##~##

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக முகவரியான மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, தன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் பற்றி மனம் திறக்கிறார்.

 ''ஸ்ரீவைகுண்டம் ரொம்ப அழகான பசுமை யான ஊர். ஊருக்கு வடக்கே ஒரு பெரிய குளம் இருக்கும். கிழக்கே, பச்சைப் பசேல்னு  கண்ணுக் குக் குளிர்ச்சியா வயல்கள், மேற்கே தாமிரபரணி ஆறு. தெற்கே ஏரல் வடிகால்கள் நாலாபுறமும் இயற்கை எழில் கொஞ்சும் ஊர்.

என் ஊர்!

ஸ்ரீவைகுண்டத்தின் பெருமை ஸ்ரீகள்ள பிரான் பெருமாள் கோயிலும் ஸ்ரீகைலாச நாதர்  சிவன் கோயிலும்தான். நவ திருப்பதிகளும் நவ கைலாயமும் ஒருங்கே அமைந்த இடம். முற்காலத்தில் ஸ்ரீவைகுண்டம் 'கைலாசபுரம்’ என்றே அழைக்கப்பட்டது எனவும் இவ்வூர் பூலோக வைகுண்டமாகவும் பூலோக கைலாய மாகவும் திகழ்ந்ததாக ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் 'வைகுந்த கலை’ என்று தான் பாடிய கயிலைக் கலம்பகத்தில் குறிப்பிட்டுள்ளார். 125 வருஷமாக பழமை மாறாமல் இருக்கும் காரனேஷன் உயர் நிலைப் பள்ளியில்தான் நான் படித்தேன். பள்ளிக் கூடம் விட்டதும் தாமிரபரணி ஆற்றங்கரையில் பைகளை வைத்துவிட்டு, ஆற்று மணலில் கால் பந்து விளையாடுவோம். விளையாடி முடித்ததும் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பு வோம்.  

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே என்னைத் தேசிய இயக்கத்தில் இணைத்துக் கொண்டேன். உற்சாகமூட்டும் பாடல்கள், மேடைப் பேச்சு, நல்ல கருத்துக்கள் இவை எல்லாமே என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேசிய இயக்கத்தில் தள்ளிருச்சு. இலக்குவனார் போன்ற பெரிய தமிழ் அறிஞர்களைப் பேச வைத்தோம். பல வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீவைகுண்டம் பாலத்தைத் தவிர, வேற எந்தப் பாலமும் கிடையாது. திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கும் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கும், கன்னியாகுமரிக்கும்... இப்படி எந்த ஊருக்குப் போகணும்னாலும் ஸ்ரீவைகுண்டம் பாலம் வழியாகத்தான் போகணும். எல்லாப் பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் வந்துதான் போகும். அது எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம். காரணம்... காந்தி, நேரு, வ.உ.சி., பாரதி, காமராஜர்னு இப்படி எல்லாத் தலைவர் களின் வாகனங்களும் எங்க ஊர் தொட்டுதான் போகும். தலைவர்கள் தூத்துக்குடிக்கோ, திருநெல்வேலிக்கோ பேச வருகிறார்கள் என்று செய்தி தெரிந்ததும், ஊர் மக்கள் பாலத்துக்கு முன் கூடிவிடுவார்கள். தலைவர்களைப் பேசச் சொல்லிக் கேட்பார்கள். அவர்களும் அரை மணி நேரம் பேசிவிட்டுத்தான் கிளம்புவார்கள்.  

என் ஊர்!

என்னுடைய கல்லூரி வாழ்க்கை இந்துக் கல்லூரியில் தொடங்கியது. கல்லூரியில் சேர்ந்ததும் 'கலைத் தொண்டர் கழகம்’ என்று இலக்கியக் கழகம் தொடங்கி, அதற்குச் செயலாளராகவும் இருந்தேன். அந்தக் காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்வது பெரும்பாடாக இருந்தது. நாங்கள் போராட்டங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெண் குழந்தைகளை வெளியே வரச் செய்தோம்.

ஸ்ரீவைகுண்டத்தில் கார்த்திகையில் நாற்று நட்டால் தை மாதம் அறுவடை செய்யலாம். வாழை, கரும்பு, சோளம், கம்புனு எல்லாப் பயிர்களும் செழித்து வளரும் பூமி. பெருங் குளத்தில் ஓர் அடை மழை பெய்தால் வருஷம் முழுவதும் செழிப்பாக இருக்கும். நடிகை எஸ்.டி. சுப்புலட்சுமி பிறந்த ஊர் இதுதான். பல தேசியத் தலைவர்கள் பாதம் பட்ட மண். நம்மாழ்வாரால் பாடப் பெற்ற ஸ்தலம். சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் கைலாசநாதர் கோயில் எனப்  பல பெருமைகள் பெற்ற இந்த ஊரில் நான் பிறந்து, வளர்ந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்!''

- இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு