆய்வுகள் நடத்தப்பட்டு புகைக்கும் புற்றுக்குமான தொடர்பு நிறுவப்பட்டது.

நாள் ஒன்றுக்கு 30 சிகரெட்களுக்கு மேல் புகைக்கும் ஒருவருக்கு 'சங்கொலி’ உறுதி என அதன் பின்னர் ஆய்வுபூர்வமாக நிறுவப்பட்டது. அடுத்தடுத்து நடந்த பல ஆய்வுகளில், சிகரெட் புகையின் ஒவ்வொரு மூலக்கூறிலும் புற்றுக்காரணி ஒளிந்திருப்பது ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டது. இருந்தபோதும் 95 சதவிகிதம் தடுக்கக்கூடிய சாத்தியம் உள்ள இந்த நுரையீரல் புற்றில், ஆண்டுக்கு 15 லட்சம் மக்கள் மரணம் அடைவது இன்னும் தொடர்கிறது.

உயிர் பிழை - 2
உயிர் பிழை - 2

80-களில் 7.5 கோடியாக இருந்த இந்திய புகைப்போர் கூட்டம், 2012-ம் ஆண்டில் 11.4 கோடியாக உயர்ந்திருக்கிறது. புகை கம்பெனிக்காரர்கள், 'சீன, இந்தியப் பெண்களைப் புகைக்கப் பழக்கிவிட்டால் போதும். நமக்கு மேற்கத்தியச் சந்தையே தேவை இல்லை’ என நினைக்கிறார்கள். இதனால், 'நீயும் ஊதும்மா...’ என திரைப்படங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் ஊதிக்கொடுக்கின்றன. 'அக்னி நட்சத்திரம்’ அமலா ஊதியதைக் கண்டு ஆரவாரத்துடன் கைதட்டியபோது 55 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகளின் கூட்டம், 'எங்கேயும் எப்போதும்’ படத்தில் சிகரெட் பெட்டியை கட்டிப்பிடித்து ஹீரோயின் சிலாகித்துப் பாடியபோது 1.3 கோடியாக, எண்ணிக்கை இரட்டிப்பு அடைந்துள்ளது.  

சப்பாத்தி மாவில் தொடங்கி ஸ்டார் ஹோட்டல் வரை நம் நாட்டில் கொடிகட்டி வணிகம் நடத்தும் சில நிறுவனங்கள்தான் இந்திய சிகரெட் சந்தையின் 80 சதவிகிதத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள். வேறு மாதிரி சொன்னால், வருடத்துக்கு சுமார் 8 லட்சம் பேருக்கு 'பிரியாவிடை’ கொடுக்கும் சிகரெட் விற்பனை மூலம் மட்டுமே, அந்த நிறுவனங்கள் சம்பாதிப்பது 65,000 கோடி ரூபாய். இப்படியான பன்னாட்டு நிறுவனங்களின் இந்தச் செயலை நிறுத்த முடியாமல், சினிமா ஹீரோ சிகரெட் பற்றவைக்கும்போது கீழே கண்ணுக்குத் தெரியாத எழுத்தில் 'உடம்புக்கு ஆகாதுப்பா’ என எழுதிக்காட்டுவது, குரல்வளையில் ஏறி நின்று கால் பெருவிரலுக்கு மருதாணி போடுவதுபோல!

இதைவிட அதிர்ச்சியாக, தமிழ்நாட்டில் மனித பலிபீடங்களாகச் செயல்படும் டாஸ்மாக் பார்கள், சத்தம் இல்லாமல் பரிமாறும் இன்னொரு விஷம், புகை. மது ஒரு மறைமுகப் புற்றுக்காரணி; புகை ஒரு நேரடியான புற்றுக்காரணி. ஒரே நேரத்தில் இரட்டைப் புற்றுவிஷத்தை தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் டாஸ்மாக் பார்களில் தினம் தினம் விழுங்கிக்கொண்டிருக்கிறான் அப்பாவித் தமிழன்.

புற்று நேற்று வரை வயோதிகத்தின் இயல்பாக இருந்த விஷயம்; ஆனால், இன்று நவீன வாழ்வியல் வெறியாட்டத்தின் விளைவாக வெறிபிடித்த நாயாகத் திரியத் தொடங்கியுள்ளது. புகைதான் பகை என அறியத் தொடங்கி, 65-70 ஆண்டுகளுக்குப் பின்னரே அதைக் குறைப்பதற்கான முனைப்பு தொடங்கியது. புகைக்கு இணையான பல விஷத்துணுக்குகள், உணவில் சுவையூட்டியாக, மணமூட்டியாக, வடிவம் தருபவையாக, நிறமூட்டியாக, பாதுகாப்பியாக பல்லை இளித்து விற்கப்படுகின்றன. இதன் விளைவுகளை ஆய்வு செய்யும் அகத்தியர், இம்ஹோடெப், சுஸ்ருதர்,

அல்ஜோஸி, கீமோ சிகிச்சையைக் கண்டறிந்த ஃபேபர் போன்ற அறம்சார் அறிவியலாளர்கள் மிக அருகி வருவது... மனிதகுலத்துக்கே அச்சமூட்டும்  விஷயம்.

'தடவித் தின்றோம் அல்லவா..? அந்த வெளிநாட்டு சங்கதிதான் இங்கே கல்லீரல் பக்கமா வளருதுபோல’ என விஷயம் தெரிய வந்தால், அதை விலக்கவேண்டும் என யோசிக்கவே, இன்னும் 100 ஆண்டுகள் ஆகிவிடும். போதாக்குறைக்கு, புற்றுநோயைக் குணப்படுத்த வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் மூலிகை, வேதி மூலக்கூறுகளில் பெருவாரியானவற்றை காப்புரிமை செய்து முடக்கிவைத்திருக்கின்றன சில பன்னாட்டு பெருமருத்துவ நிறுவனங்கள். இவர்களின் மருந்துகள் சீக்கிரம் நம்மைக் காப்பாற்றவரும் என்ற நம்பிக்கையில் தோல் போத்திய கூடுகளாக, குளிரில் குத்தவைத்திருப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு நொடியிலும் அதிகரித்துவருகிறது. சில வரலாற்றைப் படிக்க மறந்தால், நம் தொன்மையை இழப்போம். இந்த வரலாற்றைப் படிக்க மறந்தால், ஒருவேளை நம் இனத்தையே இழக்கக்கூடும்!

- உயிர்ப்போம்...