##~##

ளிமையும் எள்ளலும் இழையோடும் எழுத்தாளர்  க.சீ.சிவகுமார் தனது சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம், கன்னிவாடி பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 ''ஜூனியர் விகடனில் 'ஆதிமங்கலத்தின் விசேஷங்கள்’னு ஒரு தொடர் எழுதினேன். ஆதிமங்கலம்னு நான் குறிப்பிட்டது என் ஊர் கன்னிவாடியைத்தான். என் ஊர் மீது எனக்குப் பிரியம் அதிகம். அதனால்தான் நான் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு கன்னிவாடினு பேர் வெச்சேன்.

எங்க பகுதியில் கண்ணர் குலத்தோர் அதிக அளவில் வாழ்ந்தாங்க. அதனால், அந்தக் காலத்தில் இந்தப் பகுதிக்கு கண்ணர்பாடினு பேர். காலப்போக்கில் அதுதான் கன்னிவாடினு மருவிருச்சு. அண்டமா நதினு எங்க ஊர்ல ஒரு ஆறு இருக்கு. ஆனா, அதுல தண்ணியே வர்றது இல்லை. பெருசா நீராதாரம்னு சொல்லிக்க இங்க ஒண்ணும் இல்லை. பல ஏக்கர் பூமி தரிசாத்தான் கிடக்குது. மழை வந்தால்தான் வாழ்வு. தரிசு நிலங்கள் எல்லாம் மேகங்களைப் பார்த்துக்கிடக்கு.

என் ஊர்!

இந்தப் பூமியில கம்பு, சோளம்னு புஞ்சைப் பயிர்கள் மட்டும்தான் விளைவிப்போம். தமிழ்நாட்டின் பெரிய செம்மறியாட்டுச் சந்தை கன்னிவாடிச் சந்தைதான். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை

என் ஊர்!

கூடுற இந்தச் சந்தைக்குப் பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வருவாங்க. எங்க ஊர் மக்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். அதனால, எனக்கும் நகைச்சுவை உணர்வு ரத்தத்துல ஊறிப்போச்சு.

கன்னிவாடி மேல் நிலைப் பள்ளியில்தான் 12-ம் வகுப்பு வரை படிச்சேன். இந்தப் பள்ளி தொடர்ந்து 20 வருஷங்களாக 10-ம் வகுப்புத் தேர்வில் 100 சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்றுவருவது பெருமையான விஷயம். எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த மோகனாம்பாள் டீச்சர், பழனியப்பன், பால் சின்னையன், தட்சிணாமூர்த்தி ஆகிய ஆசிரியர்களை என்னால் மறக்க முடியாது. அவங்க பாடம் மட்டுமே எடுக்காமல், ஊரோட நல்லது கெட்டதுகள்ல கலந்துக்கிட்டு ஊரோடு ஐக்கியமாகி வாழ்ந்தாங்க.

எங்க ஊர்ல மிகப் பழமையான ஈஸ்வரன் கோயில் இருந்தது. அந்தக் கோயில் எங்க ஊரின் பொக்கிஷம். ஆனா, சில வருஷங்களுக்கு முன்னாடி ஈஸ்வரன் சிலையை யாரோ கடத்திட்டுப் போயிட்டாங்க. நாளடைவில் அந்தக் கோயிலும் அழிஞ்சுபோய், இன்னிக்கு நந்தி மட்டும்தான் இருக்குது. ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஈஸ்வரன் கோயிலையும் ஈஸ்வரனையும் தொலைத்த ஊர் கன்னிவாடி. ஊரின் இன்னொரு சிறப்பு, பொன் ஆண்டிச்சி அம்மன் கோயில். அந்தக் கோயிலுக்கு ஒரு வீடும் இருக்கு. அம்மன் வசிப்பதாக நம்பப்படுகிற வீடு அது. ஊருக்குள் அந்தக் கோயில் வீட்டைவிட, யாரும் உயரமா வீடு எழுப்பக் கூடாதுங்கிறது  கட்டுப்பாடு. அது இன்னைக்கும் நடைமுறையில் இருக்கு.

கன்னிவாடியில விஜய் கபடி அண்ட் கிரிக்கெட் குழு இருக்கும். அப்ப எல்லாம் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, கபடிப் போட்டிகள் எங்க ஊரில் ரொம்பப் பிரபலம். கன்னிவாடியில் இருந்து ஓலப்பாளையம் வரைக்கும் எக்கச்சக்கமான பனை மரங்கள் இருக்கும். மே மாசம் பள்ளிக்கூட விடுமுறை நாட்கள், பனை மரங்களுக்கு இடையேதான் எங்களுக்குக் கழியும். பனை மரத்து அடியிலேயே நுங்கு வெட்டி விற்பாங்க. எட்டணா கொடுத்தா, கை நிறைய நுங்கு அள்ளிக் கொடுப்பாங்க. ஆனா, இன்னிக்கு அங்க பனை மரங்களை எல்லாம் வெட்டிட்டாங்க. அந்த இடத்தைப் பார்க்கவே பரிதாபமா இருக்கு. பிழைப்புக்காக இப்போது நான் பெங்களூரில் வசித்தாலும் என் மனசு முழுக்க இருக்குறது கன்னிவாடிதான்!''

என் ஊர்!

- கி.ச.திலீபன், படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு