'என்னப்பா... தொடர் ஆரம்பத்துல இருந்தே ஒரே அதட்டல், மிரட்டலா இருக்கே...’ எனப் பல விசாரணைகள். ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். புதிதாகப் பயமுறுத்தவோ, கூடுதலாக மிரட்டவோ, வெறுப்பை வளர்க்கவோ, விலகி ஓடவோ அல்ல இந்தப் பகிர்வுகள். திடீரெனக் கிளர்ந்து மணக்கும் மண்வாசனைக்கும், தூரத்தில் திரளும் வானத்தின் கருக்கலுக்கும் மொட்டை மாடியில் காயப் போட்டிருக்கும் துணிகளை வாரிச்சுருட்டிக்கொண்டு வருவோமே... அப்படியான அவசரமே இந்தத் தொடர். தூறலோ, கொட்டித் தீர்க்கப்போகும் மழையோ, பெயர்த்தெடுக்கப்போகும் புயலோ, நம்மைக் கொஞ்சம் காத்துக்கொள்வதுதான் காலத்தின் கட்டாயம். முன்னர் அப்படி நிறைய விஷயங்கள் நம் வாழ்வியலில் நம்மைக் காத்து வந்தன; இன்னும்கூட வருகின்றன. அவற்றை எல்லாம் வாழ்வின் நெருக்கடிகளில் கொஞ்சம் தொலைத்துவிட்டோம்; தவறவிட்டுவிட்டோம்; ஏமாற்றப்பட்டு விட்டோம்; வழிப்பறியில் இழந்துவிட்டோம். அதைக் கண்டு உணர்வதே இந்தப் பயணத்தின் நோக்கம். 

குடல்புற்று, இன்றைக்கும் நம்மைவிட மூன்று மடங்கு அமெரிக்கர்களைப் பாதிக்கிறது. நம்மைப் பாதுகாப்பது நம் சாப்பாட்டில் ஊற்றும் சாம்பாரும் ரசமுமா என யோசிக்கின்றனர் உணவியலாளர்கள். ஒவ்வொரு மசாலாப் பொடியிலும் அதன் நிறத்தையும் மணத்தையும் தரும் மஞ்சள், மல்லி விதை, வெந்தயம், பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், பட்டை, சோம்பு, பெருங்காயம்  எனும் பட்டியலில் உள்ள ஒவ்வொரு மணமூட்டியையும் ஆய்வுக்கு உட்படுத்திப்பார்க்கும்போது, அதில்  ஒளிந்திருக்கும் ஃபைட்டோ மூலக்கூறுகள் பல, நம் உடல் செல்லில் உயிர் பிழைகள் நிகழாமல் வழிநடத்தும் கண்டிப்பான வாத்தியார்கள் என்பது தெரிகிறது.

உயிர் பிழை - 4

மஞ்சள், ஒருகாலத்தில் ஏழையின் குங்குமப்பூ என்றும், வெறும் பொன் மஞ்சள் நிறம் தரும் வஸ்து என்றும் உலகத்தால் வாசிக்கப்பட்டது. இப்போதோ அறிவியலாளர்கள் அதிகம் ஆராய்ந்து மெச்சும் உணவுக்கூறு மஞ்சள். அமெரிக்கரால் காப்புரிமையோடு திருடிச் செல்ல முனையப்பட்ட மூலிகையும்கூட. காரணம், மஞ்சளில் பொதிந்திருக்கும் அதீத மருத்துவக் குணம் உள்ள குர்குமின் சத்து.

பூஞ்சையை அடித்து விரட்ட, நோய் தரும் நுண்ணிய வைரஸ்களை ஒடுக்க, அஜீரணத்தை நீக்க, புண்களை ஆற்ற என ஆரம்பித்து,      புற்றுநோய்த் தடுப்பு வரை மஞ்சள் செய்யும் மருத்துவப் பணி மகத்தானது. மஞ்சள், புற்றில் மட்டும் நடத்தும் வித்தையை, உலகின் தலைசிறந்த புற்றுநோய் சிகிச்சை மையமான அமெரிக்காவில் உள்ள எம்.டி.ஆண்டர்சன் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை பேராசிரியர் பரத் அகர்வால், தனது 'ஹீலிங் ஸ்பைசஸ்’ நூலில் கீழ்க்கண்டவாறு படிப்படியாகப் பட்டியல் இடுகிறார்.

'உடலினுள் அமைதியாக இருக்கும் ஒரு புற்று மரபுக் காரணியை சூழல் சிதைவுகள் உசுப்பிவிடாது இருக்க, மஞ்சளின் மருத்துவக்கூறான குர்குமின் உதவும்; அப்படியே ஒருவேளை புற்றுசெல் உருவாகிவிட்டால், அது வேகமாக உடலில் பரவுவதைத் தடுக்கும்; ஒரு சாதாரண செல், புற்றுசெல்லாக உருமாற வேண்டிய உடல் நொதிகளைக் கட்டுப்படுத்தும். புற்றுசெல் உருவாகும்போது அதிரடிப்படை போல் பாய்ந்து அதை அழிக்கவும் செய்யும். புற்றுசெல் கூட்டத்தைச் சுருக்கி ஒடுக்கும்; தீவிரவாதக் கும்பல், கிடைக்கும் வழிகளில் எல்லாம் தப்பி, பிற பகுதிக்குப் பரவி அட்டூழியம் செய்வதைப்போல, புற்றுசெல்களும் உடலின் பக்கத்துத் திசு வழியே, ரத்தம் வழியே, நிணநீர் வழியே பரவுவதை ஆங்காங்கே வழியில் நின்று தடுக்கும்; புற்றுசெல்லின் வளர்ச்சிக்கு வேண்டிய ரத்த ஓட்டத்தைத் தடுக்கும்; தவிர, புற்றுநோய்க்கு வழங்கப்படும் பல கீமோ சிகிச்சைக்கு குர்குமின் பக்கபலமாகவும் இருக்கும்.’ மொத்தத்தில் இந்த ஆய்வு முடிவுகள் சொல்லும் செய்தி... 'மஞ்சக் குளிச்சு, அள்ளி முடிச்சு... மாமன் மச்சான் தேடிப்பிடிங்க’ என '16 வயதினிலே’ பெண்கள் ஆடிப்பாட மட்டும் அல்ல... 66 வயதிலும் புற்றாட்டம் நிகழாது இருக்க,

மஞ்சள் ஒவ்வொரு நாளும், நம் உணவில் கண்டிப்பாக உறவாட வேண்டும் என்பதுதான்.

மஞ்சள் போல கொண்டாடப்பட வேண்டிய மணமூட்டிகள் நிறையவே இங்கு உள்ளன. அவற்றில் ஒன்று, கருஞ்சீரகம்.

மரணத்தைத் தவிர மற்ற அனைத்தையும் போக்கும் என இஸ்லாமில் முகம்மது நபியும், பைபிளில் ஏசையாவும் கொண்டாடிய மூலிகை கருஞ்சீரகம். அதில் உள்ள தைமோகுயினோன் சத்தும் மஞ்சளின் குர்குமினைப் போலவே புற்றுசெல்கள் கட்டற்றுப் பரவுவதைத் தடுப்பதையும், பிற பாகங்களுக்குப் பரவும் இயல்பான Metastasis தடுப்பதிலும், புற்றுக்கட்டிகளுக்கான ரத்த ஓட்டத்தை நிறுத்துவதிலும், செல்களின் ஆயுள்காலத்தைச் சரியாக நிர்வகிக்கும் Apoptosis எனும் செயல்திறனைத் தூண்டவும் செய்கிறதாம்.

புற்றுநோயை வராது தடுப்பதிலும், வந்தால் நம்மை அது வெற்றி கொள்ளாது நிர்வகிப்பதிலும் மருந்துக் கதிர்வீச்சு அறுவைசிகிச்சைகளைத் தாண்டி, மிக முக்கியப் பங்கு வகிப்பது சரியான உணவுத் தேர்வுதான். ஒட்டுமொத்த ஆய்வு உலகமும் சரியான உணவுத்தேர்வையும், மகிழ்வான

வாழ்வியலையும் மட்டும்தான் வலியுறுத்திவருகின்றன. இது இப்போது முளைத்த விஷயம் அல்ல. டாக்டர் ஜோஹன்னா பட்விக் என்பவர் 1950-களிலேயே ஓர் உணவுத் திட்டத்தைப் பரிந்துரைத்திருக்கிறார். நாள்பட்ட நோய்களைத் தடுக்கும் பட்விக் உணவுத் திட்டம்தான், புற்றுநோய் தடுப்பிலும் தீர்ப்பிலும் முன்னோடி உணவுத் திட்டம்.

உணவு நொதிகள், கொழுப்பு அமிலங்கள் குறித்த அறிவியல் அதிகம் வளராத காலத்திலேயே, டிரான்ஸ்ஃபேட் உள்ள அதிகக் கொழுப்பு உணவுகள், வெள்ளைச் சர்க்கரை இவற்றைத் தவிர்க்கச் சொல்லி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள சிவப்பு, கரு ஊதா நிறம் உள்ள நம் ஊர் பப்பாளி, மாதுளை, நாவல், ஐரோப்பிய ரோஸ்பெர்ரி போன்றவற்றை அடையாளம் காட்டியது அவரது உணவுத் திட்டம்.

உயிர் பிழை - 4

அவரது உணவு வழிகாட்டுதலில் இன்றளவும் பிரசித்தியாக இருப்பது 'காட்டேஜ் சீஸ்’ எனும் பாலாடைக் கட்டியை ஃப்ளேக்ஸ் விதைகளுடன் கலந்து சாப்பிடச் சொன்னது. சீஸின் சத்துடன் ஒமேகா-3 அமிலம்கொண்ட ஃப்ளேக்ஸ் இணைந்து, புற்றுநோயின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது அவரது வழிகாட்டுதல். 'காட்டேஜ் சீஸ்’  நாம் அறியாதது. ஃப்ளேக்ஸ் விதை நாம் அதிகம் பயன்படுத்தியது அல்ல. ஆனால், இதே மாடலில் நம் ஊரில் உள்ளது நமது வெங்காயத் தயிர்ப் பச்சடி. சின்ன வெங்காயத்தைச் சிறிதாக அரிந்து, தயிரில் போட்டு, தயிர்ப் பச்சடியாகச் சாப்பிடுவது காட்டேஜ் ஃப்ளேக்ஸ் கலவையைப் போன்றே இந்த நோய்க் காப்பில் நிச்சயம் சிறப்பாகப் பணி புரியும். காய்கறிகளில் பலமடங்கு பாலிஃபீனால்களைப் பொதிந்துவைத்திருப்பது வெங்காயம் மட்டுமே. காட்டேஜ் சீஸில் உள்ள Sulphydryl  சத்துடன் கூடுதலாக உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளையும் தன்னுள் கொண்டுள்ளது மோர். இரண்டும் கலந்த இந்தப் பச்சடியை, அனைவருமே அன்றாடம் எடுத்துக்கொள்வது  நமக்கான, சின்ன ஒரு காப்பு.

பட்விக்கைப் பின்பற்றி, உலகம் எங்குமே பல உணவுத்திட்டங்கள் இந்த நோய்க் காப்பில் களம் இறங்கியுள்ளன. Bill Henderson Protocol என்பது அப்படிப் பிரபலமான ஒன்று. 'சுகர் சாப்பிடாதீங்க... சுக்கு சாப்பிடுங்க. பால், ஆட்டுக்கறி எல்லாம் வேண்டாம். ஸ்பைருலீனா சேர்த்துக்குங்க.  கீரை கண்டிப்பா இருக்கட்டும். பீர் வேண்டாம், மோர் சாப்பிடுங்க’ என்பதுதான் அவரது உணவுத் திட்டம். கிட்டத்தட்ட நம் அப்பத்தா சொன்னதைத்தான் ஆங்கிலத்தில் அறிவியல் மொழியில் சொல்கிறார்.

உயிர் பிழை - 4

முன்பெல்லாம் சின்ன வயதில், சனிக்கிழமை வந்தால் வீட்டில் ஒரு ரணகளம் நடக்கும். கையில் ஒரு வெண்கலத் தம்ளருடன், 'இந்தக் கடைசி மடக்கை மட்டும் குடிச்சுடு கண்ணு’ எனப் பாட்டி காதைத் திருக, 'ஐயோ... ரொம்ப உரைக்குது பாட்டி. கருப்பட்டி எல்லாம் மேலே கரைஞ்சு வந்திடுச்சு. கீழே பூராவும் சுக்குதான் கெடக்கு’ என நாங்கள் அலறியது இன்னும் நினைவில் இருக்கிறது. 'ஏன்தான் சனிக்கிழமை வருதோ? காலையில எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணும். எள்ளுத் துவையல் வெச்சு உளுத்தங்கஞ்சி குடிக்கணும். எல்லாத்துக்கும் மேல ராத்திரி சுக்கு வெந்நீர் குடிக்கணும்’ எனப் புலம்பிய காலங்கள் அவை. 'சுக்கு வெந்நீர் கஷாயத்தை இந்தப் பாட்டிக்கு யாரும்மா சொல்லிக் குடுத்தாங்க?’ என மகா கோபத்துடன் கேட்டதும் உண்டு. அப்போது பாட்டி, 'டேய்... நல்லா வாயு பிரியும்டா. எதைத் தின்னாலும் செரிக்கும். உடம்புக்கு ரொம்ப நல்லது’ எனச் சொல்வார்கள். 'சுக்கு மல்லிக் காப்பி குடிச்சா நல்ல வாயு பிரியும்; எதுக்களிக்காது’ என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தோம். ஆனால், தன்னுள் பொதிந்திருக்கும் Zerumbone மூலமாக இஞ்சியும் சுக்கும், புற்றைக் கொண்டுவந்து சேர்க்கும் NF-kappa B     ஐ தடுப்பது, Metastasis எனும் பிற பாகங்களுக்குப் பரவுவதைத் தடுப்பது, கீமோவில் ஏற்படும் குமட்டல் உணர்வை நீக்குவது எனப் பல வேலைகளைச் செய்கின்றனவாம்.கூடவே உள்ள கொத்தமல்லி தனியா, குடல்புற்றைக்கூட ஓரமாகக் குத்தவைத்துவிடும் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது. உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்பத்தில் நானோ துகள்களாக, அதீத துல்லியமாக வரும் ரசாயன மருந்துகளின் செய்கைக்கு இணையாக, வீட்டில் வெண்கலத் தம்ளரில் ஆற்றித் தரும் கஷாயமும் இருக்கும் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது.

நண்பர்களே... வாரத்துக்கு ஒரு நாள் இஞ்சிச்சாறு, ஓம வாட்டர், வேப்பம்பூ ரசம், வாழைப்பூ வடகம், வெந்தயக் களி, கறிவேப்பிலை தொக்கு, பூண்டுக் குழம்பு, மாதுளை ரசம்... என மறக்காமல் சாப்பிடுவதுகூட உயிரில் பிழை உருவாகாமல் இருக்க உதவும்!

- உயிர்ப்போம்...

ரசி... ருசி... புசி!

கண்ணில் கம்ப்யூட்டர், இன்னொரு கையில் புத்திசாலி(வித்த)போன், மூளையில் இ.எம்.ஐ கணக்குடன் அவசர அவசரமாக விழுங்கும் வேலைக்குப் பெயர், சாப்பிடுதல் கிடையாது. வண்டிக்கு பெட்ரோல் போடும் வேலை அல்ல உணவு அருந்துவது. சுவையை ரசித்து, பரிமாறியவரைப் பாராட்டி அமைதியாக உள்வாங்கி, மென்று, மகிழ்ந்து உண்ணும் உணவு மட்டுமே எப்போதும் மருந்து!