Published:Updated:

‘பார்த்த இடத்திலெல்லாம் நீதானே கண்ணம்மா!’ - காதலைக் கொண்டாடும் பாரதியின் பிறந்தநாள் பதிவு!

‘பார்த்த இடத்திலெல்லாம் நீதானே கண்ணம்மா!’ - காதலைக் கொண்டாடும் பாரதியின் பிறந்தநாள் பதிவு!
News
‘பார்த்த இடத்திலெல்லாம் நீதானே கண்ணம்மா!’ - காதலைக் கொண்டாடும் பாரதியின் பிறந்தநாள் பதிவு!

‘பார்த்த இடத்திலெல்லாம் நீதானே கண்ணம்மா!’ - காதலைக் கொண்டாடும் பாரதியின் பிறந்தநாள் பதிவு!

வாழ்ந்த தடம், எட்டிய உயரம் என எதையும் எண்ணாமல் காலங்கள் கடந்து நிற்பவர்களில் வெகு சிலர் மட்டுமே நமக்கு நெருக்கமானவர்களாக உடன்வருவார்கள். அப்படி உடன்வருபவர்கள் ஒன்று ஆசானாக இருக்க வேண்டும். இல்லையேல் துணையாக இருக்க வேண்டும். தமிழ் கற்றவர்கள் ஆசான்களாக இருப்பதைவிட தோழனாக, வழித்துணையாக இருக்கும்பொழுது எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் வெகு இயல்பாக ஒருமையில் அழைத்துவிட முடிகிறது. வெறும் பாடப்புத்தகங்களின் வாயிலாக மட்டுமே ஒரு தேர்ந்த பிம்பமாக, பாரதியாராக பரிட்சயமாக்கப்பட்ட இந்த பாரதி வள்ளுவனைப்போல, கம்பனைப்போல நெருக்கமானவன். பாரதிக்குப் பால் பாகுபாடு கிடையாது. இங்கு பாரதி அண்ணன்களும் இருக்கிறார்கள் பாரதி அக்காள்களும் இருக்கிறார்கள். 

செந்தமிழின் மகா கவிஞன், சுதந்திர வேட்கை சூழ்ந்திருந்த கலகக்காரன், சமுதாய சீர்திருத்தத்தின் புரட்சிக்காரன் என்பதையெல்லாம் தாண்டி நம் வீட்டில் ஒருவனாக, நம்மோடு சுற்றித்திரியும் சக நண்பனாக, காதலனாக, ரசிகனாக அடம்பிடிக்கும் கோபக்காரனாக நம்மை ஒரு முகமூடிக்குள் பொருத்திப்பார்க்க ஏதுவான ஜீவனாக நம்முடன் பயணிப்பவன் இந்த பாரதி. சாதாரணமாக  ஏதேனும் ஒரு பள்ளியில் நடந்த மாறுவேடப்போட்டியின் ஆல்பத்தை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் அதனுள் ஒரு பாரதி கையை நீட்டிக்கொண்டு நிற்பான். தோற்ற மயக்கங்களைப் பாடியவனின் தோற்றமும்கூட மயக்கம்தான்.

அவன் கவிதைகள் தெரியாமல் இருக்கலாம். அவனது வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ளாமல் இருக்கலாம். பற்றிக்கொள்ள காரணமில்லாது திரிந்தாலும் அவன் பாரதி. முண்டாசு தோற்றமும் முறுக்கு மீசையும் ஒரு புரட்சிக்காரனது செயல் வடிவம். உண்மையாகச் சொல்லப்போனால் அது வெறும் காட்சிப்பிழை, கானலின் நீர். அவனுக்கான ரௌத்திரங்களாலும், புருவ உயர்த்தல்களாலும் அப்படிக் கட்டமைக்கப்பட்ட பிம்பம். ஆனால், அவனது முண்டாசுக்குள் ஒளிந்திருந்த பாமுகம் நிச்சயம் வேறாக இருந்திருக்க வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அகநானூறு படைத்த சங்கத் தமிழ் சமுதாயத்தின் நாத வேர் - காதல். காதலைக் கொண்டாடுவதில் பாரதியொன்றும் விதிவிலக்கல்ல. பாரதியை ஒரு நல்ல நேர்மையான, காத்திரமான, மென்மையான ரௌத்திரமான "காதலன்" என்ற ஒற்றைப்பதத்தில் அடைத்துவிடுவது எனக்கு மிகவும் இலகுவாக இருக்கிறது. ஏனென்றால் இந்தக் காதல்காரன் காதலாலும் ரசனைகளாலும் ஆட்கொள்ளப்பட்டவன். 

ஒரு பெண்ணை தன்னிலை மாறாது தன்னிலையில் தக்க வைத்துக்கொள்வதில் இருக்கிறது ஒரு ஆணுடைய காதல். திருவிழா கண்ணாடிக்கு அடம்பிடிக்கும் குழந்தைத்தனம் , பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுவனின் மனநிலை, ஆற்றங்கரையில் காத்திருக்கும் ஆணின் பெண்மனம், முதுமையில் அசையும் கொல்லைப்புறத்து சாய்வு நாற்காலி, அது எழுப்பும் வாழ்க்கையின் ஓசை என அனைத்தும் ஒருசேர கொண்டவை பாரதியின் காதல்.

ஒவ்வோர் ஆண் மனதுக்குள்ளும் ஒரு பெண்பிம்பம் அவரவர் ரசனைக்கேற்ப செதுக்கப்பட்டிருக்கும். அதற்கு பெயர் இருக்காது உருவம் இருக்காது. ஆனால், அதற்கான இருப்பு ஒரு பெண் கை கோத்திரும் நிலையைக் கொண்டிருக்கும். சகலமாக கோடை மழையில் நனையும்போதோ, இரவுநேர கடற்கரையில் கால் நனைக்கும்போதோ, பேருந்தின் கூட்ட நெரிசலில் யாரோ ஒரு கைக்குழந்தை நம்மைப்பார்த்து சிரிக்கும்போதோ, நமக்கு நாமே சமைத்து ருசி பார்க்கும்போதோ, மனதில் தோன்றுவதை இலக்கணங்கள் மீறி எழுதிவிடும்போதோ அந்தப் பெண்பிம்பம் நம்மை மீறி வெளிவந்து நமது விரல்களைத் தாங்கிக்கொள்ளும்.

அப்படியிருக்கும் பெண்பிம்பம் பாரதிக்குக் கண்ணம்மா. பாரதியென்று இல்லை; யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட இயற்கையான கண்ணம்மாக்கள் ஒரு குழந்தையாக காதலை காதலாக வெளிக்கொணர நிச்சயம் இருப்பார்கள்..

காதலுக்கு அளவீடென்று எதுவுமில்லை; ஒருவர் மீதான விருப்பத்துக்கு அளவென்று அனுமானித்து "என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும்" என்று கேட்பது பேரபத்தம். பாரதியெனும் காதல்க்காரனின் காதலும் அப்படிப்பட்ட அளவீடுகளைக் கடந்தது.

ஓர் ஆணுக்கு அவனுக்கான காதலை உணர்ந்துகொள்ள, அவனுக்கான காதலை வெளிப்படுத்த, அவனுக்கான பெண்ணை அடைந்துகொள்ள அவனுக்குள் ஒரு பாரதி தேவைப்படுகிறான். அதனால்தான் இன்று வரை இங்கு வாழும், உருவாகும், படைக்கப்படும் காதலிகள் அனைவரும் கண்ணம்மாக்களாகவே உருவகப்படுத்தப்பட்டுப் பாடப்படுகிறார்கள்.

"பாரதிக்குக் கண்ணம்மா நீயெனக்கு உயிரம்மா" என்று ஒரு பெண்ணுக்குக்கான காதல் உயிருக்கு நிகரென்று பாரதி - கண்ணம்மாவுக்கு ஒப்பிடுகிறார் கவிஞர் அறிவுமதி. கண்ணம்மாவை பாடிய அந்த பாரதியைப்போல சமீபத்தில் கண்ணம்மாவை அழகு பூஞ்சிலையாக்கி பாடியிருந்தார் நம் யுகபாரதி. அதில் ஒரு பெண்ணின் அழகை எழுதுவதற்கு "பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்" என்று எழுதியிருப்பார். அது அத்தனை உண்மை.

கண்ணம்மாவும் காதலும் வேறு வேறல்ல. காதலின் பொருள்வடிவமென பாரதி கண்டது கண்ணம்மாவைத்தான். 
கண்ணம்மா ஒரு பெண். மீசை வேண்டாமென பொட்டு வைத்து மனதில் வரைந்து வைத்த ஓவியம். வயது கடந்தவள் அவள். 
வைரமுத்து காதலின் செருக்கைச் சொல்ல "காதலின் திமிருக்கு பிறந்தவளே" என்று பாடியிருப்பார். அதுபோல கண்ணம்மா காதலால் பிறந்தவள்; காதலிலே சுகிக்கப்பட்டவள். இவள்தான் கண்ணம்மா என்று எங்கும் வரையறை செய்துவைக்கவில்லை அவன். கண்ணம்மாவை குழந்தையாக, குமரியாக, காதலியாக, மணப்பெண்ணாக, தெய்வமாக என அனைத்து நிலையிலும் அவனது அன்பெனும் ஞானக்கண்ணில் அவளை ரசித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறான். 

"சுட்டும்விழிச் சுடர்தான், -- கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி, -- கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?"

என்று சொல்வதில் இருக்கிறது பாரதியின் கண்ணம்மா மீதான விழியீர்ப்புப் பார்வையும் அது பாட்டாக மாறும் சாயலும்.

அதைப்போலவே இன்னொரு கவிதையில் மாலைநேரக் கடலையும் வானத்தையும் பார்த்திருந்து காத்திருக்கும் பாரதியிடம் பின்வந்து கண்களைப் பற்றிக்கொள்கிறாள் கண்ணம்மா.

"பாங்கினிற் கையிரண்டுந் தீண்டியறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன்,
ஓங்கி வருமுவகை யூற்றிலறிந்தேன்"

என்று கண்ணம்மாவின் பற்றுதலை அறிந்ததன் ஆக்கங்களைப் பாட்டாக அடுக்குகிறான்.

உலகத்தைக் காணும் கண்களைப் பின்னிருந்து பற்றி தனது உள்ளங்கையில் பாரதிக்கான உலகத்தைக் கொண்டுவந்த கண்ணம்மாவினைத் திமிரித் தழுவி, “என்ன செய்திசொல்” என்று வினவுகிறான். ஒரு காதலியின் காத்தலுக்கான திமிர் அவளது காதலனை கேள்விகளால் சூழ்ந்துகொள்வதில் இருக்கிறது. விதிவிலக்கற்ற விதிகள் இருக்கலாம். ஆனால், காதலின் நிலையில் கண்ணம்மாவும் காதலியே. 

நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? 
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
பெற்ற நலங்கள் என்ன?

என்று கேட்கும் கண்ணம்மாவுக்கு, "பார்த்த விடத்திலெல்லாம் -- உன்னைப் போலவே பாவை தெரியுதடீ" என்னும் பாரதி கேள்விகளிலிருந்து பதில் உரைக்கிறான்.

“நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
 நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;
 திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
 சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
 பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை.''

ஆம் அவன் கண்டதெல்லாம் கண்ணம்மாவின் முகம் மட்டும்தான். முகமின்றி பிறிதொன்றுமில்லை.

"நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!"
காதல் ஒரு சரணாகதி நிலை. பைத்தியத்தனத்தின் புனித உச்சம். உன்மத்த நதிகளின் ஊற்று. அதை உணர்ந்தவன் பாரதி,. உணர்த்தியவள் கண்ணம்மா. 
காதலில் களிப்பது வேறு. காதலை எண்ணி எண்ணி களிப்பது வேறு. அப்படி எண்ணிக்களிப்பதுதான் உண்மையான காதலென்றும் சொல்லலாம். பாரதி அப்படி எண்ணிக்களித்தான். கண்ணம்மா அப்படிப்பட்ட காதலி. 

பாரதியின் பிறந்தநாள் அழைப்பு

காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
காணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

ஆம். காதல் செய்வீர் உலகத்தீரே.