Published:Updated:

சித்தர் குகைகள், மூலிகை அருவிகள், 70 கொண்டை ஊசிகள்... கொல்லிமலை எனும் மர்மதேசம்! `ஊர் சுத்தலாம் வாங்க' பாகம் - 3

சித்தர் குகைகள், மூலிகை அருவிகள், 70 கொண்டை ஊசிகள்... கொல்லிமலை எனும் மர்மதேசம்! `ஊர் சுத்தலாம் வாங்க' பாகம் - 3
சித்தர் குகைகள், மூலிகை அருவிகள், 70 கொண்டை ஊசிகள்... கொல்லிமலை எனும் மர்மதேசம்! `ஊர் சுத்தலாம் வாங்க' பாகம் - 3

சித்தர் குகைகள், மூலிகை அருவிகள், 70 கொண்டை ஊசிகள்... கொல்லிமலை எனும் மர்மதேசம்! `ஊர் சுத்தலாம் வாங்க' பாகம் - 3

டிசம்பர் என்றாலே பாபர் மசூதி, வெடிகுண்டு, சுனாமி, ஜெயலலிதா மரணம் என்று எத்தனை சோகங்கள்! `இந்த மாதம் அப்படி ஏதும் அசம்பாவிதம் நேர்ந்துவிடக்கூடாது’ என்று என்னை மாதிரி நாத்திகர்களையே கடவுளிடம் வேண்டவைப்பதுதான் டிசம்பர் மாத டிசைன். ஆனால், இந்த டிசம்பர் மாதம், என் காதல்களை எல்லாம் தாண்டி நினைவில் நிற்கும் என நினைக்கிறேன். காரணம், கொல்லிமலை ட்ரிப்.

விஷால், தேர்தல் அதிகாரியிடம் கெஞ்சும் வீடியோ மீம் ஒன்றைப்  பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், ஆசிரியரிடம் இருந்து பீப் மெசேஜ். `கொல்லிமலை ட்ரிப்... என்னாச்சு?’

அடடா! ரூம், போட்டோகிராபர் என்று அவசரம் அவசரமாக ஸ்கெட்ச் போட்டேன். சில நேரங்களில் அவசரமும் அவசியமும்தான் வாழ்க்கையை போரடிக்காமல் வைத்துக்கொள்கிறது. தூக்கமே வரவில்லை.

`சம்முவம்... எட்றா வண்டியை’ என்று எனக்கு நானே நாட்டாமையாக மாறி, காலையில் ஒரு மாருதி காரைக் கிளப்பினேன். ‘Meet me @ Trichy...’ என்று ஒரு ஹோட்டல் பெயரைக் குறிப்பிட்டு, போட்டோகிராபருக்கு ஒரு மெசேஜ். `நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலைக்குப் போக, திருச்சிக்கு எதுக்கு வரச் சொல்றான் இந்த ஆளு’ என்று நீங்கள் மைண்ட் வாய்ஸில் நினைப்பது எனக்குக் கேட்டுவிட்டது. நீங்கள் நினைப்பது ஒரு வகையில் சரிதான்.

சென்னையிலிருந்து கொல்லிமலை செல்பவர்களுக்கு கிட்டத்தட்ட மூன்று வழிகள். வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் வழியாக நாமக்கல் செல்வது ஒன்று. விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் வலதுபுறம் திரும்பி கள்ளக்குறிச்சி வழியாக ஆத்தூர் டச் பண்ணிவிட்டு நாமக்கல் போவது மற்றொரு ரூட். வேலூருக்கு முன்பே இடதுபுறம் திரும்பி ஆரணி, திருக்கோவிலூர் வழியாகவும் ஒரு ரூட் சொன்னது ஜிபிஎஸ். ஆனால், எப்படியும் நாமக்கல் போக வேண்டும். இதுவே திருச்சிக்காரர்களுக்கு என்றால் ரொம்ப ஈஸி. ஏனென்றால், நான் டூர் கிளம்பியதே லேட். திருச்சியில் தங்கிவிட்டுக் கிளம்பினால், டென்ஷன் ஃப்ரீ என்று நினைத்ததுதான் இதற்குக் காரணம்.

வழக்கம்போல, செங்கல்பட்டு வரை டிராஃபிக் பெப்பே காட்டியது. ஸ்டீரியோவை ஆன் செய்து இளையராஜா பாட்டு போட்டேன். பயணத்துக்கும் இளையராஜாவுக்கும் ஆரம்ப காலங்களில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது. திருச்சிக்குப் பக்கத்தில் ஏதோ ஒரு டோல் தாண்டும்போது, `நீங்க வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?’ என்ற போட்டோகிராபரின் மெசேஜுக்கு, `எட்டு இளையராஜா பாட்டு' என்று ரிப்ளை செய்தேன். (உபயம்: `வலைபாயுதே' )

ஆட்டுக்கு தாடி மாதிரியும் நாட்டுக்கு கவர்னர் மாதிரியும் இந்த டோல்கேட்டுகள். நெடுஞ்சாலைக்குத் தேவைதானா என்றொரு சந்தேகம், எனக்கு ரொம்ப நாளாக இருக்கிறது. (தெரிந்தவர்கள் கமென்ட் செய்யலாம்.) நல்ல சாலை இருந்தால்தான் பயணம் ஸ்மூத்தாக இருக்கும். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கரடுமுரடான ரோடுகளுக்கும் டோல் பில்லை கலெக்ட் செய்வதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சில டோல்களில், இலங்கை கிரிக்கெட் டீம்போல் தகிடுதத்தமெல்லாம் பண்ணுகிறார்கள். விழுப்புரம் டோல்கேட்டில், என் பில்லை செக் செய்தேன். வேறு ஏதோ ஒரு கார் நம்பர் இருந்தது. இறங்கி சண்டை போட்ட பிறகு, வேறு பில் தந்தார்கள். இன்னொரு டோலில், கார் நம்பர் என்கிற இடத்தில் இரண்டு கார்களையே நிறுத்திவிடலாம்போல் காலி இடம்தான் இருந்தது. பிறகு நயமாக விசாரித்தேன். அதாவது, சில தனவான்களுக்கு டோல்களில் நிற்பதற்கு நேரமெல்லாம் இருக்காது. பில்லை வாங்கக்கூட நேரமில்லாத அவர்கள், விட்டுச்செல்லும் பில்களை இப்படிக் கைமாற்றிவிடுவது நடப்பதாகத் துப்பறிந்தேன். ஒருசிலர், டெம்ப்ளேட் பில்லெல்லாம் ரெடி பண்ணி வைத்துக்கொள்வதாகவும் சொன்னார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், வெளியூர் நம்பர் பிளேட்கொண்ட கார்களில் பயணம் செய்பவர்களுக்கு, டோல் பில் என்பது மிகவும் முக்கியம். MH ரிஜிஸ்ட்ரேஷன் கார் வைத்திருந்த என் நண்பர், டோல் பில் இல்லாததால், நெடுஞ்சாலை RTO-வில் 50,000 ரூபாய் வரை தண்டம் அழுதார்.

திருச்சியில் நன்றாகத் தூங்கினேன். புகைப்பட நிபுணர் உற்சாகமாகக் கிளம்பினார். வழக்கம்போல பிரேக்ஃபாஸ்ட்டை ஸ்லோவாகவே முடித்து, லேட்டாகத்தான் கிளம்பினேன். ஸாரி, கிளம்பினோம். முசிறி, தொட்டியம் வழியாக கார் பறந்தது. மதியம் வந்திருந்தது. `பசிக்குது பாஸ்’ என்பதுபோல வயிற்றைத் தடவி குறிப்பால் உணர்த்தினார் புகைப்பட நிபுணர். `அட, லன்ச் வந்திடுச்சு!’ வேலைன்னு வந்துட்டா வேலைக்காரனாக மாறிவிடும் என்னைப் பற்றித் தெரிந்துதான், அவர் ஞாபகப்படுத்தியிருப்பார். நெடுஞ்சாலையில் செல்பவர்கள் ஹோட்டல்களில், மோட்டல்களில் நுழைந்து தண்டம் அழுவதைவிட, நல்ல ஆப்ஷன் சொல்கிறேன். `மண்பானைச் சமையல்' என்று போர்டு தென்பட்டால், தைரியமாக உள்ளே நுழையலாம். நாமக்கல் செல்லும் பாதை முழுக்க மண்பாண்டச் சமையல் குடிசைகள் ஏராளம். அதுவும் அசைவப் பிரியர்களுக்கு சிக்கன், மட்டன், மத்தி மீன் குழம்பு என்று மத்தியான சாப்பாடு, செ`மத்தியான’ சாப்பாடுதான். நீங்களே ஒரு நாட்டுக்கோழியைத் தேர்ந்தெடுத்து சூப், குழம்பு, வறுவல் எனப் பொறுமையாக உண்டு கழித்துவிட்டுச் செல்லலாம். `ஜிஎஸ்டி-தான் குறைஞ்சிடுச்சே’ என்பவர்களுக்கு, நல்ல ரெஸ்டாரன்ட்களும் இருக்கின்றன.

நாட்டுக்கோழி ஏப்பம் வந்தது. அடுத்து, சேந்தமங்கலம் என்றோர் ஊர் வந்தது. பஸ்ஸில் வருபவர்களுக்கு சரியான ஆப்ஷன், சேந்தமங்கலம். நாமக்கல் அல்லது  சேந்தமங்கலத்திலிருந்து பேருந்து வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சேந்தமங்கலம் தாண்டி 15 கி.மீ-க்கு முன்பாகவே மொத்த மலையும் தெரிய ஆரம்பிக்கிறது.

கார்களில் வருபவர்களுக்கு ஒரு டிப்ஸ். தமிழகத்தில் செம ட்ரிக்கான மலைப்பாதையைக் கொண்டது கொல்லிமலை. எத்தனை வளைவு நெளிவுகள்... ஏற்ற இறக்கங்கள்! கொண்டை ஊசி என்பது, கொல்லிமலைக்குத்தான் பொருந்தும். `இப்போதான் கார் வாங்கிப் பழகிட்டிருக்கேன். அப்படியே கொல்லிமலைக்கு ஒரு ரவுண்ட் அடிக்கலாம்'னு என்று யாராவது நினைத்திருந்தால், சேந்தமங்கலத்திலேயே `யூ-டர்ன்’ அடித்துவிடுங்கள். வாகனம் ஓட்டப் பழகுவதற்குச் சரியான இடம் அல்ல கொல்லிமலை. இங்கு, நீங்கள் ஒருமுறை பாதுகாப்பாக கார் ஓட்டிவிட்டால், உங்களைப்போல திறமையான ஓட்டுநர் எவரும் இல்லை.

செக்போஸ்ட் இருந்தது. எம்.எல்.ஏ-க்கள் இல்லாத கூவத்தூர் ரிசார்ட் மாதிரி காலியாகவே இருந்தது. ``கீழே வருவதற்கு டைமிங் உண்டா’' என்று விசாரித்தேன். ``அப்படி ஏதும் இல்லை'' என்றார்கள். காரவள்ளியிலிருந்து மலைப்பாதை ஆரம்பித்தது. சும்மா இல்லை; மொத்தம் 70 கொண்டை ஊசிகள். 4 மீட்டருக்கு மேற்பட்ட செடான் கார் என்றால், அதன் டர்னிங் ரேடியஸ் மலைத்திருப்பங்களில் பத்தாது. ட்ரக், பஸ் போன்ற பெரிய வாகனங்கள், கொல்லிமலை அடிவாரமான காரவள்ளி வரைதான் அனுமதிக்கப்படுகின்றன. சில 100/150 சிசி பைக் ரைடர்கள் திணறிக்கொண்டிருந்தார்கள். நான், சில இடங்களில் ரிவர்ஸ் வருவது, அப்புறம் மேலேறுவது என பழக்கமாக்கிக்கொண்டேன். மலைச் சாலைகளில் ஏறும் வாகனங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழக டிரைவர்கள் இதில் கவனமாக இருந்தது வியப்பு! இறங்கும்போது, இது எனக்கும் பொருந்தும். தயவுசெய்து, மலையில் மேலேறுபவர்களுக்கு வழிவிடுங்கள்.

பரீட்சைக்குப் போகும் மாணவனின் மனநிலையில் இருந்தேன். அபூர்வமான மூலிகைகள், குள்ளர் குகை, சிறுதானியங்கள், மூச்சு முட்டும் மூலிகை அருவிகள் என கொல்லிமலையைப் பற்றி ஏற்கெனவே கூகுள் செய்திருந்தேன். கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 1,300 மீட்டர் உயரம் என்றார்கள். மலை உச்சியிலிருந்து பார்த்தால், பச்சை பச்சையாக இச்சையைத் தூண்டியது மொத்த அழகும். சாயங்காலத்துக்குள்  70 கொண்டை ஊசிகளையும் தாண்டியிருந்தேன்.

செம்மேடு வந்திருந்தது. இதுதான் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். அழகிய பள்ளத்தாக்கிலிருந்து எட்டிப்பார்ப்பதுபோல இருந்தது ஊர். இந்தக் கிழக்குத்தொடர்ச்சி மலையில் வெயிலுக்கு என்ட்ரி போர்டே இருக்காதுபோல! செம குளிர். பழைய ஹாலிவுட் படங்களில் வரும் வின்டேஜ் கிராமம்போல இருந்தது. ஒன்றிரண்டு ஹோட்டல்கள், ஒரே ஒரு பஸ் ஸ்டாண்ட், அதில் ஒரே ஒரு பஸ் நின்றது. ``இதான் கடைசி பஸ்’’ என்றார்கள். ஊரில் ஏதோ ஒரு வாசம் அடித்துக்கொண்டே இருந்தது. மனித மணம் குறைவு என்பதால், மாசுக்குறைபாடே இல்லாமல் இயற்கை மணத்துடன் நிறைந்திருந்தது செம்மேடு.

கொல்லிமலைக்கு சீஸன் டைம் என்ற ஒன்றே கிடையாது. எனவே, சுற்றுலாவாசிகள் தங்குவதற்கு எப்போதுமே பிரச்னை வந்ததே இல்லையாம். ரூம் விசாரித்தேன். என்னைப் போன்ற முன்ஜாக்கிரதைப் பேர்வழிகளைப் பார்த்து, `போயா லூஸு' என்பதுபோல பல்லிளித்தன காலியாக இருந்த சில காட்டேஜ்கள். நான், ஏற்கெனவே ரூம் புக் செய்திருந்தேன். 600-லிருந்து 1,500 வரை ரூம்கள்  கிடைக்கின்றன. செம்மேட்டில் இருந்த `வசந்த மாளிகை’ எனும் ஹோட்டலில் குளிரக்குளிர பரோட்டாவைப் பிய்த்துப்போட்டு, ரூமில் தஞ்சம் புகுந்தோம்.

திடீரென இரவில் கண்விழித்தேன். கனவில் கொல்லிப்பாவை வந்தது. நான் ஸ்டேட் போர்டு என்பதால், பள்ளியில் கொல்லிப்பாவை பற்றிப் படித்தது ஞாபகம் வந்திருக்கலாம். மற்றபடி CBSE மாணவர்களுக்கு பாரி, ஓரி, கொல்லிப்பாவை எல்லாம் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. `பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல’ என்று ரஜினிக்கு முன்பே, பள்ளி வயதிலேயே எனக்கு பன்ச் டயலாக் சொல்லி மிரட்டியது கொல்லிமலைதான். `இங்கே போறவங்களை எல்லாம் அந்தக் கொல்லிப் பேய் கொன்னுடுமாம்’ என்று பயமுறுத்தி இருந்தார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. இங்குள்ள மூலிகைகளைக் காப்பதற்காக சித்தர்கள் செய்த ட்ரிக்.

மறுநாள் ரெஃப்ரெஷ்மென்ட், அதே வசந்த மாளிகையில்தான். வழக்கம்போல, குளு குளு தோசை. வல்வில் ஓரி எனும் மாவீரன் ஆண்ட இடம் கொல்லிமலை. ஒரே அம்பில் யானை, புலி, கலைமான், பன்றி, உடும்பு என்று  ஐந்து விலங்குகளைப் பதம்பார்த்த வில்லாளன். மலைப்பாதையில் வல்வில் ஓரி பற்றி ஓவியம் வரைந்திருந்தார்கள். இங்கே, ஓரிக்குத் திருவிழாகூட நடக்கிறது. செம்மேட்டின் நடுவில் ஓரிக்குச் சிலை வைத்திருக்கிறார்கள். ஊர்க்காரர் ஒருவரிடம் விசாரித்தேன். ``ஆகஸ்ட் மாதம்தான் முடிஞ்சது’’ என்று எனக்காக நிஜமாகவே வருத்தப்பட்டார்.

அப்படியே வலதுபுறத்தில் வண்டியைத் திருப்பினேன். ``ஏதோ வியூ பாயின்ட் இருக்குன்னு சொன்னாங்களே...’' என்று விசாரித்தேன். சீக்குப்பாறை, சேளூர், கோயிலூர் என மூன்று வியூ பாயின்ட்களைக் காட்டினார்கள். பில்லரிலிருந்து பார்த்தால், சில ஆயிரம் அடிகளுக்குப் பரந்துவிரிந்து மனதைக் கொள்ளைகொண்டது கொல்லிமலை அடிவாரம். குழந்தைகளைக் கூட்டிச் செல்பவர்கள், ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பு ஏதும் இல்லை.

கொல்லிமலையில் ரொம்ப ஃபேமஸ், அரப்பளீஸ்வரர் ஆலயம். 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயிலை அந்தக் காலத்தில் எப்படிக் கட்டியிருப்பார்கள் என்று கோயிலைச் சுற்றிச்சுற்றி வந்து இன்ஜினீயர்போல யோசித்தேன். `டைம் மெஷின் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்’ எனத் தோன்றியது. ராசிபுரத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு, அரப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து சுரங்கப்பாதை ஒன்று அந்தக் காலத்தில் கட்டியதாகச் சொல்கிறார்கள். ``இன்னும்கூட இருக்கு!’’ என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னார் ஒரு முண்டாசுப் பெருசு. அருவியில் குளிக்க, மலை ஏற என்பதைத் தாண்டி அரப்பளீஸ்வரர் கோயிலுக்காகவே சில பக்தர்கள் கொல்லிமலைக்கு மலையேறுகிறார்கள்.

`ஹிஸ்டரி, கோயில்னா நமக்கு அலர்ஜிங்க’ என்பவர்களுக்காகவே இருக்கிறது ஆகாச கங்கை அருவி. 140 அடி உயரத்தில் ஆகாசத்திலிருந்து கொட்டுவதுபோல இருப்பதால், இதற்கு `ஆகாச கங்கை அருவி' என்று பெயர். இந்த அருவிக்கும் சீஸன் இல்லையாம். `வெச்சா பரட்டை; சிரைச்சா மொட்டை’ என்பதுபோல  சில அருவிகள், சில நேரங்களில் `கரகாட்டக்காரன்' சண்முக சுந்தரம்போல ஓவராகப் பொங்கும்; பல நேரங்களில் கோவணத் துணிபோல தொங்கும். ஆகாச கங்கை அப்படி அல்ல. திருமண வீட்டில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி எந்நேரமும் வேலைபார்த்துக்கொண்டே இருக்கும் தந்தைபோல, 24/7 விழுந்துகொண்டே இருக்கிறது ஆகாச கங்கை. 

`நோ பெய்ன்; நோ கெய்ன்’ என்பதுபோல, ஆகாச கங்கையை அசால்ட்டாக அடைய முடியாது. வாசலில் இருக்கும் அரப்பளீஸ்வரர் கோயிலில் காரை பார்க் செய்துவிட்டு, குளிர் தோசை செமிக்கும் அளவுக்கு 1,200 படிகள் இறங்கித்தான் ஆகாச கங்கையில் தஞ்சமடைந்தேன். பாதி படியிலேயே சிலர், எதிர்க்கட்சிக்காரர்களிடம் அடிவாங்கிய வண்டுமுருகன்போல சுருண்டுகிடந்தார்கள். ``இறங்கும்போது ஒண்ணும் தெரியமாட்டேங்கு; ஏறும்போது மூச்சு வாங்குதுடே!’’ என்றார் ஒரு குடும்பத் தலைவர். திருநெல்வேலியில் இருந்து வந்திருப்பார்கள் என்று நான் நினைத்தது சரியாக இருந்தது. ``எங்கூர்ல தாமிரபரணி ஆத்துல குளிக்கிறகணக்கா சுகமாத்தாம் இருக்கு. ஆனா, ஏற முடியலை பார்த்துக்கிடுங்க!’’ என்றார். இவர்களுக்காகவே, மேலே கோயில் வாசலில் சிற்றருவி ஒன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். அடம்பிடிப்பவர்களை ‘வாக்கிங் அட் ஓன் ரிஸ்க்’ என்று எச்சரித்துதான் அனுப்புகிறார்கள்.

அய்யாற்றிலிருந்து விழும் அருவி நீரைத் தலைக்கு வாங்கினால், ‘தொம் தொம்’ என ஆசீர்வசிப்பதுபோலவே இருக்கிறது. 300 அடி என்றார்கள். எனக்கு நிறைய அடி விழுந்தது. அண்ணாந்து மேலே பார்த்தேன். ‘ஆகாச கங்கைனு சரியாகத்தான் பேர் வெச்சிருக்காங்க’ என்று நினைத்துக்கொண்டேன்.

அருவியை ஒட்டினாற்போல சருகுகளில் சறுக்கியபடி லேசாக நடந்துபோனால், ஒரு குகை தெரிந்தது. பாம்பாட்டிச் சித்தர் குகை என்றார்கள். சித்தர்கள் காலத்தில் இந்தப் பாம்பாட்டிச் சித்தர் ரொம்ப ஃபேமஸ்போல. அவர் இந்தக் குகையில் தங்கியிருந்ததால், அவர் பெயரையே இந்தக் குகைக்கு வைத்துவிட்டார்கள். ‘மனிதர் உணர்ந்துகொள்ள’ என்று சவுண்டு விட்டுப் பார்த்தேன். `குணா' குகைபோல எக்கோ அடித்தது.

மறுபடியும் 1,200 படி மேலே ஏறுவதற்கு வார்ம்-அப் செய்துகொண்டேன். இந்த முறை நான் வண்டுமுருகன் ஆனேன். ``வேற ஏதும் அருவி இருக்கா?’’ என்று விசாரித்தேன். `மாசிலா அருவி' என்று ஓர் அருவியைக் காட்டினார்கள். தான் வரும் வழியெல்லாம் இருக்கும் மூலிகைகளைக் கட்டியணைத்து, அவற்றின் சிறப்புகளைத் தன்னிலடக்கி, ஸ்படிகம் போன்ற தண்ணீரைத் தரும் அருவி என்பதால், மாசிலா அருவி. ஆகாச கங்கைபோல பிரமாண்டமாக இல்லை என்றாலும் அருவிக்கான வசீகரத்துக்குக் குறைவில்லை.  தண்ணீர்ப் பஞ்சத்தில்தானே அடிக்கடி குளிக்கக்கூடாது? அருவிக்கு இது பொருந்தாது. மீண்டும் அருவிக் குளியல். தலை நனைக்கும்போதே ஆனந்தமாக இருந்தது. ஒரு மகிழ்ச்சியான விஷயம் - ஆகாச கங்கைபோல, படிகளெல்லாம் இறங்கி மூச்சுவாங்க வேண்டியதில்லை. இது தவிர, வாண்டுகளுக்கு என்று ஓர் ஆப்ஷன் இருக்கிறது. `நம்ம அருவி'. வீட்டில் குழாயைத் திருக்கிவிட்டால் தண்ணீர் விழுமே... அதுபோல செல்லமாக விழுவதுதான் நம்ம அருவியின் ஸ்பெஷல். இதற்கு சீஸன் உண்டு. கோடைக்காலங்களில் ‘கிணறு காணாமல்போன’ கதையாக, அருவியையே தேடவேண்டியிருக்கும் என்றார்கள். 

`போட்டிங் போனா தேவலாம்’ என்று மனசு சொல்லியது. வாசலூர்ப்பட்டி என்கிற இடத்தில் போட்டிங் சவாரிக்கு ஆள் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். ரொம்ப மலிவாக இருந்தது. 50 ரூபாய்தான் கட்டணம் வாங்கினார்கள். செம ஜாலியாக இருந்தது. சின்ன ஏரியில் ஆபத்தே இல்லாத வாத்துப் படகில் மிதந்தபடி போனேன்.  சில இடங்களில் போட்டிங் போனால் டெரராக இருக்கும். இந்த போட்டிங், `தடால்’ என தண்ணீருக்குள் டைவ் அடிக்க வேண்டும்போல இருந்தது. `நீச்சல் தெரிஞ்சா பயமே தேவையில்லை’ என்று யாரோ தைரியமூட்டியதுதான் காரணம். ஏரியும் அவ்வளவாக ஆழமில்லை.

கொல்லிமலை, வாழவந்தி நாடு, வளப்பூர், அரியூர், தின்னனூர், குண்டூர், சேளூர், தேவனூர், ஆலந்தூர், குண்டுனி, திருப்புலி, எடநாடு என்று 16 நாடுகளைக்கொண்ட கொல்லிமலையில், 20,000-த்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள்.

அரிய மூலிகைகளின் புதையலாக இருப்பதால்தான், மற்ற அருவிகளைவிட கொல்லிமலை அருவிகளுக்கு ஒரு மதிப்பு. ஜோதிப்புல், ஆளை மறைக்கும் ஆதள மூலிகை, ஆயுளைக் கூட்டும் தினை, ராகி, வரகு என ஏகப்பட்ட சிறுதானியங்கள் கொல்லிமலையில் விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள் மலைவாழ் மக்கள். ஆதள மூலிகையைப் பற்றி ஓர் அதிசயம் சொன்னார்கள். இந்த மூலிகையின் இலையைக் கிள்ளி, அதிலிருந்து வரும் பாலுடன் கரும்பூனையின் முடியைப் போட்டு, செம்புப் பாத்திரத்தில் சுடவைத்து, மலைத்தேன் கொண்டு பிசைந்து, உருண்டையாக்கி, செப்புத் தகடு இந்திரத்தினுள் மூடி, வாயில் போட்டு அதக்கினால்... யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையலாம் என்றார்கள். கேட்கும்போதே மூச்சு முட்டியது... கண்ணைக் கட்டியது!

கொல்லிமலையில் ஓர் ஆச்சர்யம் - சமதளத்தில் பயிரிடப்படுவதைப்போல, இந்த மலைக் கிராமங்களில் நெல் பயிரிடப்படுகிறது. அதற்கான சீதோஷ்ணநிலைதான் இதற்குக் காரணம். ஓர் இடத்தில் மிளகு புரொடக்‌ஷன் நடந்துகொண்டிருந்தது. நாம் சூப்பர் மார்க்கெட் மற்றும் அண்ணாச்சி கடைகளில் வாங்கும் பாக்கெட் மிளகு, தேர்டு குவாலிட்டி என்கிற உண்மை அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. ``இதைச் சவைச்சுப் பாருங்க’’ என்று இனிப்பாகப் பேசி காரமான ஒரு குறுமிளகைக் கொடுத்தார், ஓர் அக்கா. ஃபர்ஸ்ட் குவாலிட்டிபோல. கண்கள் வியர்க்க ஆரம்பித்தன. அரைக்கிலோ 250 ரூபாய்க்கு ஃபர்ஸ்ட் குவாலிட்டியை பேக் செய்து கொண்டோம்.

இது தவிர அன்னாசிப்பழம், பலா, வாழை, மரவள்ளிக்கிழங்கு, ஏலக்காய், தேன் என வழியெங்கும் விளைவித்துக்கொண்டிருந்தார்கள். கொல்லிமலை மொத்தம் 250 ச.கி.மீதான் என்பதாலும், முட்டை வடிவில் இருக்கும் என்பதாலும்  நீங்கள் எங்கு காணாமல்போய் அலைந்தாலும், உங்கள் கார் தானாகவே செம்மேட்டில்தான் வந்து நிற்கும். கன்னாபின்னாவென சந்து பொந்துகளுடன் ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ‘ரூட் மாறிடுச்சோ’ எனக் கவலைப்பட வேண்டியதில்லை.

ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டைமில் லன்ச் முடித்தோம். டூர் முடித்துவிட்டு வந்தது தெரியாமல், ``சார், கார் வேணுமா? டவேரா சார்... 6 பேர் சார்... 6 இடம் சுத்திக் காண்பிக்கிறோம்... 1,700 ரூபாய்தான் சார். உங்களுக்காக கம்மி பண்ணிக்கலாம் சார்’’ என்று சுற்றிவளைத்தார்கள் கைடுகள். பஸ்களில் வருபவர்களுக்கு இவர்கள்தான் சரியான ஆப்ஷன். நாம் கார் கஸ்டமர்கள் என்பதைத் தெரிந்துகொண்டதும், அவர்கள் முகம் வாடியது. நல்ல கஸ்டமர்கள் கிடைக்க வேண்டிக்கொண்டேன்.

செம்மேட்டிலிருந்து மலை இறங்க ஆரம்பித்தேன். மலை ஏறும்போது கனவுகளைச் சுமந்து ஏறியவன், இப்போது நினைவுகளைச் சுமந்து இறங்கிக்கொண்டிருந்தேன்.

மற்ற பாகங்கள்வாகமன் / சைலன்ட் வேலி

அடுத்த கட்டுரைக்கு