Published:Updated:

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்விகடன் டீம்

'அப்துல் கலாம் பெயரில் 'அறம் செய விரும்பு’ என 100 இளைஞர்களைக் கொண்டு, ராகவா

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

லாரன்ஸ் உதவிப் பணிகளை மேற்கொள்வது எங்களுக்குள் புது உத்வேகம் பாய்ச்சியிருக்கிறது. அப்துல் கலாம் எங்கள் பல்கலைக்கழகத்தில்தான் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 'ஃபுட் பிரின்ட்ஸ்’ என்ற பெயரில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக, ஏ.சி டெக் கல்லூரி சார்பில் வரவேற்பு கொடுப்பது வழக்கம். அதை இந்த வருடம் அப்துல் கலாம் அவர்களின் உறுதிமொழிகளை உறுதி ஏற்கச் செய்யும் நிகழ்வாக அரங்கேற்றுகிறோம். இந்த நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸும் வந்து கலந்துகொள்ள வேண்டும்!’ - அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து வந்த சிறு விண்ணப்பம். பெரு விருப்பத்துடன் சம்மதித்தார் லாரன்ஸ்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரங்கினுள் ராகவா லாரன்ஸ் நுழைய, ஆரவார அப்ளாஸும் க்ளாப்ஸும் களைகட்டின. அந்தக் கொண்டாட்ட மனநிலைக்கு எதிர்நிலையாக நிதானமாகப் பேசத் தொடங்கினார் ராகவா லாரன்ஸ்...    

''டான்ஸ் மாஸ்டரா இருந்த சமயத்தில், எங்க குழுவில் இருக்கிற டான்ஸர்கள்ல மாத்தி மாத்தி யாருக்காவது பிறந்த நாள் வரும். அப்படி ஒருநாள் ஒரு டான்ஸர் பர்த் டேக்கு நான்  ஒரு மோதிரம் வாங்கிப் போட்டேன். கூட இருக்கிறவங்க கைதட்டி, 'மாஸ்டருக்கு ரொம்பப் பெரிய மனசு’னு ஒரு நாள் முழுக்கப் பேசிட்டு இருந்தாங்க. சந்தோஷமா இருந்துச்சு. மறுநாள் இன்னொரு டான்ஸர், 'எனக்கு பர்த் டே’னு கையை நீட்டினாங்க. அப்படி நல்ல பேர் எடுக்கிறதுக்காக பண்ண ஆரம்பிச்ச சின்னச் சின்ன விஷயங்கள்தான் இன்னைக்கு  பல நல்ல காரியங்கள் செய்ய அடிப்படை. இப்பகூட ஸ்டேஜ் டான்ஸ் நிகழ்ச்சிகளில் நான் கலந்துக்க '20 லட்ச ரூபாய், 30 லட்ச ரூபாய் தர்றோம்’னு சொல்லிக் கூப்பிடுவாங்க. நான் போக மாட்டேன். ஆனா, நீங்க கூப்பிட்டு நான் ஏன் வந்தேன்னா, உங்க அன்பை வாங்கிட்டுப் போகத்தான். உங்க அன்பு நான் விதைக்கிற விதைனுகூடச் சொல்வேன். நிகழ்ச்சிக்கு என்னை அழைக்க வந்த மாணவர்கள், ''கலாமின் காலடிச் சுவட்டில் அறம் செய விரும்பு’ திட்டம் பிரமாதமான ஐடியா. எங்களுக்கும் அதுபோல கலாம் அய்யா உறுதிமொழிகளைப் பின்பற்ற ஆசை. அதான் அந்த நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக்கிறோம்’னு சொன்னாங்க. 'அன்னைக்கு ஒரு நாள் சரி. மறுநாள் என்ன பண்ணப் போறீங்க?’னு கேட்டேன். 'ஏதாவது பண்ணணும்னு தோணுது. என்ன பண்ணலாம் சார்?’னு கேட்டாங்க. 'கலாம் அய்யா வழியில் நடப்போம்னு சொன்னதே பெரிய விஷயம். நிகழ்ச்சிக்கு வந்து நீங்க என்ன பண்ணணும்’னு சொல்றேன். செய்வீங்களா?’னு கேட்டேன். 'சரி’னு சொன்னாங்க.

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

அந்த விஷயத்தை இப்போ சொல்றேன். என் வீட்ல 60 குழந்தைகளைத் தங்கவெச்சுப் படிக்க வெச்சுட்டிருக்கேன். நான் டான்ஸரா இருக்கும்போது வாங்கின அரை கிரவுண்டு வீட்ல, அந்த 60 குழந்தைகளைத்தான் தங்கவெச்சுப் படிக்கவைக்க முடிஞ்சது. அவங்களுக்கு டீச்சர், ஸ்கூல் பஸ் எல்லாம் ஏற்பாடு பண்ணியிருக்கேன். காசி தியேட்டர் பின்னாடி இருக்கிற குடிசைப் பகுதி குழந்தைகளைப் பார்க்கிறப்ப, 'இவங்க எப்படிப் படிப்பாங்க?’னு எனக்குத் தோணும். '60 குழந்தைகளுக்கு மேல நம்மால பார்த்துப் பராமரிக்க முடியுமா?’னு யோசனையாவும் இருந்துச்சு. ஒருகட்டத்துல தயக்கத்தை உதறி, அங்கே இருந்து 25 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கல்வி உதவி அளிக்கலாம்னு முடிவுபண்ணேன். படிக்க வெச்சோம். நானே எதிர்பார்க்கலை... அடுத்த வருடப் பரீட்சையில நாங்க படிக்கவெச்ச 25 பசங்கள்ல 16 பசங்க 80 சதவிகிதத்துக்கு மேல மார்க் எடுத்திருந்தாங்க. அந்தப் பசங்க என் முன்னாடி வந்து நின்னப்போ, எனக்கு கண்ணு கலங்கிருச்சு. 'இந்தத் தடவை 200 பசங்களைப் படிக்கவைக்கிறோம்’னு முடிவுபண்ணேன். 200 பசங்களைத் தேர்ந்தெடுத்து கல்விச் செலவுக்கு பட்ஜெட் போட்டா 30 லட்ச ரூபாய் வந்தது. 5 லட்ச ரூபாய் நான் கொடுத்தேன். மீதியை சினிமா நண்பர்கள் மூலமா திரட்டலாம்னு தோணுச்சு. பார்த்திபன் சார் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்துல டான்ஸ் மாஸ்டரா ஒரு ரோல் பண்ணச் சொன்னார். நான் அவர்கிட்ட, 'உங்க புரொடியூஸர் பணம் தர வேண்டாம். இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி பண்ணச் சொல்லுங்க’னு சொன்னேன். பார்த்திபன் சார் சொல்லவும் தயாரிப்பாளர்

10 லட்ச ரூபாய் கொடுத்துட்டார். விஜய் சேதுபதி, ஜெய், தமன்னா...னு ஆளாளுக்கு  குழந்தைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கிட்டாங்க. சிம்புகிட்ட கேட்டேன். அவர் ஒரு தொகை கொடுத்தார். ஒருநாள் விஜய் சார்கிட்ட இருந்து போன். 'எல்லார்கிட்டயும் உதவி கேட்கிறீங்க. என்கிட்ட கேட்க மாட்டீங்களா? உங்ககூட பேசக் கூடாதுனு இருக்கேன்’னு சொன்னார்.  சந்தோஷமா சமாதானப்படுத்தினேன். அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்தார். இப்படி சிறிசும் பெருசுமா பணம் சேர்ந்து, அந்தக் குழந்தைங்க இப்போ நல்லா படிக்கிறாங்க. இப்படி வர்ற உதவிகளை வழிமுறைப்படுத்த  'டூ சம்திங்’னு புராஜெக்ட் ஆரம்பிச்சோம். இப்ப அந்த 200 பசங்களும் ஸ்கூலுக்குப் போயிட்டு இருக்காங்க'' என்றவர், தான் அழைத்து வந்திருந்த நான்கு குழந்தைகளை மேடை ஏற்றினார்.

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

''அந்த 200 பசங்கள்ல இவங்களும் இருக்காங்க. இந்தக் குழந்தைகள் படிக்க நிதி உதவி பண்ணுங்கனு நான் உங்ககிட்ட கேட்கலை. ஏன்னா, நீங்க படிக்கிற பசங்க. உங்க படிப்பு மூலம் அவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணுங்கனு வேண்டிக்கிறேன். வாரத்துல ஒரு நாள் நீங்க இந்தப் பசங்களுக்குப் பிடிச்ச விளையாட்டோ, பாடமோ சொல்லித் தரணும். ரெண்டு மாசம் நீங்க இந்தப் பசங்களோட இருந்துட்டா, அப்புறம் நீங்க சினிமாவுக்குப் போறப்போ, அவங்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கணும்னு நினைப்பீங்க. அந்த அளவுக்குப் பாசத்தைக் கொட்டுவாங்க பசங்க. இதெல்லாம் நடந்தா ரொம்ப சந்தோஷம். இந்தக் கூட்டத்துல இருந்து ஒருத்தர், ரெண்டு பேர் வந்தாலும் சந்தோஷம்'' என உருக்கமாகப் பேசிவிட்டு கலங்கிய கண்களுடன் அமர்ந்தார் ராகவா லாரன்ஸ். அரங்கம் முழுக்க அமைதி.

நிகழ்ச்சி முடியும் நேரம். ராகவா லாரன்ஸ் விடைபெறும் சமயம்... மாணவர்கள் மொத்தமாக மேடையை நோக்கித் திரண்டு வந்தனர்.

''அந்த 200 குழந்தைகளுக்கு அண்ணனா, அக்காவா நாங்க இருக்கோம்'' என உணர்ச்சிப்பெருக்கோடு மேடையில் இருந்த நான்கு குழந்தைகளை அள்ளி அணைத்துக்கொள்ள... அரங்கில் இருந்த அனைவரும் கண்கலங்கி நெகிழ்ந்துவிட்டனர். இந்தத் திருப்பத்தை எதிர்பாராத ராகவா லாரன்ஸின் முகத்தில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான மின்னல்கள். மாணவர்களுக்குக் கைகொடுத்து சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார். அந்த உற்சாக மிகுதியில் வேட்டி அணிந்தபடியே போட்ட 'மூன் வாக் டான்ஸ்’... சூப்பர் ஜோர்!  

'அறம் செய விரும்பு’ திட்டம் பற்றி அறிய...

இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆனந்த விகடனிலும், இதற்கான பிரத்யேக வலைதளம் மூலமும் பகிரப்படும்.

திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu  என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தத் திட்டம் மூலம் உதவ விரும்புபவர்கள் / உதவி வேண்டுபவர்கள் aram@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்!

கலாமின் காலடிச் சுவட்டில் அறம் செய விரும்பிய இளைஞர்களில் மூன்றாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தன்னார்வலர்கள் பற்றிய அறிமுகம் இங்கே...

அ.உமர் பாரூக்

அக்குபஞ்சர் மருத்துவர்

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

'உடலே மருந்து’ என்ற சித்தாந்தத்தில், மாற்று மருத்துவத்தை பரப்புவதில் முக்கியப் பங்காற்றும் உமர் பாரூக்குக்கு கவிஞர், எழுத்தாளர் போன்ற அடையாளங்களும் உண்டு. ''ஆங்கில மருத்துவத்தின்  அடிப்படைத் தத்துவமே இயற்கைக்கு முரணாக, மனித உடலை இயந்திரமாக நினைப்பதுதான். ஆனால் நம் உடல், நோய்களை எதிர்ப்பதற்கான எல்லா கூறுகளையும் கொண்டுள்ளது. மனித உடல் பற்றிய புரிதல் நமக்கு இருந்தாலே, நோய்கள் நம்மிடம் நெருங்காது. இந்தத் திட்டத்தின் மூலம், உடல் பற்றிய புரிதலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டுசேர்ப்பேன்!'' என்கிறார் அ.உமர் பாரூக். 

சாந்தி  தடகள வீராங்கனை

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

செங்கல் சூளையில் கூலி வேலை செய்த குடும்பத்தில் பிறந்து, தேசிய / சர்வதேசப் போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்தவர். கத்தார் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவரை, பாலினப் பரிசோதனை முடக்கியது. தனக்கு எதிரான அநீதியை வெல்ல சட்டரீதியாகப் போராடிக்கொண்டிருக்கும் சாந்தி, இப்போது இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த முறை பயிற்சியாளர். ''ஏழையாகப் பிறந்தாலும் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு எதுவுமே தடை இல்லை. நம்மால் முடியாததும் எதுவும் இல்லை. அந்த நம்பிக்கையை இந்த வாய்ப்பு மூலம் பலருக்குள்ளும் விதைப்பேன்!'' என்கிறார் சாந்தி!

க.மகாலட்சுமி  ஆசிரியர்

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

பலரின் உதவி மூலம் பள்ளிக் கல்வி, ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர் மகாலட்சுமி, இன்று ஜவ்வாது மலைவாழ் மாணவர்களின் ஒளி விளக்கு. ஜவ்வாது மலையில் 'அரசுவெளி’ என்ற இடத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியர் மகாலட்சுமி. 2006-ம் ஆண்டில் 10 மாணவர்களுடன் 'பேருக்கு’ இயங்கிக்கொண்டிருந்தது பள்ளி. காடுகளில் சுற்றித் திரிந்த மாணவர்களைத் தேடி, பிடித்துக் கொண்டுவந்து, பள்ளியை அவர்களுக்குப் பிடித்தமான களமாக மாற்றி, இப்போது 105 மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறார் மகா லட்சுமி. ''தாழ்த்தப்பட்ட சமூகத்தின், விவசாயக்கூலிக் குடும்பத்தில் பிறந்தவரையும் கல்வியறிவு உச்சத் துக்குக் கொண்டு செல்லும். அப்படி இந்த மலைவாழ் குழந்தைகளுக்கு கல்விப் படியேற்றும் ஏணியாக இருக்க ஆசை!'' என்கிறார் மகாலட்சுமி.

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

'இன்ஸ்பையரிங்’ இளங்கோ தன்னம்பிக்கை பேச்சாளர்

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் புத்தாக்கப் பயிற்சியைச் செய்துவருகிறார் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளங்கோ. 'ஏஸ் பனேசியா லைஃப் ஸ்கில்ஸ்’ நிறுவனத்தின் தலைவர். ''நம்மிடம் எல்லா வளங்களும் உள்ளன. ஆனால், நாளைய சமுதாயமான மாணவர்களிடத்தில் திறன்கள் பற்றிய புரிதல்கள்தான் இல்லை. அதற்குக் காரணம், மதிப்பெண்களை மட்டுமே இலக்காக வைத்துச் செயல்படும் கல்வி முறைதான். எனவே, வாழ்க்கைத் திறன்களை அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்'' என்கிறார் இளங்கோ!

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

பூங்குழலி

மனித உரிமைச் செயற்பாட்டாளர்

மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போராளி. ஈழப் பிரச்னை சார்ந்து ஐ.நா வெளியிட்ட ஆவணங்களை தமிழில் மொழி பெயர்த்தவர். 'தீ வரைவு’ எனும் இவரது ஆவணப்படம், மரபணு சார்ந்து தொடரும் நோய்கள் குறித்து பதிவுசெய்திருக்கிறது. ''மதிப்பெண்களைக் குறிவைத்து துரத்தாத மாற்றுக் கல்வி மற்றும் தாய்மொழிக் கல்வி செயல்பாடுகளுக்கும், கிராமப்புற தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உதவ நினைக்கிறேன்'' என்கிறார் பூங்குழலி!

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

சொக்கலிங்கம்

தலைமை ஆசிரியர்

ஓவியம், இசை, பேச்சுப் போட்டி, நடிப்பு... என மாணவர்கள் கொண்டாடும் கனவு ஆசிரியர். தேவகோட்டையில் செயல்படும் 'சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி’யின் தலைமை ஆசிரியர். ''கல்வி கற்கும் பள்ளி, அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான இடமாக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் அடிப்படை வசதிகள் அற்ற அரசுப் பள்ளிகளுக்கு உதவுவேன்'' என்கிறார்.

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

வேலு சரவணன்  ,குழந்தைகள் நாடகக் கலைஞர்

தமிழ்க் குழந்தைகளின் கொண்டாட்டக் கதைசொல்லி இந்த வேலு மாமா. பாடப் புத்தகத்தைப் பட்டமாக்கி, பட்டத்தைப் பாடமாக மாற்றும் ஜாலக்காரர். வேலு சரவணனின் உலகம் குழந்தைகளுக்கானது. அங்கே எவர் நுழைந்தாலும் குழந்தைகளாவோம். ''மனரீதியாகப் பாதிப்படைந்த, மூளை வளர்ச்சியற்ற குழந்தை களுக்கும், ஆதரவு இல்லாத ஏழை மக்களின் மருத்துவத்துக்கும் உதவ நினைக்கிறேன்!'' என்கிறார்.

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

லட்சுமணன்

வீதி நாடகக் கலைஞர்

'சப்பே கொலாலு’ என்ற தலைப்பில் இருளர் இன மக்களின் பாடல்களைத் தொகுத்தவர், 'ஒடியன்’ எனும் கவிதைத் தொகுதி மூலம் இருளர் இன மொழியை முதல் ஆவணமாக்கியவர், எழுத்தாளர்

இரா.முருகவேளுடன் இணைந்து 'நாளி’ எனும் பழங்குடியினர் வாழ்க்கையை விவரிக்கும் ஆவணப் படம் எடுத்தவர் இந்தக் கொங்கு மண்டலத்துக்காரர். ''கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள பல மலை கிராமங்களுக்கு மின்சார வசதி செய்ய வனத்துறை அனுமதிப்பது இல்லை. அப்படியான கிராமங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் அமைக்கவும், யானைகளின் பாதையில் பள்ளி செல்ல நேரிடும் மலைக் கிராம மாணவர்களுக்கு வாகன வசதி செய்யவும் விருப்பம்!''  

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

பிரகதீஸ்வரன்

அரசியல் நையாண்டி கலைஞர்

'புதுகை பூபாளம்’ நாடகக் குழுவின் அடையாளம் பிரகதீஸ்வரன். அதிகாரத்தை, அரசியலை, மூடநம்பிக்கையை, மக்களுக்கு எதிரான அநீதிகளை நாடக மேடைகளில் பகடி செய்து கலை இரவுகளைக் கலகலப்பாக்குபவர். எழுத்து, நாடகம், சினிமா, தொலைக்காட்சி எனப் பல வழிகளிலும் எளிமையான நையாண்டி கேள்விகள் மூலம் மக்கள் மனதில் சிந்தனைப் பொறியை விதைக்கும் பாமர மக்களின் கலைஞன். ''சிறு குற்றங்களுக்காக சிறுவர் சீர்த்திருத்த கூர்நோக்கு இல்லங்களுக்குச் செல்ல நேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு, உதவ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வேன்'' என்கிறார் பிரகதீஸ்வரன்!

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்

சங்கர்  

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி

திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சங்கர், எம்.எஸ்ஸி முடித்த கையோடு சிவில் சர்வீஸ் தேர்வுக ளுக்குத் தயார் ஆனார். தொடர்ந்து நான்கு முறை ஐ.ஏ.எஸ் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. சோர்ந்து போகாமல் சென்னையில் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியைத் தொடங்கினார். கடந்த 12 ஆண்டுகளில் 700-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கியிருக்கிறார் சங்கர். ''ஏழை மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளைப் பற்றிய அறிமுகம் கொடுத்து அவர்களைத் தேர்ச்சிபெற வைப்பதே இப்போது என் பணி. என் தகுதிக்கும் மீறி பலருக்கு அந்த உதவியைக் கொண்டுசேர்க்க இந்த முயற்சி உதவும்'' என்கிறார் சங்கர்.

படங்கள்: கே.கார்த்திகேயன், தி.விஜய், எஸ்.சாய்தர்மராஜ், சொ.பாலசுப்ரமணியன், உ.பாண்டி, கா.முரளி, அ.குரூஸ்தனம், தி.குமரகுருபரன், ர.சதானந்த்.