Published:Updated:

நீதி கிடைக்கும் வரை போராடுவேன்!

நீதி கிடைக்கும் வரை போராடுவேன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

''சென்னைதான் சொந்த ஊர். உங்கள் மூலமா தமிழர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி!'' - சகஜமாகப் பேசுகிறார் அருணா ராய். 1968-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இவரின் உழைப்பு அசாத்தியமானது. தகவல் பெறும் மக்கள் உரிமைக்கான தேசிய அமைப்பின் தலைவர், தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர், சமூக சேவைக்காக மகசேசே விருது பெற்றவர், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவர் எனப் பல முகங்கள் இவருக்கு. லோக்பால் வரைவு குறித்து இளைஞர்களுடன் விவாதிக்க சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன்.

நீதி கிடைக்கும் வரை போராடுவேன்!

 ''தி.நகரில்தான் பிறந்தேன். அப்பாவுக்கு டெல்லியில் அரசு வேலை. நான் இங்கே பாட்டி வீட்டில் வளர்ந்தேன். கத்தோலிக்கப் பள்ளிப் படிப்பு, கலாஷேத்ராவில் பரதம் என இளமைக் காலம் சென்னையில்தான் கழிந்தது. 1968-ல் ஐ.ஏ.எஸ்., தேறினேன். 1974 வரை ஏழே ஆண்டுகள்தான் பணியில் இருந்தேன். ஆனால், ஒவ்வொரு நாளும் சவால்கள். பிறகு, சமூகச் சிந்தனைகொண்ட சிலருடன் சேர்ந்து, 'மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதனா’ என்ற அமைப்பின் கீழ் தொழிலாளர், உழவர்களைத் திரட்டினோம். 'உழைப்புக்கு உரிய கூலி’ என்ற கோரிக்கையுடன் நிலச்சுவான்தார்களுக்கு எதிராக முதல் போராட்டத்தை ராஜஸ்தானில் தொடங்கினோம். முதல் போராட்டமே வெற்றி. அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தின் வரவு-செலவுக் கணக்குகளைக் காட்டச் சொன்னோம். 'முடியாது’ என்றார்கள். 'கொன்றுவிடுவோம்’ எனத் தொடர்ந்து மிரட்டல்கள். ஆனாலும், சளைக்காமல் கேள்விகள் கேட்டோம். பதில் இல்லை. அன்று துவங்கியதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கான போராட்டம். அரசு சர்வாதிகாரத்தை எதிர்கொண்டதுதான் அதில் இருந்த சவால்.

இப்போது இருப்பதுபோல அன்று மீடியா ஆதரவும் எங்களுக்குக் கிடையாது. சுவர்களிலும் துணிகளிலும் எழுதி மக்களிடம் எங்கள் போராட்டத்தைக் கொண்டுசென்றோம். இன்று மீடியா பெரும்பான்மைக்குக் குரல் கொடுக்கிறது. அண்ணா ஹஜாரேயின் ஆர்ப்பாட்டத்துக்குக் கிடைத்த வரவேற்பை நீங்களும் பார்த்திருப்பீர்களே? ஆனால், 10 ஆண்டுகளாகத் தொடரும் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்தை ஏன் மீடியா ஆதரிக்கவில்லை? முன்பு இரண்டு சாராரின் கருத்துக்களைக் கேட்டு, அதை அலசி இறுதியாகத் தன் கருத்தைப் பதிவு செய்யும் பத்திரிகைகள் இருந்தன. ஆனால், இன்று ஒன்றிரண்டு பத்திரிகைகளைத் தவிர, மற்றவை எல்லாம் 'ஒப்பீனியன்’ எனும் கருத்துச் சொல்லிகளாகவே இருக்கின்றன. இதனால், தாங்கள் எந்த நிலை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு மக்களுக்கு விடை தெரியவில்லை. திடீரென்று முளைத்திருக்கும் ஹஜாரேவை அனைவரும் வியப்புடன் பார்க்கின்றனர். ஆனால், அவர் மேற்கொள்ளும் வழிமுறைகள் தவறானவை. நாங்கள், ஹஜாரே, அரசு என மூன்று தரப்புகளும் முன்வைக்கும் லோக்பால் வரைவுகளுக்கு இடையே நிறைய வேற்றுமைகள் உள்ளன. நாடாளுமன்றம், நீதித் துறைக்கு மேலான அதிகாரம் உடைய அமைப்பாக லோக்பாலை உருவாக்க நினைக்கிறார் ஹஜாரே. ஆனால், லோக்பால் அமைப்பில் இருக்கும் குறைபாடுகளை யார் சுட்டிக்காட்டுவது? அதனால்தான் பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதான ஊழல்களை விசாரிக்கத் தனி ஆணையம், நீதித் துறையை விசாரிக்கத் தனி ஆணையம் உருவாக்க வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தால் 153 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அந்தச் சட்டம் மேலும் வலுவானது. அதேபோல இந்த லோக்பால் வரைவுகளும் விவாதிக்கப்பட வேண்டும்.

நீதி கிடைக்கும் வரை போராடுவேன்!

'எல்லாருமே வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகுதானே சமூகத்துக்கு வருகிறீர்கள்?’ எனக் கேட்கிறார்கள். ஆனால், நான் ஆட்சிப் பணியில் இருந்தபோதே, அரசு அளித்திருக்கும் சுதந்திரத்தை மீறி சமூகத்துக்காக எதையும் செய்ய முடியவில்லை என உறைக்க, என் பணியை ராஜினாமா செய்துவிட்டு, முழு வீச்சில் சமூகப் பணியில் களம் இறங்கினேன். என் கணவரும் என்னைப்போன்று ஒரு சமூகப் பணியாளர். ரத்த உறவாக எனக்குக் குழந்தைகள் இல்லை. ஆனால், நாடெங்கும் எனக்கு நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். கடைசி இந்தியனுக்கும் நீதி கிடைக்கும் வரை என் போராட்டம் தொடரும். ஆனால், அது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்!'' என்கிற அருணா ராயின் வார்த்தைகளில் அவ்வளவு அழுத்தம்!

- ந.வினோத்குமார்,படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு