Published:Updated:

‘கெட்ட பய சார் இந்த காளி!’ - ரஜினியின் மாஸ் பன்ச்கள் #HBDRajini

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘கெட்ட பய சார் இந்த காளி!’ -  ரஜினியின் மாஸ் பன்ச்கள் #HBDRajini
‘கெட்ட பய சார் இந்த காளி!’ - ரஜினியின் மாஸ் பன்ச்கள் #HBDRajini

‘கெட்ட பய சார் இந்த காளி!’ - ரஜினியின் மாஸ் பன்ச்கள் #HBDRajini

‘சுனாமி’ என்ற ஆழிப்பேரலைத் தாக்குதல் உலகம் முழுக்கப் பல காலங்களாக இருந்தாலும், சென்னையை சுனாமி தாக்கியபோதுதான் அந்த வார்த்தையே இங்கு பிரபலமானது. அதேபோல, பன்ச் வசனங்கள் பல காலங்களாக தமிழ் சினிமாவில் பல நடிகர்களால் பேசப்பட்டுவந்தாலும், அதை ரஜினிகாந்த் பேசும்போதுதான் அதற்கு `பன்ச் டயலாக்' என்றே பெயர் வந்தது. அதிலும் `பாட்ஷா' படத்தில், “நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்னா மாதிரி!" என அவர் உச்சரிக்கும் பன்ச் வசனம், ரசிகர்களால் பரபரப்பாக உச்சரிக்கப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் “நேனு ஒக சாரி செப்த்தே வந்த சாரிலு செப்பினட்டே!" என்ற வசனத்தை உச்சரிக்கும்போது அந்த வார்த்தைகளுக்கே உரிய பளீர் பரபரப்பு நெருப்பாகத் தெறிக்கும்!

‘16 வயதினிலே' படத்தில் பரட்டை கேரக்டரில் நடித்த ரஜினிகாந்த், காந்திமதியைக் கலாய்த்தபடி கிண்டல் செய்துவிட்டு, முடிவில் “இது எப்படி இருக்கு?" எனக் கேட்டு நக்கலடிப்பதும், அவரைப் பார்த்து கவுண்டமணி சொல்லும் “பத்தவெச்சிட்டியே பரட்ட..!" என்ற இந்த இரண்டு வசனங்களும் இன்றளவும் ஃபேமஸ்! “இது எப்படி இருக்கு?!" என்ற வசனத்தை, பிற்காலத்தில் வந்த `வீரா' என்ற படத்தில் “ஹவ் இஸ் இட்?" என்று ரஜினியே பயன்படுத்தினார்.

அதேபோல, `மூன்று முகம்' படத்தில், “தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாத்தான் தீ பிடிக்கும். இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்!" என்று நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்த், மீசை துடிக்கச் சொல்லும்போது தியேட்டரில் கைதட்டல் மழை! அதேபோல், `குரு சிஷ்யன்' படத்தில் ரஜினிகாந்த் சொல்லும் “நான் சொல்றதத்தான் செய்வேன்... செய்றதத்தான் சொல்வேன்!" என்ற டயலாக்கைப் போலவே தி.மு.க-வின் பிரசார வசனமும் “செய்வதைச் சொல்வோம்... சொல்வதைச் செய்வோம்!" என இருந்தது வரலாறு.

‘முள்ளும் மலரும்' படத்தில் ரஜினி பேசிய “கெட்ட பய சார் இந்தக் காளி!" என்ற வசனம், தற்போது சந்தானத்தின் நகைச்சுவையில் எடுத்தாளப்படும் அளவுக்கு இன்றளவும் பவர்ஃபுல்லான வசனம்! `மாப்பிள்ளை' படத்தில் தனது தொடக்கக் கால நடிகையான ஶ்ரீவித்யாவின் மருமகனாக நடித்த ரஜினிகாந்த் “அத்தை, நீங்க தமிழ்நாட்டுக்கே ராணி மாதிரி... நான் தமிழ்நாட்டுக்கே... எதுக்கு விடுங்க, எல்லாருக்கும் தெரியும்!" என்றெல்லாம் பேசத் தொடங்கியபோது ரசிகர்களைக் குஷிப்படுத்துவது என்றில்லாமல், அரசியலுக்கான வசனமாகவும் அவரது ரசிகர் உலகம் பார்க்கத் தொடங்கியது. ஜெயலலிதாவோடு மோதலைத் தொடங்கியதும் அவருக்கு எதிரான அரசியல் பன்ச் டயலாக்குகளைப் பட்டவர்த்தனமாகப் பேசத் தொடங்கிவிட்டார்.

‘உழைப்பாளி' படத்தில் “நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு..?" என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரிக்கும்போது தியேட்டரே அதிரும்! `படையப்பா' படத்தை பன்ச் டயலாக்குகளுக்காகவே நடித்த படம்னு சொன்னாலும் மிகையல்ல. அதில் வரும் நீலாம்பரி கேரக்டர் யார் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படியிருந்ததால்தான் பெண்ணியத்துக்கு எதிரானதாகக் கருதக்கூடிய, “அதிகமா கோபப்படுற பொம்பளையும், அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது!" என்ற வசனமும், ``பொம்பளைன்னா பொறுமை வேணும்! அவசரப்படக் கூடாது! .................. .............. ............. மொத்ததுல பொம்பளை பொம்பளையா இருக்கணும்!" என்ற நீளமான வசனம் தமிழ் பாரம்பர்யப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை  எடுத்துரைக்கும் வசனமாக ரசிகர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரசியலுக்காகவே எழுதப்பட்ட வசனங்கள் என்றால், தனிப்பட்டியலே போடலாம். அதில் முக்கியமான சில, “என் வழி... தனி வழி!" 
“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனா, கைவிட மாட்டான்! கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா, கைவிட்டுடுவான்!". “நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, எப்ப வரணுமோ அப்ப கரெக்டா வருவேன்!"
“கண்ணா... பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம், சிங்கிளாத்தான் வரும்!"

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு வலுக்கத் தொடங்கியதுமே, பன்ச் வசனம் இல்லாமல் இவரது படமே கிடையாது என்ற சூழலுக்கு வந்தது. இவர் ஒரு படத்தைத் தொடங்கியதுமே அந்தப் படத்தில் என்னென்ன பன்ச் வசனங்கள் இடம்பெறும் என்று போட்டிகளே நடத்தப்பட்டன! அதன் நீட்சியாக, `கபாலி' படத்தை புரொமோட் பண்ணும்போது, ‘பன்ச் வசனங்களே இல்லாத ரஜினிகாந்த் படம்!' என்று அறிவிக்கும் அளவுக்கு பன்ச் டயலாக்குகள், ரஜினி படங்களோடு பின்னிப்பிணைந்தன.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரின் பிம்பம், அவரது ரசிகர்கள் நிலையிலும், தமிழக மக்கள் மத்தியிலும் சற்றும் மவுசு குறையாமல் இருக்கிறது என்றால், பன்ச் டயலாக்குகளின் பலமும் ஒரு காரணம் என்பதை ரசிகர்கள் நன்கு அறிவர்.

ரஜினிடா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு