'பெருகும் புற்றுநோய்க்கும் காய்கறிகளில் ஒட்டியிருக்கும் பூச்சிக்கொல்லித் துணுக்குகளுக்குமான சம்பந்தம் என்ன? பூச்சிக்கொல்லி ரசாயனங்கள், உரங்கள், களைக்கொல்லிகள், ஊட்டம் தரும் தெளிப்பான்கள்... இவை எல்லாம் நேரடியான புற்றுக்காரணிகளா?’ சூழலியல் பார்வையில் இந்த ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும், மண்ணையும் நீரையும் காற்றையும் மாசுபடுத்துவது மறுக்க முடியாதது. ஆனால், பலகாலமாக 'இந்த துணுக்குகளுக்கும் புற்றுக்கும் சம்பந்தம் கிடையாது’ எனப் பேசிவந்தவர்கள் சமீபகாலமாக மௌனமாக இருக்கிறார்கள். காரணம், 'உலகையே கோலோச்சும் ஒரு பூச்சிக்கொல்லிக் கம்பெனி தயாரித்த களைக்கொல்லி வெறும் களைக்கொல்லி மட்டும் அல்ல... விட்டால் மனிதனையே கொன்றுவிடும்’ என்கிறது, உலக சுகாதார நிறுவனத்தின் 'புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்’  (International Agency For Research on Cancer-IARC)  வெளியிட்ட ஆய்வு முடிவு. 

உலகில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படும் இந்தக் களைக்கொல்லி ரசாயனத்தின் பெயர் ‘Glyphosate’.  நம் ஊர் பட்டிதொட்டி எல்லாம் இந்தக் களைக்கொல்லி மிகப் பிரசித்தி பெற்றது. 'புல்லு, பூண்டுகூட பக்கத்துல முளைக்காது; உன் கத்திரிச்செடி மட்டும் சந்தோஷமா வளரும்’ என வேளாண் துறை கூவிக்கூவி விற்ற பொருள் இது. இன்னும் பிளாட்பாரத்தின் அழகைக் கெடுக்கும்(?) புல் வளராமல் இருக்க; ரயில் தண்டவாளத்தை ஒட்டி பார்த்தீனியமும் பிற செடிகளும் வளராமல் இருக்க; கோல்ஃப் விளையாட்டு மைதானங்களில் மற்ற செடிகள் வளராமல்  தடுக்க எனப் பலவிதங்களில் விதைக்கப்படும் விஷம் இந்த நிறீஹ்ஜீலீஷீsணீtமீ களைக்கொல்லி.

இன்னும் இதே கூட்டத்தில் பூச்சிக்கொல்லிகளான 'மாலத்தியான்’, 'டயாசினான்’ இரண்டும் அநேகமாக எல்லாக் காய்கறி விவசாயியின் ஓட்டு வீட்டுப் புழக்கடையின் ஓரத்தில் செருகி இருக்கும் 'மருந்து பாட்டில்’. பூச்சியைக் கொல்லும் இந்த விஷத்தை வழக்கு மொழியில் 'பூச்சிக்கொல்லி’ எனச் சொல்லாமல், 'பூச்சிமருந்து’ எனப் பழக்கியது நம் வணிக அறிவியலின் மாபெரும் உத்தி. கடனில் வாங்கிய இந்தக் கொல்லிகளையெல்லாம் 'கலக்கு கலக்கு’ எனக் கலக்கித் தெளிக்க, நிமிர்ந்து வளரும் வெண்டைக்காயைச் சாப்பிட்டால் 'பிள்ளை மட்டும் கணக்குப் போடாது; பிள்ளையாரும் நம் வாழ்நாள் கணக்கைப் போடுவார்’  என்ற விஷயம், பாவம்... அந்த வட்டிக் கணக்குப் பார்த்துப் பதறும் ஏழை விவசாயிக்குச் சத்தியமாகத் தெரியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உயிர் பிழை - 5

சில வருடங்களுக்கு முன்னர் மரபணுப் பயிர்களுக்கான ஓர் ஊடக விவாதத்தில் பங்கேற்றபோது, 'வேண்டாம் இந்த மரபணுப் பயிர்கள். ஏற்கெனவே பூச்சிக்கொல்லியில் நொறுங்கி வருகிறோம்’ எனப் பேசினேன். அப்போது உயர் பதவியில் இருந்த ஒரு வேளாண் அறிவியலாளர், 'புற்றுக்காரணிப்  பட்டியலில் பூச்சிக்கொல்லிகள் இல்லை தெரியுமா?’ என ஆவேசமாக சண்டைக்கு வந்தார். 10 ஆண்டுகள் ஆகிவிட்டன; அவரும் ஓய்வு பெற்றிருக்கக்கூடும். ஆனால், உண்மை ஓயவில்லை. என்ன... இப்படி மிகிஸிசி அடையாளம் காட்டியிருக்கும் செய்தி, கோனேரிப்பட்டியில் குத்தவைத்து இருக்கும் விவசாயிக்குப் போய்ச் சேர இன்னும் 20  ஆண்டுகளேனும் ஆகும்.

இப்போதே பெருவாரியாக அத்தனை நிலங்களிலும் தெளிக்கப்படுவது இந்த Glyphosate Roundup ரசாயனம்தான் (அத்தனையையும் வளைத்துகட்டிக் கொல்கிறதாம்). மரபணு மாற்றப் பயிர்களை விவசாயம் செய்ய இந்த Glyphosate தேவை மிக அதிகம். 'மேற்கத்திய நாடுகளில் புற்றுநோயின் பிடி அதிகமாக, இந்த Glyphosate போட்ட மரபணுப் பயிர் விவசாயமும் பெரும் காரணமோ?’ என ஆய்வு விரிகின்றது. 'புற்றுநோயை வரவைக்கும் வாய்ப்புள்ள காரணிகள்’  (Probable Carcinogens - Group 2A) என்கிற பட்டியலின் கீழ் மாலத்தியான், டயாசினானையும், 'புற்றுநோயை வரவைக்கக்கூடும் எனும் காரணிகள்’ (Possible Carcinogens - Group 2B)  என்ற பட்டியலின் கீழ் பாராத்தியானினையும் கொண்டுவந்திருக்கும் இந்த ஆய்வு, 'ரத்த வெள்ளை அணுக்கள் புற்றுநோய்’(Non Hodgkin Lymphoma),  ‘'கணையப் புற்றுநோய்’ (Pancreatic Carcinoma ), ஆண்களுக்கு வரும் 'புராஸ்டேட் புற்றுநோய்’ ( Prostatic Carcinoma) ஆகிய புற்று வகைகளை இந்தப் பூச்சி மற்றும் களைக்கொல்லிகள் கொண்டுவரும் வாய்ப்பை சுட்டிக்காட்டிவிட்டது.  

சல்லடைக் கீரை, ஓட்டைக் கத்திரிக்காய், அழுக்குப் பப்பாளி, பூச்சிபட்ட கொய்யா என ஒதுக்கியவை எல்லாம் இந்த விஷ வித்துக்கள் படாதவை அல்லது தொடாதவை. பளபள என பாலீஷ் போட்டு, போஷாக்காக விம்மி இருக்கும் காய்கறிகள் எல்லாமே Probable/ Possible விஷங்களைத் தொட்டுத்தான் விளைந்திருக்கும். இடுப்பில் உள்ள குழந்தைக்கு அரைக்கீரையைக் கடைந்து, குழைவாக சாதத்தில் மசியப் பிசைந்து, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய பீன்ஸ் பொரியலைத் தொட்டுத் தொட்டு, நிலா காட்டி, ராஜா-ராணி கதை சொல்லி சாப்பிடவைக்கும் தாய்க்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அந்தக் குழந்தை சீக்கிரம் ஓடி விளையாடும்; படித்து உலகை ஆளும்; பாதுகாப்பாகத் தன்னையும் இம்மண்ணையும் அரவணைக்கும் என்பதுதான். அத்தனையையும் கேள்விக்குறி ஆக்குகிறது குழந்தையின் வாயில் ஒட்டி உலர்ந்திருக்கும் பச்சை நிறம். பச்சைக்குள் ‘Probable/ Possible’  என்ற பட்டியல் ஒளிந்திருக்கும் சாத்தியங்கள் அதிகம்.

எப்போது தொடங்கியது இந்தச் சிக்கல்? கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஆண்டுகளாக, மனிதன் தன் உடலைச் செதுக்கி வந்தது காய்கறிக் கூட்டத்தை வைத்துத்தான். இனக்குழுக்களாக, வேட்டைச்சமூகமாகத் திரிந்த காலம் தொட்டு, இன்று வரை காய்கறிகள்தாம் அவன் அன்றாட வாழ்வுக்குப் பெருவாரியாக புரதமும் உயிர்ச்சத்துக்களும் கொடுத்துவருகின்றன. 'கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணாவும் இல்லை’ (புறநானூறு: 335) என்ற மாங்குடிக் கிழாரின் சங்க இலக்கியப் பாடலை வைத்துப் பார்க்கும்போது, வரகு, தினை, கொள்ளு, அவரை என நான்கும் நம் பிரதான உணவாக இருந்தது தெரிகிறது; அவை வளர இந்த நச்சுக்கொல்லிகளின் நயவஞ்சகம் தேவை இருக்கவில்லை. ஆனால், இன்றைக்கு நூற்றுக்கணக்கான காய்களும் தானியங்களும் இருந்தும் நலவாழ்வு மட்டும் நசுங்கிக்கொண்டே போகின்றது.

மழையை நம்பிய பயிர், மானாவாரிப் பயிர், ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பாசனம் என வாழும் நிலத்தையும் பருவத்தையும் பொழுதையும் சார்ந்து இருந்த விவசாயம், இப்போது 2,000 அடிகளுக்குக் குழாய் பாய்ச்சி, சுடுநீர் உறிஞ்சி நடத்தப்படுகிறது. 'உரம்’, 'மருந்து’ எனச் சொல்லி ரசாயன நச்சுக்களைக் கலந்து, புதுப்புது வீரிய ஒட்டுரகப் பயிர்களோடு நாம் முறையற்றுச் செய்யும் நவீன விவசாயம் பாமரனின் வயிற்றுப்பசிக்குப் பரிமாறியதைவிட, பன்னாட்டு நிறுவன வணிகப் பசிக்கு இறைத்ததுதான் ஏராளம். 'மன்னுமைப் பொருளியம்’ (Economy of Permanence)  பேசிய ஜே.சி.குமரப்பாவின், காந்தியின் விவசாயத் திட்டங்களை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளியதன் விளைவு, இன்று நம் பாமரனின் அலுமினியத்தட்டில் உலக நாடுகள் தடை செய்து வைத்துள்ள 13 வகை ரசாயன நச்சுக்களுடன் காய்கறி, தானியங்களைப் பரிமாறுகிறோம். கூடவே, அவன் மரபணுவோடு மரண விளையாட்டு விளையாடுகிறோம்.

'என்ன செய்ய முடியும்?

உழ நிலம் என்னிடம் கிடையாது;

உழவுக்கு மனிதர்கள் இல்லை.

நெல் நட்டேன்; விற்க முடியவில்லை.

கல் நட்டேன்; விற்றுவிட்டது’ - எனும் புதுக்கவிதைக்குள் விவசாயியின் உயிர்மூச்சு உறங்கிவிட்டது. பெருவிவசாயம் உரங்களை, இந்தக் கொல்லிகளை ஒதுக்கிவிட்டு ஓட இன்னும் சில நாட்கள் பிடிக்கும். 'வருமுன் காப்பதைவிட, வந்தபின் வாரிச்சுருட்டி ஓடும் பழக்கம்’ நமக்குப் பழக்கமான ஒன்று. 'ஆனைகட்டி போரடித்த கூட்டமப்பா நாங்க!’ என வரலாற்றுத் தம்பட்ட வியாதியில் திரியும் நமக்கு, பக்கத்து கேரளா மாநிலம் தன் ஒட்டுமொத்த பூமியையும், நஞ்சற்ற ரசாயன நிலமாக ஏழே ஆண்டுகளில் மாற்ற உறுதி எடுத்து இயங்குவதைப் பார்த்தும் உறுத்தவில்லை. ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் 36 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பூச்சிக்கொல்லியற்ற விவசாய மேலாண்மை (Non Pesticidal Management (NPM))   வழியில் பயிராக்கிவிட்டதைப் பார்த்தும் நம் அரசின் மண்டையில் ஏற மறுக்கின்றது. அரசை இந்தப் பக்கம் திருப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும்; இந்த நச்சுப்பிடியில் இருந்து, நம் அளவில் நாம் நகர இன்னும் சாத்தியமும் நம்பிக்கையும் மிச்சம் இருக்கின்றன. எப்படி?

காய்கறிகளை, நெடுங்காலம் நாம் பெருவிவசாயத்தில் இருந்து பெறவில்லை. 'காய்கறிப் பயிராக்கம்’ என்பது புழக்கடை விவசாயமாகத்தான் பல ஆயிரம் ஆண்டுகள் இருந்தது. சமையலறை மிச்சங்கள், சாப்பிட்ட எச்சங்கள், காய்கறிக் கழிவுகள், குளியலறை நீர், சலவையின் நீர் வெளியேறும் கழிவுகள்தாம் அடுத்த வேளை உணவுக்கு அடித்தளம் அமைத்துவந்தன. இந்த கிளைபோசேட், மாலத்தியான் கூட்டத்துப் பிடியில் இருந்து நம் தலைமுறையைக் காக்க, மீண்டும் இந்த புழக்கடை விவசாயத்தை வேகவேகமாக புதுப்பிப்பது மட்டும்தான் ஒரே வழி.

புழக்கடை இல்லை என்றால், மொட்டை மாடி; மொட்டை மாடியும் இல்லை என்றால் பால்கனி; அதுவும் இல்லை என்றால், ஊர்ப்பூங்கா, பள்ளி மைதான ஓரம், கோயில் நந்தவனம்... எங்கு வேண்டுமானாலும் இந்த முனைப்பைத் தொடங்க முடியும். அரைக்கீரைக்கு ஒரு தொட்டி, பசலைக்கீரைக்கு ஒரு கொடியோ அல்லது தொட்டியோ, அவரையும் காராமணியும் பந்தலின் அடுத்த காலில். தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டைக்காய், கோவைக்காய் என ஒவ்வொன்றுக்கும் ஒரு தொட்டி அல்லது சின்னதாக ஒரு பாத்தி. விளை மண்ணுக்கு, அதைப் பக்குவப்படுத்தும் தொழில்நுட்பத்துக்கு... குடும்பத்துடன் போகும் ஒரு சினிமாவுக்கான செலவுதான் ஆகும். அமிர்தக்கரைசலோ, இஞ்சி-பூண்டு மோர்க்கரைசலோ, பஞ்சகவ்யமோ, வேப்பம் புண்ணாக்கோ வாங்க சினிமாவில் இருந்து திரும்பி வருகையில் சாப்பிடும் ஓட்டல் சாப்பாட்டுக்கான செலவு. கொஞ்சம் மெனக்கெடுங்கள் தோழர்களே... சுவை மட்டுமல்லாமல் பாதுகாப்பும் நிறைந்த  பச்சைக் காய்கறிகள் நம் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறது!

- உயிர்ப்போம்...

எது ஆர்கானிக்?

எது ஆர்கானிக்? எது உரம், பூச்சிக்கொல்லி போட்டு வளர்த்தது..? சந்தையில் இருக்கும் காய்கறிகளை இப்படிப் பார்த்துக் கண்டுபிடிப்பது நிறையவே கடினமான விஷயம். அதுவும் ஆர்கானிக் விழிப்புஉணர்வு வந்து அதற்கான தேடல் அதிகமாகத் தொடங்கியதும், பொய்முகப்புடன் புகும் நச்சு வீட்டுக்காய்கள் நிறையவே உலவுகின்றன. என்ன செய்யலாம்? 1. சிறு தானியங்கள் பெரும்பாலும் இன்றளவில், இயல்பில் (by default)  ரசாயனப் பூச்சிக்கொல்லி இல்லாமல் வளர்க்கப்படுவதால் இட்லி, தோசை, புளியோதரை, பொங்கலுக்கு இவற்றை அதிகப்பட்சம் பயன்படுத்தலாம். 2. அரிசி ரகங்களை நேரடியாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயியிடமோ, அவர்களின் கூட்டுறவு அமைப்பிலோ வாங்கலாம். 3. இயற்கை விளைபொருள் அங்காடிகளிடம், அவர்கள் விற்பனை செய்யும் பொருளின் பயிராக்கம் நடக்கும் இடம், அமைப்பு குறித்த விவரம் கேட்டு அறியலாம்.

உயிர் பிழை - 5

4.பொதுவாக அதிக பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படும் காலிஃபிளவர், முட்டைக்கோஸ், ஹைபிரிட் ரக கத்திரி, திராட்சை, இவற்றைத் தவிர்த்து இயல்பிலேயே பூச்சிக்கொல்லி அதிகம் பயன்படுத்தப்படாத சீனிஅவரை, பாகல், சுண்டைக்காய் முதலிய காய்கறிகளை அடிக்கடி சமையலில் பயன்படுத்தலாம். 5. காய்கறி, கீரைகளை நன்கு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிப் பயன்படுத்தலாம். (எல்லா ரசாயனமும் வெளிப்புறத்தில் ஒட்டி இருப்பதில்லை. 'எண்டோசல்பான்’ போன்றவை கனி, காய்க்குள்ளும் சென்றுவிடும்) சந்தையில் பளபள என போஷாக்காக இருக்கும் காய்கறிகளைவிட, உழைக்கும் விளிம்புநிலை மக்கள் மாதிரி வெளிச்சோர்வாக, காயங்களுடன் அணிலும் புழுவும் பறவையும் சாப்பிட்ட தடங்கள் இருக்கும் காய்க்கூட்டத்தில், பொறுக்கி எடுத்து அதனை நன்கு கழுவி, பாதிப்புற்றதை வெட்டி நீக்கிப் பயன்படுத்தலாம். 6. அருகாமையில் உருவாகும் பயிர்களை அந்த வேளாண் மக்களுடன் சேர்ந்து நேரடியாக விவசாய நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி ரசாயனப் பிடியை விலக்கலாம். இப்போது தமிழகத்தில் அப்படியான பல அமைப்புகள் சிறிது சிறிதாக உருவாகி சிறப்பாக நச்சற்ற உணவை தரத்தொடங்கி உள்ளன. 7. எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த தீர்வு, புழக்கடை விவசாயம் மட்டுமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism