Published:Updated:

இந்திய வானம் - 5

இந்திய வானம் - 5
News
இந்திய வானம் - 5

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

மூன்று தேவதைகள் 

ஆந்திராவின் மதனபள்ளியில் உள்ள ரிஷிவேலி பள்ளிக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருந்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய பெருமைக்குரிய உறைவிடப் பள்ளி. இந்தியா முழுவதும் இருந்து மாணவர்கள் வந்து தங்கிப் படிக்கிறார்கள். 'இந்தப் பள்ளியின் சிறப்பாக எதைக் கூறுவீர்கள்?’ என அழைத்துச் சென்ற நண்பரைக் கேட்டபோது, அவர் சொன்னார்...

'இங்கே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள தோழமை உணர்வும், மாணவர்கள் ஒரு கம்யூனிட்டி போல ஒன்றாக இணைந்து கற்பதும், சேர்ந்து வாழ்வதுமே இதன் சிறப்பு. படிக்கும் ஒவ்வொரு மாணவன் மீதும் ஆசிரியர் தனி அக்கறை செலுத்து கிறார். வகுப்பறை ஜனநாயகபூர்வமானது. மாணவர்கள் வெளிப்படையாகக் கேட்கலாம்; உரையாடலாம்; விவாதிக்கலாம்.

ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் எழுத்தாளர்கள், ஓவியர்கள், பல்துறை ஆளுமைகள் இங்கே வந்து சிறப்பு ஆசிரியர்களாக வகுப்பு எடுக்கிறார்கள். தனித்திறன்களை ஊக்கப்படுத்துகிறோம். உடலும் மனமும் இணைந்து வளர்ச்சியடையச் செய்கிறோம்.’

அந்த வளாகத்தில் கண்ட காட்சிகள், அவர் சொன்னவை முற்றிலும் உண்மை என்பதை அறியச் செய்தன. ஆசிரியர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, சிலர் அமெரிக்காவில் இருந்த நல்ல வேலையை விட்டுவிட்டு இங்கே ஆசிரியர்களாக  விருப்பத்துடன் பணியாற்றுவதாகச் சொன்னார்கள். காரணம், ஆசிரியர் பணி என்பது, வேலை அல்ல; பொறுப்பு உணர்வுமிக்க சேவை.

இந்தப் பள்ளியை, அதன் கல்விமுறையை, ஆசிரியர்களை... காணும்போது, தமிழ்நாட்டில் நான் அறிந்த ஒரு பள்ளியும், அதில் பணியாற்றிய மூன்று ஆசிரியர்களும் நினைவுக்கு வந்தார்கள்.

1989-ம் ஆண்டில் அந்த மூன்று ஆசிரியர்களும் ஒன்றாக தனியார் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார்கள். ஒருவர் ஆங்கில ஆசிரியர்; மற்றவர் கணிதம்; மூன்றாமவர் அறிவியல். மூவருக்கும் அப்போது திருமணம் ஆகவில்லை. வானில் இருந்து பூமிக்கு, பாடம் எடுப்பதற்காகவே வந்துவிட்ட தேவதைகளோ எனும்படியாக அவர்கள் இருந்தார்கள்.

இந்திய வானம் - 5
இந்திய வானம் - 5

அழகான தோற்றம், நேர்த்தியான உடை, இனிமையான பேச்சு, தேடித்தேடி புத்தகங்கள் படிப்பது, மாணவர்களோடு தோழமையுடன் பேசுவது, சக ஆசிரியர்களுடன் நட்பாக நடந்துகொள்வது, கொண்டுவந்த சாப்பாட்டை ஒன்றாகப் பகிர்ந்து சாப்பிடுவது என, அவர்கள் அந்தப் பள்ளியில் புதிய நட்பு வட்டத்தை உருவாக்கினார்கள்,

ஆங்கில ஆசிரியருக்கு கீட்ஸின் கவிதைகள் பிடிக்கும். அதை தமிழில் எடுத்துச் சொல்வார். அறிவியல் ஆசிரியருக்கு எஸ்.ஜானகி பாடல்கள் என்றால் உயிர்; தானும் கூடவே பாடுவார். கணித ஆசிரியருக்கு சமூக விஷயங்களில்தான் ஆர்வம். இலங்கை தொடங்கி ஈராக் வரை பேசுவார்.

இவர்களின் நட்பு ஒருவிதத்தில் மற்ற ஆசிரியர்களுக்குப் பொறாமையை, வெறுப்பை ஏற்படுத்தியது. சிலர் வெளிப்படையாகவே அவர்களைக் கேலிசெய்தார்கள். அந்த மூன்று ஆசிரியர்களும், மாணவர்களை 100 சதவிகிதத் தேர்ச்சி பெறவைத்து அவர்கள் வாயை அடைத்தார்கள்.

மூவரில் இங்கிலீஷ் டீச்சருக்குத்தான் முதலில் கல்யாணம் நடந்தது. அவரது கணவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே இரண்டு டீச்சர்களுக்கும் கல்யாணம் நடந்தது.

முதன்முதலாக தன் கணவர் சரியில்லை. குடிக்கிறார்; அடிக்கிறார் என அழுதார் இங்கிலீஷ் டீச்சர். மற்ற இரண்டு டீச்சர்களும் அவருக்குச் சமாதானம் சொன்னார்கள். ஆனால், அவர்கள் வீட்டிலும் இதே கதிதான் என்பதை வெளியே சொல்லிக்கொள்ளாமல்.

மூவரில் இருவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. ஆகவே, வீட்டில் இருந்து குழந்தையைக் கவனிக்க இரண்டு மாதங்கள் லீவு போட்டார்கள். பிறகு, குழந்தையைக் கவனித்துக்கொள்ள ஊரில் இருந்து வந்த மாமியார், தன்னைத் திட்டுவதைப் பற்றி, உணவு இடைவேளையில் புலம்பித் தீர்த்தார்கள். அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டார்கள்.

அப்போதும் அவர்கள் வகுப்பைத் திறமையாகவே கையாண்டார்கள்; போட்டி போட்டுக்கொண்டு மாணவர்களை மதிப்பெண் பெறச் செய்தார்கள். அவர்களுக்குள் நட்பு இருந்தபோதும் உள்ளே பொறாமையும் வெறுப்பும் எரிச்சலும் கலந்தே இருந்தன. பள்ளியைப் பொறுத்தவரை அந்த நட்பு ஒரு பாதுகாப்பு வளையம் என்பதால், மூன்று பேரும் ஒன்றாகப் பழகிவந்தார்கள்.

ஒருமுறை 10-ம் வகுப்பு கணிதப் பாடத்தில் ஆறு மாணவர்கள் தோற்றுப்போனதற்கு, கணித ஆசிரியர் சரியாகப் பாடம் எடுக்காததே காரணம் எனச் சொன்னார் ஆங்கில ஆசிரியர். இதைக் கேட்டு கணித ஆசிரியர் கண்ணீர்விட்டு அழுதார். இவ்வளவுக்கும் அந்த ஆண்டு அறிவியலில் ஐந்து மாணவர்கள் தேர்ச்சிபெறவில்லை. இந்தப் பிரச்னை உருவான சில நாட்களில் சைக்கிளில் ஒன்றாக வருவது பிடிக்காமல், கணித ஆசிரியர் ஸ்கூட்டி வாங்கினார்.

'ஏன் எங்களால் வாங்க முடியாதா?’ என மற்ற இரண்டு டீச்சர்களும் புது ஸ்கூட்டி வாங்கி, அதில் வரத் தொடங்கினார்கள்.

ஒருநாள் சம்பத் சார், தனது புது வீட்டு கிரகப்பிரவேசப் பத்திரிகை தந்தபோது, மூவரும் ஒன்றுகூடி தாங்களும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். தங்கள் கணவர் இதில் அக்கறை காட்டுவது இல்லை எனக் குறைபட்டுக்கொண்டார்கள். வீட்டு லோன் பற்றியும் ரியல் எஸ்டேட் சார்ந்தும் நிறையப் பேசிக்கொண்டார்கள்; பலரிடமும் ஆலோசனை கேட்டார்கள். மறந்தும் அவர்கள் புத்தகம், படிப்பு, இசை, சமூக விஷயங்கள் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை.

சில மாதங்களின் முடிவில் கணவரை வற்புறுத்தி, புறநகரில் நிலம் வாங்கினார் ஆங்கில ஆசிரியர். உடனே மற்ற இரண்டு டீச்சர்களும் நகரின் வெவ்வேறு பகுதிகளில் போட்டிபோட்டுக்கொண்டு நிலம் வாங்கினார்கள். மூன்று டீச்சர்களும் ஆளுக்கு ஒரு வங்கியில் கடன் வாங்கி, வீடும் கட்டிக்கொண்டார்கள். அதற்கு, பள்ளியின் அத்தனை ஆசிரியர் - மாணவர்களையும் அழைத்து சாப்பாடு போட்டார்கள்.

இந்திய வானம் - 5
இந்திய வானம் - 5

வீடு கட்டும்போது தாங்கள் ஏமாற்றப்பட்ட விஷயங்களை, புதிய வீட்டின் வசதிகளைப் பற்றி அவ்வப்போது பேசிக்கொண்டார்கள். கட்டிய சில மாதங்களிலேயே மூவருக்கும் தங்களது வீடு பிடிக்காமல் போய்விட்டது. அதைப் பற்றி குறைசொல்லிப் புலம்பத் தொடங்கினார்கள். வங்கியின் வட்டி விகிதம் பற்றி கவலைப்பட்டார்கள். தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் படிக்கவைத்தார்கள்.

புதிதாக வந்த கம்ப்யூட்டர் டீச்சர் மினுக்குவதாக வம்பு பேசினார்கள். புதிய நகை வாங்கியதைப் பற்றி பெருமை பேசினார்கள். பள்ளியில் சக ஆசிரியருக்குப் பிரச்னை உண்டானபோது, அவர்கள் ஒன்றுசேரவில்லை. தங்கள் உரிமைகளுக்குக்கூட அவர்கள் குரல் எழுப்பவே இல்லை. மெள்ள அவர்களுக்குள் பேச்சு சுருங்கிப்போனது. பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொள்வதே போதுமானதாக இருந்தது.

மூவரில் ஆங்கில ஆசிரியருக்குத் திடீரென சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டது. காரணம், அவர் தினம் பள்ளிக்கு வந்தது முதல் தண்ணீரே குடிக்க மாட்டார். வீட்டில் இருந்து கொண்டுவந்த தண்ணீர் பாட்டிலை அப்படியே திரும்பக் கொண்டுபோவார். கணித ஆசிரியருக்கு ரத்தக்கொதிப்பு உருவானது. வகுப்பில் அதிகம் கோபப்பட்டார்; மாணவர்களைத் திட்டினார். சில வேளைகளில் 'தலைவலி’ என வாய்விட்டு அழுதார். அறிவியல் ஆசிரியருக்கு கர்ப்பப்பையில் பிரச்னை. மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டார்.

10 வருடங்களுக்குள் மூவரும் உருமாறி இருந்தார்கள். உடலும் மாறியிருந்தது.  அவர்களின் பேச்சில் இனிமை இல்லை; வம்பும் வெறுப்பும் எரிச்சலும் மட்டுமே மிச்சம் இருந்தன.  

'இப்போது எல்லாம் மாணவர்கள் ஒழுங்காகப் படிப்பது இல்லை’ என மூவரும் அலுத்துக்கொண்டார்கள். 'ஏன் இப்படி ஒரு வேலைக்கு வந்தோம்?’ என சலித்துப்போனார்கள். உடல்நலம் குறித்து அலுத்துக்கொண்டார்கள். நியூஸ் பேப்பர் படிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இல்லாதுபோனது.

இன்னொரு பக்கம், பள்ளியில் 100 சதவிகிதத் தேர்ச்சிக்காகக் கடுமையாக வேலை வாங்கினார்கள். இதனால் வீட்டில் வளரும் பிள்ளைகளைக் கவனிக்க முடியவில்லை; கணவருடன் சண்டை. வீட்டுக்குப் போனாலும் தேர்வுத்தாள்கள் திருத்தவேண்டிய நிலை. அவர்களின் இயல்பு முற்றிலும் மாறியது; எரிந்து விழுந்தார்கள்; சிறிய விஷயங்களுக்குக்கூட அழுது கண்ணீர்விட்டார்கள். சினிமாவுக்குப் போவதுகூட எரிச்சலாகவே இருந்தது. வகுப்பறையைச் சமாளிக்க, ஒரே பாடத்தை பல வருஷங்கள் நடத்திய அனுபவம் மட்டுமே அவர்களுக்குத் துணைசெய்தது.

மற்ற துறைகளைப்போல நமக்கு புரமோஷன் கிடையாது; வேறு பள்ளிக்கு மாறவும் முடியாது; புதிய நிர்வாகம் தங்களைப் போன்ற சீனியர்களைக் கண்டுகொள்வது இல்லை என புகார் சொன்னார்கள். வீட்டில் தனியே டியூஷன் எடுத்துச் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். பணம், பணம், பணம்... இது மட்டுமே அவர்கள் வாழ்வின் முதன்மையானது.

எப்போது பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள் என அவர்களும் ஏங்க ஆரம்பித்தார்கள். உடல்நலம் இல்லை என காரணம் காட்டி தேர்தல் பணிகளில் இருந்து, ஒதுங்கிக்கொண் டார்கள். மூன்று டீச்சர்களும் ஒரே ஃபைனான்ஸ் கம்பெனியில் சீட்டு கட்டி ஏமாந்தார்கள். அதை மூவரும் வெளிக்காட்டிக்கொள்ளவும் இல்லை.

இந்திய வானம் - 5

அவர்கள் வேலைக்குச் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆனதைக் கௌரவப்படுத்தும்விதமாக பள்ளி ஆளுக்கு ஒரு தங்க நாணயம் வழங்கியது. அந்த நிகழ்ச்சியில் மூவரது கணவர்களும் கலந்துகொள்ளவில்லை. மூவருக்கும் படிக்கிற பழக்கம் முற்றிலும் நின்றுபோனது. டி.வி மட்டுமே துணை. அதிலும் சினிமா, சீரியல் மட்டுமே. கோயிலுக்குப் போவதைக்கூட சிரமமாக நினைத்தார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் புதிதாக மாணவர்கள் வந்துசேரும்போதும், இந்தச் சுமையை எப்படித் தாங்குவது என உள்ளூர வெறுப்பு அடைந் தார்கள். ஆனாலும், அவர்கள் கற்றுத்தருவதில் குறைவைக்கவில்லை. ஒரே வேறுபாடு... அவர்களிடம் இருந்த அக்கறையும் இனிமையும் கூடுதல் ஆர்வமும் மறைந்துபோயிருந்தன. அவர்களை மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை. நிர்வாகமும் கடிந்துகொண்டே இருந்தது.

மூவரில் ஆங்கில ஆசிரியர், ஒருநாள் மாரடைப்பில் திடீரென இறந்துபோனார். காரணம், அவர் கடந்த 25 வருடங்களில் ஒரு நாள்கூட உடற்பயிற்சியில் ஈடுபட்டதோ, வாக்கிங் சென்றதோ கிடையாது. எப்போதும் பதற்றம், மனநெருக்கடி, குடும்பப் பிரச்னை, வேளைக்கு உணவு சாப்பிடாத நிலை, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை... இப்படி அவராகச் சேர்த்துக்கொண்ட 100 விஷயங்கள், அவரது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

இதைக் கண்ட மற்ற இரண்டு டீச்சர்களும் அலுத்துக்கொண்டார்கள். ஆசிரியர் உத்தியோகமே இப்படி டென்ஷன்தான். 'ஸ்டூடன்ட்ஸ் நம்மைப் புரிஞ்சிக்கிட மாட்டாங்க; வீட்டுலயும் நம்மைப் புரிஞ்சிக்கிட மாட்டாங்க; நிர்வாகமும் நம்மைப் புரிஞ்சிக்கிடாது. பேசிப் பேசி தொண்டை வறண்டு, நோயாளியாகிச் செத்துப்போறதுதான் மிச்சம்.’

வானில் இருந்து இறங்கிய தேவதைகள் போலத்தானே இவர்கள் பள்ளிக்கு அறிமுகம் ஆனார்கள்... ஏன் இந்த நிலை உருவானது? ஏன் அவர்கள் வாழ்க்கை வட்டத்தைச் சிறியதாக்கிக்கொண்டே வந்து, முடிவில் நத்தை தன் ஓட்டை முதுகில் சுமப்பதுபோல தன் வீடு, தன் குடும்பம் எனச் சுருங்கிப்போனார்கள்.

புரையோடிப்போன சமூக நோய்கள் அத்தனையும் ஆசிரியர்களையும் பற்றிக்கொண்டுவிட்டன. ஆண் - பெண் என்ற பேதம் இல்லை. மற்ற துறைகளில் தவறுகளே இல்லையா எனக் கேள்விகள் எழக்கூடும். கல்வி கூடுதல் பொறுப்பும் அக்கறையும்கொண்ட துறை அல்லவா? ஆயிரம் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் அவர்களுக்கு, யார் பாடம் நடத்துவது?

'விளையாடு... விளையாடு...’ என மாணவர்களைச் சொல்லும் எத்தனை ஆசிரியர்கள் விளையாடுகிறார்கள்? சரிவிகித உணவு பற்றி போதிக்கும் எத்தனை பேர் சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறார்கள்? எத்தனை ஆசிரியர்கள் வீட்டில் புத்தக அலமாரி உள்ளது?

ஆசிரியர்கள், வட்டிக்குவிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்; மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை தருகிறார்கள்; குடித்துவிட்டு வகுப்புக்கு வருகிறார்கள்; பள்ளியே கேள்வித்தாளை நகல் எடுத்துத் தந்து, காப்பி அடிக்கவிடுகிறார்கள் என்பன  போன்ற செய்திகளை நாளிதழ்களில் வாசிக்கும் ஒவ்வொரு பெற்றோரும், கல்வி குறித்து பயம் கொள்ளவே செய்கிறார்கள்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி, சிறந்த சிந்தனையாளர் மட்டும் அல்ல... தேர்ந்த கல்வியாளரும்கூட. மாற்றுக்கல்வி குறித்த முக்கிய விஷயங்களை ஜே.கிருஷ்ணமூர்த்தி தனது உரையில் பகிர்ந்துகொள்கிறார்.

'நீங்கள் ஏன் கல்வி கற்கிறீர்கள்... பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பிவைக்கிறார்கள் என்பதால் மட்டும்தானா..! எதற்காக இந்தப் பட்டம், வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்க மட்டும் தானா?! வரலாறு, கணிதம், அறிவியல், மொழிப்பாடம்... என மாணவன் மண்டைக்குள் தகவல்களைத் திணித்து நிரப்புவதுதான் ஆசிரியர் வேலையா என்ன?

உலகம், பல்வேறுவிதமான மனிதர்கள், சூழ்நிலைகள், நெருக்கடிகள், ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது. அவற்றைப் புரிந்துகொள்ளவும், கடந்துசெல்லவும் வென்று சாதிக்கவும் கல்வி அவசியம்தானே!

மாற்றங்களை உருவாக்குவதே கல்வியின் முதல் வேலை. குரங்கை இன்னோர் உயிரினமாக நாம் மாற்ற முடியாது. ஆனால், நமக்குள் உள்ள பொறாமை உணர்வை, வெறுப்பை, தீமையை நாம் மாற்றிக்கொள்ள முடியும்தானே! மனிதகுல நாகரிகத்தில் கல்வியே மிகப் பெரிய மாற்றங்களுக்குக் காரணம்.

ஒருவனை சமூக மனிதனாக மாற்றுவதற்கு கல்வியே துணை செய்கிறது. கல்வி என்பது, பாடம் படிப்பது, மதிப்பெண்கள் வாங்குவது மட்டும் அல்ல... உலகோடு உறவாடுவதற்கும் நம்மையும் நமது சமூகத்தையும் புரிந்துகொள்வதற்கும், பேதங்களைக் கடந்து மனிதர்களை நேசிப்பதற்கும் சேவை செய்வதற்குமே கல்வி தேவைப்படுகிறது.

பணம், பெயர், புகழ் எனத் தேடும் வாழ்க்கை மட்டுமே நமக்கு அறிமுகமாகி இருக்கிறது. அது நிறைவான வாழ்க்கை அல்ல. அந்த வாழ்க்கை வெறுப்பு, கோபம், குரோதம், வன்முறை, ஏமாற்றம் இவற்றையே பரிசாக அளிக்கிறது. சந்தோஷமும் சுதந்திரமும் குழப்பமும் இல்லாத வாழ்க்கையே அர்த்தப்பூர்வமானது. அதற்குச் சரியான கல்வியால் மட்டுமே வழிகாட்ட முடியும்’ என்கிறார் ஜே.கே.

ஒரு பெற்றோராக இன்றைய கல்வி நிலை மிகுந்த கவலை அளிக்கிறது. தாத்தா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, தங்கை... என குடும்பத்தில் பலரும் ஆசிரியர்கள் என்பதால், அவர்களின் நெருக்கடியையும் அக்கறையையும் உணரவும் முடிகிறது!

பிராய்லர் கோழிகளை உருவாக்குவதுபோல, செயற்கையாக நம் பிள்ளைகளை ஒரு பள்ளி மதிப்பெண்கள் அடிப்படையில் அறிவாளியாக்க வேண்டுமா என்ற முடிவு நம் கையில்தான் இருக்கிறது. அப்படி பிள்ளைகள் முதல் இடம் பெற வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உங்கள் முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும்!

- சிறகடிக்கலாம்...