Published:Updated:

தொடரட்டும் சமூக நீதி !

தொடரட்டும் சமூக நீதி !

தொடரட்டும் சமூக நீதி !

டேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தால், ஒட்டுமொத்த குஜராத் மாநிலமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது. ஹர்திக் படேல் என்கிற 22 வயது இளைஞர் தொடங்கிவைத்த இந்த எழுச்சியால், லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு மாநிலத்தை நிலைகுலையச் செய்கின்றனர். பத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்கின்றன. 'படேல் சாதியினரை, முற்பட்டோர் பிரிவில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் நடத்தப்பட்டுவரும் இந்தப் போராட்டங்களால், இந்திய தேசமே இப்போது இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கிறது.   

விவசாயம், வியாபாரம், அரசியல்... என குஜராத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவது படேல் சமூகம். வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் முதன்முதலில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டபோது, அதற்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தியவர்கள் இந்த படேல் சமூகத்தினர். அப்போது நடந்த வன்முறைகளில் 100-க்கும் அதிகமானோர் பலியானார்கள். இப்போது அதற்கு நேர் எதிரான கோரிக்கையுடன் களம் இறங்கியிருக்கிறார்கள்.  இடஒதுக்கீடு கேட்டுத் தொடங்கப்பட்ட இந்தப் பிரமாண்ட போராட்டம், இடஒதுக்கீட்டின் நியாயங்களைத்தான் பேசியிருக்க வேண்டும். மாறாக 'யாருக்குமே இடஒதுக்கீடு வேண்டாம்’ என்பதை அவர்கள் முதன்மையாகப் பேசுகின்றனர்; அதுதான் இப்போது நாடு முழுமைக்குமான பேசுபொருளாக இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இடஒதுக்கீடு குறித்து பல ஆண்டுகளாக அதிருப்தியுடன் இருக்கும் இந்திய நடுத்தர வர்க்கத்தின் மனங்களைக் குறிவைத்து, இவர்கள் வாதங்களை முன்வைக்கிறார்கள். 'இந்தக் காலத்திலும் சாதியைப் பெயரிலும் பொதுவெளிகளிலும் தூக்கிக்கொண்டு திரிவது வெட்கக்கேடு. சாதியைச் சொல்லி மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதை ஏற்கவே முடியாது’ எனச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் எம்.ஜி.வைத்தியா, 'எனவே இடஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்ட வேண்டும்’ என்கிறார். சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவும் இதே கருத்தை வலிறுத்தினார். மொத்தத்தில் இடஒதுக்கீட்டை முற்றிலுமாகக் கைவிடுவதற்கான ஒரு பொதுக்கருத்தை உருவாக்கும் முனைப்பு வெளிப்படையாகத் தெரிகிறது.

'சாதிரீதியாக அல்லாமல் பொருளாதாரரீதியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்பது பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்து. 'இடஒதுக்கீட்டை பொருளாதாரரீதியில் அமல்படுத்துவதற்கு அது ஒன்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல’ என்பது இதற்கு சொல்லப்படும் பதில். இடஒதுக்கீட்டுக்கான தேவை, பொருளாதார அடிப்படையிலானதா... சாதி அடிப்படையிலானதா? நிச்சயம் சாதி அடிப்படையிலானதுதான். சாதி என்னும் பல்லாயிரம் ஆண்டுகால சமூக இழிவால், மனிதர்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வை நீக்கி சமப்படுத்துவதற்கான ஏற்பாடுதான் இடஒதுக்கீடு. அதற்கு ஒரு கால அளவு தேவை என்பதும், இடஒதுக்கீடு மட்டுமே சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான முழுமையான கருவியாக இருக்க முடியாது என்பதும் ஏற்கக்கூடியதுதான். ஆனால், இடஒதுக்கீட்டை முடித்துவைக்கும் காலம் இன்னும் வெகுதொலைவில் இருக்கிறது. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக அழுத்தி, நசுக்கி, அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு, சில பத்தாண்டுகளாக வழங்கப்படும் இடஒதுக்கீடே எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்?

தனக்கு வழங்கப்பட்டுவரும் உரிமைகளும் சலுகைகளும் போதுமானவை அல்ல என்கிற கோரிக்கையுடன் போராடுவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு; படேல் சமூகத்துக்கும் அது உண்டு. ஆனால் அது தந்திரமானதாகவோ, வேறு ஓர் உள்நோக்கம் கொண்டதாகவோ இருந்தால், அதற்கு அடிபணியவேண்டிய அவசியம் இல்லை. சேரிகள் எரிக்கப்படுவதும், சாதியின் பெயரால் ஒடுக்குமுறை நிகழ்வதும் ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இந்த அடக்குமுறை இருக்கும் வரையிலும் இடஒதுக்கீட்டுக்கான தேவை இருந்துகொண்டேதான் இருக்கும். அதைச் சீரமைக்கலாமே தவிர, ஒழித்துக்கட்டுவதை ஒருபோதும் ஆதரிக்க முடியாது!