##~##

புத்தகங்கள்தான் சமுதாய மாற்றத்துக்கான சாவி. கடந்த ஏழு ஆண்டுகளாக, ஈரோட்டைச் சேர்ந்த 'மக்கள் சிந்தனைப் பேரவை’ அமைப்பு புத்தகக் காட்சியை நடத்திவருகிறது. இந்த ஆண்டும் ஈரோடு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 '' 'காந்தியின் சத்திய சோதனையைப் படித்த பின்புதான் கறுப்பர் இன விடுதலைக்காகப் போரா டும் எண்ணம் உதித்தது’ என்றார் நெல்சன் மண்டேலா. தூக்குக் கயிற்றை முத்தமிடும் கடைசி நாள் வரையிலும்கூட லெனின் நூல்களைப்படித்துக் கொண்டு இருந்தார் பகத்சிங். முதலாளித்துவத்தின் பிடியில் அடிமைப்பட்டுக்கிடந்த நாடுகள் பலவற்றி லும் புரட்சி நடக்க விதை விதைத்தது கார்ல் மார்க்ஸின் 'மூலதனம்’ புத்தகம்தான்'' என்று புத்தகத்தின் பெருமைகளைப் பேசத் தொடங்கினார் மக்கள் சிந்தனைப் பேரவையின் பொறுப்பாளர் ஸ்டாலின் குணசேகரன்.

வாழ்க்கையை வாசிக்க வாசிப்பு அவசியம்!

''இயந்திரமயமாகிவிட்ட இன்றைய அவசர உலகத்தில் மக்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது. வாசிப்பு குறைந்தால், வாழ்க்கையின் அர்த்தமே அகப்படாமல் போய்விடும். இந்த நிலையை மாற்றத்தான் 18 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பைத் தொடங்கி, இலவசமாகப் புத்தக விநியோகம் செய்தோம். ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் ஒரு நூலகம் இல்லை. 'ஐந்து சென்ட் இடம் இருந்தால்தான் நூலகம் கட்டித் தருவோம்’ என்றது அரசு. அதற்கான இடத்தை நாங்களே ஏற்பாடு செய்து, நாங்களே கட்டடம் கட்டி, ஆயிரக்கணக்கான புத்தகங்களையும் வாங்கி, நூலகத்தை அரசிடம்

வாழ்க்கையை வாசிக்க வாசிப்பு அவசியம்!

ஒப்படைத்துவிட்டோம். இதைக் கண்டு அரசு அதிகாரிகளே வாயடைத்துப்போனார்கள். இன்று அந்த நூலகம் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத் திருவிழா நடத்தும் எண்ணம் தோன்றியது. அப்போது நாங்கள் அழைப்பு விடுத்தபோது, 'சிறு நகரான ஈரோட் டில் - அதுவும் தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் ஊரில் -  அவ்வளவாக வாசிப்புப் பழக்கம் இருக்காதே’ என்று பதிப்பாளர்கள் பலரும் தயங்கினார்கள். நாங்கள் வற்புறுத்தி அவர்களை அழைத்து வந்தோம். பெரிய வரவேற்பு என்று சொல்ல முடியாது; ஆனால், நல்ல விற்பனை. ஓரளவு லாபம்.

வாழ்க்கையை வாசிக்க வாசிப்பு அவசியம்!

இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கினோம். பதிப்பாளர்களே எதிர்பார்க்காத வகையில் விற்பனை அமோகம். 'எங்களுக்கா வாசிப்புப் பழக்கம் இல்லை?’ என்பதுபோல் அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்கள் மைதானத்தை நிறைத்தார்கள். கண்காட்சி நடக்கும் நாட்களில் நாள்தோறும் அறிஞர்களை அழைத்து வந்து சொற்பொழிவுகளும் நடத்தினோம். கடந்த ஆண்டு,

வாழ்க்கையை வாசிக்க வாசிப்பு அவசியம்!

7.5 கோடிக்குப் புத்தகங்கள் விற்று இருப்பது, மக்களின் சிந்தனை மீதான எங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது!'' - நம்பிக்கையுடன் தோள் நிமிர்த்துகிறார் ஸ்டாலின் குணசேகரன்!

- கி.ச.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு