##~##

மிழ் சினிமாவின் அழகான, அன்பானஅம்மா சரண்யா பொன்வண்ணன், தான் வளர்ந்த கோடம்பாக்கக் கதை சொல்கிறார்.

''அப்பா ஏ.பி.ராஜ் மலையாளப் பட இயக்குநர். 1970-ல் 'எழுதாத கதை’ படத்துக்காகத் தேசிய விருது பெற்றவர். அம்மா சரோஜினி. ஜெயபால், மனோஜ்னு ரெண்டு அண்ணன்கள். கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துலதான் ஆரம்பத்துல குடியிருந்தோம். அப்புறம் டைரக்டர்ஸ் காலனிக்கு மாறினோம். ப்ளஸ் டூ வரை ஃபாத்திமா ஸ்கூலில் படிச்சேன். கன்சர்வேடிவ் கத்தோலிக்கக் கிறிஸ்டியன் குடும்பம் என்பதால், எங்கேயும் அதிகமா வெளியே போனது இல்லை. ஃப்ரெண்ட்ஸ் வந்தாகூட ஹால்லயே உட்காரவெச்சுப் பேசி அனுப்புற அளவுக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஒருவேளை என் வீடு, என் பள்ளினு சொன்னா, இன்னும் விரிவாப் பேசியிருப்பேன்.

என் ஊர்!

ஸ்கூல் டைம்ல நல்லா பாட்டுப் பாடுவேன்.டீச்சர் லாம் நைட்டிங்கேல், எஸ்.ஜானகினு செல்லமா கூப்பிடுவாங்க. போரடிச்சா, என்னைப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. ஸ்கூல்ல பாட்டுப் போட்டின்னா முதல் ஆளா நிப்பேன். இப்ப அந்தக் குரல் எங்க போச்சுன்னே தெரியலை. குழந்தைகள் தினத்துக்கு மட்டும் கலர் டிரெஸ்ல ஸ்கூலுக்குப் போவோம். யாரோட டிரெஸ் வித்தியாசமா இருக்குனு எங்களுக்குள்ள பெரிய போட்டியே நடக்கும். ஒருமுறை அப்படி தலைமுடியை  மடக்கிக் கட்டி ஸ்பெஷல் டிரெஸ்ல போனேன். ' 'கல்யாணப் பரிசு’ சரோஜாதேவி மாதிரி இருக்கே’னு எல்லாரும் புகழ்ந்தாங்க. அன்னியில இருந்து ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னை 'எஸ்.டி’னு கூப்பிட ஆரம்பிச் சுட்டாங்க. எஸ்.டி-ன்னா, சரோஜாதேவியின் ஷார்ட் ஃபார்ம்.

என் ஊர்!

ஃபிரெஞ்ச் கற்றுத் தந்த அமலா டீச்சர் மறக்க முடியாதவங்க. ஃபிரான்ஸ்ல இருந்து வந்த சிஸ்டர்ஸை மேடையில் ஃபிரெஞ்ச்லதான் வர வேற்றேன். 10-ம் வகுப்பில் நான்தான் ஃபிரெஞ்ச்ல முதல் மார்க். நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரியில்  பி.எஸ்.சி-நியூட்ரிஷன் படிச்சேன். ப்ளஸ் டூ வரை ஒரு முறைகூட பஸ்ல போனது இல்லை. காலேஜுக்குக்கூட அப்பா கார்லதான் அழைச்சுட்டுப் போவார். பஸ்ல போக ஆசைனு சொன்னதும், வீட்ல காச்மூச்னு கத்திட்டாங்க.  ஒருவழியாச் சமாளிச்சு பஸ் பயணத்துக்கு பெர்மிஷன் வாங்கினேன். அப்படிப் போகும்போதுதான் ஒருநாள் ஒரு பெண் பத்திரிகை போட்டோகிராஃபர் அட்டைப் படம் போடணும்னு பல நாள் துரத்தி, வீட்லயும் சம்மதம் வாங்கி, போட்டோ எடுத்து இதழ்ல அட்டைப் படமா போட்டாங்க. அதைப் பார்த்து வந்ததுதான் 'நாயகன்’ பட வாய்ப்பு.

என் ஊர்!

'கருத்தம்மா’வில் நடிக்கும்போது பொன்வண்ணன் என் ஃப்ரெண்ட். 'பசும்பொன்’ல நடிச்சு முடிக்கும்போது  ஒரு நாள், 'நான் படம் எடுக்குறேன். கால்ஷீட் வேணும்’னு கேட்டார். 'எவ்வளவு நாள்?’னு கேட்டேன். '70 வருஷம்’ன் னார். அப்பதான் அவர் கல்யாணத்தைப்பத்திப் பேசுறார்னு புரிஞ்சுது. பிறகு, ரெண்டு வீட்டுச் சம்மதத்தோட இந்து, கிறிஸ்டியன் முறைப்படி கல்யாணம் முடிஞ்சுது. 'குழந்தை களை ஞானஸ்நானம் பண்றேன்னு கோடம்பாக்கம் ஃபாத்திமா அன்னைகிட்ட வேண்டிக்கிட்டேன்’னு இவர்கிட்ட சொல்ல, 'தாராளமா பண்ணலாம்’னார். டைரக்டர்ஸ் காலனிக்குப் பக்கத்து ஃப்ளாட்லதான் நானும் இவரும் குடி வந்தோம். ரெண்டு தட்டு, ரெண்டு டம்ளரோட எளிமையா ஆரம்பிச்ச வாழ்க்கை. டைரக்டர்ஸ் காலனி வீட்டில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம இறந்துபோன சம்பவம் இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது. எப்படியாவது அந்த வீட்டை விலைக்கு வாங்கணும்னு நினைச்சேன். முடியாமப் போச்சு. பிறகு, விருகம்பாக்கத்துக்குக் குடிவந்துட்டோம். ஆனால், கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியை நான் ரொம்பவே மிஸ் பண்றேன்!''

- க.நாகப்பன், படங்கள்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு