Published:Updated:

சீரான வளர்ச்சி தொடங்கட்டும் !

சீரான வளர்ச்சி தொடங்கட்டும் !

சீரான வளர்ச்சி தொடங்கட்டும் !

மிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ குறித்த விளம்பரங்களும் செய்திகளும் பளிச்சிடுகின்றன. மெரினா கடற்கரையிலும் அடையாறு ஆற்றிலும் இந்த மாநாட்டுக்காகச் செய்யப்பட்டிருக்கும் 'நீர்த் திரை’ பிரசாரங்கள் கவனம் ஈர்க்கின்றன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களிலும், இந்தியாவுக்கு வெளியே லண்டன், ஃபிராங்க்பர்ட், ஹாங்காங், சிங்கப்பூர், துபாய், அபுதாபி விமான நிலையங்களிலும்கூட இதற்கான விளம்பரங்கள் மின்னுவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். முதலீட்டை ஈர்ப்பது சரி. இது முறையாக நடைபெறுகிறதா? 

அ.தி.மு.க ஆட்சிக் காலம் இன்னும் எட்டு மாதங்கள் மட்டுமே மீதம் இருக்கிறது. நான்கரை ஆண்டு ஆட்சியில் இந்த மாநாட்டைக் கூட்டியிருந்தால், இந்நேரம் முதலீடுகள் வந்துசேர்ந்து, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உற்பத்தியே தொடங்கியிருக்கும். இத்தனை காலம் விட்டுவிட்டு இப்போது முதலீட்டாளர் மாநாட்டைக் கூட்டுகின்றனர். 'இது வெறுமனே தேர்தல் நாடகம்’ என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தில் உண்மை இருப்பினும், அந்த நன்மை இப்போதேனும் நடக்கட்டும். உலக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டின் தலைநகரத்துக்கு வரவேற்கும் இந்த நேரத்தில், சில முக்கியமான அம்சங்களை ஆட்சியாளர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு தொழிற்சாலை தொடங்கப்படுவதற்கு தங்குதடையற்ற மின்சாரம், தரமான தண்ணீர், சுமுகமான தொழிலாளர் உறவு, மூலப்பொருட்களைக் கொண்டுவரவும் உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்லவும் உரிய சாலைவசதி போன்றவை மிகவும் அவசியம். இவற்றை உத்தரவாதப்படுத்தித் தரும்போதுதான் நிறுவனங்கள் உற்சாகத்துடன் தொழில் செய்யத் தொடங்கும். அதேபோல வெளிநாட்டு முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றால் மட்டும் போதாது. சிவப்பு நாடா அணுகுமுறையில் இருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டும். முதலீட்டுடன் வருபவர்களை மூலைக்கு மூலை ஓடவைக்காமல், அனைத்து உரிமங்களையும் ஒருங்கிணைத்து வழங்கக்கூடிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் ஒருபோதும் இடம் தராத நிர்வாகச் சூழல் வேண்டும். முக்கியமாக, முந்தைய அரசின் திட்டம் என்ற காரணத்துக்காக ஒரு திட்டத்தைக் கிடப்பில்போடுவதை அடியோடு கைவிட வேண்டும். ஆட்சி மாறலாம்... அரசின் கொள்கைகள் எப்படி மாற முடியும்?

இந்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்திருக்கும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டவருக்கு தமிழ்நாட்டின் தனித்துவங்களை வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறமையும், கடும் உழைப்பும்கொண்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள்தான் தமிழ்நாட்டின் தலையாய வளம். நிலக்கரிச் சுரங்கம் முதல் ரயில் பெட்டித் தொழிற்சாலை வரை... கார்-பைக் தொடங்கி, ராணுவத்தொழிற்பேட்டை வரை... தோல்பொருள் தொடங்கி பின்னலாடைகள் வரை இந்தியப் பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது.

இந்தத் தருணத்தில் தமிழ்நாடு அரசுக்கு நினைவூட்டவேண்டிய ஒன்றும் இருக்கிறது. பெரும் முதலீட்டாளர்களுக்கு வசதிகள் செய்து தருவதுபோலவே... சிறுதொழில் செய்வோரின் நலன்களையும், நலிவடைந்து முடங்கிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளுக்குப் புத்துயிர் ஊட்டும் பணியையும் முதலில் முடுக்கிவிடுங்கள். பெருநிறுவனங்கள் பொருளாதாரம் என்னும் உடலுக்கான இதயம் என்றால், சிறுதொழில்கள்தான் அதன் ரத்தநாளங்கள். எல்லா தரப்பினரும், எல்லா பகுதியினரும் சீராக முன்னேறுவதே உண்மையான வளர்ச்சி!

முதலீட்டாளர் மாநாடு என்பது, சடங்கோ சாதனை விளக்கக் கூட்டமோ அல்ல. இது ஒரு தொடர் நிகழ்வு. ஆண்டு முழுவதும் முதலீடுகளின் வருகை சீராக இருக்கும்போதுதான், நீடித்து நிலைத்த வளர்ச்சி உறுதிசெய்யப்படும். இந்த மாநாடு, அதற்கான தொடக்கமாக இருக்கட்டும்!