Published:Updated:

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்விகடன் டீம், படம்: ஜி.வெங்கட்ராம்

''ஆனந்த அதிர்ச்சினு சொல்வாங்க... அது என்னனு இப்போ என் வாழ்க்கையில் பரிபூரணமா அனுபவிச்சுட்டிருக்கேன். 'ஆனந்த விகடன்’ கொடுத்த ஆனந்தம்!'' -நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகப்  பேசுகிறார் ராகவா லாரன்ஸ். 

''என் புதுப் படம் வெளியானப்ப,  'காஞ்சனா’ 100 கோடி வசூலைத் தாண்டினப்ப வந்த

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாழ்த்துகளைவிட கடந்த நாலைஞ்சு நாட்களா வந்து குவிகிற வாழ்த்துகளின் எண்ணிக்கை அதிகம். மிரண்டுட்டேன்! நான் எதிர்பார்க்காதவர்கள், முகம் தெரியாதவர்கள்னு ஒரு வாரமா தொடர்ந்து பேசிட்டே இருக்காங்க. எந்த அழைப்பையும் தவறவிடக் கூடாதுனு கவனமா இருக்கேன். விகடன் பார்த்துட்டு ரஜினி சார் பேசினார்... 'ரொம்பப் பெரிய விஷயம் லாரன்ஸ். ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் ஆரம்பிச்சிட்டீங்க. இதுதான் நல்ல ஆரம்பம். சூப்பர்... சூப்பர்...

ஆல் தி பெஸ்ட்’னு மனசுவிட்டுப் பாராட்டினார். அவருக்கு ஒரு விஷயம் ரொம்பப் பிடிச்சிருந்தா மட்டும்தான், அப்படி எல்லாம் பாராட்டுவார். 'சரியான பாதையில் போயிட்டிருக்கோம். இன்னும் நிறையப் பண்ணணும்’னு மட்டும் நினைச்சுக்கிட்டேன்!

வாழ்த்திப் பேசுற எல்லார்கிட்டயும் உண்மையான சந்தோஷம். யாருமே போலியா, சம்பிரதாயத்துக்காகப் பேசலை. ஒரு நல்ல முயற்சி இவ்வளவு பெரிய பாராட்டு, வாழ்த்துகளைக் குவிக்கிறதுன்னா... அதுக்கு விகடனும்  ஒரு முக்கியக் காரணம்.

அப்துல் கலாம் ஐயாவை அடக்கம் பண்ணின பேய்க்கரும்புல ஒரு நிகழ்ச்சி. 'தாத்தா பேர்ல ரொம்ப நல்ல விஷயம் பண்ணியிருக்கீங்க. நீங்க அந்த நிகழ்ச்சி யில வந்து கலந்துக்கணும்’னு ஐயாவோட பேரன் சலீம் கூப்பிட்டாங்க. அப்புறம், விகடன் படிச்சுட்டு 'நாங்களும் ஏதாவது செய்யணும்’னு உத்வேகத்தோட வந்தாங்க அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள். 'கலாம் ஐயாவின் கொள்கைகள்படி வாழ்வோம்னு சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி. அதுக்கும் நீங்க வரணும்’னு என்னை அழைச்சிருக்காங்க. அவரோட பிறந்த நாள் நிகழச்சிகளில் கலந்துக்கச் சொல்லி எங்கெங்க இருந்தோ அழைப்புகள் வருது. அவ்வளவு பெரிய விஞ்ஞானி, அறிவாளி. அவரோடு பிறந்த நாளுக்கு, பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாத நான் வரணும்னு விரும்புறாங்க. இது எவ்வளவு பெரிய பாக்கியம். இதுக்காகவே இன்னும் நிறைய உழைக்கணும்; நிறையப் படங்கள் பண்ணணும்; நிறைய சம்பாதிக்கணும்; நிறைய உதவணும். இப்படி பணமாவும் பொருளாவும் உழைப்பாவும் யாரும் உதவி செய்யலாம். உதவி செய்பவர்களுக்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கும் பாலமாக இருக்கலாம். வாங்களேன்... கலாமின் காலடிச் சுவட்டில் ஊரே ஒண்ணு கூடி அறம் செய்வோம்!''

'அறம் செய விரும்பும்’ ஆயிரம் ஆயிரம் உள்ளங்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதற்கு, கடந்த வாரம் முழுவதும் விகடன் அலுவலகத்துக்கு வந்து குவிந்த கடிதங்களும் மின்னஞ்சல்களும் தொலைபேசி அழைப்புகளுமே உதாரணம்!

' 'அறம் செய விரும்பு’ திட்டத்தின் 100 தன்னார்வலர்களுள் ஒருவராக நானும் இணைந்துகொள்கிறேன்’ என விருப்பம் தெரிவித்து பலர் விகடனைத் தொடர்புகொண்டவண்ணம் உள்ளனர். தங்களால் இயன்றதை உதவ விரும்புவோரும், படிப்பு / மருத்துவ செலவுக்கு நிதி உதவி தேவை எனவும் கேட்டு பலர் தொடர்புகொள்கின்றனர். அத்தனை கோரிக்கைகளையும் பரிசீலித்து ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறோம்.

திட்டத்தின் முதல் 10 தன்னார்வலர்கள் களத்தில் இறங்கிவிட்டனர். அவர்களில் திருநங்கை பானு, ''அரசு பெண்கள் பள்ளிகளிலும், பெண்கள் விடுதிகளிலும் பயன்படுத்திய சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்துவது பெரும் பிரச்னையாக இருக்கிறது. 'சானிட்டரி நாப்கின் டிஸ்போஸல் மெஷின்’களை வாங்கி அரசுப் பள்ளிகளின் கழிப்பறைப் பகுதியில் பொருத்தலாம். ஒரு பள்ளியில் ஓர் இயந்திரம் பொருத்தினாலும் நூற்றுக்கணக்கான மாணவிகளின் பிரச்னை சரிசெய்யப்படும். அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப் படும்; மன அழுத்தத்தில் இருந்து விடுபடு வார்கள்!'' என்றார்.

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

சானிட்டரி நாப்கின்களை எரித்து சாம்பலாக்கும் Incinerator வகை இயந்திரங்களை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசுப் பள்ளி மாணவிகள் விடுதிகளில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

சென்னை தவிர்த்த தமிழ்நாட்டின் இதரப் பகுதிகளில். மின்வெட்டு இப்போதும் முக்கியப் பிரச்னை. அது, மாவட்டத் தலைநகரங்களைவிட வட்டாரப் பகுதிகளில் இன்னும் மோசம். 'இந்தப் பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் ஹாஸ்டல்களுக்கு இன்வெர்ட்டர் அமைத்துத் தரலாம். ஹாஸ்டலின் அனைத்து அறைகளுக்கும் இல்லை என்றாலும், வராண்டா போன்ற பொதுவான இடங்களில் சில மின்விளக்கு களுக்குத் தேவையான அளவுக்கு மின்சாரம் வழங்கும் இன்வெர்ட்டர் அமைத்துத் தரலாம். மின்வெட்டு நேரத்தில் மாணவர்கள் அங்கு அமர்ந்து படிக்க வசதியாக  இருக்கும்’ என்பதும் உதவி குறித்த ஓர் ஆலோசனை. கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்ட இந்த உதவி  முக்கியமானதே. இதற் கான இன்வெர்ட்டர் வாங்குவதற்கான வேலைகளும், பொருத்தமான அரசுப் பள்ளி விடுதிகளை அடையாளம் காணும் வேலைகளும் நடைபெற்றுவருகின்றன.

''பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆடியோ லைப்ரரி பயனுள்ளதாக இருக்கும்'' என்றார் தன்னார்வலர்களில் ஒருவரும், பார்வையற்ற மாற்றுத்திறனாளியுமான, உதவிப் பேராசிரியர் நாகராஜன். மதுரை தியாகராசர் கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 40 பார்வையற்ற மாணவர்கள் படிக்கிறார்கள் எனவும், அங்கு 'ஒலி நூலகம்’ அமைத்தால் மாணவர்கள் பயன்பெற வாய்ப்பாக இருக்கும் எனவும் கூறினார். இது தொடர்பாக  தியாகராசர் கல்லூரி முதல்வர் எயினியிடம் பேசியபோது, ''மிகுந்த மகிழ்ச்சி. உரிய இடவசதியை அளிக்கத் தயார்'' என்றார். அடுத்தகட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

''சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் கரையோரக் குடிசைப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, அதே பகுதியில் வசிக்கும் படித்த மாணவி ஒருவர் மாலை நேர டியூஷன் வகுப்புகள் நடத்துகிறார். இப்போது திறந்தவெளியில் நடைபெற்றுவரும் இந்த வகுப்புகளுக்கு ஒரு ஷெட் அமைத்துத் தந்தால் பேருதவியாக இருக்கும்'' என்பது உதவி இயக்குநர் கவின் ஆண்டனியின் பரிந்துரை.

தாய், தந்தை இருவருமே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கும் ஒரு மாணவன், குறைந்தபட்ச கல்விக் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் சிரமப்படுவதையும், அந்தக் கிராம மக்களே அந்தப் பையனின் போக்குவரத்துச் செலவுகளை ஏற்றுக்கொள் வதையும் பற்றி கூறினார் ஆசிரியர் ஆனந்த். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மாணவருக்கான முழுக் கல்விக் கட்டணத்தையும் செலுத்துவதற்கான விசாரணைகள், ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இப்படி தன்னார்வலர்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொரு கோரிக்கைக் குரலின் பின்னாலும் தீர்க்கப்படாத நம் சமூகச் சிக்கலின் பல அடுக்குகள் மறைந்திருக்கின்றன. 'அறம் செய விரும்பும்’ நல் உள்ளங்களின் உதவியோடு அந்த இருள் அகற்றும் பணி தொடர்கிறது!

'அறம் செய விரும்பு’ திட்டம் பற்றி அறிய...

இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆனந்த விகடனிலும், இதற்கான பிரத்யேக வலைதளம் மூலமும் பகிரப்படும்.

திட்டம் தொடர்பான தகவல்களை

www.vikatan.com/aramseyavirumbu  என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தத் திட்டம் மூலம் உதவ விரும்புபவர்கள் / உதவி வேண்டுபவர்கள் aram@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்!

ரண்டாம் கட்டமாக அடுத்த 10 தன்னார்வலர்கள் 'அறம் செய விரும்பு’ திட்டத்துக்கு எனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றிய அறிமுகம் இங்கே...

அ.முத்துகிருஷ்ணன்

சுற்றுச்சூழல் ஆர்வலர்  

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

பள்ளிப் பருவத்தில் தொடங்கிய சுற்றுச்சூழல் ஆர்வம் இப்போது மதுரை மக்களைத் திரட்டி, 'பசுமை நடை’ நடத்திச்செல்ல வைத்திருக்கிறது. தனியார் நிறுவன வேலையில் இருந்து விலகி சுற்றுச்சூழல், முற்போக்கு அரசியல் என இயங்கிக்கொண்டிருப்பவர், ''பிரபஞ்சத்துடனும் இந்தப் பூமியுடனும் மனிதர்களை ஒட்டவைத்திருப்பது இயற்கை. அதைக் காக்கும் பொறுப்பை குழந்தைகளிடம் கொண்டுசேர்ப்பேன்'' என்கிறார்!

வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி

பிசியோதெரபி பயிற்சியாளர்கள்

தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட இந்த இரு சகோதரிகள், 'ஆதவ் அறக்கட்டளை’ மூலம் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள். மூன்று ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மற்றும் உடற்பயிற்சி அளித்துள்ளனர்.

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

''தற்போது சேலம், அனுப்பூரில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சிகிச்சை மையம் அமைக்கும் கட்டட வேலை நடந்துவருகிறது. தசைச்சிதைவு நோய் பாதித்த குழந்தைகளுக்கு, பிசியோதெரபி உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வாங்க வேண்டும். ஒரு செட் உபகரணத்தின் மூலம் ஐந்து குழந்தைகள் பயன்பெறுவார்கள். அதற்கான பணிகளில் ஈடுபடுவோம்'' என்கிறார்கள்!

சிவா - தமிழ் ஆசிரியர்  

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

மதுரை அரசுப் பள்ளி ஆசிரியர். கல்வியோடு சேர்த்து ஓவியக் கலையையும் மாணவர்களுக்கு போதிப்பவர். 'கல்வி கசக்கும்’ என்கிற பள்ளி அனுபவத்தை இனிப்பாக மாற்றிய இவர், தமிழ்நாடு முழுக்க உள்ள அரசுப் பள்ளி ஆசியர்களைத் திரட்டி, 'கலகல வகுப்பறை’ என்ற கற்றல் முறையை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். ''ஆரம்பக் கல்வி ஆரோக்கியமாக அமைந்தால்தான், உயர் கல்வியில் உயர முடியும். கலைத்திறனிலும் கல்வியிலும் உதவி வேண்டி நிற்போரின் பக்கம் நான் இருப்பேன்'' என்கிறார் இவர்!

ச.பாலமுருகன்

மனித உரிமைச் செயற்பாட்டாளர்

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

சமூக அந்தஸ்திலும் பொருளா தாரத்திலும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, தன் வாழ்வை அர்ப்பணித்துச்செயல்படுபவர். தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல மனித உரிமை வழக்குகளை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்த பாலமுருகன், ஈரோட்டை ஒட்டிய மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வை வைத்து 'சோளகர் தொட்டி’ என்ற நாவல் எழுதியிருக்கிறார். ''உதவி தேவைப் படும் மக்கள் இங்கே அதிகம். உதவி செய்யத்தான் ஆட்கள் இல்லை. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளைச் செய்வேன்'' என்கிறார்!

அஜயன் பாலா  - எழுத்தாளர்

திரைப்பட வசனகர்த்தா. வரலாறு, சினிமா, இலக்கியம்... போன்ற துறைகளில் 26 புத்தகங்களின் ஆசிரியர். பெரியார் விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் விருது வென்றவர், விகடனில் வெளிவந்த 'நாயகன்’ தொடரின் எழுத்தாளர்.

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

''தமிழ்நாடு முழுவதும் அகதி முகாம்களில் பல்லாயிரக்கணக்கான இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. சரியான தொழில்வாய்ப்புகளை இவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும். அது, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை சிறிய அளவாவது உயர்த்தும். நான் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என நினைக்கிறேன். அது இன்னும் கிளைவிரித்து பல்கிப்பெருக வேண்டும் என்பதே என் ஆவல்'' என்கிறார்!

திவ்யா

சமூகச் செயற்பாட்டாளர்

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

'மாணவர் உரிமையும் மகளிர் உரிமையும் இணையும் புள்ளிதான் சமூக விடுதலையின் ஆரம்பம்’ என கிராமப்புறப் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர் திவ்யா. ''விடுதிகள் என்பது, வெறும் காங்கிரீட் கட்டடங்கள் அல்ல... மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான இல்லங்கள். அங்கே சுகாதாரமான உணவும் பாதுகாப்பும் அமைய முயற்சிப்பேன்'' என்கிறார்!

பூ.கொ.சரவணன்

சமூக ஆர்வலர்

எழுத்தாளர், விவசாயம் மற்றும் நீர்ப்பாசனப் பொறியாளர், பேச்சாளர் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. டாப் 200 வரலாற்று மேதைகள், டாப் 100 அறிவியல் மேதைகள் புத்தகங்களின் ஆசிரியர்.

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

'இந்தியாவில் 20 சதவிகிதத் துக்கும் அதிகமாக தலித் மக்கள் வாழும் மாநிலங்களில் தமிழ்நாடு மிக முக்கியமானது. தலித் குழந்தைகள் 10-ம் வகுப்பு படித்தாலே அரசு வேலை கிடைக்கும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. காரணம், அவர்களது வறுமை. கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் தலித் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்பதே என் நீண்டநாள் கனவு'' என்கிறார்!

அருண் கிருஷ்ணமூர்த்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, 'கூகுள்’ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவர், சுற்றுச்சூழல் ஆர்வம் காரணமாகப் பணியைவிட்டு விலகிவிட்டார். வன உயிரினம், வாழ்விடங்களைப் பாதுகாத்தல், ஏரி, குளம் தூர்வாருதல் உள்ளிட்ட சூழலியல் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். இதுவரை 39 ஏரிகளைத் தூர்வாரியிருக்கிறார்.

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

''ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி பகுதிகளில் மிச்ச சொச்சமாக ஓடிக்கொண்டிருக்கும் நதிகளின் அருகில் உள்ள ஏதாவது ஒரு குளத்தைத் தூர்வாரும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். அறிவியல்சார்ந்த சூழல் விழிப்புஉணர்வு மாணவர்களுக்கு மிக அவசியம்'' என்பது இவரது எண்ணம்!

தய்.கந்தசாமி - சமூகச் செயற்பாட்டாளர்

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

வழக்குரைஞர், மக்கள் போராட்டங்களில் முன்நிற்பவர். 'தனி இருட்டு’ என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். தலித் மக்கள் போராட்டங்களுக்காகக் களத்தில் நிற்பவர். 'கிராமப்புற தலித் பெண்களில் பெரும்பாலானோர் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்திய பழைய துணியையே திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறார்கள். இதனால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்பட பல நோய்கள் உண்டாகின்றன. அவர்களுக்கு நாப்கின் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்'' என்கிறார் இவர்!

படங்கள்: எம்.விஜயகுமார், ஜெ.வேங்கடராஜ், பா.காளிமுத்து, கா.முரளி, ஜி.சதீஷ்குமார்