Published:Updated:

“கிரவுண்டுல விளையாடுறேன்... வாழ்க்கையில போராடுறேன் ..!”

“கிரவுண்டுல விளையாடுறேன்... வாழ்க்கையில போராடுறேன் ..!”
News
“கிரவுண்டுல விளையாடுறேன்... வாழ்க்கையில போராடுறேன் ..!”

ஆ.விஜயானந்த், படங்கள்: எம்.உசேன்

ந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, பாராசூட்டில் பறக்கிறார்; டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா, சொகுசு காரில் வலம்வருகிறார்; இந்தியப் பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி கேப்டன் அனிதா பால்துரை எதில் செல்கிறார்? சென்னை மாநகரப் பேருந்துகளில்!

 இந்தியக் கூடைப்பந்து அணியின் 'மோஸ்ட் வான்டட் கேப்டன்’ அனிதா. உலகின் மிகச் சிறந்த 10

“கிரவுண்டுல விளையாடுறேன்... வாழ்க்கையில போராடுறேன் ..!”

வீராங்கனைகளில் ஒருவர். எட்டு முறை ஆசியக் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்ட ஒரே இந்திய வீராங்கனை. ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கம் என அனிதாவின் 'புகழ் புரொஃபைல்’ நீளமானது... அவரது குமுறல் பட்டியல்போலவே!

''உலகின் சிறந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை ஆன கதை சொல்லுங்க...''

''என் அப்பா போலீஸ்ல தலைமைக் காவலரா இருந்தார். நான் படிச்சது எல்லாம் சென்னையில்தான். சின்ன வயசுல அத்லெடிக்ஸ்ல ஆர்வம். என் பயிற்சியாளர் சம்பத் சார்தான் பேஸ்கட்பால் பயிற்சிக்கு என்னை முழுமையாகத் திருப்பிவிட்டார். பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் எங்க டீம்தான் ஜெயிச்சுட்டே இருக்கும். 9-வது படிச்சிட்டிருந்தப்ப ஒரு போட்டியில் ஒரு காலேஜ் டீமை ஜெயிச்சோம். அந்த கேம்ல எனக்கு 'பெஸ்ட் பிளேயர்’ அவார்டும் 250 ரூபாயும் கொடுத்தாங்க. இன்னைக்கும் மறக்க முடியாத கேம் அது. அந்த நாளின் வெற்றிப் பூரிப்புதான் அப்படியே தேசிய, சர்வதேசப் போட்டிகளில் என்னைக் கொண்டுவந்து நிறுத்தியது. தாய்லாந்து, இலங்கை, சீனாவில் நடந்த போட்டிகளில் கோல்டு மெடல் ஜெயிச்சோம். என் கணவர் கார்த்திக், கிரைம் பிராஞ்ச்ல கிளார்க். 11 வருஷ போலீஸ் குவார்ட்டர்ஸ் காதல், சின்னச்சின்ன பிரச்னைகளோடு கல்யாணத்தில் முடிஞ்சது. ஒரு வருஷம் முன்னாடி பையன் பிறந்தான். அதன் பிறகு தீவிரப் பயிற்சியெடுத்து இப்ப வரை ஆர்வமா விளையாடிட்டு  இருக்கேன்!''

''களத்தில் உங்க பொசிஷன் என்ன?''

''கார்டு... பந்தை எதிராளிகிட்ட இருந்து போராடி வாங்கிட்டு வந்து ஷூட்டிங் கார்டுகளிடம் கொடுக்கிற வேலை. ஓடியாடி கஷ்டப்பட்டு நாலு பேரை ஏமாத்தி பந்தைக் கொண்டுபோய் நான் கொடுப்பேன். அவங்க பாக்கெட் பண்ணுவாங்க. என்னைப் போன்ற கார்டுகளுக்கு பாயின்ட்டோ, கைத்தட்டலோ கிடைக்காது. ஆனா, எங்க வேலை எவ்வளவு கஷ்டம், முக்கியம்னு பிளேயர்ஸுக்குத் தெரியும். இப்போ அணிக்குள் என் வேலை பாயின்ட் கார்டு. எல்லோரையும் கன்ட்ரோல் பண்ற பொறுப்பு!''

“கிரவுண்டுல விளையாடுறேன்... வாழ்க்கையில போராடுறேன் ..!”

''சமீபத்தில் சீனாவில் நடந்த ஆசியக் கூடைப்பந்தாட்ட பெண்கள் சாம்பியன்ஷிப் பிரிவில், நம் அணி ஆறாவது இடம்தான் பிடிச்சது. ஒலிம்பிக் வாய்ப்பும் தவறிடுச்சு. திறமையான பிளேயர்கள் இருந்தும் என்ன பிரச்னை?''

''போட்டி முடிஞ்ச பிறகு தோல்வி பத்தி விசாரிப்பாங்க. ஆனா, போட்டிக்கு முன்னாடி எங்களைப் பத்தி யாருக்காச்சும் கவலை இருக்கா? ஒரு போட்டித் தொடர்ல கலந்துக்கிறதுக்கு முன்னாடி நாலு மாசப் பயிற்சி அவசியம். ஆனா, சீனா போறதுக்கு முன்னாடி பெங்களூருல ஒன்றரை மாசம்தான் பயிற்சியெடுக்க முடிஞ்சது. கேட்டா, மைதானங்கள் ஃப்ரீயா இல்லைனு சொல்றாங்க. ஆனா, சீனா, ஜப்பான்ல ஒரு வருஷத்துக்குப் பயிற்சி கொடுக்கிறாங்க. ஒன்றரை மாசப் பயிற்சியில் நாங்க என்ன பண்ண முடியும்? சீனா, ஜப்பான், கொரியா நாட்டு பிளேயர்களோடு ஒப்பிடும்போது, அடிப்படை வசதிகள், பயிற்சினு எல்லாத்துலயும் நாங்க             50 சதவிகிதம் பின்தங்கியிருக்கோம். சீன பிளேயர்ஸ் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பயிற்சியாளர், மருத்துவ உதவியாளர் இருப்பாங்க. ஆனா, எங்களுக்கு வர்ற ஒரே ஒரு பிசியோதெரபிஸ்ட் சின்னப் பையில் கொஞ்சம் பொருட்கள் வெச்சிருப்பாங்க. 'எங்களுக்குக் கிடைக்கிற அலவன்ஸுக்கு இதுதான் வாங்க முடியும்’னு சொல்வாங்க. அதனால நாங்களே சக பிளேயர்களுக்கு முதல் உதவி பண்ணிப்போம். பெண்கள் அணிக்கு பெரிய ஸ்பான்ஸர் கிடைக்க மாட்டாங்க. டீம்ல சிலர்தான் திறமையான பிளேயர்கள். மத்தவங்க கோட்டாவுல உள்ள வருவாங்க. அது தனி பாலிட்டிக்ஸ். 2005-ம் வருஷம் வரை ஆசிய அளவில் இந்தியக் கூடைப்பந்தாட்ட பெண்கள் அணி, பெரிய வெற்றிகள் குவிச்சது இல்லை. ஆனா, இப்ப ஆசிய அளவில் ஆறாவது இடம்; உலக அளவில் 45-வது இடம். நாட்டுக்காக விளையாடுறோம்கிற ஒரே திருப்திக்காக விளையாடிட்டு இருக்கோம்!''

''ஏன் இந்த விளையாட்டு விளையாடுறோம்னு வருத்தமா இருக்கா?''

''அது இல்லாமலா? 15 வருஷத்தை விளையாட்டுக்காக அர்ப்பணிச்சாச்சு. ஆனா, இன்னைக்கு வரைக்கும் மாநில அரசின் சின்ன விருதுகூட எனக்குக் கிடைக்கலை. அதுக்கும் போராடிட்டேன். எதுவும் நடக்கலை!''

''முதலமைச்சர் தனிப் பிரிவில் மனு போடலாமே?''

''எத்தனையோ முறை போட்டுப்பார்த்துட்டேன். ஒரு நாள் முழுக்கக் காத்திருந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திச்சு விஷயம் சொன்னேன். 'கண்டிப்பா பண்றோம்’னு சொன்னார். மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்தான் பரிந்துரை பண்ணணும். அவங்ககிட்ட எப்ப கேட்டாலும், 'உங்க ஃபைல் பெண்டிங்ல இருக்கு’னு சொல்றாங்க. மாநில அரசு அங்கீகாரம் கொடுத்தாதான், மத்திய அரசு விருதுக்கு முயற்சி பண்ண முடியும். போன வருஷம் கடைசி நேரத்தில் அர்ஜுனா  அவார்டும் தவறிப்போச்சு. அர்ஜுனா அவார்டுக்கு என் பேர்தான் முதல்ல பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனா, கமிட்டி உறுப்பினர் ஒருத்தர் என் ஃபைலை நிராகரிச்சுட்டார். 'நான் 15 வருஷம் இந்தியாவுக்காக விளையாடிட்டிருக்கேன். ஏன் எனக்கு அங்கீகாரம் இல்லை?’னு கேட்டா, 'நோ மெடல். யூஸ்லெஸ் கேம்’னு சொல்றாங்க. ஆனா, 2014-ம் ஆண்டுல கீது அன்னா ஜோஸ்ங்ற கேரள பிளேயருக்கு அர்ஜுனா விருது கொடுத்தாங்க. அவங்க என்னைவிட ரெண்டு வருஷம் ஜூனியர். அவங்களுக்கு விருது கிடைச்சது எனக்கும் சந்தோஷம்தான். ஆனா, அதுக்குக் காரணம் கேரள அதிகாரிகள் அவருக்காக பெரிய அளவில் மேற்கொண்ட ஆதரவுப் பிரசாரம். தகுதி, திறமை இருந்தும் தமிழ்நாட்டுல பிறந்ததால எனக்கு அங்கீகாரம் இல்லையா?''

“கிரவுண்டுல விளையாடுறேன்... வாழ்க்கையில போராடுறேன் ..!”

''விளையாட்டுத் துறை அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லலாமே!''

''அதெல்லாம் சொல்லியாச்சு. அதுக்கு ஒரு விநோத லாஜிக் சொல்றாங்க. அத்லெடிக்ஸ்ல ஒரு பையன் ஜெயிச்சா, 50 பாயின்ட். 100 மீட்டர், 200 மீட்டர்னு பல பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் ஜெயிக்க ஜெயிக்க, புள்ளிகள் கிடைக்கும். ஆனா, நாங்க ஒட்டுமொத்த டீமா ஜெயிச்சாலும் அதே 50 பாயின்ட்தான் கிடைக்கும்.      இது என்ன நியாயம்? இதை அரசாங்கத்துக்கிட்ட எடுத்துச் சொல்லவேண்டிய அதிகாரிகள், மத்த எல்லா வேலைகள்லயும் ஆர்வமா இருக்காங்க. ஏதோ எனக்கு ரயில்வேயில் வேலை கிடைச்சது. சாப்பாடு பிரச்னை இல்லை. சிட்டி பஸ்லயாவது போயிட்டு வந்து சமாளிக்கிறேன்.

கிரவுண்ட்லகூட சளைக்காம போராடிருவேன். ஆனா, வெளியே தான் முட்டிமோத முடியலை. மனசு விட்ருச்சு. இத்தனைக்கும் குழந்தை பிறந்த பிறகு ஃபிட்னஸ் கொண்டுவர, ஜிம்ல கடுமையா வொர்க்-அவுட் பண்ணேன். பிள்ளைபெத்த உடம்பு எப்படி இருக்கும்னு சொல்ல வேண்டியது இல்லை. அதோடு சிரமமான பயிற்சிகள் பண்றதால,  குழந்தைக்குப் பால் கொடுக்கிறப்ப கஷ்டமா இருக்கும். பையன் பச்சப் பிள்ளையா இருக்கிறப்ப அம்மாகிட்ட விட்டுட்டு விளையாடப் போயிருவேன். 'குழந்தை ஏங்கிப்போகுது. இவளுக்கு அப்படி என்ன விளையாட்டு கேக்குது?’னு ஒரு பக்கம் திட்டு விழும். ஊர்ல இருந்து வந்து குழந்தையைத் தூக்குனா, 'நீ குழந்தை பக்கத்துல வராத. அப்புறம் நீ கிளம்பின பிறகு குழந்தை உன் நினைப்புலயே இருக்கும்’னு ஒரு பக்கம் ஒதுக்கிவைப்பாங்க. பெத்த பிள்ளையைக் கொஞ்சாமக்கூட விளையாடினேன். ரெண்டு தடவை கால் மூட்டுல ஆபரேஷன் நடந்தது. ஆனா, என்ன பிரயோஜனம்!

இதுவே சானியா மிர்ஸா, சாய்னா மாதிரி தனி நபர் விளையாட்டுல நான் இருந்திருந்தா,  விருது வாங்கிட்டு கார்ல போயிருப்பேன். ஏன் இத்தனை வருஷம் இவ்ளோ கஷ்டப்படணும்? எதிர்காலத்துல சிறந்த கூடைப்பந்து கோச் ஆகணும்னு எனக்கு ஆசை. ஆனா இப்ப என்கிட்ட யாராவது வந்து, 'என் குழந்தை பேஸ்கட்பால் விளையாடணும்னு ஆசைப் படறான்’னு சொன்னா, 'யோசிச்சு முடிவெடுங்க’னு சொல்லிடுறேன். வேற என்ன சொல்லச் சொல்றீங்க?!''