Published:Updated:

கையெழுத்தான கோடி... எத்தனை வரும் நாடி !

ஆ.விஜயானந்த்

மிழ்நாடு அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்ற நந்தம்பாக்கம் வணிக வளாகத்தின் ஓர் அரங்கில், 'எங்கள் மாநிலத்தில் நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். இதுவரையில் ஊரகத் தொழில் துறைக்கு என 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன. தாமதம் இல்லாமல் அனுமதி வழங்க அம்மா ஆணையிட்டுள்ளார்!’ என உரக்க முழங்கிக்கொண்டிருந்தார் தமிழ்நாடு ஊரகத் தொழில் துறை அமைச்சர் மோகன். அப்போது அரங்கில் இருந்து ஒரு குரல்... 'சிறுதொழில் தொடங்க அனுமதி கேட்டு ரெண்டு வருஷமாக அலைஞ்சுட்டு இருக்கேன். உங்க அதிகாரிகள் அலையவெச்சுட்டு இருக்காங்க. இந்த மாநாட்டுக்குப் பிறகாவது அனுமதி கொடுப்பீங்களா?’ என ஆதங்கத்துடன் கேட்டார்

 தனஞ்செயன். உடனே சுருதி இறங்கிய அமைச்சர், 'இனி அப்படி இருக்காது’ என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.

'சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு முதலீடுகள் குவிந்துவிட்டன’ என அரசு இயந்திரம் பெருமித அறிக்கை வாசித்துக்கொண்டிருந்தபோது, பொருளாதார வல்லுநர்கள் கவலையோடு விவாதித்தது இதுதான்... 'கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது நோக்கியா தமிழ்நாட்டில் கிளை திறந்தது. விவசாயிகளிடம் ஒரு ஏக்கர் நிலத்தை எட்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அதைச் செம்மைப்படுத்தி நாலரை லட்சம் ரூபாய்க்கு 210 ஏக்கர் நிலம் நோக்கியாவுக்குக் கொடுக்கப்பட்டது. மேலும் தண்ணீர், மின்சாரம், வரிவிலக்கு உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்பட்டன. ஆனால், சமீபத்தில் நோக்கியா ஆலை இழுத்து மூடப்பட்டது. அதுவும் மாநில அரசுக்கு 2,430 கோடி ரூபாயும் மத்திய அரசுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாயும் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக நோக்கியா மீது வழக்குகள் தொடரப்பட்டன. நிறுவனத்தில் பணியாற்றிய 6,000 பெண்கள் உள்பட 8,000 பேர் வேலை இழந்தனர். நோக்கியாவுக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக்கொடுத்த பாக்ஸ்கான் நிறுவனமும் மூடப்பட்டு, 22 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். ஆக, குறுகியகால நலன்களை தமிழர்களுக்கு அளித்துவிட்டு, பெரும் லாபம் சம்பாதித்துவிட்டு, நோக்கியா நஷ்ட விளைவுகளை நமக்கு அளித்துவிட்டு இடத்தைக் காலி செய்தது!

கையெழுத்தான கோடி... எத்தனை வரும் நாடி !

'தமிழ்நாடு, முதலீட்டுக்கு உகந்த மாநிலமா..? லட்சம் கோடிகளுக்குக் கையெழுத்தான (கவனிக்கவும்... 'கையெழுத்தான’... இன்னும் கோடிகள் இங்கு குவியவில்லை!) முதலீட்டு ஒப்பந்தங்களால் தமிழ்நாட்டுக்கு நன்மை விளையுமா?’ - முதலீட்டாளர்கள் மாநாடு எழுப்பும் இந்த இரு பிரதான கேள்விகளுக்குமான பதில்களை மேற்குறிப்பிட்ட சம்பவங்களில் இருந்தே கணித்துக்கொள்ளலாம்!

'முதலீட்டாளர்களின் சொர்க்கம் தமிழ்நாடு’ என்ற முழக்கத்தோடு 100 கோடி ரூபாய் படா பட்ஜெட்டில் படாடோபமாக அரங்கேறி இருக்கிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு. அஜினோமோட்டோ முதல் ஆட்டோமொபைல் வரையில் கண்காட்சிகள், மாநில அரசின் சாதனை விளக்க அரங்குகள், எரிசக்தி, ரசாயனம், மருத்துவம், தொழில்நுட்பம்  போன்ற பல்துறை சார்ந்த அரங்குகள் என இரண்டு நாட்களும் தலைநகர் சென்னையில் விழாக்கோலம்தான். இரண்டு நாள் மாநாட்டிலும் ஏகமாக வாரி இறைக்கப்பட்டன வாக்குறுதிகள்.

'குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டுவது மாநாட்டின் இலக்கு. ஆனால், 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வந்துவிட்டன. இதில் சரிபாதி தென் மாவட்டங்களுக்குப் போய்ச் சேரும்’ என அறிவித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.

கையெழுத்தான கோடி... எத்தனை வரும் நாடி !

'இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற ஓராண்டில் 26 நாடுகளுக்குச் சென்று பிரதமர் மோடி திரட்டிய முதலீடு 1.89 லட்சம் கோடி. ஆனால், எந்த நாட்டுக்கும் செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே இரண்டே நாட்களில் 'அம்மா’ திரட்டிய தொகை 2.42 லட்சம் கோடி. மோடியைவிட லேடி சூப்பர்!’ என ரத்தத்தின் ரத்தங்கள் குதூகலிக்க, 'கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டார்கள். ஆனால், அவற்றில் வந்தது சொற்ப சதவிகிதம்தான். 2016-ம் ஆண்டு தேர்தல் விளம்பரத்துக்காக ஆட்சியின் கடைசித் தருணத்தில், 'சாதிக்கப்போகிறேன்’ எனச் சவடால் பேசுவது நல்விளைவுகளை ஏற்படுத்துமா?’ எனக் கேட்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

இவற்றில் எதை நம்புவது? 'கையெழுத்தான சுமார் இரண்டரை லட்சம் கோடி முதலீடு நடைமுறையில் தமிழ்நாட்டில் விதைக்கப்படுமா?’  என்ற கேள்விக்கு விடை தேடினால், வழக்கம்போல ஆதங்கம் கலந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது!

அதையே வெளிப்படுத்துகின்றன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜின் வார்த்தைகளும்.

''எப்போதும் அந்நிய நேரடி முதலீடு சொன்னபடி வந்துவிடுவது இல்லை. ஏதோ இரண்டரை லட்சம் கோடி ரூபாயும் நாளைக் காலையே வந்து குவிந்துவிடும் எனக் கட்டமைக்கப்படும் பிம்பம் உண்மை அல்ல. முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் சலுகைகளில் முக்கியமானது... மூன்று நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டால்கூட, அதற்கான இழப்பீட்டை அரசாங்கம் அளிக்கும். தடையற்ற மின்சாரம் கிடைக்கும் மாநிலமாக தமிழ்நாடு இப்போது இருக்கிறதா? தடையற்ற மின்சாரம் வழங்க முடியாவிட்டால், அரசாங்கம் அளிக்கவேண்டிய இழப்பீட்டின் பிரமாண்டம் எவ்வளவு எனக் கணிக்க முடியுமா? குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காகப் பொத்தம்பொதுவாகச் சொல்லவில்லை. தமிழ்நாடு அரசு அறிவித்த 'தொலைநோக்குத் திட்டம் 2023’-ன் மொத்த முதலீடு 15 லட்சம் கோடி. அதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குத் தொகையான நாலரை லட்சம் கோடி ரூபாயை மின்சாரத் துறைக்கு என முதலீடு செய்தார்கள். அதன் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படும். அதுவும் 2017-ம் ஆண்டுக்குள் 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்’ என மூன்று வருடங்களுக்கு முன்னர் அறிவித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதோ கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்துவிட்டது 2017. ஆனால், மின்சாரம்..? கடந்த மூன்று வருடங்களில் மின்சார உற்பத்தித் திட்டங்கள் எதுவும் உருப்படியாகச் செயல்படுத்தப்படவில்லை. ஆக, 2017-ம் ஆண்டுக்குள் 500 மெகாவாட் மின்சாரத்தைக்கூட இவர்களால் தயாரிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் 'மின் தடை ஏற்பட்டால் இழப்பீடு’ என தமிழ்நாடு அரசு வாக்குறுதி கொடுக்கிறது? ஒருவேளை, திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால்தானே என்ற நம்பிக்கையோ! 'சுற்றுச்சூழல், நிலம் உள்பட அரசாங்க அனுமதிகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படும்’ என்கிறார்கள். அந்தந்த நாட்டில் இயற்கையை அழிக்க அனுமதி கிடைக்காமல்தானே இங்கே வருகிறார்கள். இந்த நிலையில் இங்கே தண்ணீர், நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்களைச் சூறையாடிவிட்டு, சில தற்காலிக வேலைவாய்ப்புகளை உள்ளூர் மக்களுக்கு வழங்குவதால், நமக்கு இம்மியும் பிரயோஜனம் இல்லை. மூலதனம் வரட்டும். இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு இயங்கட்டும். தரமான, சமூகப் பாதுகாப்புடன்கூடிய வேலைகளைத் தரட்டும். வரிகளை ஒழுங்காகக் கட்டட்டும். லாபமும் சம்பாதிக்கட்டும். அப்படி இருந்தால்தான், அது தொழில் கொள்கை. இல்லை எனில் கொள்ளைத் தொழிலாகத்தான் பார்க்கப்படும்'' என்கிறார் கனகராஜ்.

கையெழுத்தான கோடி... எத்தனை வரும் நாடி !

இந்த முதலீடுகள் தரவிருக்கும் பொருளாதார லாப - நஷ்டங்கள் குறித்துச் சொல்கிறார் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா.

'' தமிழ்நாடு அரசு இந்த மாநாட்டை நடத்தியது எல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால், அதன் பலன்களையும் விளைவுகளையும் ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். சமூக முன்னேற்றத்துக்கு அந்நிய மூலதனம் அத்தியாவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த மூலதன வருகையால் நாம் பெறும் நன்மைகள் என்னென்ன? அதைப் பெற நாம் கொடுக்கும் விலை என்ன? ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், 'மூலதனப் போட்டியால் வட்டி விகிதங்களைக் குறைத்து, சலுகைகளை அள்ளி வழங்குகிறார்கள். சலுகைகளின் விளைவுகளை அவசியம் கவனிக்க வேண்டும்’ என எச்சரித்தார். அப்படி எவரும் இங்கே எச்சரிக்கையுடன் கவனிக்கிறார்களா எனத் தெரியவில்லை. எந்தக் கட்சி ஆட்சி நடத்தினாலும், இப்படியான  புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்கள் மூடுமந்திரங்களாகவே உள்ளன. உலக முதலீட்டாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். இல்லை எனில், அரசுப் பொருட்காட்சி போலவே முதலீட்டாளர்கள் மாநாடும் பார்க்கப்படும்!'' என்கிறார்.

கையெழுத்தான கோடி... எத்தனை வரும் நாடி !

முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவில் முதலமைச்சர் ஜெயலலிதா இப்படிக் குறிப்பிட்டார்...

''முதலீட்டாளர்கள் தங்களுக்கு நேரடியாகப் பலன் வரும் என எதிர்பார்ப்பது அவர்கள் கடமை. அது பொருள் வாய்ந்ததாகவும், செய்யும் பணிகளில் நிறைவு தருவதாகவும் இருக்க வேண்டும். அந்த முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்பும் வருவாயும் தரமான வாழ்க்கைச் சூழலும் ஏற்பட வேண்டும்!'' இதை நடைமுறையில் அமல்படுத்தும் உறுதியும் பொறுப்பும் ஆட்சியாளர்களின் கடமையே!

அரசு நிர்வாகம் என்ன சொல்கிறது?

முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த விமர்சனங்களுக்கு அரசுத் தரப்பு ரியாக்ஷன் என்ன? தொழில் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது... ''இங்கே எல்லாமே வெளிப்படையாகவே நடக்கின்றன. வரும் ஜனவரி மாதத்துக்குள் தோல் தொழில், கனரக உற்பத்தித் துறை ஆகியவற்றில் ஐந்து நிறுவனங்கள் வேலைகளைத் தொடங்க உள்ளன. ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 20 சதவிகித முதலீடுகள் வெகுவிரைவில் வந்துவிடும். இது தொடர்பான ஒப்பந்தப் பணிகளை விரைந்து முடிக்க வணிக வரி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரத் துறை, நில நிர்வாகம், குடிநீர் வாரியம்... போன்ற துறைகளில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். ஆன்லைன் பதிவு வேலைகள் தொடங்கிவிட்டன. மாநாட்டின் நோக்கம் நிச்சயம் எட்டப்படும்'' என்றார்!