Published:Updated:

அரசின் மௌனம் கலையட்டும்!

அரசின் மௌனம் கலையட்டும்!

அரசின் மௌனம் கலையட்டும்!

துரை கிரானைட் கொள்ளை விவகாரம் மீண்டும் தலைப்புச் செய்திகளில்! இந்த முறை 'நரபலி’ என்பது கூடுதல் கவனஈர்ப்பாகவும், புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளைத் தோண்டி எடுக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மேற்கொண்ட போராட்டங்கள் பரபரப்பாகவும் பேசப்படுகின்றன. பல மலைகளை வெட்டிச் சாய்த்து, பல கண்மாய்களைச் சூறையாடி மதுரைப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட கிரானைட் கொள்ளை பேரதிர்ச்சி என்றால், நரபலி என்பது இன்னும் கொடும் அதிர்ச்சி! 

இயற்கை வளங்களைச் சுரண்டியவர்களைத் தண்டிக்கவேண்டியதும், அந்தச் சுரண்டலின் பரிமாணத்தை முழுமையாக விசாரித்து, மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டியதும் அரசின் பொறுப்பு. அந்த அரசின் கடமையைத்தான், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி என்ற வகையில் சகாயம் செய்கிறார். இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அப்படித்தான் செயல்பட முடியும். அவரைப் பாதுகாத்து, அவரது முனைப்பான செயல்பாட்டை அங்கீகரித்து ஊக்கப்படுத்த வேண்டிய அரசாங்கமோ, சகாயத்துக்குக் கடிவாளம் போடவே ஆரம்பத்தில் இருந்து முயன்றுவருகிறது.

ஒரு முறைகேட்டை விசாரிக்கும் அதிகாரிக்கு இதர அரசுத் துறைகள் ஒத்துழைக்க மறுக்கிறது என்றால், அரசு நிர்வாகமே பெரும் அளவில் சீழ்பிடித்திருக்கிறது என்றே அர்த்தம். இந்த விசாரணை நேர்வழியில் நடைபெற்றால், இன்னும் பல பூதங்கள் கிளம்பலாம் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது என்றே பொருள். அதனால்தான் அவர்கள் தொடக்கத்திலேயே முட்டுக்கட்டைகளைப் போடுகிறார்கள். நம் ஊரில் தேர்தல் அரசியல், தொழில் அதிபர்களிடம் நிதி வாங்கித்தான் நடத்தப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை. அவர்கள் நிதி கொடுப்பது எதற்கு... வள்ளல் எனப் பெயர் வாங்கவா? இல்லையே! இதுபோன்ற இக்கட்டான சமயங்களில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தங்கள் பக்கம் நிற்பார்கள் என்பதற்காகத்தான். அதைத்தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அரசின் மௌனம் கலையட்டும்!

நரபலிப் புகார்தான் புதியதே தவிர, கிரானைட் கொள்ளைப் பிரச்னையில் உயிர்ப்பலிக் குற்றச்சாட்டுகள் புதியவையே அல்ல. பல்லாயிரம் ஆண்டுகால மலைகளையே தங்கள் லாப வெறிக்காக பலி கொடுத்தவர்கள்தானே இவர்கள். கிரானைட் கொள்ளை என்பது, ஏதோ ஒருவரின் பண்ணை வீட்டில் ரகசியமாக நடந்தது அல்ல; ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் ஊரில், பல லட்சம் கண்கள் பார்த்திருக்க, ஆண்டுக்கணக்கில் மிகவும் வெளிப்படையாக நடந்த கொள்ளை. உள்ளூர் ஆட்சி நிர்வாகம் தொடங்கி தலைமைச் செயலகம் வரை ஒத்துழைப்பு வழங்கி இருக்காவிட்டால், இது சாத்தியமே இல்லை.

இந்த மொத்த வலைப்பின்னலைத் துண்டிப்பதும், அதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதும் மிக முக்கியமானது. அதற்கு முதலில் அரசு, தன் கனத்த மௌனத்தைக் கலைக்கட்டும். இவ்வளவு தூரம் இது அம்பலப்பட்ட பிறகும், இத்தனை துல்லியமாக ஒவ்வொன்றும் வெளிவந்த பிறகும், அரசு பேசா மடந்தையாக இருக்கக் கூடாது. கிரானைட் கொள்ளை விவகாரத்தில் ஒவ்வோர் அசைவையும் மக்கள் மன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். நடைபெறுவது வெளிப்படையான நீதி விசாரணைதான் என்பதை அரசு தன் செயல்பாடுகளால் நிரூபிக்கவேண்டிய தருணம் இது!