Published:Updated:

கரை ஒதுங்கிய மனிதம் !

மருதன்

சிவப்பு நிற டி ஷர்ட், நீல நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்த அந்தக் குழந்தையின் உடல், கடற்கரையில் முகம் புதைந்துகிடந்தது. கருத்த தலைமுடி. பக்கவாட்டில் தெரிந்த ஒரே ஒரு கண்ணும் மூடித்தான் இருந்தது. இது உலகுக்குக் கிடைத்த முதல் படம். குழந்தையின் பெயர்  ஐலன் குர்தி; வயது மூன்று; சொந்த நாடு, சிரியா; அடையாளம், அகதி. 

இரண்டாவது படத்தில் ஒரு போலீஸ்காரர் ஐலனை, தன் கைகளில் தூக்கிச் செல்கிறார். சாக்ஸ் அணியாமல் காலணி மட்டும்  அணிந்திருந்த இளம் பாதங்கள், அவர் கைகளில் தொட்டுத் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவருடைய பார்வை அந்தக் குழந்தையைவிட்டு திட்டவட்டமாக விலகியிருந்தது.

ஆனால், உலகின் பார்வையில் இருந்து தப்பவில்லை. ஏகியென் கடற்கரையில் அமைந்திருக்கும் போத்ரும் என்னும் அந்தப் பகுதி, 'துருக்கியின் மிகவும் கவர்ச்சிகரமான பொழுதுபோக்கு இடம்’ என்றுதான் இதுவரை அழைக்கப்பட்டது. இனியும் அவ்வாறு அது அழைக்கப்படும் எனச் சொல்வதற்கு இல்லை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெளுத்து, சிப்பியைப்போல் கவிழ்ந்துகிடந்த அந்தக் குழந்தையின் படத்தைப் பார்த்த பிறகே, உலகம் நீண்ட உறக்கம் கலைந்து பேரதிர்ச்சியுடன் விழித்து எழுந்தது. ட்விட்டரில் #KiyiyaVuranInsanlik  என கவனஈர்ப்பு முயற்சியும் நடந்தது. அதற்கு 'கரை ஒதுங்கிய மனிதத்தன்மை’ என அர்த்தம்.

கரை ஒதுங்கிய மனிதம் !

துருக்கியின் போத்ரும் தீபகற்பத்தில் இருந்து இரண்டு படகுகள் தனித்தனியே கிளம்பியிருக் கின்றன. அவற்றில் மொத்தம் 23 பேர். சிரியாவைச் சேர்ந்த இந்தக் குர்து இன மக்களின் ஒரே நோக்கம் எப்படியாவது ஒரு ஐரோப்பிய நாட்டைச் சென்று அடைவதுதான். குறிப்பாக, கனடா. அதற்கு அவர்களுக்கு இருந்த வழி, துருக்கியில் இருந்து 'கோஸ்’ எனும் கிரேக்கத் தீவை, கடல் வழியே சென்று அடைவது. பிறகு அங்கு இருந்து அடுத்த கட்டப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இலக்காக நிர்ணயிக்கப்பட்ட கிரீஸ் தீவை அடைவதற்கு முன்பே ஒரு படகு கவிழ்ந்துவிட்டதில் ஆறு பேர் கடலில் மூழ்கி இறந்துவிட்டனர். அவர்களில் ஒருவர் பெண், மற்ற ஐவரும் குழந்தைகள். ஐலன் குர்தியின் அப்பா அப்துல்லா மட்டும் தப்பிவிட்டார். குர்தியின் உடல் மட்டும் துருக்கிக்கு வடகிழக்கில் சில மைல் தொலைவில் கரை ஒதுங்கியது.

சிரியா, இராக்: அகதிகள் உற்பத்தி கேந்திரம்!

அப்துல்லாவின் குடும்பத்தைப்போல் பல்லாயிரக்கணக்கான சிரிய மக்கள் ஐரோப்பா செல்லும் பெரும் கனவுடன் துருக்கி வந்து இறங்கி, பிறகு அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டனர். அவர்கள் மேற்கொண்டு பயணம் செய்யவேண்டுமானால், அதற்கு துருக்கி 'எக்ஸிட் விசா’ தந்தாக வேண்டும். ஆனால், சட்டத்துக்குப் புறம்பான குடியேற்றங்களை அங்கீகரித்து, அவர்களுக்கு ஆவணப் பாதுகாப்பை அளிக்க துருக்கி தயாராக இல்லை. அதனாலேயே பலர் அப்துல்லாவைப் போல் கடலில் இறங்கிவிடுகின்றனர்.

அப்துல்லாவின் குடும்பம் புறப்பட்டு வந்தது சிரியாவில் உள்ள 'கொபேன்’ என்னும் பகுதியில் இருந்து. இங்கு இருந்து மட்டும் அல்ல, சிரியாவின் பல பகுதிகளில் இருந்தும் இராக்கில் இருந்தும் பெரும் திரளான மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரு தேசத்து மக்களும் பொதுவான சில பிரச்னைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்களுடைய நாடுகளில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவர்களுடைய அரசாங்கம் பலவீனமான நுரையீரல்போல் சுருங்கிப்போயிருக்கிறது. பொருளாதாரம் உடைந்திருப்பதால் ஏழைமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் பசியும் நோயும் மூலைக்கு ஒன்றாக நின்று கிடைக்கும் உடல்களைப் பிய்த்துத் தின்கின்றன.

கரை ஒதுங்கிய மனிதம் !

ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்ட் சிரியா) என்னும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு, சிரியா - இராக் இரண்டையும் ஒரே சமயத்தில் மையம் கொண்டு தன் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. சிரியாவில் உள்ள பால்மிரா நகரத்தைச் சேர்ந்த 2,000 ஆண்டு பழமை வாய்ந்த ரோமானியக் கட்டுமானங்களை சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் குண்டு வீசித் தாக்கியிருப்பதைப் பார்க்கும்போது, உயிருள்ளவர்களுக்கு மட்டும் அல்ல இறந்தவர்களுக்கும்கூட அங்கே பாதுகாப்பு இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேஷியா, துருக்கி, சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், இந்தியா... எனத் தொடங்கி உலகம் முழுவதிலும் உள்ள 60 நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் போர் தொடுத்துள்ளன. சமகால வரலாற்றில் இவ்வளவு பெரிய ஒரு கூட்டணி ஓர் அமைப்புக்கு எதிராகத் திரண்டு நின்றது இல்லை என்னும் நிலையில், இந்தப் போர் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

சிரியா, இராக் தொடங்கி பல நாடுகளில் ஆழமான விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது இந்த மாபெரும் போர். இந்த விரிசல்களிலும் இடிபாடுகளிலும் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் எறும்புக் கூட்டங்களைப்போல் வரிசை வரிசையாக அகதிகளாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். 'சிரியா மட்டும் நான்கு மில்லியன் அகதிகளை உருவாக்கியிருக்கிறது’ என்கிறது ஒரு குறிப்பு.

17 மில்லியன் பேர் வெளியேற இயலாத நிலையில் உள்நாட்டிலேயே உயிரைக் கையில் பிடித்தபடி மரணத்தருவாயில் இருக்கிறார்கள்.  

ஐலன் குர்தியின் படம் இணையத்தில் மூட்டிய பெருந்தீ ஐரோப்பிய சமூகத்தைப் பற்றிக்கொண்டபோது, தவிர்க்க இயலாதபடி ஆங்காங்கே சிறு வெளிச்சங்கள் தோன்றின. ஐஸ்லாந்து நாட்டு எழுத்தாளர் ஒருவர் தன் நாட்டு மனிதவள அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பித்தார்.  'ஐஸ்லாந்து தனது எல்லையைத் திறந்துவிட்டால் போதும்; நாம் நம்முடைய வீடுகளை அவர்களுக்காகத் திறந்துவிடுவோம்’ என மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு கத்தோலிக்க பாரிஷ§ம் ஓர் அகதிக் குடும்பத்தைத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னுதாரணமாக வாடிகன் இதனைச் செய்து காட்டும் என்றும் அறிவித்திருக்கிறார். 'என் வீட்டை அகதிகளுக்காக அளிக்கத் தயார்’ என்கிறார் பின்லாந்து பிரதம மந்திரி, ஜுஹா சிபிலா. ஆஸ்திரியாவும் ஜெர்மனியும் அகதிகளுக்குக் கதவுகளைத் திறந்திருக்கின்றன. கடந்த ஞாயிறு அன்று நூற்றுக்கணக்கான அகதிகள் பெர்லினில் காலடி எடுத்துவைத்தபோது, ஜெர்மன் மக்கள் இரு பக்கங்களிலும் நின்று கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களை வரவேற்றனர். ம்யூனிச், ஃபிராங்க்பர்ட் ஆகிய நகரங்களில் வந்து இறங்கிய குடியேறிகள், தங்கள் குழந்தைகளின் படத்தைக் கையில் ஏந்தியிருந்தனர். அவர்களுக்கு ஜெர்மானியர்கள் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கிக்கொண்டிருந்தனர். ஃபிராங்க்பர்ட் ரயில் நிலையத்தில் கூடியிருந்த ஜெர்மானியர்கள் சத்தம் போட்டுக் கத்திக்கொண்டிருந்தார்கள். 'ஆம், நாங்கள் தெளிவான குரலில் உறுதியாகச் சொல்கிறோம். இங்கே அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள்!’

சந்தேகமே இல்லாமல் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதுதான். என்றாலும், தற்போது கேமராக்களுக்கு முன்பாகப் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் இத்தகைய உணர்ச்சி வேகங்கள் நாள்பட நாள்பட வடிந்துபோகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உதவிக்கொண்டிருப்பவர்களைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல, நோக்கம். உடனடி கவனம், உடனடி மறதி என்பதே அடிப்படை மனித இயல்பு. இந்த எதிர்மறையான எண்ணப்போக்கு எழுவதற்குக் காரணம் கையளவு அகதிகள் அங்குமிங்கும் அரவணைக்கப்பட்டாலும், கடல் அளவு அகதிகள் ஆதரவுக்கரம் இன்றி தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மனதில் இருத்திக்கொள்வதற்காகவே!

எங்கோ உள்ள ஒரு சிறிய நாட்டின் பிரத்யேகப் பிரச்னை அல்ல இது என்பது தெரிந்திருந்தும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அமைதி காப்பது, பெரும் திரளான ஒரு மக்கள் கூட்டத்தை நேரடியாகப் பாதிக்கவே செய்யும். இந்தக் கொந்தளிப்பு மேலும் பல குடும்பங்களைக் கடலில் கொண்டுவந்து கொட்டும். மேலும் பல குழந்தைகளைத் தூக்கியடித்து கரையில் வீசும்.

'அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?’ எனக் கேட்கிறது அந்தத் துருக்கியக் கடல். கேமரா வெளிச்சம் இப்போதே மங்கத் தொடங்கிவிட்டது!