Published:Updated:

செம ஸ்டைல் மாமே !

செம ஸ்டைல் மாமே !
News
செம ஸ்டைல் மாமே !

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

விராட் கோஹ்லியின் 'அண்டர் கட்’, தனுஷின் தாறுமாறு 'மாரி’ லுக், '36 வயதினிலே’ ஜோதிகாவின் ஹோம்லி ஸ்டைல், விஜய் சேதுபதியின் க்ளீன் ஷேவ்... இந்த ஆபரேஷன்கள் அனைத்தும் தேவ் என்கிற தேவராஜனின் 'சிசர்’வண்ணம். சென்னையின் பரபரப்பான ஹேர் ஸ்டைலிஸ்ட்!

''தாத்தாவுக்கு தாத்தா, தாத்தா, அப்பா... எல்லாருக்கும் முடிவெட்டுறதுதான் தொழில். நான் இந்த வேலைக்கு வரக்கூடாதுனு அப்பா என்னை பி.காம் படிக்கவெச்சார். நானும் நல்லா படிச்சேன். ஆனா, என் மனசு முழுக்க இந்தத் தொழில்லதான் இருந்தது. புரொஃபஷனலா பண்ணா ஹேர் ஸ்டைலிஸ்ட்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குனு சொல்லி, மும்பையில் ஸ்டைலிங் படிச்சேன். சென்னையில் கொஞ்ச நாள் வேலைபார்த்து, காசு சேர்த்து, லண்டன்ல போய் ஹேர்ஸ்டைலிங் படிச்சுட்டு வந்தேன். இப்ப ஆர்.ஏ.புரத்தில் சலூன் நடத்திட்டு வர்றேன். நான் ஹேப்பி. என் அப்பா, ரொம்ப ரொம்ப ஹேப்பி'' எனக் கண்சிமிட்டும் தேவ்,  பிரபலங்களுடனான 'ஹேர் ஸ்டைலிங்’ அனுபவம் சொன்னார்...

செம ஸ்டைல் மாமே !

'அண்டர் கட்’ கோஹ்லி!

தமிழ்நாடு கிரிக்கெட்டர் அபினவ் முகுந்துக்கு நான்தான் ஹேர்ஸ்டைலிஸ்ட். ஒருநாள் திடுதிடுப்புனு 'கோஹ்லிக்கு ஹேர்ஸ்டைல் பண்ணணும்’னு சொல்லிக் கூட்டிட்டுப்போய் நிறுத்திட்டார். 'வெல்கம் பிரதர்’னு சொல்லிட்டு  முடியை டிரிம் பண்ணச் சொன்னார். அவர்  ஏற்கெனவே எல்லா ஹேர்ஸ்டைலும் பண்ணிட்டார்னு எனக்குத் தெரியும். அதனால  அவர் சொன்னதைப் பண்ணிட்டு, நாம ஏதாச்சும் ஸ்பெஷல் டச் கொடுக்கணுமேனு தலை முடிக்கும் கிருதாவுக்கும் நடுவுல சின்னதா வெட்டி ‘Under cut’  ஸ்டைல் வெச்சேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. இப்போ நிறையப் பேர் கோஹ்லி போட்டோவை என்கிட்டயே காமிச்சு, 'இந்த அண்டர் கட் ஸ்டைல் பண்ணி விடுங்க’னு சொல்றாங்க!''

நியூ லுக் தனுஷ்!

'' 'மயக்கம் என்ன’ படம் ஷூட்டிங் ஆரம்பிச்ச சமயம் தனுஷ் சாருக்கு ஸ்டைலிங் பண்ண வாய்ப்பு கிடைச்சது. 'என் கேரக்டர் ஒரு போட்டோகிராபர். கொஞ்சம் சிடுசிடு டைப். அதுக்கு ஏத்த மாதிரி ஒரு லுக் வேணும்’னு  சொன்னார் தனுஷ் சார்.  அப்போதான் அவருக்கு முதன்முதலா ஸ்பைக் ஸ்டைல் வெச்சேன். கொஞ்சம் தாறுமாறான அந்த கேரக்டருக்கு, அந்த ஸ்டைல் பக்கா பொருத்தமா இருந்துச்சு. அப்புறம் அவரோட எல்லா படங்களுக்கும் என்னையே ஸ்டைலிங் பண்ணக் கூப்பிட்டார். அவருக்கு ரொம்பப் பிடிச்ச ஹேர்ஸ்டைல் 'Textured hair ’. மிதமான கட்டிங், லேசான தாடி. அந்த லுக்ல இருக்கணும்னுதான் எப்பவும் விரும்புவார். எப்பவும் அவருக்கு ஸ்டைலிங் பண்ணும்போது, ஐஸ்வர்யா தனுஷ், யாத்ரா, லிங்கானு குடும்பமே கூட இருக்கும். 'அப்பாவுக்கு இப்படி வெட்டுங்க... இந்த ஹேர்ஸ்டைல் வைங்க’னு பசங்க ஃபுல் சேட்டை பண்ணுவாங்க. அவரும், 'சரிப்பா... பையன் சொல்ற மாதிரியே பண்ணிருப்பா’னு சொல்வார். அப்புறம் தனுஷ் சார் முடியைப் பராமரிக்கிறதுல ரொம்ப அக்கறை காட்டுவார். தினம் தலைக்குக் குளிச்சுடுவார். 15 நாளுக்கு ஒருதடவை முடி வெட்டிக்குவார். ஏதாவது விழாவுக்குப் போகணும்னா, அதுக்குனு ஒரு லுக் வெச்சுக்குவார்!''

செம ஸ்டைல் மாமே !

'நல்ல புள்ள’ விஜய் சேதுபதி!

'' 'நானும் ரௌடிதான்’ பட இயக்குநர் விக்னேஷ் சிவன் என் நண்பர். அவர் அந்தப் பட ஹீரோ விஜய் சேதுபதியை முழுக்க வேற லுக்ல காட்டணும்னு சொன்னார். நான் அவருக்கு க்ளீன் ஷேவ் லுக் கொடுக்கலாம்னு சொன்னதும் விஜய் சேதுபதி பதறிட்டார். 'ஏன் தல இந்த கொலவெறி?’னு தயங்கினார். 'என் கை எப்பவும் நல்லதுதான் சார் பண்ணும்’னு நான் உணர்ச்சிவசமா பெரிய பெரிய டயலாக் பேச, 'செமய்யா பேசுறம்மா. பார்த்துப் பண்ணிடுங்க’னு சம்மதிச்சார்.

'ஓ... க்ளீன் ஷேவ் பண்ணாலும் பார்க்க நான் ஓ.கே-வாத்தான் இருக்கேன்’னு சிரிச்சுக்கிட்டார். ரொம்ப தங்கமான மனுஷன்!''

செம ஸ்டைல் மாமே !

'லாங் ஹேர்’ ஜோதிகா!

'' '36 வயதினிலே’வுக்கு சிம்பிள் ஸ்பெஷல் லுக் வேணும்னு வந்தாங்க ஜோதிகா. ஆனா, அவங்க முடியை பார்த்துப் பார்த்து நீளமா வளர்த்திருந்தாங்க. அதனால, 'பார்த்துப்பா... முடியை ரொம்ப ஷார்ட் பண்ணிடாதீங்க’னு சொன்னாங்க. ஹோம் மேக்கர், அரசு அதிகாரி, தன்னம்பிக்கை நட்சத்திரம்னு பல விஷயங்களை மனசுல வெச்சுட்டு அடர்த்தியா, கவனம் கலைக்காத ஹேர்ஸ்டைல் வெச்சேன். அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. முடி பராமரிப்பில் அவ்வளவு அக்கறை எடுத்துப்பாங்க ஜோதிகா. இப்போ அவங்க பையன் தேவுக்கும் நான்தான் ஹேர்ஸ்டைலிஸ்ட்.

பையனுக்கு எப்பவும் ஷார்ட் கட்தான் பண்ணச் சொல்வாங்க ஜோ மேம். 'ஸ்கூலுக்குப் போற பையன் இப்படித்தான் இருக்கணும்’னு அவங்க அந்த விஷயத்தில் ரொம்பக் கறார்.

அனிருத், ஜி.வி.பிரகாஷ்னு நிறைய சினிமா நட்சத்திரங்கள் என் வாடிக்கையாளர்கள்தான். 'ஜெயம்’ ரவி எப்பவும் போஸீஸ் லுக் தரும் ‘Textured crop’ ஸ்டைல்தான் விரும்புவார். இஷ்டப்பட்ட வேலை இப்போ என் ஒவ்வொரு நாளையும் சுவாரஸ்யமாக்கிட்டே இருக்கு!''