Published:Updated:

நீங்கள் உழவை நேசிப்பவரா ..?!

ஆர்.குமரேசன்

ன்று... பல லட்சம் ரூபாய் கடனாளியாக வாழ்வையே வெறுத்து தற்கொலை நோக்கி நகர்ந்தவர், அந்தோணிசாமி. இன்று... மாதந்தோறும் லட்சங்களில் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கும் தற்சார்பு விவசாயி. 

''ஆரம்பத்துல என்கிட்ட முப்பது ஏக்கர் நிலம் இருந்தது. இடையில, அத்தனையும் பறிபோய், கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கே வந்துட்டேன். ஒரு கட்டத்துல துணிச்சலா முடிவெடுத்தேன். இன்னிக்கு ஏக்கர் கணக்கான நிலத்துக்குச் சொந்தக்காரனா தலைநிமிர்ந்து நடை போடுறேன்'' என கட்டை விரல் உயர்த்துகிறார் 'புளியங்குடி' அந்தோணிசாமி!

அன்று... சென்னையின் பரபரப்பான வாழ்க்கையில், காதில் செல்போனும்... கையில் கீபோர்டுமாக உயிருள்ள ஓர் இயந்திரமாக இயங்கிக்கொண்டிருந்த மென்பொருள் பொறியாளர் மருதமுத்து. இன்று... திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடிவாரத்தில் சம்பங்கி விவசாயி.

''அன்றைக்கு எனக்குப் போதுமான பணம் கிடைத்தது. ஆனால், மனதில் நிம்மதி இல்லை. இன்றைக்கு அதைவிட அதிக வருமானம் கிடைக்கிறது...மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கூடுதல் போனஸ்'' என்கிற மருதமுத்து கண்களில் சிரிப்பு ஒளிர்கிறது.  

இந்த இருவரும் ஒரு பானைச் சோற்று பதங்கள்தான். இவர்களின் வரிசையில் ஏகப்பட்ட பேர் தொடர்ந்து இணைந்தவண்ணம் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரது வாழ்விலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்தது   'இயற்கை விவசாயம்’!

இயற்கை விவசாயம் எனும் அட்சயப் பாத்திரம் இன்று பட்டிதொட்டி  எல்லாம் பொங்குகிறது. இதை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடியாக தமிழக விவசாயிகளின் மனங்களில் பூத்திருக்கிறது, 'பசுமை விகடன்’.

நீங்கள் உழவை நேசிப்பவரா ..?!

'நீயாவது நல்லா படிச்சு, வெள்ளையுஞ் சொள்ளையுமா ஆபீஸ் வேலைக்குப் போய்யா. என்ன மாதிரி சம்சாரி பொழப்பு உனக்கு வேண்டாம் ராசா’ என்ற மனநிலை, இன்றைக்கு கொஞ்சம் மாற ஆரம்பித்திருக்கிறது. முறையான திட்டமிடலும் தொழில்நுட்ப உதவியும் கைகொண்டால்... விவசாயம் மாபெரும் லாபம் அளிக்கும் தொழில் என்ற நம்பிக்கை விதைக்கப் பட்டுள்ளது.

'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ.நம்மாழ்வார், தன் கால் தேயத் தேய நடந்து, நம் கிராமங்களில் இருந்து கண்டெடுத்துச் சொன்ன இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்கள் ஒவ்வொன்றையும் தமிழக விவசாயிகளுக்குக் களப்பயிற்சிகள் மூலம் கொண்டு சேர்ப்பதாகட்டும்... வடமாநிலங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பம் எனும் அற்புதமான இயற்கை விவசாய முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதாகட்டும், இன்னும் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், கால்நடை வளர்ப்பு... எனப் பல்வேறு பயிற்சிகளையும், புதுமைகளையும் அறிமுகப்படுத்துவதாகட்டும்... அனைத்திலும் 'பசுமை விகடன்’ முன்னிலையில் நிற்கிறது.

இந்தத் தொடர் ஓட்டத்தின் அடுத்தகட்டமாக... வேளாண் கண்காட்சி எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது பசுமை விகடன். இன்றைய விவசாயி களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், வீண் அலைச்சலைக் குறைத்து, ஒரே இடத்தில் பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் கிடைக்கும் வகையில் செப்டம்பர் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது இந்தப் பிரமாண்ட கண்காட்சி.

ஆன்மிகப் பணிகளில் மட்டுமே தன்னை அடைத்துக்கொள்ளாமல், சிறந்த விவசாயிக்கான மத்திய அரசின் விருது பெற்றுள்ளதவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

நீங்கள் உழவை நேசிப்பவரா ..?!

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் வரை பாராட்டுதல்களைப் பெற்றிருக்கும் தெலங்கானா மாநிலத்தின் முன்னோடி இயற்கை விவசாயி ஜி.நாகரத்தின நாயுடு சிறப்புரையாற்றுகிறார்.

நான்கு நாட்களும் பல்வேறு தலைப்புகளில் நடக்கும் கருத்தரங் குகளில் முன்னோடி விவசாயிகளும், வேளாண் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை, பட்டறிவை, தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். பல்கலைக் கழக அரங்குகள், விதை முதல் அறுவடை வரை இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள், பாசனக் கருவிகள், வீட்டுத்தோட்டம், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்ற வேளாண் உபத்தொழில்கள் உள்ளிட்ட அரங்குகள் இடம் பெறுகின்றன.

இந்த நிகழ்வு, உழவருக்கு மட்டும் அல்ல, உழவை நேசிக்கும் ஒவ்வொருவருக்குமானது. எனவே, 'அனைவரும் குடும்பத்தோடு வாருங்கள்’ என அழைக்கிறான் விகடன்.

இயற்கை விவசாயத் தொழில்நுட்பம் வேண்டுமா?

ஊர் எங்கும் வறட்சியால் தென்னைகள் காய்ந்து போயிருக்க, தனது தென்னைகளைச் செழிப்போடு வைத்திருக்கும் ஜீரோ பட்ஜெட் பாலகிருஷ்ணன், கழிவுநீரைச் சுத்திகரித்து பாசனநீராக்கி கரும்பு பயிரிடும் நடேசன்,

மஞ்சளில் ஊடுபயிர் உள்ளிட்ட சில பிரத்யேக யுக்திகளைக் கடைப்பிடிக்கும் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், பந்தல் காய்கறி சாதனையாளர் கேத்தனூர் பழனிச்சாமி, பட்டுப்புழு வளர்ப்பு சாதனையாளர் பரிமளா... உள்ளிட்ட வெற்றி விவசாயிகள் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள அணிவகுத்து வருகிறார்கள்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் துணை இயக்குநர், முனைவர் அழகுசுந்தரம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வளம்குன்றா வேளாண்மைத் துறையின் தலைவர் முனைவர் சோமசுந்தரம், ஏற்றுமதிச் சந்தை வல்லுநரான முனைவர் ரவீந்திரன், தஞ்சாவூர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவர், முனைவர் புண்ணியமூர்த்தி, பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம், நீரியல் வல்லுநர், பொறியாளர் பிரிட்டோராஜ் ஆகியோர் பல்வேறு தொழில்நுட்பங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார்கள்.