Published:Updated:

ஷங்கர், செல்வராகவன், பாலா... இந்த இயக்குநர்கள்லாம் சி.எம் ஆனா எப்படி இருக்கும்?

தார்மிக் லீ
ஷங்கர், செல்வராகவன், பாலா... இந்த இயக்குநர்கள்லாம் சி.எம் ஆனா எப்படி இருக்கும்?
ஷங்கர், செல்வராகவன், பாலா... இந்த இயக்குநர்கள்லாம் சி.எம் ஆனா எப்படி இருக்கும்?

மல், ரஜினி, விஜய் போன்றவர்கள் அரசியலுக்குள் வரத் தயங்கும் நேரத்தில், பின்னணியில் தீம் மியூஸிக் ஒலிக்க, தடாலடியாக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் மூலம் அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தார் விஷால். அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்து இந்த இயக்குநர்களும் அரசியலுக்கு வந்து சி.எம் ஆனா தமிழ்நாடு எப்படி இருக்கும்? ஒரு சின்ன கற்பனை!

ஷங்கர் :

இவர் முதல்வராக வந்தால் `பிரமாண்ட எந்திரன்' என்ற திட்டத்தைக் கொண்டு வந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இயந்திரமயமாக்கிவிடுவார். மனிதர்களுக்கு வேலையே கிடையாது. படிப்பில் உள்ள பல பிரிவுகளை தூக்கிவிட்டு வெறும் `ஆராய்ச்சி' துறையை மட்டுமே கொண்டு வருவார். அனைவரும் அதை மட்டுமே படித்து, புதுப் புது ரோபோக்களை உருவாக்கி தமிழ்நாடு முழுக்க உலாவவிடுவார்கள். அதுபோக 2000 ரூபாய் நோட்டுகளுக்கு டாட்டா சொல்லி, லட்ச ரூபாய் நோட்டையும், கோடி ரூபாய் நோட்டையும் புழக்கத்துக்கு கொண்டு வருவார்.  அவ்வப்போது மற்ற இயக்குநர்களையும் ஒரு நாள் முதல்வாராக்கி அழகு பார்ப்பார். 

பாலா :

ஒருவேளை இவர் முதலமைச்சராகிவிட்டால் ஊருக்குள் இருக்கும் எல்லா வசதியான வீடுகளையும் இடித்து தரைமட்டாக்கிவிடுவார். `அனைவரும் குடிசையில்தான் இருக்க வேண்டும்' என்ற சட்டம் பதவியேற்ற அடுத்த நொடியே அமலுக்கு வந்துவிடும். அதேபோல் ஊருக்குள் எங்கேயும் துணிக் கடை, ஃபேன்ஸி ஜுவல்லர்ஸ், நகைக்கடை, பொட்டிக் என எதுவுமே இருக்கக் கூடாது, பியூட்டி பார்லர்கள் ஸ்ட்ரிக்ட்லி நோ. துணிக்கடைக்கு பதில் கோணிப்பை கடைகளும், பொட்டிக்குகளுக்குப் பதில் பொட்டிக்கடைகளும்,  நகைக்கடைக்கு பதில் ஊசிபாசி கடைகளும் திறந்து வைக்கப்படும். 

மிஷ்கின் :

இவர் முதல்வராக வந்தால் வாய் கிழிய பேசுபவர்களுக்குத்தான் முதல் ஆப்பு. மக்கள் ஒரு நாளைக்கு ஐம்பது வார்த்தைகள்தான் பேச வேண்டும். அதையும் மீறிப் பேசினால் அவர் மீது குண்டர் சட்டம் போடப்படும். நாட்டு மக்கள் அனைவரும் கூலிங் க்ளாஸ் அணிய வேண்டும். பவர் க்ளாஸ் அணிபவர்கள் அவர்கள் கண்ணாடியில் கறுப்பு கலர் பெயின்ட் அடிக்க வேண்டும். இவர் முதல்வரானால் குடிகார மகான்களுக்கு குஷியாகிவிடும். டாஸ்மாக் 24 மணி நேரமும் இயங்கும். வர்ற எல்லாருமே டப்பாங்குத்து டான்ஸ் போடணும்.

கௌதம் மேனன் :

இவர் வந்தால் முதல் வேலையாக தமிழ்நாட்டை, `இங்கிலீஷ்நாடு' என்று மாற்றிவிடுவார். ஊருக்குள் யாராவது தமிழ் பேசினால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கிராம, நகரங்களில் இருக்கும் டீக்கடைகள் மொத்தத்தையும் இழுத்து மூடிவிட்டு காபி ஷாப்களை திறந்துவிடுவார். அனைத்து கம்பெனி பைக் நிறுவனங்களையும் இழுத்து மூடச் செய்து, ராயல் என்ஃபீல்டு ஷோ ரூம்களுக்கு மட்டுமே மார்க்கெட்டிங் செய்வார். தமிழ்நாடே... ஸாரி ஸாரி, இங்கிலீஷ்நாடே கிளாஸாக மாறிவிடும்.

ஏ.ஆர்.முருகதாஸ் :

இவர் முதல்வராக வந்தால் தமிழ்நாடே வேற லெவலில் மாறிவிடும். நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த ஸ்லீப்பர் செல்களையும் தமிழ்நாட்டுக்குக் இறக்குமதி செய்து இங்கே உலாவவிடுவார். ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து, காயின்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வருவார். மக்கள் அனைவரும் தனது உடம்புக்குள் ட்ராக்கிங் சிப்களை பொருத்திக்கொள்ள வேண்டும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போக பைப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

செல்வராகவன் :

இவர் முதல்வரானால், லவ் பண்ணும் எல்லோரும் 'திவ்யா திவ்யா' என மழையில் கட்டாயம் ஆடவேண்டும். கார், பைக் போன்றவற்றை மக்கள் பயன்படுத்தக் கூடாது. எங்கு சென்றாலும் நடந்தேதான் போக வேண்டும். சாலைகளில் ரகசியக் குழி, கன்னி வெடி போன்றவற்றை பொருத்திவிடுவார். அதைக் கடந்துதான் வேலைக்கு செல்ல வேண்டும். சாயங்கால நேரத்தில் பொழுது சாயும் முன், பெரிய நடராஜர் சிலையின் நிழல் தெரியும். அதில் ஓடிதான் வீட்டுக்குப் போக வேண்டும். உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.