Published:Updated:

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

விகடன் டீம்

'அறம் செய விரும்பு’ திட்டம் செயல் வடிவம் எடுக்கத் தொடங்கிவிட்டது. ராகவா லாரன்ஸ்,

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

ஆனந்த விகடனுடன் இணைந்து செயல்படுத்தும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 'கலாமின் காலடிச் சுவட்டில்... அறம் செய விரும்பு’ உதவித் திட்டம் உற்சாகமாக முதல் அடியை எடுத்துவைத்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் கரிக்கலவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது, இந்தப் பெரும் முயற்சியின், முதல் சிறு அடி. 160 மாணவர்களைக்கொண்ட இந்தப் பள்ளி, முறையான பேருந்து வசதி இல்லாத உள்ளடங்கிய கிராமத்தில் அமைந்திருக்கிறது. பள்ளியின் குடிநீர் வசதி போதுமான சுகாதாரத்துடன் இல்லை. 'எங்கள் பள்ளிக்குக் குடிநீர் வசதி அமைக்க முடியுமா?’ என்ற பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை தன்னார்வலர் கரு.அண்ணாமலையிடம் சேர்ப்பித்தோம். தனக்கான

1 லட்ச ரூபாய் நிதியில் அந்தப் பள்ளிக்கு 'ஆர்.ஓ இயந்திரம்’ பொருத்தச் சம்மதித்தார். பள்ளியில் அந்த இயந்திரம் பொருத்துவதற்கு உரிய வசதிகள் இருக்கின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்காக கரிக்கலவாக்கம் சென்றபோது, பள்ளியிலும் கிராமத்திலும் ஒரே பரபரப்பு. அங்கு இருந்த நீர்த்தேக்கத் தொட்டி, தரைமட்டத்தில் இருந்து குறைந்த அளவு உயரத்திலேயே இருந்ததால், ஆர்.ஓ இயந்திரச் செயல்பாட்டுக்குத் தேவையான அழுத்தம் கிடைக்காது. இதைத் தெரிவித்ததும் உடனடியாகக் களத்தில் இறங்கிய கிராம மக்கள், விறுவிறுவென நீண்ட பள்ளம் தோண்டி, குழாய் பதித்து, நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீர் அழுத்தத்துடன் வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் சில மணி நேரத்தில் முடித்துவிட்டனர். அடுத்த இரண்டு நாட்களில் இயந்திரம் பொருத்தப்பட்டு சுகாதாரமான சுவையான குடிநீர் தொட்டியில் சேகரமாகத் தொடங்கியது.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்
கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

லாரன்ஸ் மூலம் நடக்கும் உதவி என்பதைத் தெரிந்துகொண்ட பள்ளிக் குழந்தைகள் அவரைப் பார்க்க விருப்பப்பட்டனர். விஷயத்தைச் சொன்னதும் ஆர்வமாக கரிக்கலவாக்கம் வந்தார் லாரன்ஸ். பள்ளிக் குழந்தைகள், 'காஞ்சனாஆ... ஆ... ஆ’ எனக் குதூகலமாகக் கொண்டாட, கிராமத்துக்குள் சட்டென ஒரு திருவிழா மனநிலை பரவியது. தங்கள் ஊர் பள்ளிக்குக் கிடைத்த முக்கியத்துவம் கரிக்கலவாக்கம் மக்களை உற்சாகத்தில் ஆழ்த்த, பள்ளிக் குழந்தைகளுடனும் ஊர் மக்களுடனும் உரையாடியதில் லாரன்ஸுக்கும் பெரும் மகிழ்ச்சி.

'சென்னைக்கு வெளியே இப்போதும் மின்வெட்டு பெரும் பிரச்னை. இதன் நேரடிப் பாதிப்பைச் சுமப்பது மாணவர்கள்தான். எனவே, அரசுப் பள்ளி விடுதிகளில் இன்வெர்ட்டர் பொருத்தித் தரலாம்’ என்பது தன்னார்வலர் வினோத்ராஜ் சேஷனின் எண்ணம். அடிப்படைக் கல்வி வசதிகளில் பின்தங்கியிருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தின் ஐந்து அரசு மாணவியர் விடுதிகள் இதற்கு எனத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆதி திராவிடர் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் போளூர், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், மேலாரணி ஆகிய ஊர்களில் இயங்கும் அரசு மாணவியர் விடுதியிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழ் கீழ்பெண்ணாத்தூரில் இயங்கும் அரசு மாணவியர் விடுதியிலும் இன்வெர்ட்டர்கள் பொருத்த முடிவுசெய்யப்பட்டது.

முதலில் 65 மாணவிகள் தங்கிப் படிக்கும் கீழ்பெண்ணாத்தூர் விடுதியில் இன்வெர்ட்டர் பொருத்த முடிவெடுத்தோம். காலையில் தொடங்கிய இன்வெர்ட்டர் பொருத்தும் பணி, இருள் கவியும் நேரத்தில் முடிவுற்றது. வேலை எல்லாம் முடித்து நாம் கிளம்பும் சமயம் சட்டென மின்வெட்டு. ஆனால், அன்று இன்வெர்ட்டர் மூலம் மின்விளக்குகள் உயிர்க்க, அதற்குப் பழகாத மாணவிகள் முகத்தில் உற்சாக மின்னல்கள்.

''நேத்து வரை கரன்ட் போனா இருட்டுக்குள்ள தவிப்போம். இனி அந்தக் கவலை இல்லை. ரொம்ப தேங்க்ஸ்ணா!'' என்றார்கள் கோரஸாக.

மாதவிடாய் சமயங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினை அப்புறப்படுத்துவது மிகவும் சிக்கலான நடைமுறை. குறிப்பாக பள்ளி/கல்லூரி என நூற்றுக்கணக்கில் பெண்கள் குழுமும் இடத்தில், அது சுகாதாரச் சிக்கலாகவும் உருவெடுக்கும். பெரும்பாலான கழிப்பறைகளில் நாப்கின் கழிவுகளை அகற்ற குப்பைத்தொட்டியும் இருக்காது. இப்படி பல அசௌகரியங்களைப் பட்டியலிட்டு 'பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்தும் இன்சினரேட்டர் இயந்திரங்களை அரசுப் பள்ளிகளில் பொருத்தலாம். மாணவிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’ என தன்னார்வலர் பானு தெரிவித்தார்.

சென்னை அசோக் நகரில் இருக்கும் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3,548 மாணவிகள் படிக்கிறார்கள். பள்ளி நிர்வாகத்துடன் இந்தத் திட்டம் குறித்துப் பேசியபோது, 'அவசியம் தேவையான அடிப்படை வசதி’ என மகிழ்ச்சியுடன் இசைந்தார்கள். ஆயிரக்கணக்கான மாணவிகளின் எண்ணிக்கையைக் கணக்கில்கொண்டு, இரண்டு இயந்திரங்களை அமைக்க முடிவெடுத்து, மளமளவென வேலைகளை முடுக்கி... முடித்துவிட்டோம்.  இன்சினரேட்டர் இயந்திரம், நாப்கினை உள்ளே போட்டதும் எரித்துச் சாம்பலாக்கிவிடுகிறது. ஒரு சுவிட்ச் மூலம் அதை இயக்கலாம். ஒரு மணி நேரத்தில் 20 பேடுகள் வரை எரிக்கும். தினமும் இயந்திரத்தின் அடிப்பகுதியில் சேகரமாகும் சாம்பலை மட்டும் கொட்டிவிட வேண்டும்.

இயந்திரத்தின் இயக்கத்தைப் பார்த்த மாணவிகளின் முகங்களில் மென்புன்னகை. இதே இயந்திரம் காஞ்சிபுரம் மாவட்ட வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் பொருத்தப்பட்டது.

சேலத்தில் வசிக்கும் லோகநாயகி, தடை தாண்டும் ஓட்டத்தில் மாநில/தேசியப் போட்டிகளில் பதக்கங்கள் குவித்தவர். பெற்றோர், கூலித் தொழிலாளிகள். பயிற்சிக்கு உரிய கருவிகள்கூட லோகநாயகியிடம் இல்லை. தன்னார்வலர் காயத்ரி, ''லோகநாயகிக்கு 17 வயதுதான். அவரை இப்போதே ஊக்குவித்து பயிற்சி மூலம் பட்டை தீட்டினால்,

எதிர்காலத்தில் சிறந்த வீராங்கனையாக உருவாவார்'' என்றார். பரிசீலனைக்குப் பிறகு லோகநாயகிக்கு 25,000 ரூபாய் மதிப்புக்கு அடிடாஸ் நிறுவன காலணிகள், விளையாட்டு ஆடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்கிக் கொடுத்தோம்.

''என் அப்பா, அம்மா சம்பாதிக்கிறது குடும்பச் செலவுக்கே பத்தலை. இந்தப் பொருள் எல்லாம் நான் வாங்குறதைப் பத்தி நினைச்சே பார்க்க முடியாது. ரொம்ப நன்றி. இப்போ கொல்கத்தா நேஷனல் மீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். மெடல் நிச்சயம்'' என்கிறார் உற்சாக லோகநாயகி.

அறம் தொடரும்!  

'அறம் செய விரும்பு’ திட்டத்துக்கென நான்காம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தன்னார்வலர்கள் பற்றிய அறிமுகம் இங்கே...

விஜயலட்சுமி, தலைமை ஆசிரியர்

திருப்பூர், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர். 10 ஆண்டுகளாக தொடர்ந்து, 'சிறந்த ஆரம்பப்பள்ளி’ எனப் பெயர் வாங்கிக்கொடுத்தவர். இவர் இதே பள்ளியின் முன்னாள் மாணவி என்பது கூடுதல் சிறப்பு.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''எங்கள் குழந்தைகளின் திறமைகளை வீடியோவாக எடுத்து பெரிய திரையில் அவர்களுக்கு ஒளிபரப்புகிறோம். இதனால் இன்னும் சிரத்தையோடு அவர்கள் படிப்பில் ஆர்வம்காட்டுகிறார்கள். கிராமப்புறக் குழந்தைகள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த, எளிமையாகப் பயில நவீன கல்வி உபகரணங்களை வாங்குவதில் கவனம் செலுத்துவேன்'' என்கிறார் விஜயலட்சுமி!

மு.குணசேகரன் ஊடகவியலாளர்

'புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் 'நேர்படப் பேசு’ நிகழ்ச்சியின் நெறியாளர்; சமூக ஆர்வலர். விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காக ஊடகங்களில் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''எனது குடும்பத்தில் நான் முதல் தலைமுறைப் பட்டதாரி. பலரின் உதவியால்தான் என்னால் படிக்க முடிந்தது. தர்மபுரி உள்ளிட்ட பல பின்தங்கிய மாவட்டங்களில் அரசு மாணவர் விடுதிக் கட்டடங்கள் பார்க்க மிகப் பெரியதாக இருக்கும். ஆனால், மாணவர்கள் கற்பதற்கு உரிய சூழலோ, கல்வி உபகரணங்களோ இருக்காது. அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவேன்'' என்கிறார் குணசேகரன்!

நிர்மலா கொற்றவை, எழுத்தாளர்

மார்க்கெட்டிங் துறைப் பணி. பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்னைகளுக்கான விழிப்புஉணர்வுப் பணிகள்தான் அடையாளம்.  

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''விளிம்புநிலைப் பெண்கள் சட்டம், பொருளாதாரம் உள்பட பல விஷயங்களில் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களால் பிரச்னையில் இருந்து மீண்டு அடுத்தடுத்த தளங்களுக்கு  முன்னேறுவதில் எக்கச்சக்க முட்டுக்கட்டைகள். அப்படியான பெண்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவே விருப்பம்'' என்கிறார் நிர்மலா கொற்றவை!

பழனியம்மாள், சமூக ஆர்வலர்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்; இப்போது மக்கள் கண்காணிப்பகத்தில் மாநில மனித உரிமைக் கண்காணிப்பாளராகச் செயலாற்றிவருகிறார். வீரப்பன்  என்கவுன்டர் தொடங்கி சமீபத்தில் ஆந்திராவின் செம்மரக் கடத்தல்  துப்பாக்கிச் சூடு வரை பல பிரச்னைகளை சட்டரீதியில் அணுகுபவர்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''மனித உரிமைத் தளங்களில் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதேசமயம் அவர்களின் அப்போதைய பிரச்னை தீர்ந்த பிறகு, அவர்களின் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு யாரும் உதவி செய்வது இல்லை. சிறுதொழில் உள்பட பல வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கித்தர ஆசை!'' என்கிறார் பழனியம்மாள்!

செந்தமிழன்,  இயற்கை ஆர்வலர்

'செம்மை வனம்’ என்ற பெயரில் மரபு சார்ந்த மருத்துவம், விவசாயப் பணிகளில் தீவிரக் கவனம் செலுத்திவருபவர்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''அரசுப் பள்ளி மாணவர்களில் நோயுற்றவர்களுக்கு மருந்து இல்லா மருத்துவ முறையைச் சொல்லிக் கொடுக்கிறோம். ஒவ்வொரு குழந்தை கையிலும் ஒரு கைப்பிடி சிறுதானிய விதைகளைக் கொடுத்து, அதை தங்கள் வீட்டில் விதைத்து வளர்க்கச் சொல்வோம். அதன் மூலம் நமது பாரம்பர்யத் தானியங்களின் பெருமையை எடுத்துச் செல்ல வேண்டும். இதுவே என் விருப்பம்'' என்கிறார் செந்தமிழன்! 

சாவித்திரி கண்ணன், பத்திரிகையாளர்

நடப்பு அரசியலை கடந்தகால வரலாற்றோடு மையப்படுத்தி 17 புத்தகங்களை எழுதியிருக்கிறார். 10 ஆண்டுகளாக பாரதியார் மாலைநேரப் பாடசாலையை நடத்திவருபவர். மதுஒழிப்புப் பிரசாரத்தில் தீவிர ஈடுபாடு காட்டிவருபவர்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''குடியால் தவறுசெய்து தமிழகச் சிறைகளில் அடைபட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இவர்களின் குழந்தைகள் அப்பா, அம்மா என யாராவது ஒருவர் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவி செய்ய வேண்டும். என் இலக்கு அந்தக் குழந்தைகளின் நலன்தான்'' என்கிறார் சாவித்திரி கண்ணன்!

வா.மணிகண்டன், மென்பொறியாளர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

எம்.டெக் பட்டதாரி. கவிஞர் மற்றும் எழுத்தாளர். தற்போது பெங்களூரில் மென்பொருள் ஆலோசகர். 'நிசப்தம்.காம்’ என்ற வலைப்பூ மூலம் எழுதிவருபவர், தன் வாசகர்களிடம் இருந்து நிதி திரட்டி தேவைப்படுவோருக்குப் பகிர்ந்து அளிக்கிறார். இதுவரை ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ''விபத்தில் சிக்கும் வசதியற்ற குழந்தைகளின் மருத்துவம், கல்விக்கு உதவ வேண்டும். ஒரு விபத்தின் விளைவைக் களைய, சில ஆயிரங்கள் போதும். ஆனால், அதுகூட இல்லாமல் அந்தக் குழந்தைகளின் ஒட்டுமொத்த எதிர்காலமும் கேள்விக்குறியாவது... உலகின் பெரும் அபத்தம்'' என்கிறார் வா.மணிகண்டன்!

 ரியோ, சின்னத்திரைத் தொகுப்பாளர்

'சன் மியூசிக்’ தொலைக்காட்சித் தொகுப்பாளர். ஈரோடு மாவட்டத்துக்காரர். ''மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய ஏராளமான அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், ஒருகாலத்தில் நல்ல நிலையில் இருந்து சூழ்நிலை காரணமாக தெருவில் பிச்சையெடுப்பவர்கள் ஏராளமாக உள்ளனர். சிலர் உதவி கேட்காமல் தெருவில் படுத்திருப்பார்கள்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

அவர்களைக் கண்டுகொள்ள யாரும் இல்லை. அவர்களுக்கு உதவிகள் செய்து, கௌரவமாக வாழ வழிகாட்ட வேண்டும் என நினைப்பேன்.  ஆனாலும் சூழல் அமைந்ததே இல்லை. அதற்கான முயற்சியை இந்தத் திட்டத்தின் மூலம் தொடங்குவேன்!'' என்கிறார் ரியோ!

சையது வைசூல் கர்ணே, ஐ.டி வல்லுநர்

சிங்கப்பூர் மென்பொருள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைபார்த்தவர். அந்த வேலையை உதறிவிட்டு சென்னைக்கு வந்தார். ஒரு மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவருகிறார். யோகாசனம், தற்காப்புக் கலைகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்க ஆர்வமாக இருப்பவர்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''என் பூர்வீகம் மதுரை. ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் அம்மா என்னைப் படிக்கவைத்தார். படிப்பு முடிந்ததும் நல்ல வேலை கிடைத்தது. வேலை

தான் கல்வியறிவின் இலக்காக இருக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். வறுமையின் கசப்பை உணர்ந்ததால், கல்வி உதவிக்காக வரும் குழந்தைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்துவருகிறேன். அதை இன்னும் தீவிரமாக்குவேன்'' என்கிறார் சையது!

திவ்யா, ஐ.டி வல்லுநர்

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, கல்லூரி கேன்டீனில் வேலை பார்த்துக்கொண்டே படித்து முடித்தவர். அப்துல் கலாமின் 'இந்தியா விஷன் 2020’ அமைப்பு இவரைத் தத்தெடுத்து 'சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்சர்’ படிக்க உதவியது. தற்போது டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''நான் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதேனும் பொருள் வாங்கிக் கொடுக்க எனக்கு என எவரும் இல்லை. என்னைப்போல ஏராளமான

குழந்தைகள், வயதானவர்கள்  தனிமையில் தவிப்பார்கள். ஒரு குடும்ப உறுப்பினர்போல அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய ஆசை'' என்கிறார் திவ்யா!

படங்கள்: கே.கார்த்திகேயன், சொ.பாலசுப்ரமணியன், ஜெ.வேங்கடராஜ், ரமேஷ் கந்தசாமி, ஈ.ஜெ.நந்தகுமார், தி.ஹரிஹரன்.