தொடர்கள்
Published:Updated:

செய்தோம் ஒரு செயலி !

நா.சிபிசக்கரவர்த்தி

32 மணி நேரத்துக்குள் சாத்தியம் உள்ள ஒரு பிசினஸ் ஐடியா பிடிக்க வேண்டும். அதைச் செயல்படுத்தி சக்சஸ் காட்ட வேண்டும். முடியுமா? இந்த தில் சவாலை ஏற்றுக்கொண்டு ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள் கல்லூரி மாணவர்கள். சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் நடந்த ‘The 32 Hour Start-Up Challenge’  போட்டியில், தமிழ்நாடு முழுக்க இருந்து பல கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு, அதிரிபுதிரி அதிரடி பிசினஸ் ஐடியாக்கள் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். 

'' '32 மணி நேரத்தில் பிசினஸ் ஐடியாவைச் செயல்படுத்தணுமா?’ சாத்தியமே இல்லைனு பலருக்குத் தோணும். ஆனா, எதிர்காலத்துல எல்லா பிசினஸும் இப்படித்தான் இருக்கும். அதுக்கான சின்ன டிரெய்லர்தான் இந்தப் போட்டி'' என இன்ட்ரோ கொடுத்துத் தொடர்கிறார் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ப்ரஜெய் ரகு.

''போட்டி ஆரம்பிக்கிறதுக்கு 40 நாள் முன்னாடியே பல கல்லூரி மாணவர்களை பளிச் பிசினஸ் ஐடியாக்கள் எழுதி அனுப்பச் சொன்னோம். ஏகப்பட்ட ஐடியாக்கள் குவிஞ்சது. அதை பிசினஸ் பெரும்புள்ளிகளிடம், தொழில்நுட்ப அறிஞர்களிடம் பரிசீலிக்கக் கொடுத்து, சிறந்த பத்து ஐடியாக்களைத் தேர்ந்தெடுத்தோம். பத்து அணிகள் போட்டியில் கலந்துக்கிட்டாங்க. ஒரு டீமுக்கு மூணு பேர். ஒரு சனிக்கிழமை காலையில் போட்டி ஆரம்பிச்சது. அடுத்த 32 மணி நேரமும் பசி, தூக்கம் மறந்து  உழைச்சு 'பிசினஸ் அவுட் புட் மாடல்’ எடுத்துட்டாங்க பசங்க!''  

செய்தோம் ஒரு செயலி !

எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி மின்னியல் துறை இறுதி ஆண்டு மாணவர்கள் ரிஷப் வெங்கட்ராமன், பிருத்விராஜ் பிரபு, சஞ்சனா ஸ்ம்ருதி ஆகிய மூவர் அணிதான் முதல் பரிசை

செய்தோம் ஒரு செயலி !

வென்றது. இவர்களது கண்டுபிடிப்பு  d’SIZ  என்ற செயலி  (App).

''ஆசைப்பட்டு இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு மொபைல் கேமரால நாம போட்டோ எடுத்துட்டே இருப்போம். ஆனா, சில வாரங்கள் அல்லது நாட்கள்லயே 'மெமரி ஃபுல்’னு வந்துரும். அந்தப் பிரச்னையை எப்படிச் சரி பண்ணலாம்னு யோசிச்சப்ப பிருத்வி மனசுல க்ளிக் அடிச்சதுதான் d’SIZ    ஐடியா. மொபைல்ல க்ளிக்கும் படங்களின் தரம் குறையாமல், அதே சமயம் குறைவான மெமரி ஸ்பேஸ் மட்டுமே எடுத்துக்கும் செயலி உருவாக்கலாம்னு திட்டம். d’SIZ  -னு பேர் வெச்சுட்டோம். போட்டி ஆரம்பிச்ச 17 மணி நேரம் கழிச்சுத்தான் செயலி இறுதி வடிவத்துக்கு வந்துச்சு. ஆனா, வேலை செய்யலை. விடாப்பிடியா போராடினோம். அதிகாலை 3:35 மணிக்கு  புகைப்படத்தின் அளவு குறைஞ்சது. 'யுரேகா’னு கத்திட்டோம்; கடைசியில பரிசும் தட்டிட்டோம். இப்போ எங்க 'ஆப்’பை இன்னும் மெருகேத்தி கூகுள் பிளே ஸ்டோர்ல போடலாம்னு இருக்கோம்'' என 'தம்ஸ் அப்’புகிறது ரிஷப், பிருத்வி, சஞ்சனா குழு.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் இஷிகா, கீர்த்தி பிரியா, அபிதா அணிக்கு இரண்டாம் பரிசு. இவர்களின் ஐடியா 'Smart comb’..

செய்தோம் ஒரு செயலி !

''எங்க ஐடியா ரொம்ப சிம்பிள். பொண்ணுங்க, பசங்க ரெண்டு பேருக்கும் இப்போ இருக்கிற ஒரே 'தலை’யாய பிரச்னை முடி கொட்டுறதும், பொடுகு தொல்லையும்தான். அதுக்குத்தான் நாங்க 'ஸ்மார்ட் கோம்ப்’ கண்டுபிடிச்சிருக்கோம். அதாவது, சூப்பர் சீப்பு. சராசரியா ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு 300 முடிகள் விழும். ஒரு முடியின் எடை 0.62 மி.கி. இப்படி ஒருத்தருக்கு எவ்வளவு முடி கொட்டுதுனு கணக்கெடுத்தா, பாதிப்புக்கு ஏத்த நிவாரணம் எடுத்துக்கலாம். அதுக்கு மிக நுணுக்கமான சென்சார் தேவை. அப்படி ஒரு சென்சாரை ப்ளூடூத்துடன் இணைச்சு சீப்பில் வெச்சுட்டோம். அந்த சீப்பால் தலைசீவுனா, நாங்க உருவாக்கிய செயலி, எவ்வளவு முடி உதிரும்னு தெரிவிக்கும். அதே செயலியில் முடி பராமரிப்பு டிப்ஸும் கிடைக்கும். எங்க ஐடியாவைப் பார்த்த சில நிறுவனங்கள், 'இந்த புராஜெக்ட்டுக்கு நாங்க ஸ்பான்சர் பண்றோம். இதை நீங்க ஒரு பிசினஸாகவே பண்ணுங்க’னு சொன்னாங்க. நாங்க 'ஸ்மார்ட் கோம்ப்’-க்கு  பேட்டர்ன் வாங்கிருவோம். அப்புறம் மார்க்கெட்டுக்கு வரவேண்டியதுதான்'' என்கிறார்கள் கோரஸ் உற்சாகத்துடன்.

செய்தோம் ஒரு செயலி !

இதுபோல இன்னும் பல ஐடியாக்கள் பிடித்திருக்கிறார்கள் இளைஞர்கள். விரல் அசைவில் கணினியை இயக்கும் கருவி,  சின்னச்சின்ன வீட்டு வேலைகளை முடிக்க நபர்களைத்

செய்தோம் ஒரு செயலி !

தேடிப்பிடிக்க உதவும் செயலி, கல்லூரிப் பாடங்களை ஒரு தொகுப்பாகச் சேமிக்கும் செயலி, பழங்கால நாணயங்கள்,  தபால்தலைகளைச் சேகரிப்பவர்களை ஒருங்கிணைக்கும் செயலி எனப் பல பிரகாசமான சிந்தனைகள்.

ஸ்மார்ட் இந்தியன்ஸ்!