Election bannerElection banner
Published:Updated:

மன்றோ என்னும் மனிதன் வாழ்ந்தான்!

மன்றோ என்னும் மனிதன் வாழ்ந்தான்!

##~##

சென்னையில் அண்ணா சாலையைக் கடப்பவர்கள் கட்டாயம் மன்றோ சிலையைப் பார்த்திருக்க முடியும். குதிரை ஒன்றில் கையில் வாளுடன் கம்பீரத் தோற்றத்தில் அமர்ந்திருக்கும் அந்த மன்றோ யார்?

 ஆங்கிலேயர்களின் ஆட்சியில் தர்மபுரி மாவட்டத்தின் (அன்றைய பாராமஹால் மாவட்டம்) வருவாய் அதிகாரியாக இருந்து, படிப்படியாக சென்னை மாகாண ஆளுநராக உயர்ந்தவர்தான் சர் தாமஸ் மன்றோ. 1792-ல் தர்மபுரிக்கு வந்த மன்றோ, ஏழு ஆண்டுகள் வருவாய் அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் நினைவாக தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில் இன்றும் கம்பீரமாக நிற்கிறது மன்றோ நினைவுத் தூண்.

மன்றோ என்னும் மனிதன் வாழ்ந்தான்!

சேலம் வரலாற்றுச் சங்கத்தின் பொதுச் செயலர் பர்ணபாஸ் விவரித்தார்... ''பாராமஹாலின் ஆர்.ஐ-யாகப் பதவியில் இருந்த மன்றோ, மக்களை மிகவும் நேசித்தவர். இன்று மன்றோ நினைவுத் தூணுக்கு அருகில் உள்ள வனத் துறை அலுவலகம்தான் அப்போது அவர் தங்கி இருந்த வீடு.  பாழடைந்துகிடந்த

மன்றோ என்னும் மனிதன் வாழ்ந்தான்!

சோழர் காலத்துக் குளத்தைத் தூர் வாரிய மன்றோ, அதைத் தனது தோட்டத்துக்கும் மக்களுக்கும் பயன்படச் செய்தார். அந்தக் குளம் இப்போது அங்கு பயன்பாடற்ற நிலையில் இருக்கிறது. அவர் வீட்டுக்கு அருகில் சிலவீரப்பன் கோயில் என்கிற பழங்காலக் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. அந்தக் கோயில் உட்பட பல்வேறு இந்துக் கோயில்களுக்கும் மன்றோ நிறைய திருப்பணிகளைச் செய்துள்ளார். இன்றைக்கும் மன்றோவின் பெயரில் திருப்பதி திருமலையில் ஓர் அர்ச்சனை செய்யும் சம்பிரதாயம் உண்டு.

அவர் தர்மபுரியில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலானபோது, 'நெருங்கிய நண்பரைப் பிரிவதுபோல் மனம் துடிக்கிறது’ என்று ஊர் மீதான தன் பிரியத்தை நெகிழ்வுடன் பதிவுசெய்துள்ளார். அதன் பிறகு, கடப்பா உள்ளிட்ட சில இடங்களில் பணிபுரிந்தவர், இறுதி யாக சென்னை மாகாண ஆளுநராகப் பதவி உயர்வு பெற்றார். மன்றோ மிக நேர்மையானவர். அதனால், ஆங்கிலேய அரசு அவருக்கு 'கவர்னர் ஜெனரல் ஆஃப் இந்தியா’ பதவியைக் கொடுக்க முன்வந்தது. ஆனால், தனது இறுதிக் காலத்தைத் தாய்நாட்டில் கழிக்க விரும்புவதாகக் கூறிய அவர், கவர்னர் ஜெனரல் பதவியை மறுத்துவிட்டார்.

தாய்நாடு திரும்பும் முன்பு, தான் பணியாற்றிய கடப்பா மாவட்ட மக்களைப் பார்க்கச் சென்றார். ஆனால், அந்த நேரத்தில் அங்கே பரவி இருந்த காலரா நோய் தாக்கி, 1827, ஜூலை 6-ம் தேதி இறந்துவிட்டார். அவரது உடல் சென்னை ஜார்ஜ் கோட்டை வளாகத் தில் இருக்கும் செயின்ட் மேரீஸ் சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது.    

கடைசியாக அதிகாரிகளுடன் மன்றோ கடப்பாவுக்கு குதிரைப் பயணம் சென்றபோது, இரு மலைகளுக்கு இடையே 'பங்காரு தோரணம்’ (தங்கத் தோரணம்) காட்சி தந்ததாகச் சொன்னாராம். கடப்பாவில் இதைக் கேட்ட மதத் தலைவர்கள், 'இது மகான்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. ஆனால், இந்தக் காட்சியைக் கண்டால், அவர்களைக் கடவுள் விரைவாக அழைத்துக்கொள்வார்’ என்று கூறித் துடித்துப்போனார்களாம். அதேபோல, ஓரிரு நாட்களில் மன்றோ இறந்துபோனார். இந்தப் 'பங்காரு தோரணம்’பற்றிய குறிப்பு ராமாயணத்திலும் இருக்கிறது. கடப்பாவில் உள்ள ஒரு ராமர் கோயிலில் இன்றும் ராமருக்கு வலது பக்கம் மன்றோ படத்தையும் இடது பக்கம் அனுமன் சிலையையும் வைத்து வழிபடுகிறார்கள்.

மன்றோ என்னும் மனிதன் வாழ்ந்தான்!

மன்றோ இறந்தவுடன் அவரது மனைவி வில்ஹெல்மினா தர்மபுரியில் நினைவிடத்தை அமைத்துள்ளார். அந்த இடத்தில்தான் இப்போது மன்றோ நினைவுத் தூண் இருக்கிறது. இனம், மதம் கடந்து மக்களின் நன்மையை மட்டுமே பிரதானமாகக் கருதிய அதிகாரி மன்றோ. அவரைப் போன்ற நேர்மை மிக்க மனிதர்களின் புகழ் எந்தச் சூழலிலும் மங்காது என்பதற்கு தர்மபுரி மன்றோ நினைவுத் தூண் மற்றும் சென்னை மன்றோ சிலையே சாட்சி!''

- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு