Published:Updated:

இந்திய வானம் - 4

இந்திய வானம் - 4
News
இந்திய வானம் - 4

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

குற்றம் புரிந்தவர்  

சென்னையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பழக்கடை ஒன்றில் பழங்களை வாங்கிக்கொண்டிருந்தேன். என்னைக் கடந்துபோய் ஒரு முதியவர் ஆரஞ்சுப்பழங்களை எடுத்து முகர்ந்துபார்த்தார். 70 வயது இருக்கும். ஒடிசலாக, உயரமாக இருந்தார். கறுப்பு பேன்ட்டும் இளநீல வண்ண அரைக்கைச் சட்டையும் அணிந்திருந்தார். கையில் ஒரு மஞ்சள் பை இருந்தது. ஆரஞ்சுப்பழத்தை அதே இடத்தில் திரும்பப் போட்டுவிட்டு எதுவும் வாங்க விருப்பம் இல்லை என்பதுபோல, கடையின் வாசலை நோக்கி வெளியே நடந்தார்.

கண்ணாடிக் கதவைத் தள்ளி வெளியேறும்போது கடையின் மேலாளர் அவரை நோக்கி ''ஒரு நிமிஷம் நில்லுங்க!'' என்றார். அவர் தயக்கத்துடன் நின்று திரும்பிப் பார்த்தபோது, கையில் உள்ள பையைத் தரும்படி கேட்டார்.

முதியவர் ஒரு நிமிடத் தயக்கத்துக்குப் பிறகு பையை நீட்டினார். மேலாளர் அந்தப் பையினுள் கையைவிட்டு சிறிய அன்னாசிப் பழம் ஒன்றை வெளியே எடுத்தார்.  கடையில் வேலைசெய்யும் இளம்பெண்களில் ஒருத்தி சத்தமாகச் சொன்னாள்...

''பதினஞ்சு நாளா பாத்துக்கிட்டே இருக்கேன். தினமும் இப்படி ஒரு பழத்தைத் திருடிக்கிட்டிருக்கார். அதான், இன்னைக்கு மேனேஜர்கிட்ட சொல்லி, பிடிச்சுக் கொடுத் துட்டேன்.''

கடை மேலாளர் மிக ஆபாசமான வார்த்தைகளால் அந்த முதியவரைத் திட்டினார். பழம் வாங்க வந்தவர்கள் அவரை வெறித்துப் பார்த்தபடியே இருந்தார்கள். வியாபாரத்துக்கு இந்த நிகழ்வு இடையூறாக இருக்கிறது என உணர்ந்தவர்போல மேலாளர், ''ஓரமா வந்து நில்லுய்யா'' என முதியவரின் கையைப் பிடித்து இழுத்து பில் கவுன்ட்டரை ஒட்டி நிறுத்தினார்.

இந்திய வானம் - 4
இந்திய வானம் - 4

முதியவர், மேலாளரை ஏறிட்டுப் பார்க்கவில்லை. அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆப்பிள் பழங்களை வெறித்துப் பார்த்தார். அதைக் கவனித்த மேலாளர் குரலை உயர்த்தாமலேயே சொன்னார்...

''எதுக்குடா திருடித் திங்கிறே? அறிவு இல்லை, வயசாகிருச்சேனு பார்க்கிறேன்... இல்லைனா கையை உடைச்சுருவேன்.''

முதியவரிடம் சலனமே இல்லை.

அவரிடம் இருந்து பிடுங்கிய அன்னாசிப்பழத்தை  அடுக்கில் கொண்டுபோய் வைத்தாள் இன்னோர் இளம்பெண். அந்த முதியவர் தயக்கமான குரலில் கேட்டார்...

''நான் கிளம்பலாமா?''

ஏதோ அலுவலகம் முடிந்து கிளம்பும்போது கேட்பதுபோல அத்தனை இயல்பாக முதியவர் கேட்டது, மேலாளருக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியிருக்க வேண்டும்.

''இனிமே உன்னை கடைப் பக்கம் பார்த்தேன்... காலை உடைச்சுருவேன், போய்யா'' எனத் திட்டினார்.

அந்த முதியவர் கண்ணாடிக் கதவைத் தள்ளி, திறந்து வெளியே நடந்தார். அந்த நடையில் குற்றவுணர்ச்சி இல்லை. அவரது தலை குனியவில்லை. அவசரம் இல்லாமல் மெதுவாக, மேற்கு நோக்கி அவர் நடந்துபோவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்த முதியவர் ஏன் தினம் ஒரேயொரு பழத்தைத் திருடினார்? வறுமையினாலா அல்லது திருடுவது அவரது பழக்கமா? அவரது தோற்றத்தைப் பார்த்தால், ஓய்வுபெற்ற மனிதர் போல் இருக்கிறார். ஒருவேளை வீட்டைவிட்டு துரத்தப்பட்டுவிட்டவரா? ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? பிடிபட்டபோதும் ஏன் அவரிடம் குற்றவுணர்வு இல்லை? இதுபோல ஒரு சம்பவம் மதுரையில் நடந்திருந்தால், ஒருவேளை அவரை அடித்திருப்பார்கள். அல்லது அவருக்கே அந்தப் பழத்தைக் கொடுத்து விரட்டியிருப்பார்கள். ஆனால், இங்கே கடை மேலாளர் நடந்துகொண்ட விதம், வியாபாரம் இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில்தான் கவனமாக இருந்தது.

10 நிமிடங்களில் கடை இயல்புக்கு வந்தபோது பில் போடுவதற்காக நின்றேன். முதியவரைக் காட்டிக்கொடுத்த பெண்ணை மற்றவர்கள் முறைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண், 'கடையில இவங்க அடிக்கிற கொள்ளைக்கு ஒரு பழத்தைத் திருடிக்கிட்டுப் போனா என்ன தப்பு?’ என முணுமுணுப்பது கேட்டது.

முதியவரைக் காட்டிக்கொடுத்த பெண்  குற்றவுணர்வோடு நின்றிருந்தாள். அடுக்கில் வைக்கப்பட்ட, திருடப்பட்ட அன்னாசிப்பழத்தை, நடந்த எதுவும் தெரியாமல் ஓர் ஆள் கையில் எடுத்து பில் போடுவதற்காக முன்னால் வந்துகொண்டிருந்தார்.

அவருக்குத் தெரியுமா, தான் கையில் வைத்திருக்கும் அன்னாசிப்பழத்தின் பின்னே ஒரு கதை இருக்கிறது என; அது திருடப்பட்ட பழம் என.

இந்திய வானம் - 4
இந்திய வானம் - 4

வீடு வந்து சேரும் வரை அந்த முதியவரும் இந்த நிகழ்வும் மனதை உறுத்திக்கொண்டே இருந்தார்கள். இதில் எது சரி, எது தவறு?

விவசாயியிடம் இருந்து மலிவு விலைக்குப் பழங்களை வாங்கி, அதைக் கொள்ளை விலைக்கு விற்பது தவறு இல்லையா? அந்தக் குற்றம் ஏன் கண்டுகொள்ளப்படுவது இல்லை?

ஆனால், பழம் திருடிய குற்றம் பெரிதாகப் பேசப்படுகிறது. இன்னொரு பக்கம் இதே கடையில் போலீஸ்காரர்கள் சில நேரங்களில், தங்களுக்குத் தேவையான பழங்களை பணம் கொடுக்காமல் எடுத்துப்போவதைப் பார்த்திருக்கிறேன். அது அனுமதிக்கப்பட்ட தவறா?

கடையில் வேலைசெய்யும் இளம் பெண்கள் மிகக் குறைவான சம்பளத்தில் நாள் முழுக்க, கால் கடுக்க நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஏமாற்றப்படுகிறார்கள்தானே?

இதே பழத்தை கூடையில் சுமந்து வீடு வீடாக விற்கும் கிழவிகள், வாழைப்பழத்துக்கு

50 காசுகள் அதிகம் சொன்னால் வாக்குவாதம் செய்யும் நாம், எந்தக் கேள்வியும் இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை ஏன் வாங்கிக்கொண்டு போகிறோம்?

எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் சத்தீஷ்கரில் பயணம்செய்தபோது நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் நினைவுகூர்ந்தார். அந்த நிகழ்வு பசுமையாக நினைவில் இருக்கிறது.

பழங்குடி மக்கள் வசிக்கும் மலைக்கிராமம் ஒன்றுக்குப் போயிருந்தபோது, அவர்கள் தோட்டத்தில் இருந்து ஒரு மாம்பழம் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். இரண்டு, மூன்று மாமரங்களைத் தாண்டி ஒரு மரத்தில் இருந்து பழம் பறித்துத் தந்திருக்கிறார்கள். 'இந்த மரங்களில் பழங்கள் இருக்கின்றனவே... ஏன் பறிக்கவில்லை?’ எனக் கேட்டதற்கு, 'இந்த மூன்று மரங்களும் பறவைகளுக்கும் அணில்களுக்குமானவை. அவை சாப்பிட்டதுபோக, மீதமான பழங்கள் உதிர்ந்துபோனால் சிறுவர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள். ஆனால், நாங்கள் மரத்தில் இருந்து ஒரு பழத்தைக்கூட பறித்து விற்க மாட்டோம். மாமரங்கள் மனிதர்களுக்கு மட்டுமானது இல்லை’ எனப் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

மாமரங்களை அணில்களுக்காகவும் பறவைகளுக்காகவும் விட்டுக்கொடுக்கும் மனிதர்கள் ஒரு பக்கம். ஒரேயொரு பழத்தைத் திருடியதால் பிடிபட்டுத் துரத்தப்பட்ட முதியவர் மறுபக்கம். இரண்டும் ஒரே இந்தியாவுக்குள்தான் நடந்தேறுகின்றன.

'மாங்கோ டிப்ளமசி’ என்ற ஒரு சம்பிரதாயம் ஆண்டுதோறும் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டு ஈத் பெருநாளின்போதும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கூடையில் மாம்பழங்களைப் பரிசாக அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்த ஆண்டும் பாகிஸ்தான் பிரதமர், இந்திய பிரதமருக்கு 10 கிலோ மாம்பழங்களை அனுப்பிவைத்திருக்கிறார்; அதுபோலவே இந்திய ஜனாதிபதிக்கு

15 கிலோ மாம்பழங்கள். பதிலுக்கு இந்தியா, இதுபோல மாம்பழங்களைப் பரிசாக அனுப்புவது இல்லை. இந்தியா - பாகிஸ்தான் உறவு சீர்கெட்டிருந்த  சூழலில்கூட பல ஆண்டுகளாக மாம்பழங்கள் பரிசாக அனுப்பப்படுவது தொடர்ந்து நடக்கிறது.

'ஏன் இந்தியா, பாகிஸ்தானுக்கு மாம்பழங்களை மறுபரிசாக அனுப்பிவைப்பது இல்லை?’ என்ற கேள்விக்கு, பாகிஸ்தான் மாம்பழங்களுடன் நாம் போட்டிபோட முடியாது என்ற ஒரு பதிலே கிடைத்திருக்கிறது.

மாம்பழங்களை இப்படிப் பரிசாக அனுப்பிவைக்கும் பழக்கம் மொகலாயர் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்திருக்கிறது. அக்பருக்கு இப்படி வகைவகையான மாம்பழங்கள் வந்து சேர்ந்தன என்கிறது வரலாற்றுக் குறிப்பு.

பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தனையும் கள்ளச்சந்தைக்கு உரிய பொருட்களாகிவிட்டன. எந்தப் பொருளை, எவ்வளவு விலைக்கு விற்பது என்பதற்கு ஒரு கட்டுப்பாடும் கிடையாது. தர நிர்ணயம், பரிசோதனை, கட்டுப்பாடு எதுவும் நடைமுறையில் இல்லை. உணவுப் பொருட்களில் நடைபெறும் கொள்ளை, சாமானிய மனிதர்களை அன்றாடம் வதைக்கிறது. காய்கறிக் கடையில், பழக்கடையில், உணவகத்தில் தனக்குத்தானே புலம்பிக்கொள்வதைத் தவிர, வேறு எதையும் மக்களால் செய்ய முடிவது இல்லை.

தடுக்கவும் கண்டிக்கவும் வேண்டிய அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. 'மக்களால், மக்களுக்காக நடக்கும் மக்களாட்சி’ என ஜனநாயகம் பேசிக்கொண்டிருக்கிறோமே அன்றி, சாமானிய மக்களின் பிரச்னைகளை, விலைவாசி உயர்வை, விவசாயிகளின் நெருக்கடியை, பண்பாட்டுச் சீரழிவுகளை யாரும் கண்டுகொள்வதே இல்லை.

இந்தச் சூழலில், இந்திய அளவில் இன்று யார் நமக்கு நம்பிக்கை தரும் மனிதர், எவரது எண்ணங்களை, செயல்களை, சிந்தனைகளை நாம் பின்பற்றுவது? ஊடகங்கள் உருவாக்கித்தந்த பிம்பங்களால் உருவாக்கப்பட்ட மனிதர்களே நம் முன்னர் நிற்கிறார்கள். அவர்களைத் தாண்டி, எளிமையும் தூய்மையும் நேரடியான களச் செயல்பாடும் கொண்ட எளிய மனிதர்கள், நிழல்களைப்போல எங்கோ தங்களின் இடையுறாத பணியைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

'மக்களால், மக்களுக்காக நடக்கும் மக்களாட்சி’ என்பது எத்தனை மகத்தான சொற்றொடர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதை மேடைப் பேச்சில் கேட்காத நாள் இல்லை. ஆனால், இன்று இதை இன்றைய தலைமுறை அறிந்திருக்குமா என்பது சந்தேகமே.

இந்திய வானம் - 4
இந்திய வானம் - 4

'மக்களால், மக்களுக்காக நடக்கும் மக்களாட்சி’   என்ற சொற்றொடர் ஆபிரகாம் லிங்கன் பேசிய கெட்டிஸ்பர்க் உரையில் இடம்பெற்றது.

உலகின் தலைசிறந்த சொற்பொழிவுகளில் முக்கியமானது கெட்டிஸ்பர்க் உரை. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் 1863-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 19-ம் தேதி, இந்த உரையை கெட்டிஸ்பர்க் போர்க்கள நினைவிடத்தில் நிகழ்த்தினார். 15,000 பேர் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில் லிங்கன் பேசியது மூன்றே மூன்று நிமிடங்கள்தான். ஆனால், 272 சொற்கள் மட்டுமே அடங்கிய அந்தப் பேச்சு வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அடிமைகளாக, கப்பலில் அழைத்து வரப்பட்டனர். பண்ணைகளில் அடிமைகளாக விற்கப்பட்டு  விலங்குகளைவிடவும் மோசமாக நடத்தப்பட்டனர். அடிமைகளுக்கு உடம்பில் அடையாளப் பச்சை குத்தப்பட்டது. கறுப்பின அடிமைப் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான அடிமைகள் சித்ரவதையால் உயிர் இழந்தார்கள்.

அடிமைகளை விற்பனைசெய்வது, பணயமாக வைத்துச் சூதாடுவது, அடமானம் வைப்பது, ஏலம்விடுவது நடந்தேறியது. அடிமைகளுக்கு எந்தவிதச் சட்டப் பாதுகாப்பும் கிடையாது. திருமணம் செய்துகொள்ளக்கூட உரிமை இல்லை. ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் கிடைக்காமல் பலர் பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

'மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமையாக்குவது தார்மீக உரிமைக்குப் புறம்பானது’ என எதிர்ப்புக் குரல் கொடுத்தார் லிங்கன்.

அமெரிக்காவின் தென்மாநிலங்கள் கறுப்பர்களை அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டின. அதை எதிர்த்து அமெரிக்க அரசும் வட மாநிலங்களும் போராடின. 1861-ம் ஆண்டு முதல் 1865-ம் ஆண்டு வரை இருதரப்புக்கும் நடந்த யுத்தமே, அமெரிக்க உள்நாட்டுப் போர்.

வட மாநிலங்கள் தரப்பில் 23,000 வீரர்கள்  உயிர் நீத்தனர். அந்த  வீரர்களின் நினைவிடத்தில் ஆபிரகாம் லிங்கன் செலுத்திய அஞ்சலிதான் கெட்டிஸ்பர்க் உரை.

'எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் இன்று பெரியதோர் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். போர்க்களத்தில் நாம் கூடியிருக்கிறோம். நமது நாடு உயர்வடைய வேண்டும் என்பதற்காக, பலர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இங்கு போரிட்டு இறந்தவர்கள் செய்துமுடிக்காமல் விட்டுப்போன பணியைச் செய்துமுடிக்க, உயிரோடு இருக்கும் நாம் நம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். எந்த லட்சியத்தை அடைவதற்காக அவர்கள் தங்கள் உயிரை இழந்தார்களோ, அந்த லட்சியத்தை நாம் விசுவாசத்துடன் நிறைவேற்றுவோம். அவர்களின் தியாகம் வீண் போகாது. மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட மக்களின் அரசாங்கத்தை உலகத்தில் இருந்து யாராலும் அழிக்க முடியாது.’

மிகச் சுருக்கமான இந்த 'கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு’ வரலாற்றில் இன்றும் போற்றப்படுகிறது. காரணம், இது உண்மையின் குரலாக ஒலித்ததே!

அடிமை முறை உலகில் இருந்து முற்றிலும் ஒழிந்துவிட்டது எனக் கூற முடியாது. அடிமை முறை உருமாற்றம்கொண்டிருக்கிறது. இன்றும் உலகின் பல்வேறு நாடுகளில், சுரங்கத் தொழில் தொடங்கி தொழிற்சாலை வரை கொத்தடிமைகள் போல மனிதர்கள் நடத்தப்படுகிறார்கள்.

இந்திய வானம் - 4
இந்திய வானம் - 4

படித்த, நாகரிகமான மனிதர்களின் வேலை எனப்படும் மென்பொருள் துறையிலும், நவீன கொத்தடிமைமுறை நடைமுறைப் படுத்தப்படுகிறது. அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தற்கொலைகளும் மனச்சிதைவும் பெருகிவருகின்றன.

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புகிறோம். ஆனால், வன்முறையையும் சுயநலத்தையும் மோசமான பண்பாட்டு சீரழிவுகளையும் வளர்த்துவருகிறோம். இந்த முரண்தான் உண்மையின் குரலை அடையாளம் காண முடியாதபடி தடுக்கிறது.

அரூபமான ஆடை அணிந்திருக்கிறேன் என, நிர்வாணமாக வீதியில் பவனிவந்த அரசனைக் கண்டு ஊரார் பலரும் உண்மையைச் சொல்லத் தயங்கியபோதும், வேடிக்கை பார்த்த குழந்தை ஒன்று, அரசர் ஆடை அணியவில்லை என உண்மையை உரத்துச் சொன்னதாக ஒரு கதை படித்திருக்கிறேன். அந்தக் குழந்தை நம் காலத்தில் காணாமல்போய்விட்டது. அல்லது அது உண்மையைச் சொல்வதை நிறுத்திக் கொண்டுவிட்டது. அந்தக் குழந்தையை மீட்பதும், உண்மையின் குரலை உலகு அறியச் செய்வதும் அனைவரின் வேலை. இன்றைய இந்தியா அதற்காகத்தான் காத்துக்கொண்டி ருக்கிறது.

- சிறகடிக்கலாம்...