Published:Updated:

சொடுக்கு பால் சீக்ரெட்!

சார்லஸ்

ச்சக்கட்ட உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் 'ஸ்பின் வின்னர்’ ரவிச்சந்திரன் அஷ்வின்! 

டெஸ்ட், ஒரு நாள், 20-20... என 'ஆல் கிரிக்கெட்’டிலும் இப்போது இந்தியாவின் நம்பர் 1 பௌலர் அஷ்வின். டெஸ்ட்டில் குறைந்த போட்டிகளில் 50 மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய கிரிக்கெட்டர். நான்கு முறை 'மேன் ஆஃப் தி சீரிஸ்’ விருதுகளையும் வென்றிருக்கிறார். இப்படி இன்னும் இரண்டு சீரிஸ் விருதுகளை வென்றால், சச்சினின் சாதனையை முறியடித்துவிடுவார். 28 டெஸ்ட் போட்டிகளிலேயே 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின், கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் முன்னர் எப்படியும் 700 விக்கெட்டு களையாவது சாய்ப்பார் எனக் கணித்திருக்கிறார் 'ஸ்பின் கிங்’ முத்தையா முரளிதரன்.

''யெஸ்... என் கேரியரின் பொற்காலம் இது. வாழ்க்கையில் எப்பவுமே ஒரு பேலன்ஸ் இருக்கணும். அப்பதான் எங்கேயும் ஸ்டெபிலிட்டி இருக்கும். வேலை, வீடு ரெண்டு இடங்களுமே உங்களுக்குப் பிடிச்ச இடமா, நீங்க கொண்டாட்டமா இருக்கிற இடமா இருந்தா அதுக்கு மேல என்ன வேணும்! அப்படி கிரவுண்டுல வெற்றிகள் குவியுது. வீட்ல ரெண்டு மாசக் குட்டிப் பாப்பாவைக் கொஞ்சிட்டே இருக்கேன். ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்!'' - ஒவ்வொரு வார்த்தையிலும் ஆனந்த உற்சாகம்.  

சொடுக்கு பால் சீக்ரெட்!

''இந்த வெற்றிகளுக்கு எப்போது இருந்து திட்டமிட்டீங்க?''

''திட்டம்னு சொல்ல முடியாது. படிப்போ, விளையாட்டோ எதுலயும் ஸ்கோர் பண்ணணும்னு நினைப்பேன். கல்லு பொறுக்கிப் போட்டாக் கூட நல்லா பொறுக்கிப் போடணும்னு நினைக்கிறவன் நான். அதனால நான் திட்டமிட்டு செஞ்ச வேலைகளுக்கு இந்த வெற்றி ஒரு பாசிட்டிவ் பக்க விளைவு. அவ்வ ளவுதான். இந்த நேரத்துல என் அப்பா, அம்மா, தாத்தாவுக்கும் பயிற்சியாளர்கள் சந்திரசேகர் ராவ், விஜயகுமார், சுனில் சுப்ரமணியம் மூணு பேருக்கும் நன்றி சொல்லணும். என் பிரஷர் சூழ்நிலைகளைப் புரிஞ்சுக்கிட்டு, என்னைச் சமநிலையில் வெச்சிருக்கும் மனைவி ப்ரீத்திக்கும் பெரிய தேங்க்ஸ்!''

'' 'நான் ஒரு வேகப்பந்து வீச்சாளரா இருந்தேன். ஹர்பஜன் சிங் பௌலிங் பார்த்துதான் ஸ்பின்னர் ஆனேன்’னு சொல்லியிருக்கீங்க. இப்போ டீம்ல ஹர்பஜன் சிங்கையே நீங்க ரீப்ளேஸ் பண்ணிட்டீங்களே...''

''வாழ்க்கையில எனக்கு நிறைய இன்ஸ்பிரேஷன் இருக்காங்க. ஹர்பஜன் சிங், ஸ்டீவ் ஜாப்ஸ்... இப்படி நிறைய. என் கடின உழைப்புக்கு இப்போ பலன் கிடைச்சிருக்கு. மத்தபடி நான் யார் இடத்தையும் பிடிக்கலை.''

''ஹர்பஜன் சிங்குக்கு 'தூஸ்ரா’ மாதிரி, உங்களுக்கு 'கேரம் பால்’னு ஒரு டெக்னிக் எப்படிப் பிடிச்சீங்க?''

''சென்னையில அந்த ட்ரிக் பிரபலம். பசங்க அதை 'சொடுக்கு பால்’னு சொல்வாங்க. அதாவது டென்னிஸ் பந்தை  விரல்களுக் குள்ள அழுத்திப் பிடிச்சு, சொடுக்கு போட்டு பால் போடுறது. அப்போ பால் நல்லா ஸ்பின் ஆகும். இதைத்தான் நான் 'கேரம் பால்’னு ஆக்கினேன். டென்னிஸ் பந்துல அப்படிப் போடுறது சுலபம். ஆனா, கடினமா இருக்கும் கார்க் பந்தை அழுத்த முடியாது. ரொம்ப வருஷப் பயிற்சிக்குப் பிறகுதான் அதைக் கத்துக்கிட்டேன். ஆரம்பத்துலயே ஒரு பௌலர் கேரம் பால் போட முயற்சிக்கக் கூடாது. முதல்ல லைன் அண்ட் லெங்க்த் பால் போடக் கத்துக்கணும். அப்புறம்தான் இதுக்கு முயற்சிக்கணும்.''

சொடுக்கு பால் சீக்ரெட்!

''தோனி, விராட் கோஹ்லி... ரெண்டு பேர்  கேப்டன்ஷிப்பிலும் என்ன வித்தியாசம்?''

''ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல். அஷ்வினை ஆறாவது ஓவரில் இருந்தே பௌலிங் பண்ணவைக்கணும், ரெய்னாவை நாலாவது பேட்ஸ்மேனா இறக்கணும்னு எப்பவும் முன்கூட்டியே முடிவுகளை எடுக்க மாட்டார் தோனி. மேட்ச் எப்படிப்போகுதோ, அதன் போக்குல முடிவெடுப்பார். கோஹ்லிக்கு வெற்றிதான் எப்பவும் இலக்கு. அதுக்காக பயங்கர ஆக்ரோஷமா போராடுவார். ஆனா யார் கேப்டனா இருந்தாலும், நான் என் ஸ்டைல்லதான் பால் போடுவேன். அது சமயங்கள்ல தப்பாச்சுன்னா, அவங்களோட ஆலோசனைகளைக் கேட்டுப்பேன்!''

''இலங்கைக்கு எதிரான தொடரில் நிறைய சண்டைகள். தமிக்கா பிரசாத்துக்கும் - இஷாந்த் ஷர்மாவுக்கும் வாக்குவாதம். அதெல்லாம் கோஹ்லியின் ஆக்ரோஷ ப்ளான்தானா?''

''அப்படித் திட்டம் போட்டு சண்டைபோட முடியாது. வெற்றிக்காக ரெண்டு அணிகள் கடுமையா போராடிட்டிருக்கும்போது, அப்படியான சம்பவங்கள் நடக்கிறது சாதாரணம். ஆனா, அது நடந்தது ஒருவகையில இஷாந்த் சர்மாவை ஊக்குவிச்சதுனு சொல்வேன். அந்தச் சண்டைக்குப் பிறகு இஷாந்த் ரொம்ப ஃபோர்ஸ் ஆகிட்டார்!''

''சமீபத்தில் ரஜினியின் 'அண்ணாமலை’ வசனங்களை முழுசா பேசி வீடியோ பண்ணியிருந்தீங்களே... சினிமாவுல நடிக்க ஆசையா?''

''அச்சச்சோ... ஆளைவிடுங்க! அப்படி எதுவும் இல்லை. நிறையத் தமிழ் சினிமா பார்ப்பேன். மிஷ்கின் படங்களை மிஸ் பண்ண மாட்டேன். அவ்ளோதான் நம்ம சினிமா ஆர்வம்!''  

சொடுக்கு பால் சீக்ரெட்!

''எட்டு வருஷமா சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஐ.பி.எல்-ல விளையாடிட்டிருக்கீங்க. ஆனா, இப்போ ரெண்டு வருஷத்துக்கு சென்னை அணிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கே...''  

''எப்பவும் மாநிலங்களில் தமிழ்நாடு, ஐ.பி.எல்-லில் சென்னை அணிகள்தான் என் முதல் சாய்ஸ். ஆனா, சென்னை அணிக்காக விளையாட முடியாத சூழல் வந்தா, வேற என்ன வழிகள் இருக்குனு யோசிக்கணும். நான் ஒரு தொழில்முறையிலான கிரிக்கெட் பிளேயர். சென்னை அணி இல்லவே இல்லைனா, வேற அணிக்காக விளையாடுவேன்!''

''தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பிடிக்கிறவங்க எல்லாரும் ஒரு குறிப்பிட்ட பின்னணியைச் சேர்ந்தவங்கனு விமர்சனம் இருக்கே...''

''நீங்க எதைப் பத்தி கேட்கிறீங்கன்னு எனக்குப் புரியது. அப்படி ஒரு செட்டப், கிரிக்கெட் போர்டில் இல்லவே இல்லை. என் அப்பா, கிரிக்கெட் பிளேயர் இல்லை. அதே மாதிரி சச்சின், தோனி... இவங்க குடும்பங்களிலும் யாருக்கும் கிரிக்கெட் தொடர்பு இல்லை. இந்தியாவின் பிரபல விளையாட்டு கிரிக்கெட்தான். அதில் நாம டாப் ரேங்கிங்ல இருக்கோம்னா, கிரிக்கெட் போர்டு தெளிவான அமைப்பாக இருந்தால்தான் முடியும். ஒரு குறிப்பிட்ட மக்கள்தான் இந்தியாவுக்காக, தமிழ்நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட முடியும்னு சொல்றது... உண்மையே இல்லை!''

''இளம் கிரிக்கெட்டர்களுக்கு உங்க அறிவுரை என்ன?''

''என்னைப் பொறுத்தவரைக்கும் அறிவுரை சொல்றது ரொம்பப் பெரிய தப்பு. 'நான் இதெல்லாம் பண்ணேன்... நீங்க இதெல்லாம் பண்ணுங்க’னு அறிவுரை சொல்லிட்டிருந்த காலம் முடிஞ்சுபோச்சு. இது வேற தலைமுறை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கு. அதை எப்படி வெளியே கொண்டுவர்றதுனுதான் யோசிக்கணும்; வழிகாட்டணும். கங்குலி, டிராவிட், சச்சின் ரிட்டயர்டு ஆகிட்டா, இந்தியா டீம் காலியாகிடும்னு சொன்னாங்க. ஆனா, அப்படி எதுவும் நடக்கலையே. வெற்றிகளை அடுத்தடுத்த எல்லைக்குத்தானே கொண்டுபோயிட்டிருக்கோம். இப்போ இளைஞர்களுக்கு அவங்க பொறுப்பு என்னனு நல்லாவே தெரிஞ்சிருக்கு!''