Published:Updated:

சல்யூட் சாம்பியன்ஸ்!

சார்லஸ்

லியாண்டர் பயஸ், சானியா மிர்ஸா...  டென்னிஸ் உலகில் இந்திய முத்திரையை இன்னும் அழுத்தமாகப் பதித்திருக்கிறார்கள். அமெரிக்க ஓப்பனின் கலப்பு இரட்டையரில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து லியாண்டர் பட்டம் வெல்ல, மறுபக்கம் அதே ஹிங்கிஸுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா சாம்பியன் பட்டம் தட்டியிருக்கிறார்! 

மகள் சொன்னால் ஓய்வு

சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட அமிர்தராஜ் டென்னிஸ் அகாடமியில் பயின்று சர்வதேச டென்னிஸ் வீரராக உருவான பயஸ், தன் 42 வயதில், 'கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்’ என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். 23 ஆண்டுகளாகக் கலப்பு இரட்டையர் போட்டிகளில் விளையாடிவரும் பயஸுக்கு, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் 100-வது பார்ட்னர். இந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓப்பனைத் தவிர்த்து, மற்ற மூன்று  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாம்பியன் ஆகியிருக்கிறது லியாண்டர் பயஸ் - மார்ட்டினா ஹிங்கிஸ் கூட்டணி.

'எனக்கு இப்போது 42 வயது. இது என்னுடைய 33-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி. இப்போதும் நள்ளிரவில் ஜிம்மில் ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்ட டென்னிஸ் வாழ்க்கை எனக்கு!’ என ட்வீட் தட்டிவிட்டுத்தான் மைதானத்துக்குள் நுழைந்தார் பயஸ். அமெரிக்க ஜோடியை எதிர்கொண்ட பயஸ் - ஹிங்கிஸ் இணை, மூன்றாவது செட் வரை விறுவிறுப்பாகப் போராடி, டை பிரேக்கரில் 10-7 என்ற புள்ளிக்கணக்கிலேயே வென்றது.

சல்யூட் சாம்பியன்ஸ்!

'என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் விடாமுயற்சிகளால் நிறைந்தது. மூன்றாவது செட்டில் வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது ஹிங்கிஸ் என்னிடம், 'நமக்கு வெற்றி நிச்சயம். தைரியமாக விளையாடு’ எனச் சொன்னார். என் வாழ்க்கையில் நான் இன்னும் இழந்துவிடாமல் வைத்திருப்பது தைரியமும் விடாமுயற்சியும்தான். ஹிங்கிஸிடம் இருக்கும் டெக்னிக், வலிமை என்னிடம் இல்லை. ஆனால், தைரியமும் விடாமுயற்சியும் இருந்ததால்தான், 42 வயதிலும் வெற்றிபெற முடிகிறது.

பலருடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். அவர்களில் ஹிங்கிஸ் மிகவும் ஸ்பெஷல். முழு எனர்ஜியுடன் முழுச் சுமையையும் அவர் தன் தலையில் தாங்கிக்கொள்வார். அவருக்கு நாம் சரியான சமயத்தில் ஒத்துழைப்பு அளித்தாலே போதும். வெற்றி தேடிவரும். ஒவ்வோர் இறுதிப்போட்டிக்கு முன்பும், இரண்டு மணி நேரம் இருவரும் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவோம். என்னிடம் டென்ஷன், படபடப்பு இருந்தால், அதை உணர்ந்து, ஜாலியாகப் பேசி, சிரித்து ரிலாக்ஸ் ஆக்கிவிடுவார். ஹிங்கிஸ்தான் நான் இணைந்து விளையாடிய வீராங்கனைகளிலேயே டாப்!’ எனச் சிலிர்க்கிறார் பயஸ்.

'வயது ஒருபக்கம் கூடிக்கொண்டே இருக்க, வெற்றிகளும் கூடிக்கொண்டேபோகிறது. இப்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை. ஃபிட்டாக இருக்கும் வரை விளையாடுவேன். என் மகள் அயனாதான் எனக்கு குரு. அவள், 'அப்பா... டென்னிஸ் போதும்’ எனச் சொன்னால் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன். அந்த அளவுக்கு அவளை என் வாழ்க்கையின் பொக்கிஷமாகக் கருதுகிறேன். ஆனால், மனைவியுடனான விவாகரத்து வழக்கு காரணமாக அயனாவை என்னால் வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை’ என சந்தோஷத்துக்கு இடையிலும் எமோஷன் ஆகிறார் லியாண்டர்.

சானியாவின் நம்பர் 1 கனவு

மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்த பிறகு சானியா மிர்ஸாவுக்கு வெற்றிகள் கிடுகிடுவெனக் குவிகின்றன. இந்த ஆண்டுதான் இருவரும் இணைந்தார்கள். இப்போது மூன்று சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற உலகின் நம்பர் 1 இரட்டையர் ஜோடியாகிவிட்டார்கள். விம்பிள்டனுக்குப் பிறகு இந்தக் கூட்டணியின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் வெற்றி இது. 'இவர்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் தொட முடியாது’ என்ற அளவுக்கு அமெரிக்க ஓப்பனில் சானியா - மார்ட்டினா ஜோடி ஆதிக்கம் செலுத்திவந்தது. இறுதிப் போட்டியிலும் நேர் செட்டில் எளிமையான வெற்றி.

சல்யூட் சாம்பியன்ஸ்!

'எப்போதுமே தோல்வி அடைந்தால் சரியாக விளையாடவில்லை எனச் சொல்வார்கள்.

விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் பாடமே, எதிரில் ஆடியவர்கள் நம்மைவிட சிறப்பாக விளையாடியதால்தான் நாம் தோற்றோமே தவிர, நாம் மோசமாக விளையாடவில்லை என்ற பாசிட்டிவ் நம்பிக்கையைத்தான். தோல்வியின் விளிம்பில் இருக்கும்போதும் கவனம் சிதறாமல் முழுத் திறனுடன் விளையாட வேண்டும் என்பதே எப்போதும் என் கேம் பிளான். இதற்கு மேல் நான் கடவுளிடம் கேட்க வேறு ஒன்றும் இல்லை. இப்போது இந்த வெற்றிகளை எப்படிக் கொண்டாடுவது என்பதுதான் என் கவலை எல்லாம்’ எனப் படபடக்கிறார் சானியா மிர்ஸா.