Published:Updated:

இந்திய வானம் - 6

India Vaanam - S.Ramakrishnan
பிரீமியம் ஸ்டோரி
News
India Vaanam - S.Ramakrishnan ( India Vaanam - S.Ramakrishnan )

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

நன்மையின் குரல் 

மகத மன்னன் பிம்பிசாரன், புத்தருக்குத் தானமாகத் தந்த வேணுவனத்தைக் காண்ப தற்காக பீகாரில் உள்ள ராஜ்கிர் சென்றி ருந்தேன். புராதனச் சின்னங்கள் அதிகம் உள்ள மாநிலம் பீகார். வரலாற்றுச் சிறப்புமிக்க 'பாடலிபுத்திரம்’தான் இன்றுள்ள பாட்னா. பௌத்த நினைவிடங்களான கயா, வைசாலி, நாளந்தா செல்லும் சாலைகளை ஷப்பான் அரசு உதவிசெய்து மேம்படுத்தியிருக்கிறது. பீகார் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னால் வாழ்ந்துகொண்டிருக்கிறதோ என எண்ணும் படியாகவே அதன் கிராமப்புறங்களும் அங்கு நிலவும் சாதியக் கொடுமைகளும் உள்ளன.

'ராஜ்கிர்’ என அழைக்கப்படும் ராஷகிரஹம், பாட்னாவின் தென்கிழக்கே உள்ள மலைசூழ் அடிவார ஊர். வெப்ப நீருற்றுகள் உள்ள இந்த இடம், இந்து  பௌத்தம்  சமணம் மதங் களுக்கான முக்கியமான புனித ஸ்தலமாகக் கருதப்படுகிறது. ராஷகிரஹம் ஒருகாலத்தில் இரட்டை நகரமாக இருந்துள்ளது. அதற்கு

32 பெரிய நுழைவாயில்கள் இருந்திருக் கின்றன. இன்று இருப்பது மலையை ஒட்டிய சிறிய ஊர் மட்டுமே. பாஹியான், யுவான் சுவாங் போன்ற பயணிகள் இந்த நகரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

ராஜ்கிரின் சிறப்பு, புத்தர் தனது சீடர் களுடன் இங்கு வருகைதந்து மழைக் காலத்தைக் கழித்தார் என்பதே. அந்த நாட்களில்தான், மன்னன் பிம்பிசாரன் அவரை வரவேற்று, உணவு அளித்து, அவருக்குத் தானமாக 'வேணுவனம்’ என்ற மூங்கில் வனத்தைத் தந்திருக்கிறான். பின்பு அந்த இடம் பௌத்தத் துறவிகளுக்கான வாழ்விடமாக உருவாகியிருக்கிறது. தற்போதைய வேணுவனம் அதன் நினைவில் உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையற்ற அணில்கள் ஓடிவிளையாடும் குளிர்ந்த, அமைதியான வேணு வனமாக இன்று அது இல்லை... ஒரு குளமும் புத்தரின் சிலையும் அதையொட்டிய மூங்கில் தோட்டமும் தியான மண்டபமுமே காணப்படுகின்றன. புத்தரின் காலடிப்பட்ட இடம் என்பதே இதன் தனிச்சிறப்பு.

இந்திய வானம் - 6

பீகார் மாநிலம் எங்கும் பெருவாரியான மக்கள், புகையிலை கலந்த பாக்கை மென்று கொண்டே இருக்கிறார்கள். தேநீர்க் கடைகளில் டீ குடிப்பதற்கு முன்பாக இனிப்பு  சாப்பிடுகிறார்கள்.  பீகார் கிராமப்புறங்களையும் அங்கே செல்லும் பேருந்துகளையும் காணும் போது நாம் இன்னோர் இந்தியாவுக்குள் இருப்பதுபோலவே தோன்றுகிறது.

பண்டைய பீகார், கல்வியில் மிகவும் சிறந்து விளங்கியது. அங்கேதான் 'நாளந்தா’, 'விக்கிரமசீலா’ போன்ற பௌத்தப் பல்கலைக் கழகங்கள் இருந்தன. ஆனால் இன்று, கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக் கிறது. வேலை கிடைக்காமல் பிழைப்பு தேடி, மாநிலம்விட்டு மாநிலம் அலையும் பீகாரிகளை எல்லா ரயில் நிலையங்களிலும் காண முடிகிறது. பீகாரிகளின் வாழ்க்கை அவலத்தை, சாதியக் கொடுமைகளைக் காண முடிகிறது. பௌத்த சமயம் வேர் ஊன்றிய பீகாரில் ஏன் இன்றும் சாதிப் பிரச்னை அப்படியே இருக்கிறது? காரணம், நிலப்பிரபுத்துவம் அப்படியே இருக்கிறது. விவசாயக் கிராமங்களில் இன்றும் உயர்சாதியினரே தலைவர்களாக இருக்கிறார்கள். சாதிய ஒடுக்குமுறை வெளிப்படையாகவே நடைபெறுகிறது. பாட்னாவில் உள்ள விந்து வங்கிகளில் சாதிவாரியாக விந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. 'செயற்கைக் கருத்தரிப்பில்கூட சாதிக் கலப்பு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்’ என்கிறார் மருத்துவர் சின்ஹா. இதை உறுதிப்படுத்துவதுபோல ஒரு சம்பவம் கயா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

செயற்கைக் கருத்தரிப்பு செய்து, கர்ப்பம் தரித்த மாலா என்கிற இளம்பெண் பிரசவத் துக்காக அனுமதிக்கப்பட்டபோது, அவளது கர்ப்பத்துக்குக் காரணமாக அமைந்த விந்து, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவருடையது எனச் சந்தேகித்த கணவன், குழந்தை பிறந்தவுடனேயே கொன்று, சாக்கடையில் எறிந்துவிட்டான். அத்துடன் தாழ்ந்த சாதிக் கருவைச் சுமந்தாள் என்பதற்காக மனைவியையும் விலக்கிவைத்துவிட்டான். இப்படி பீகாரில் புரையோடிப்போன நோயாக சாதி வளர்ந்திருக்கிறது. ஆனால், இதே பீகாரில் தூரத்து நட்சத்திரங்களைப்போல ஒளிரும் சில அபூர்வமான நிகழ்வுகளும் அதற்குக் காரணமான மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

பாகல்பூர் அருகில் உள்ள தார்ஹரா கிராமத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது. அந்த ஊரில் யார் வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தாலும் 10 மரங்களை நட்டுவைக்கிறார்கள்; அதுவும் மாமரத்தையே விரும்பி நடுகிறார்கள். லட்சுமியின் அவதாரமாகவே பெண் பூமியில் பிறக்கிறாள். அதைக் கொண்டாடும்விதமாகவே தாங்கள் மரக்கன்றுகளை நடுவதாகக் கூறுகிறார்கள். கங்கைக் கரையோரக் கிராமம் என்பதால் செழித்துக் காணப்படும் இந்த ஊரில், தற்போது 20 ஆயிரம் மாமரங்கள் இருக்கின்றன. இந்த மாமரங்கள் அந்தப் பெண்களுக்குச் சொந்தமானவை. அவற்றில் இருந்து கிடைக்கும் பழங்களை விற்றுவரும் பணம் அவர்களுக்கு உரியதே. 'ஒருசிலர் தனது மகள் பிறந்த சந்தோஷத்தைக் கொண்டாட 30, 40 மரங்கள் வரை நடுவதுகூட இந்த ஊரில் சகஜம்’ எனச் சொல்கிறார்கள். மகள் வளர்ந்து, படித்து, சம்பாதிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு மாமரங்கள் பழம் கொடுக்கத் தொடங்கிவிடும். தான் பிறந்தபோது வைத்த மாமரத்தின் பழங்களை அந்தப் பெண் ருசிப்பதோடு, அதன் வருவாயைக்கொண்டு படிப்புச் செலவையும் சமாளித்துக்கொள்கிறாள். பெண்சிசுக் கொலை, கருக்கலைப்பு, வரதட்சணைக் கொடுமை  என பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தியாவில் தீவிரமாக வளர்ந்துள்ள சூழலில், இப்படி ஒரு பசுமைக் கிராமம் இருப்பது நிச்சயம் பாராட்டுக்கு உரியது. இந்த ஊரின் தனித்துவம் பற்றி அறிந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், தார்ஹராவுக்கு வருகைதந்து மரம் நடும் மரபைப் பாராட்டியதோடு, அங்கே பெண்கள் பள்ளி ஒன்று அமைக்கவும் உத்தரவு போட்டிருக்கிறார்.

இந்திய வானம் - 6

இதே பீகாரில்,  மின்சார வசதிகூட இல்லாத தனது சொந்த கிராமத்துக்கு அரிசி உமியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கியிருக்கிறார் கியானேஷ் பாண்டே. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்து முடித்த இவர், அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் வேலையில் இருந்தார். தனது சொந்த ஊருக்கு ஏதாவது செய்யவேண்டும் என விரும்பி வேலையைத் துறந்துவிட்டு, மாற்று மின்சார உற்பத்தியில் கவனம் செலுத்தினார். இவரைப் போலவே மாற்று மின்சாரத் திட்டத்தில் ஈடுபாடுகொண்ட மூன்று நண்பர்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு அரிசி உமியில் இருந்து அவர் மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்தார்.

'இது பைத்தியக்காரத்தனமான முயற்சி, நிச்சயம் வெற்றி பெறாது’ எனப் பலரும் கேலி செய்தார்கள். ஆனால், கியானேஷ் பாண்டே நம்பிக்கையுடன் தனது கைப்பணம் முழுவதையும் செலவுசெய்து மாற்று மின்சார முறையைப் பரிசோதனை செய்தார். அதில் வெற்றி கிட்டவே, தனது கிராமத்துக்கும் அதை ஒட்டிய ஊர்களுக்கும் மின்சாரம் விநியோகம் செய்ய ஆரம்பித்தார். அரிசி உமியில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம், இன்று 25 ஆயிரம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒன்றரை லட்சம் மக்களுக்கும் மேற்பட்டோர் பயன்பெறுகிறார்கள். பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்று ஒளிர்கின்றன.

இவரது அரிய சேவையைப் பாராட்டி, கியானேஷ் பாண்டேவுக்கு 'ரியல் ஹீரோ விருது’ மும்பையில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணத்தில், தனது கிராமத்தில் உள்ள பள்ளியில் நூலகம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருக்கிறார். தன்னைப்போல அறிவியல் ஆர்வம்கொண்ட இன்னொரு மாணவன் உருவாக வேண்டும் என்பதே தனது கனவு எனச் சொல்கிறார் பாண்டே. எல்லோருக்கும் வாழ்வின் லட்சியமாக பணம் மட்டும் இருப்பது இல்லை; அதைத் தாண்டி மக்களுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!  

பீகாரில் மட்டும் அல்ல; தமிழ்நாட்டிலும் தனக்கான அறத்துடன் வாழும் எளிய மனிதர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் தங்களை வெளிச்சம்போட்டுக் காட்டிக்கொள்வது இல்லை. சுயநலத்துக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்டு வாழும் உலகில், யாரோ முகம் அறியாத மனிதனின் மரணத்துக்கு முதல் மாலை தரும் பூ வியாபாரி துரைப்பாண்டியைப் பற்றி இணையத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட செய்தி  இதை உறுதிசெய்கிறது.

விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டு அருகே பூக்கடை நடத்திவரும் துரைப்பாண்டி, தினமும் வியாபாரம் முடிந்து, இரவு கடையைப் பூட்டிவிட்டுச் செல்லும்போது மறக்காமல் கடைக்கு வெளியே நான்கு மாலைகளைக் கட்டி, தொங்கவிட்டுச் செல்கிறார். காரணம், இரவில் யாராவது இறந்துவிட்டால் பூமாலை கிடைப்பது சிரமம். காலை வரை காத்திருக்க வேண்டும். அப்படி மாலை கிடைக்காமல் திண்டாடுபவர்களுக்காகவே பூ மாலைகளைத் தொங்கவிட்டுப் போகிறார். தேவைப்படுகிறவர்கள் இந்தப்

பூ மாலைகளை எடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிலர் மறுநாள் தேடி வந்து காசு கொடுத்தால், அதை துரைப்பாண்டி ஏற்றுக்கொள்வது இல்லை.  

இந்திய வானம் - 6

இப்படி முகம் அறியாத மனிதர்களின் சாவுக்கு முதல் மாலை தருவதை ஓர் அறமாக, 15 ஆண்டுகளுக்கும் மேல் செய்துவருகிறார் துரைப்பாண்டி. ஒரு மாலையின் விலை 100 முதல் 200 ரூபாய் வரை ஆகிறது. ஆனால், தனது ஆத்ம திருப்திக்காக ஒவ்வொரு நாளும் நான்கு மாலைகளை இலவசமாகப் பகிர்ந்துகொள்கிறார்.

1,000 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களிடம் இல்லாத அறம், இந்த எளிய பூ வியாபாரியிடம் இருக்கிறது. இவரைப்போல எத்தனையோ சாமானிய மனிதர்கள் தங்கள் வரம்புக்கு உட்பட்டு, அறம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதை விளம்பரம் செய்துகொள்வதோ, வெளிச்சம்போட்டுக் காட்டிக்கொள்வதோ கிடையாது. வாழ்வின் மீது நம்பிக்கைகொள்ளச் செய்வது இதுபோன்ற எளிய செயல்களே.

'21-ம் நூற்றாண்டு இந்தியா என்பது, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மேம்பட்ட தேசம்’ என ஒரு பக்கம் பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் சாதியக் கொடுமைகள், வன்முறை, தரம்தாழ்ந்துபோன கல்வி, அரசியல் அதிகார மோசடி... எனப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே போய்விட்டோமோ எனும்படியான நிலையே இருக்கிறது.  

உலக அமைதிக்காக உரையாற்றும்போது தலாய்லாமா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.  

'ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்தவுடன் படிக்கும் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிச் செய்திகளிலும் வன்முறை, கொலை, கொள்ளை, விபத்து, போர் என மோசமான செய்திகளையே அதிகம் அறிந்துகொள்கிறோம். இதுபோன்ற வேதனைச் செய்திகள் இல்லாத நாளே இல்லை. மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல்போய்விட்டது.

முந்தைய தலைமுறையில் எவரும் ஒரு நாளில் இத்தனை மோசமான செய்திகளைக் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே.  நவீன உலகின் வளர்ச்சி என்பது இதுதானா?

இந்திய வானம் - 6

அறிவியலும் தொழில்நுட்பமும் மனித நாகரிக வளர்ச்சிக்குப் பெரிய அளவில் துணை செய்திருக்கின்றன; தொழில்யுகத்தை உருவாக்கித் தந்திருக்கின்றன. ஆனால், மனித உறவுகள் சார்ந்த பிரச்னைகள், அடிப்படைத் தேவைகள் இன்றும் தீர்க்கப்படவே இல்லை. எல்லோருக்கும் கல்வி கிடைக்கவில்லை; பிளாட்பாரங்களில் மக்கள் குடியிருக்கிறார்கள்; முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பது இல்லை. நகரம், கிராமம் எனப் பேதம் இல்லாமல் பணம் சேர்ப்பதில் மட்டும்தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காக சந்தோஷத்தையும் நிம்மதியையும் இழக்கிறார்கள். இதுதான் நாகரிக வளர்ச்சியா?

உண்மையில், நமது வளர்ச்சியின் திசை தடுமாறியதாக உள்ளது. இந்த வளர்ச்சி சரியானதாக இல்லை. இப்போதே இதை மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ளவிட்டால், எதிர்காலம் இதற்கு பெரிய விலை கொடுக்கவேண்டிவரும். இன்று உலகில் எங்கே, எது நடந்தாலும் அது நம்மைப் பாதிக்கிறது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டுப் பிரிந்துகிடந்த மக்கள் ஒன்றுசேர்ந்தால், நாம் சந்தோஷம் கொள்கிறோம். ஆப்பிரிக்காவில் குழந்தைகள் பட்டினி கிடப்பதை அறியும்போது, நாம் துயரம் கொள்கிறோம். உலகமே ஒரு வீடாக உருமாறி இருக்கிறது.

இந்தச் சின்னஞ்சிறிய பிரபஞ்சம் நம் அனைவருக்குமானது. இதில் அமைதியும் இணக்கமும் அன்புமான வாழ்க்கையை உருவாக்கவேண்டியது நம் அனைவரின் கடமை. நாம் இயற்கையைச் சார்ந்து வாழ வேண்டியவர்கள். இயற்கையையும் உயிரினங்களையும் காக்கவேண்டியது நமது பொறுப்பு. அரசோ, அதிகாரத்தில் இருப்பவர் களோதான் மாற்றங்களைச் செய்ய முடியும் என்பது இல்லை. அமைதியையும் இணக்கத்தையும் உருவாக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது.

இரண்டுவிதமான சந்தோஷங்கள், துயரங்கள் நமக்கு உள்ளன. ஒன்று, உடல் சார்ந்தது; மற்றொன்று, மனம் சார்ந்தது. மனம் சார்ந்த சந்தோஷமோ, துயரமோதான் நம்மை அதிகம் பாதிக்கின்றன. ஆகவே, மனம் குறித்து நாம் கூடுதல் விழிப்புஉணர்வுகொள்ள வேண்டும். சந்தோஷத்தை உண்டாக்கிக்கொள்வதற்காக எவ்வளவு மோசமான வழிகளைக் கையாள்கிறோம் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். சகிப்புத்தன்மையும் அன்புமே சமாதானத்தை உருவாக்கும். அதையே எல்லா சமயங்களும் வலியுறுத்துகின்றன!’ என்கிறார் தலாய் லாமா.

தீமையின் குரல் உலகம் முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கும்போது, நன்மைக்காகக் குரல் தருவதற்கு கியானேஷ் பாண்டேயும் துரைப்பாண்டியும் நமக்குத் தேவைப்படுகிறார்கள். அந்தக் குரல்களை உள்வாங்கிக்கொள்வதும் உடன் இணைந்து ஒலிக்கவேண்டியதுமே நம் அனைவரின் கடமை!

- சிறகடிக்கலாம்...