Election bannerElection banner
Published:Updated:

ஹோட்டல் தொழிலாளி 111 கடைகளுக்கு உரிமையாளரான கதை! #MotivationStory

ஹோட்டல் தொழிலாளி 111 கடைகளுக்கு உரிமையாளரான கதை! #MotivationStory
ஹோட்டல் தொழிலாளி 111 கடைகளுக்கு உரிமையாளரான கதை! #MotivationStory

ஹோட்டல் தொழிலாளி 111 கடைகளுக்கு உரிமையாளரான கதை! #MotivationStory

வியாபாரத்தில், தொழிலில் வெற்றி பெறுவதென்பது சாதாரண விஷயமில்லை. ஒரு குறுகலான தெரு. எதிரெதிரே இரண்டு டீக்கடைகள். ஒன்றில், கூட்டம் அம்மும். மற்றொன்றில், ஓரிருவர் நின்றுகொண்டிருப்பார்கள். இது, நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு காட்சியாகக்கூட இருக்கலாம். இதற்குக் காரணம் என்ன? `தொழில் உத்தி’, `வியாபாரத் தந்திரம்’... என்று எதை வேண்டுமானாலும் பதிலாகச் சொல்லலாம். உண்மையில், `ஈடுபாடு’ என்கிற மகா மந்திரம்தான் ஒரு தொழில்முனைவோரை, தொழிலதிபரை உருவாக்குகிறது. கடைக்கு கூட்டம் அதிகமாக வரும் டீக்கடைக்காரர், தன் வாடிக்கையாளரை பெர்சனலாக அணுகுகிறார். பெயரை, தொடர்புடைய மனிதரின் வேலைத் தன்மையைத் தெரிந்துகொள்கிறார். உரிமையோடு `சார்...’, `தம்பி...’, `அப்பு...’, `அண்ணே...’, `சார்...’ என்கிற வார்த்தைகளையெல்லாம் போட்டு அழைத்து, வேண்டுவதைக் கொடுக்கிறார். வருபவரின் டேஸ்ட் என்ன, டீ குடித்த பிறகு அவர் என்ன பிராண்ட் சிகரெட் குடிப்பார் என்பதையெல்லாம் அனுமானித்து வைத்துக்கொள்கிறார். அதற்கேற்ப செயல்படுகிறார். கூட்டம் அதிகம் வராத கடைக்குச் சொந்தக்காரர், `கடனே...’ என கடமைக்கு வேலை பார்க்கிறார். கடைக்கு வருபவர்களுக்கு, கேட்பதைக் கொடுக்கிறார். இதுதான் வித்தியாசம். `ஈடுபாடு’, அதிலும்தான் மேற்கொள்ளும் தொழிலில் `சிரத்தை மிகுந்த ஈடுபாடு’ ஒருவரை எந்த உயரத்துக்குக் கொண்டு போகும் தெரியுமா? பார்க்கலாம். அதற்கு  உதாரணம்தான் மேரி காலண்டரின் (Marie Callender)-ன் கதை. 

`உங்களால் `முடியும்’ என்று யோசியுங்கள் அல்லது `முடியாது’ என்று யோசியுங்கள். ஏதோ ஒரு வழியில் நீங்கள் நினைத்தது மிகச் சரியாக இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் பிரபல தொழிலதிபர் ஹென்றி ஃபோர்டு. `என்னால் முடியும்’ என நினைத்து, அதை அப்படியே முற்றும் முழுவதுமாக நம்பி செயல்பட்டவர்கள் சாதனையாளர்கள் ஆகிறார்கள். மேரி காலண்டரை, அந்த வகையில் `ஒரு சாதனையாளர்’ என்றே சொல்லலாம். 

அது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம். மேரி காலண்டர்,  லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த ஒரு ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருந்தார். அமெரிக்காவில் அப்போது பிரபலமாக இருந்த உருளைக்கிழங்கு சாலட், கோல் ஸ்லா (Cole Slaw) சாலட் போன்றவற்றைச் செய்வதுதான் ஆரம்பத்தில் அவருடைய வேலையாக இருந்தது. 

(PC : Wikipedia)

ஒருநாள், ஹோட்டல் முதலாளி மேரியிடம் வந்தார். ``மத்தியான நேரத்துல கூட்டம் அதிகமா இருக்கு. நீ ஏன் அமெரிக்கன் பை (American pie) செய்யக் கூடாது? நாலுபேரு அதையும் சாப்பிடுவாங்கள்ல?’’ என்று கேட்டார். `பை’ என்பது பீட்சா மாதிரியான ஒரு மேற்கத்திய உணவு. வாடிக்கையாளர்களுக்கு முழுவதுமாகக் கொடுப்பார்கள்... அல்லது துண்டுகளாக்கியும் கொடுப்பார்கள். அதுவரை மேரி அதை முயற்சி செய்துகூடப் பார்த்ததில்லை. ஆனால், பாஸ் சொல்லிவிட்டார்... எப்படியாவது செய்தாக வேண்டுமே! `என்னால் முடியும்’ என நம்பினார். ஈடுபாட்டோடு அதைச் செய்வதற்குக் கற்றுக்கொண்டார். 

ஆரம்பத்தில் பைஸ் (Pies)-களை வீட்டில் செய்து கொண்டுவந்தார். மேரி செய்த `அமெரிக்கன் பை’ ஹோட்டல் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதற்காகவே ஹோட்டலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. மேரி, ஹோட்டல் வேலையை விட்டுவிட்டார். `பை’ செய்து ஹோட்டல்களுக்குக் கொடுப்பதை மட்டுமே தன் தொழிலாக ஆக்கிக்கொண்டார். ஆர்டர்கள் ஒரு கட்டத்தில் அதிகமாகின. 

அது 1948-ம் வருடம். மேரியின் கணவர் தன் காரை விற்றார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு மேரியும் அவர் கணவரும் முதலில் ஒரு குடிலை வாங்கினார்கள். அமெரிக்காவில் அதை `க்வான்செட்’ (Quonset) என்று சொல்வார்கள். அதாவது, நம் தொழிலை நடத்திக்கொள்வதற்கான ஓர் இடம் அது. பிறகு, ஒரு மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் எல்லாம் வாங்கினார்கள்.  `பை’ தொழில் சூடுபிடித்தது. 

`பேக்கிங்’ (Baking) முறையில் மேரி `பைஸ்களை’த் தயாரிப்பார். அவருடைய கணவர், அதை கடைகளுக்கு, ஹோட்டல்களுக்கும் கொண்டுபோய் டெலிவரி செய்வார். மேரி, இதை ஆரம்பித்தபோது ஒரு நாளைக்கு `10 பை’ செய்துகொண்டிருந்தார். இரண்டே வருடங்களில் அந்த எண்ணிக்கை, `ஒரு நாளைக்கு 200’ என ஆனது. 16 வருடங்கள் கழித்து அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு `பல்லாயிரக் கணக்கில்...’ என்று ஆனது.

(PC : Wikipedia)

அது, 1964-ம் ஆண்டு. மேரியும் அவர் கணவரும் இணைந்து, அமெரிக்காவின் `ஆரஞ்ச் கவுன்ட்டி’யில் சொந்தமாகத் தங்கள் கடையைத் தொடங்கினார்கள். கணவரும் மகனும் மேரிக்கு உதவி செய்ய, தொழில் பரந்து விரிந்தது. அமெரிக்காவின் 14 மாகாணங்களில் மேரியின் கடை கிளைகள் முளைத்தன. மேரி காலண்டரின் பைஸ் மிகப்பிரபலமாகத் தொடங்கியது. சந்தேகமே இல்லாமல், அருமையான சுவை, உயர்தரம் என்பதற்கு உத்தரவாதமாக இருந்தது மேரியின் பைஸ். அதோடு, மேரி காலண்டர் கடையில் தயாரான எல்லா உணவுகளுமே சுகாதாரம், சுத்தம், ருசி... அத்தனைக்கும் பேர்போனவையாக இருந்தன. 

1986-ம் ஆண்டு. ராமடா இன்ஸ் இன்க் (Ramada Inns Inc.,) என்ற பிரபல நிறுவனம், மேரி காலண்டரின் மகனிடமிருந்து, அவர்களின் கடைகளை மொத்தமாக விலைக்கு வாங்கியபோது, அந்தக் கடைகளின் எண்ணிக்கை 115. அப்போது ராமடா நிறுவனம், மேரி காலண்டரின் நிறுவனத்துக்காகக் கொடுத்த விலை... ஒன்பது கோடி டாலர்! `என்னால் முடியும்’ என்று நினைத்தார் மேரி. சாதித்துக் காட்டிவிட்டார்.   
***

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு